Anugraham to Subrahmanyan

juju photoThanks to Sri P Swaminathan and Krishna for forwarding this article. Sri PS’ writing style is known to the whole world and one of my favorites…

Periyava had special prithi for people who are innocent. I know someone who is like him in our family circle. Periyava had said in one of His audio lectures that people like them do not accumulate any sins. .They do not manipulate, they do not like one and dislike other – they live like sadhus, which no bedham! They live a very pure life…Subrahmanyan is so fortunate to be fed by Mahavaidheeswaran Himself. Does one need anything more in their lives? He may not even know what it means but we know how big it is.

Although, it is little late, our belated birthday wishes to him

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

Mahesh

நமஸ்காரம்.

பெரியவா சரணம்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் என்னுடன் இருப்பவன்தான் சுப்ரமண்யன்.

யார் இந்த சுப்ரமண்யன்?

என் மனைவி செல்லாவின் மூத்த சகோதரி திருமதி புவனேஸ்வரியின் ஒரே குமாரன். ஸ்பெஷல் சைல்டு!
புவனேஸ்வரிக்குத் திருமணமான ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே கணவரிடம் இருந்து பிரிந்து விட்டாள். இருந்த ஒரே மகனும் இப்படி! பாவம், வாழக் கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு. ஆம்! தற்போது புவனேஸ்வரி உயிருடன் இல்லை. கான்சருக்குப் பலியாகி விட்டாள்.

சுப்ரமணியனுக்குத் தற்போது இருக்கின்ற ஆறுதல் – அவனது தாத்தா கிருஷ்ணமூர்த்தி, பாட்டி ராஜம், எனது மனைவி செல்லா, எனது மகள் பிரியமதுரா மற்றும் நான்!

தவிர, ஒரு சில பென்சில்கள். பேனாக்கள். ராம ராம எழுதும் நோட்டுக்கள், டி.வி. பெட்டி. ரிமோட். கூரியர் தர வரும் ஆசாமி – இதுபோல் இன்னும் சில அவனது உலகம்.

காஞ்சி மகா பெரியவா அனுக்ரஹத்தில் ஓரளவு இருக்கின்றான். தானே சாப்பிடுவான்; குளிப்பான்; தன் வேலைகளைச் செய்வான். கூடமாட நாங்கள் சொல்லும் வேலைகளையும் ஓரளவுக்குச் செய்வான்.

படிப்பு இல்லை. எந்தக் கைத்தொழிலும் சரிவரவில்லை. ‘தி ஹிண்டு’ பேப்பரை ரொம்ப நேரம் கையில் வைத்திருப்பான். புதிதாக அவனை யாராவது பார்க்க நேர்ந்தால், ஆங்கிலத்தில் கரை கண்டவன் போல் என்று எண்ணுவார்கள். ‘என்னடா படிக்கிறே?’ என்று கேட்டால், பேப்பரை உதறிவிட்டு ஓடி விடுவான். ‘தினத் தந்தி’யில் டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்து இன்று என்னென்ன படங்கள் என்று சொல்வான்.

காசு கணக்கு தெரியாது. கடைக்குப் போனால், மிச்சம் வாங்கத் தெரியாது.

தினமும் நான் சொல்லி மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்வான். ஏதோ, மந்திரம் சொல்வான்.எங்கள் எல்லோருக்கும் காலையில் குட்மார்னிங் சொல்வான். பக்கத்து வீட்டு கிறிஸ்தவ அன்பர் பாஸுக்கு மறக்காமல் எட்டிப் பார்த்து ‘குட்மார்னிங் சார்’ என்பான்.

என்னைப் பார்க்க வரும் ஒரு சில நண்பர்கள் அவனுக்கும் நண்பர்கள். குறிப்பாக, சோலையப்பன் தெரு கணேசன் மாமா, கந்தாஸ்ரமம் சந்தானம் மாமா, டஸ்டர் கிருஷ்ணமூர்த்தி மாமா – இப்படி இன்னும் ஒரு சிலர்.

காஞ்சி பெரியவா அதிஷ்டானம் மற்றும் ஏதாவது கோயில்கள் போனால், மாங்கு மாங்கென்று சந்நிதிகளை சுற்றுவான். தனக்கென்று பிரார்த்தனை பண்ணத் தெரியாது.

அவனுக்கு உலகம் நாங்கள்!

எங்களுக்கு உலகம் சுப்ரமண்யன்தான்!

இன்று சுப்ரமண்யனுக்கு 27-வது பிறந்த நாள்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

குறிப்பு: சுப்ரமண்யனைப் பற்றி ‘மகா பெரியவா’ புத்தகத்தில் நான் எழுதிய கட்டுரையையும் இங்கே இணைத்துள்ளேன்.

———————————————————————————————————————————-

இரண்டரை வயது வரை நடக்காமலேயே இருந்த ஒரு குழந்தை, மகா பெரியவா ஆசி பெற்று நடக்க ஆரம்பித்த கதை இது.

பிறந்த குழந்தை வாய் திறந்து மழலை மொழி பேசாதா என்பதே தாய் உட்பட அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், குழந்தை பிறந்ததும் தத்தித் தவழ்ந்து நடக்காமலே இருந்தால் எப்படி இருக்கும்? அது எத்தனை பெரிய துயரம்! அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தானே அந்த வலி தெரியும்?!

இரண்டரை வயது வரை நடக்காமலேயே – உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே தரையில் தத்தித் தத்தி நகர்ந்துகொண்டிருந்தது அந்தக் குழந்தை. பெயர் சுப்பிரமணியன். நடக்கவேண்டிய வயது வந்த பிறகும் குழந்தை நடக்காமலே இருந்தால் எந்தத் தாய்தான் பரிதவித்துப் போகமாட்டாள்? சுப்பிரமணியனின் நிலையைப் பார்த்த புவனேஸ்வரியும் அப்படித்தான் பரிதவித்துப் போனார்.

அரசுப் பணியில் இருந்த கிருஷ்ணமூர்த்தியும் அவருடைய மனைவியான ராஜமும் பேரனின் இந்த நிலை குறித்து ரொம்பவே கவலைப்பட்டனர். தங்கள் மகள் வயிற்றுப் பேரனான சுப்பிரமணியனுக்கு நேர்ந்த இந்த அவலம் தாத்தா மற்றும் பாட்டியைத் தடுமாற வைத்தது. ‘பேரன் சரியாக வேண்டுமே’ என்பதுதான் அவர்களின் கவலையாக இருந்தது.

‘‘பூர்வ ஜன்ம கர்மாவா இருக்கும். அதனாலதான் அவன் இப்படிப் பொறந்திருக்கான். நிறைய கோயில்களுக்கு அவனைக் கூட்டிட்டுப் போய் பிரார்த்தனை பண்ணு. பரிகாரம் செய்’’ என்று கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார் நண்பர் ஒருவர். அதன்படி பல கோயில்களுக்கும் போய் தெய்வத்தின் சந்நிதிகளில் பிரார்த்தனையையும் வைத்தார்.

மருத்துவத் துறையில் சுப்பிரமணியனை ‘க்யூர்’ செய்ய இப்படி ஒரு டாக்டர் இங்கே இருக்கிறார் என்று எவராவது தகவல் சொன்னால் போதும்… அடுத்த நாளே அப்பாயின்ட்மென்ட் வாங்கி அந்த டாக்டரிடத்தில் இருப்பார் கிருஷ்ணமூர்த்தி. சுப்பிரமணியன் எழுந்து நடக்க வேண்டும் என்பதற்காக சின்ஸியரான இந்தத் தாத்தா பார்க்காத மருத்துவர் இல்லை; செய்யாத சிகிச்சை இல்லை.

மருத்துவர்களாலேயே ‘இதுதான் பிரச்னை’ என்று ஆணித்தரமாக எதையும்  எடுத்துச் சொல்ல முடியவில்லை. ஒரு டாக்டர்… அவருக்கு அடுத்து இன்னொரு டாக்டர்… என்று நாட்கள் நகர்ந்தனவே தவிர, நல்ல சிகிச்சை இல்லை; சுப்பிரமணியனின் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் இல்லை. சிகிச்சையின் பொருட்டு பொருட்செலவும் அதிகமானது.

‘‘அவன் நடக்க மாட்டேங்கிறான்னு அப்படியே விட்டுடாதே… நீ பாட்டுக்கு அவனை நிக்க வெச்சு நடக்கறதுக்கு உண்டான முயற்சிகள்ல தொடர்ந்து ஈடுபட்டுண்டே இரு. ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் உன் பேரன் இதே நிலையிலயே இருந்துட்டான்னா – அதாவது நடக்காமவே இருந்துட்டான்னா பிற்காலத்துல உம் பாடு இன்னும் சிரமமாகிப் போய்விடும்’’ என்று கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒருவர் எச்சரிக்கை என்ற பெயரில் பயமுறுத்தியது வேறு, அவரது குடும்பத்தினரை ஏகத்துக்கும் களேபரப்படுத்திவிட்டது. எனவே, அலுவலக நேரம் தவிர, தான் வீட்டில் இருக்கும் நேரங்களில் பேரன் சுப்பிரமணியனைத் தூக்கி நிற்க வைப்பார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால், குழந்தையின் இளம் கால்கள் தரையில் நிற்காமல் வளைந்து, மடிந்து தடுமாறும். சட்டென்று பேலன்ஸ் சரிந்து கீழே விழும் பேரனைக் கைத்தாங்கலாக அரவணைத்துக்கொள்வார் கிருஷ்ணமூர்த்தி.

ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தியின் அலுவலக நண்பர் ஒருவர், ‘‘ஏம்ப்பா கிட்டு… ஒரு நாள் காஞ்சிபுரம் போய் மகா பெரியவாளைப் பாரு. குழந்தைக்கு அவரோட ஆசி கிடைச்சா எல்லாம் சரியா போயிடும். கூட்டிண்டு போய்ப் பாரேன்’’ என்று அனுசரணையாகச் சொன்னார்.

மனைவி ராஜத்திடம் இந்த விஷயத்தைச் சொல்ல… ‘‘கண்டிப்பா போயிட்டு வருவோம். கண்கண்ட அந்த  தெய்வத்தோட பார்வை இவன் மேல விழுந்தா, ஒருவேளை எல்லாம் சரியாயிடும்னு தோண்றது’’ என்று மனைவி ராஜமும் தன் பங்குக்குச் சொல்ல… ஒரு நாள் வாடகை காரை அமர்த்திக் கொண்டு காஞ்சிபுரம் கிளம்பினார்கள்.

அது ஒரு கோடை விடுமுறைக் காலம். பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு விட்டதால், குடும்பத்தோடு பலரும் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தனர். தங்கள் ஊரில் இருந்து கிட்டத்தட்ட ஒரு பிக்னிக் போல் புறப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள திருத்தலங்களை எல்லாம் தரிசித்துவிட்டு,  அப்படியே ஸ்ரீமடத்துக்கும் பெரியவா தரிசனத்துக்காக வந்திருந்தார்கள்.

காஞ்சி மடமே மனிதத் தலைகளால் நிரம்பியதுபோல் காணப்பட்டது. கூட்டத்தினரிடையே ஒருவாறு ஊர்ந்து, நீந்தி மகா பெரியவா அமர்ந்து அருட்காட்சி தந்துகொண்டிருக்கும் சந்நிதானத்தை அடைந்தனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர். பேரன் சுப்பிரமணியனைத் தன் இடுப்பில் தூக்கி வைத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. ஏகத்துக்கும் காணப்பட்ட கூட்டம் வேறு சுப்பிரமணியனை ஹிம்சை செய்தது போலும். விடாமல் அழுதுகொண்டே இருந்தான். தாய் புவனேஸ்வரியும் பாட்டி ராஜமும், பெரியவா சந்நிதானத்தைக் காட்டி, ‘‘அங்கே பார், உம்மாச்சித் தாத்தா. அழக்கூடாது. அவரைக் கும்புட்டுக்கோ’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.

அன்று மகா பெரியவா மௌனத்தில் இருந்தார். எவரிடத்திலும் எதுவும் பேசவில்லை. முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் தன் அந்தரங்கக் காரியதரிசிகளிடம் சைகையின் மூலம் சில விஷயங்களைக் கேட்டறிந்தார். மற்றபடி தன் முன் வந்து செல்லும் பக்தர்களின் குறிப்பறிந்து பிரசாதத்தையும் திருக்கரங்களால் ஆசியையும் வழங்கிக்கொண்டிருந்தது அந்தப் பரப்பிரம்மம்.

கூட்டம் வேறு அதிகமாக இருந்ததால், பெரியவா தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்களை விரைவாக அங்கிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள் சீடர்கள்.

மகனை மேல்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முன் ஆசி பெற வந்தவர்கள், கல்லூரி அட்மிஷன் கிடைக்க வேண்டுமே என்கிற பிரார்த்தனையுடன் வந்த பக்தர்கள், திருமணத்துக்கு அழைப்பிதழை அவரது சந்நிதானத்தில் வைத்து அனுக்ரஹம் வேண்டி வந்தவர்கள் என்று திரளான கூட்டம் கொஞ்சமும் கலையாமல் அப்படியே இருப்பதுபோல்தான் பட்டது கிருஷ்ணமூர்த்திக்கு. தரிசனம் முடிந்து பத்துப் பேர் வெளியேறினால், இருபது பேர் வந்து புதிதாகச் சேர்ந்து கொள்கிறார்கள்.

அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தியின் மனதுக்குப் பட்டது – கூட்டமே இல்லாமல் இருக்கும் ஒரு தினத்தில் வந்து மகா பெரியவாளிடம் இவனைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லி, ஆசியை வேண்டிப் பெற்றிருக்கலாமே என்று! ஆனால், பெரியவாளின் அனுக்ரஹம் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்?

‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ நாம கோஷத்தை மனதுக்குள் முணுமுணுத்தபடியே ‘கருணை தெய்வத்தின் திருப்பார்வை பேரன் மேல் விழுந்து, அவன் நல்லபடியாக நடக்கவேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொண்டே வரிசையில் நடந்து கொண்டிருந்தார் ராஜம். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்ற புவனேஸ்வரியும் தன் தாயைப் பின்தொடர்ந்து நடந்தார்.

பெரியவாளின் அருகே வந்து நின்றபோது, பரவசப்பட்டுத்தான் போனார் கிருஷ்ணமூர்த்தி. சுப்பிரமணியனைக் கீழே இறக்கித் தரையில் அமர வைத்தார். பிறகு, நமஸ்கரிப்பது போன்ற பாவனையில் அவனையும் குப்புறப் படுக்க வைத்து, தானும் கீழே விழுந்து நமஸ்கரித்தார். இவரைத் தொடர்ந்து ராஜமும் புவனேஸ்வரியும் பெரியவாளை நமஸ்கரித்தனர்.

சுப்பிரமணியன் மீது தீர்க்கமாகத் தன் பார்வையைச்  செலுத்தினார் மகா பெரியவா. பிறகு, ‘அவனைத் தூக்கி வெச்சுக்கச் சொல்லு’ என்பதாக ஒரு சிஷ்யனுக்குப் பெரியவா சைகை காண்பிக்க… அவன் கிருஷ்ணமூர்த்தியிடம், ‘‘மாமா… குழந்தையைத் தூக்கி இடுப்புல வெச்சுக்குங்கோ’’ என்றான். அதன்படி பேரனைத் தூக்கித் தன் இடுப்பில் வைத்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் அனைவருக்கும் கல்கண்டு மற்றும் குங்குமப் பிரசாதம் கொடுத்தார் மகா பெரியவா. ஏதோ சொல்லவேண்டும் என்று சுப்பிரமணியனின் நிலையை விவரிப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி வாயைத் திறக்கவும், பெரியவாளே அவரைக் கையமர்த்தி விட்டார்.

ராஜமும் புவனேஸ்வரியும் கண்களில் நீர் பெருக அந்த மகானின் சந்நிதியில் தங்களின் பிரார்த்தனைகளை வைத்தனர். ‘குழந்தை நடக்கவேண்டும்… குழந்தை நடக்கவேண்டும்’ என்பது மட்டுமே அப்போதைய அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

‘‘தரிசனம் செஞ்சவா எல்லாம் நகருங்கோ… நகருங்கோ’’ என்று பெரியவாளுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த சில சிஷ்யர்கள் குரல் கொடுக்கவும்… மெள்ள நகரலாம் என்று தீர்மானித்துக்கொண்டு ஓரடி எடுத்து வைத்தார் கிருஷ்ணமூர்த்தி. ‘அவாளை சித்த இருக்கச் சொல்லு’ என்பதாகத் தன் சீடன் ஒருவனுக்குப் பெரியவா சைகையால் உத்தரவு பிறப்பிக்க… சட்டென்று நகர்ந்த அவன் கிருஷ்ணமூர்த்தியின் கையைப் பிடித்து, காத்திருக்குமாறு பெரியவா சொன்னதாகச் சொன்னான்.

பெரியவாளுக்கு முன்னால் நெகிழ்ச்சியுடன் காத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அதற்கு மேல் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. குரல் உடைய… ‘‘திருவையாறு பூர்வீகம். எம் பேரன் இவன். பொறந்து ரெண்டரை வருஷம் ஆச்சு… இன்னும் தரையில் கால் பாவிச்சு நடக்கலை. எத்தனையோ வைத்தியர்கிட்ட போயிட்டேன். காசு செலவானதும் கவலை அதிகமானதும்தான் மிச்சம். பெரியவா கருணை பண்ணணும்…’’ என்றார். கண்களில் இருந்து வழியும் நீரை மேல்துண்டால் துடைத்தார்.

ஒரு புன்னகை பூத்த அந்தப் பரப்பிரம்மம், தன் முன்னால் சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருந்த பழத் தட்டை இன்னும் தன் அருகே கொண்டு வருமாறு சீடனிடம் சைகையால் சொன்னார். அவனும் அப்படியே செய்தான். அந்தத் தட்டிலிருந்து ஒரு ரஸ்தாலி வாழைப்பழத்தைத் தன் கையால் எடுத்தார். உரித்துச் சாப்பிடும் பாவனையில் அதன் மேல்தோலை உரித்தார். பாதி வாழைப்பழம் உரிக்கப்பட்ட நிலையில் அது காட்சி அளித்தது. இதை கிருஷ்ணமூர்த்தியின் இடுப்பில் இருந்த சுப்பிரமணியனுக்கு நேராக நீட்டினார் பெரியவா. அதற்கு ஏற்றாற்போல் கிருஷ்ணமூர்த்தியும் கொஞ்சம் நெருங்கி வந்தார். இருந்தாலும், மகா பெரியவா நீட்டிய அந்தப் பழத்தைத் தான் வாங்கி, சுப்பிரமணியனுக்குக் கொடுத்துவிடலாமே என்கிற எண்ணத்துடன் ஒரு சீடன் சட்டென முன்வந்து பெரியவாளிடம் கையை நீட்டினான்.

அப்போது பெரியவாளின் முகத்தைப் பார்க்கணுமே…! ‘தள்ளிப் போ’ என்பதாக அந்தச் சீடனுக்கு உத்தரவுபோல் வலது ஆட்காட்டி விரலை மட்டும் இடமும் வலமும் வேகமாக அசைத்துக் காண்பித்தவர், சுப்பிரமணியனைத் தன் அருகே வந்து அந்த வாழைப்பழத்தை வாங்கிக்கொள்ளுமாறு முக பாவனையால் அழைத்தார். அதற்கேற்றாற்போல் கிருஷ்ணமூர்த்தியும் தன் இடுப்பில் இருந்த சுப்பிரமணியனை இன்னும் கொஞ்சம் அருகே கொண்டுபோனார். தன் கையில் உரித்த நிலையில் இருந்த வாழைப்பழத்தைப் பெரியவா நீட்ட… தன் கையை நீட்டி அதை வாங்கிக்கொண்டான் சுப்பிரமணியன்.

அங்கே கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் ருசிகரமான இந்தக் காட்சியைப் பார்த்து மெய்சிலிர்த்தனர். வயதான ஒரு மாமி, ‘‘எத்தனையோ குழந்தைகளுக்குப் பெரியவா கல்கண்டு கொடுத்துப் பார்த்திருக்கேன். பழங்களைத் தந்தும் பார்த்திருக்கேன். ஆனா, ஒரு வாழைப்பழத்தை – அதன் தோலை உரிச்சு – பெரியவாளே அந்தக் குழந்தையோட கையில கொடுத்தார்னா… இது அந்தக் குழந்தைக்குப் பெரிய அனுக்ரஹம்’’ என்று பக்கத்தில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்.

சுப்பிரமணியன் தன் கையிலிருந்து வாங்கிய வாழைப்பழத்தை முழுதுமாக அவன் சாப்பிடும் வரை வேறு எந்த பக்தரையும் பார்க்கவில்லை பெரியவா. அவன் சாப்பிட்டு முடித்து, அவர்களை அங்கிருந்து அனுப்பிய பின்னர்தான் மற்ற பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க ஆரம்பித்தார் மகா பெரியவா.

ஊருக்கு வந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் பெரிதும் சந்தோஷப்பட்டனர். ‘‘ஏதோ நம் பிரார்த்தனை அந்த மகான் காதுலயே விழுந்துடுத்து போலிருக்கு. நம்மை எல்லாம் நன்னா ஆசிர்வாதம் பண்ணிட்டார். அதுவும், நம்ம சுப்பிரமணிக்குத் தன் கைப்பட வாழைப்பழம் கொடுத்ததை இப்ப நினைச்சுப் பார்த்தாலும் சிலிர்ப்பா இருக்கு’’ என்றார் ராஜம் தன் கணவரிடம்.

‘‘பெரியவா ஆசிர்வாதத்துல அவன் நடக்க ஆரம்பிச்சாலே போதும். வேற எதுவும் வேண்டாம்’’ என்ற கிருஷ்ணமூர்த்தி, அந்த வேளையில் காஞ்சி மகானை நினைத்து, இருந்த இடத்தில் இருந்தே வணங்கினார்.

காஞ்சிபுரத்தில் இருந்து வீட்டுக்கு வந்து சுமார் மூன்று நாட்கள் ஆகி இருக்கும். பணி புரியும் அரசு அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் ஏதோ ஒரு பேச்சுவாக்கில் தான் காஞ்சி சென்று வந்ததைப் பற்றிச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. கூடவே, பெரியவாளின் ஆசி குறித்தும் அங்கு தன் பேரனுக்கு வாழைப்பழம் தந்த அனுபவத்தையும் சொன்னார். அப்போது சென்னையில் ஓரிடத்தில் ஒரு பள்ளியைப் பற்றிச் சொல்லி, ‘‘அங்கு உன் பேரனைக் கூட்டிக்கொண்டு போய்ப் பார். எதற்கும் ஒரு வேளை வரவேண்டும். உனக்கு இப்பதான் பெரியவா உத்தரவு கொடுத்திருக்கா போலிருக்கு’’ என்றார்.

அதை அடுத்து, உயர் அதிகாரி சொன்ன அந்தப் பள்ளிக்குப் பேரனைக் கூட்டிப் போனார் கிருஷ்ணமூர்த்தி. சரியாக நான்கே மாதங்களில் சுப்பிரமணியனுக்கு நடக்கக்கூடிய பயிற்சியை அன்போடு சொல்லித் தந்தார்கள். ‘‘பெரியவாளின் பார்வை பட்ட சில மாதங்களிலேயே அவனிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பயம் குறைந்தது. தைரியமாக நடக்க ஆரம்பித்தான். இப்ப அவனுக்கு வயசு இருபத்திநாலு. அவன் நடக்கிற நடைக்கு வேற யாருமே ஈடு கொடுக்க முடியாது. அப்படி ஒரு வேகம். அவன் வேகமா நடக்கறதைப் பார்த்தா எனக்கு பெரியவா ஞாபகம்தான் வருது. அந்த தெய்வம்தானே இவனை இப்படி நடக்க வெச்சிருக்கு!’’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் கிருஷ்ணமூர்த்தி தம்பதியர்.



Categories: Devotee Experiences

11 replies

  1. Thank you

  2. Dear All,

    My child is right now two and half years old. But he has severe autism and now only crawling and that too not proper….He is yet to reach the remaining milestones for his age. Doctors are telling that his development shows that he is only 6 months old now. not sure how we can bring two years of improvement in him.

    I am daily praying to periyavaa to bless him and make him like other child of his age.
    I can understand the pain of Krishnamurthy maama here.

    Periyavaa should bless my child too… Please pray for him.

    • Ram Ram – Kindly take the child to Pudhu Periyava, prathyaksha Brahmam in Sri Madam. You will definitely see a positive change. Ram Ram

    • You surrendered to Periva, sure he will take care.

    • Sir, my name is Chandrasekaran ( Sri Paramacharya’s name !!) and my elder grandson Nirav (Swaminathan–our Kula Deivam) is 5 years old and with his parents live in San Jose, USA. We all are devotees of our Maha Periyava. I thank Him for the blessings He has already given us, including this cute,lovely and differently abled child. I used to pray to Him in the beginning to cure this baby but later on realized that He, my Father knows what is best, much better than I can ever know at any time. Hence this perception shift. Now feeling PEACEFUL with only GRATITUDE to Him. At the same time, whatever treatments/therapies that Nirav should get are being given to him. You may also do likewise.

    • Satheesh…. Dont worry… Periyava will always be with us and with your kid as well. He will definitely come out of that Autism in few months by the grace of Maha periyava…

      Maha periyavale charanam….

  3. Shri P.swaminathan*s narration about Shrisubramanyam is heart rendering.I only pray to ShriMahaPeriya whose ardent devotee Shri swaminathan is to Bless shri subramanyan for a normal life.The KanchiMahan who has Blessed ShriSubramanyan to walk may also Bless him to be able to do all his works himself and be conscious of it and also completely surrender himself to shriMahaPeriyava.

  4. Both children of Pradosham Mama were special children. As Maha Periyava mentioned about them they have no birth thereafter and they attaied Sivaloga prapthi in true sense.

  5. Namaskaaram Sri Periyavaa! Namaskaaram. || Sivaya Nama: Om ||

  6. Maha Periyava ThiruvadigaLe CharaNam! Experience written by Sri. P.Swaminathan is thrilling! One is reminded about Pradosham Maama and his children.Sri. Subrahmanyan is more fortunate than most of us! May God’s Blessings be abundant on him! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

Leave a Reply to thyauCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading