Sri Rama Navami

Shri LSV's Rama Original

Thanks to Shri Sai Srinivasan for sending me this article.
Periyava has done namaskarams to this painting done by a devotee.

வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும்.

ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம். மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்ற அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆன்ந்தமாகவே இருந்தான்.

சுக துக்கங்களில் சலனமில்லாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு, பின்பற்றி வாழ்வதுதான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்கான ஸ்ரீமத் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கு பார்த்தாலும், இது என் அபிப்பிராயம் என்று சொல்லவே மாட்டார். ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்லுகிறது என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரம புருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக் கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக் கொண்டு வாழ்ந்தான்.

ராவணன் ஸீதையைத் துரத்திக் கொண்டு போனபோது, ஒரே மயில் தூரத்திலிருந்தே ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம். என்று கேலி செய்து கேட்டவர்கள். எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான். மநுஷ்ய ரூபத்திலேயே இருந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து இந்தக் குழந்தைகள் யார். என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று கேலி செய்யலாமா. நாடக வால்மீகி, இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள். நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார். என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும். வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாதாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக் கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து

தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். ராகவா, c எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும் என் ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.

நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியமும் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விட்டுவிடக்கூடாது. ராமனை சாக்ஷ£த் லக்ஷ்மணனே பரிகசித்தான். அண்ணா. c தர்மம் தர்மம் எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்ஜியத்தை நான் ஸ்வீகரித்துத் தர ஆனுமதி தா என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், “ராமோ விக்ரஹவான் தர்ம”. என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான். சாக்ஷ£த் ஸ்ரீ ராமனை லட்சியமாகக் கொண்டு ராம என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.



Categories: Upanyasam

5 replies

  1. Interesting Write-up on SRI RAMA NAVAMI: Courtesy: DINAMANI
    ஸ்ரீராமநவமி சிறப்புக் கட்டுரை: சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
    By செங்கோட்டை ஸ்ரீராம்
    First Published : 19 April 2013 10:21 AM IST
    புகைப்படங்கள்

    அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, “மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே” என்று வருந்தினவாம். அதற்கு இறைவன் “உங்களுக்கு ஏற்றம் தருகிறேன். மக்கள் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாராம். பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம்.

    ஸ்ரீகிருஷ்ணர் நடு இரவில் சிறைக் கதவுகளுக்குப் பின்னே பிறந்தாரென்றால், ஸ்ரீராமனோ நடுப்பகலில் அரண்மனையில் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் 4 – ஆம் பாதத்தில் அவதரித்தார். ஸ்ரீராமர் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதுதான் ஸ்ரீராம ஜன்மோத்ஸவம் – ஸ்ரீராமநவமி என்று நாட்டு மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் திருநாள்.

    ஸ்ரீராமர் பிறந்ததே அனல் கொளுத்தும் வெய்யில் காலத்தில். அவர் பால பருவத்தில் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்றதும், வனவாசத்திற்காகப் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் அலைந்ததும் நல்ல வெய்யிலில் தான். எனவேதான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் பிறந்ததை தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். “மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பது வழக்கமாக உள்ளது.

    இராமரைப் பற்றி எத்தனையோ பக்தகவிகள் பாடி இருக்கிறார்கள். புரந்தரதாஸர், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் என்ற மும்மூர்த்திகளைப் போல பல்வேறு புகழ்பெற்ற கீர்த்தனைகளைக் கொடுத்தவர் திருவாங்கூர் மகாராஜா. அவர் பிறந்தது கி.பி.1813 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 – ஆம் தேதி. 18 ஆண்டுகள் அவர் சமஸ்தானத்தைப் பரிபாலித்தார். ஸம்ஸ்க்ருதம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் 300 -க்கும் மேற்பட்ட கிருதிகளை இயற்றியுள்ளார். அவரது பட்டாபிஷேக கீர்த்தனையான “பாவயமி ரகுராமம் பவ்ய ஸுகுணா ராமம்” என்ற கீர்த்தனை. இன்றும் இந்தக் கீர்த்தனையைக் கேட்டு அதில் லயிக்காதவர் யாருளர்?

    ஸ்ரீராமர் என்று சொன்னாலே சரணாகதித் தத்துவம் தான் அனைவர் நினைவுக்கும் வரும். தஞ்சமென்று வந்தவரைத் தன் சரண கமலத்தில் வைத்து அபயம் அளித்தவர் ஸ்ரீராமபிரான். பாலகாண்டத்தில் இராவணனால் அல்லலுற்ற தேவர்கள் பரமனடியே பரிகாரம் என்று சரணடைந்தனர். அயோத்யா காண்டத்தில் பரதன், ஸ்ரீராமபிரானைச் சரணடைந்து அவர் அடித்தலம் இரண்டையும் அழுத கண்களோடு பற்றினவனாய்த் தன் முடித்தலத்திற்கு இவையே கிரீடம் என்று சூட்டிக் கொண்டான். ஆரண்ய காண்டத்தில் தண்டகவனத்து ரிஷிகள் எல்லாரும் அரக்கர்களின் தாங்கவொண்ணாக் கொடுமைக்கு அஞ்சி சக்ரவர்த்தித் திருமகனைச் சரணடைந்தனர். கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் ஸ்ரீராமபிரானைச் சரணடைந்தான். சுந்தரகாண்டத்திலும் சரணாகதிக் கதை வருகிறது. சீதை அசோகவனத்தில் சிறையிருந்தபோது, ஸ்ரீராமபிரானுடனான தம் இளமைக்கால நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது காகாசுரன் கதை வருகிறது. ராமபாணத்துக்கு அஞ்சி உலகெல்லாம் சுற்றிவிட்டு இறுதியில் ஸ்ரீராமபிரானது திருவடிகளையே தஞ்சம் என்று சரணடைந்தான் காகாசுரன்.

    அடைக்கலம் என்று வந்தவர்க்கு “அஞ்சேல்” என்று அபயம் அளித்த ஸ்ரீராமபிரான் சரணாகதிச் சிறப்பிற்கு விபீஷண சரணாகதியைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

    சரணாகதியை விளக்குவதை சரம ஸ்லோகம் என்பார்கள். இராமாயணத்தில் வரும் சரண கட்டம் விபீக்ஷண சரணாகதி.

    ஸக்ருதவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே

    அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம

    ஆநாயைநம் ஹரிச்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா

    விபிஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம்

    பகைவனுக்கும் அருளும் பண்பாளன் அல்லவா ஸ்ரீராமபிரான். அதை சரணாகதியின் உச்சத்தை விளக்கும் இந்த ஸ்லோகத்தில் அறிந்து கொள்ளலாம்.

    விபீஷணனை ஏற்றுக்கொள்ள சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது ஸ்ரீராமபிரான் கூறுகிறார்…

    “நான் உன்னுடையவன், என்னைக் காப்பாற்று” என்று கூறிச் சரணடைந்தவனுக்கும், அனைத்து பிராணிகளுக்கும் நான் அபயம் அளிக்கிறேன். இது என் விரதம். ஆகையால் சுக்ரீவா இவனை அழைத்துவா. இவன் விபீஷணனாக இருக்கட்டும் அல்லது அந்த இராவணனாகவேதான் இருக்கட்டும்… இவனுக்கு அபயம் அளிக்கப்பட்டுவிட்டது” என்று திருவாய் மலர்ந்தருளுகிறார் ஸ்ரீராமபிரான்.

    இராமாயணம் படித்தால் சகல நலன்களும் வந்து சேரும் என்ற நம்பிக்கை நம்நாட்டில் உண்டு. மணமாகாத கன்னியர் சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்தால் உடனே மணமாகும் என்பர். வேறு சில பரிகாரங்களுக்கும் சுந்தர காண்டத்தைப் படிக்கச் சொல்வதுண்டு. இராமாயணத்தைப் பாராயணம் செய்து தசமி அன்று பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்பது ஒரு வகை. ஸ்ரீராமர் பிறந்த இந்த நவமியிலிருந்து பத்து தினங்களுக்குப் பாராயணம் செய்து பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போரும் உண்டு. இராமனின் கதையைக் கேட்டாலும் படித்தாலும் புண்ணியம் சேரும் என்பது ஆன்றோர் கருத்து.

    ஸ்ரீராமபிரானை எண்ணும்போது நம் நினைவில் உடனே வருபவர் குலசேகராழ்வார். சேரமான் பெருமாளாக மன்னர் குலத்தில் ஸ்ரீராமபிரான் பிறந்த அதே புனர்பூச நட்சத்திரத்தில் உதித்தார் குலசேகராழ்வார். மன்னராயினும் ஸ்ரீராமபிரானிடம் அளவற்ற பக்தி அவருக்கு. இராமாயணத்தைக் கேட்பதில் தனி ஆனந்தம். ஒரு முறை வைணவப் பெரியார் ஒருவர், குலசேகரருக்கு வால்மீகி ராமாயணத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார். இவரும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கங்கையெனப் பொங்கும் வண்ணம் மனம் லயித்துக் கேட்டு வந்தார். ஒருநாள் இராமபிரான் அரக்கர்களோடு போர்புரிந்த நிகழ்ச்சியை விவரித்தார் அந்த வைணவப் பெரியார்.

    இலக்குமணன் வில்லேந்திக் கவசம் தரித்து இராமனிடம் வந்து, அரக்கர்களுடன் போர் புரிய விடை கேட்டான். ஸ்ரீராமரோ, நீ சீதையைக் காத்துக் கொண்டிரு, நான் போய் அரக்கர்களை அழித்து வருகிறேன் என்று கூறிப் பர்ண சாலையினின்றும் வெளிக் கிளம்பி விட்டார். அதுகண்ட சூர்ப்பணகை, இவனே அரக்கர் குலத்தின் பகைவன் என்று கத்தினாள். அம்மொழிகேட்ட அரக்கர்கள் நாலாத்திசைகளிலிருந்தும் இராமபிரானைத் தாக்கினார்கள். அவர்களின் படைக்கலன்கள் இராமபிரானின் மீது பட்டு விழுந்தன” என்று கதை கூறிக் கொண்டிருந்தார் அவர்.

    இதைக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகரரோ அந்தக் கட்டத்தில் மனம் லயித்து, “ஆ! அரக்கர்கள் மாயப் போர் புரிவதில் வல்லவர்களாயிற்றே. கரன், தூஷணன், திரிசரன் போன்ற அரக்கர்கள் மாயத்தந்திரங்களால் தனியராய் இருக்கும் ஸ்ரீராமபிரானைத் தாக்குகிறார்களே! இப்பெரும் படையை தனி ஆளாய் இருக்கும் ஸ்ரீராமபிரான் எப்படி சமாளிக்கப் போகிறாரோ!” என்று எண்ணி, தம் படையைப் போருக்கு ஆயத்தமாகுமாறு படைத் தளபதிகளுக்குக் கட்டளையிட்டார்.

    படைத்தளபதிகளோ, ஆச்சர்யம் அடைந்தனர். நம்மை எதிர்த்த சோழ, பாண்டியர்கள் மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள். எதிரிகளே நமக்கில்லையே. பின் யார் மீது போர்? என்று குழம்பித் தவித்தனர். ஆனால் அரச கட்டளையாயிற்றே! அவர்கள் பெரும் படையத் திரட்டித் தயாராயினர். குலசேகரரும் போர்க்கோலம் பூண்டு நிற்கையில், காரணம் அறிந்த அமைச்சர் இராமாயணக் கதை சொல்லிக் கொண்டிருந்த அப்பெரியாரை அழைத்து, இச்சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டினர்.

    அப்பெரியவரும், “ஸ்ரீராபிரான் தனியொருவராக நின்று, மாயங்கள் புரிந்த அரக்கர்களை அழித்து வெற்றி வாகைசூடி, பர்ணசாலையடைந்தார். சீதாதேவி எம்பெருமானின் மார்பில் பட்ட புண்களுக்கெல்லாம் மருந்தாக அவரைத் தழுவி மகிழ்ந்தாள்” என்று கதையைச் சொல்லி ஸ்ரீராம பட்டாபிஷேகம் வரை, சொல்லி முடித்த பிறகே குலசேகரர் தெளிவு பெற்றார். தம் படையை மீண்டும் தத்தம் இடம் திரும்புமாறு கட்டளையிட்டு அரண்மனை திரும்பினார்.

    ஸ்ரீராமாயணக் கதை கேட்டாலும் மனம் லயித்துக் கேட்டால் தான் அதன் அருமையும் பலனும் நமக்குக் கிடைக்கும். எங்கெல்லாம் ஸ்ரீராமாயணம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயரும் அமர்ந்து கதை கேட்பார் என்பது பெரியோர் வாக்கு. வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அரக்கனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில் (பாணம்). ஒரே சொல். ஒரே இல். (மனைவி) என்று வாழ்ந்துகாட்டிய ஸ்ரீராமபிரானின் வழியில் சிந்தித்து சுகம் பெறுவோமே!

  2. Besides Lord Rama, Seetha and Lakshmana our hearty pranams to Lord Anjaneyar also on this auspicious day.

  3. I wish everyone a very happy RAM NAVAMI.

    Please do celebrate this important festival at Home or Temple.
    With best wishes,
    B.SRINIVASAN

  4. Periyava is 100% convince others by giving the story of Raja part Ramaswamy iyengar and his two kids plays the Ramayanam in that Aiyangar is in the role of Rama and his kids as Lava and Kusa.Rama Knows every thing but his Avathara aim is different and he has given in plenty justice to his role.Only Periyava Can give explanation to others in an understanding manner. Hara Hara Sankara…Jaya Jaya Sankara.

    • ஸ்ரீ ராமநவமிக்கு நீங்கள் தந்த அருள் பிரசாதத்தை நான் மட்டும் ச்வீகரிக்காமல் பேஸ புக் மூலம் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன் . மிக்க நன்றி.

Leave a Reply

%d bloggers like this: