தர்மம் தலைகாக்கும்

Although this has been captured in the video interview from Shri Amravanesvaran, it is good to have it in textual form as well.

எழுதியவர் : உ.வே.சாமிநாதய்யர்
தட்டச்சு செய்து அளித்தவர : திருமதி கீதா சாம்பசிவம்
___________________________________________________________________________

கொள்ளிடத்தின் வடகரையில் ஆங்கரை என்பதோர் ஊர். அது திருச்சிராப்பள்ளி ஜில்லா லாலுகுடி தாலுகாவில், லாலுகுடிக்கு வடமேற்கே* இரண்டு மைல் தூரத்தில் பல ஊர்களுக்குச் செல்லும் சாலைக்கிடையே அமைந்துள்ளது. அங்கே அக்கிரகாரத்தில் இருநூறுக்கு மேற்பட்ட அந்தணர்களின் வீடுகள் உண்டு. அவர்களிற் பெரும்பாலோர் ஸ்மார்த்தப் பிராமணர்களுள் மழநாட்டுப் பிரஹசரணமென்னும் வகுப்பைச் சார்ந்தவர்கள். அவர்கள் யாவரும் சிவபக்தியுடையவர்கள். தங்கள் தங்களால் இயன்ற அளவு விருந்தினர்களை உபசரித்து உண்பிக்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். பழைய காலத்தில் இவ்வழக்கம் எல்லாச் சாதியினரிடத்தும் இருந்து வந்தது.

ஏறக்குறைய நூற்றைம்பது வருஷங்களுக்குமுன் மேற்கூறிய ஆங்கரையில் சுப்பையரென்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டாயிரம் ஏகரா நன்செய்கள் இருந்தன. அவை ஏழு கிராமங்களில் இருந்தனவென்பர். அவருடைய குடும்பம் பரம்பரையாகச் செல்வமுள்ளதாக விளங்கிய குடும்பம். அவர் தெய்வபக்தியும், ஏழைகளிடத்தில் அன்பும், தர்மசிந்தனையும் வாய்ந்தவர்.

அவர் நாள்தோறும் காலையில் ஸ்நாநம் செய்துவிட்டுப் பூஜை முதலியவற்றை முடித்துக் கொள்வார்; பிறகு தாம் போசனம் செய்வதற்கு முன் தம் வீட்டுத் திண்ணையில் யாரேனும் அதிதிகள் வந்துள்ளார்களாவென்று பார்ப்பார். திரிசிரபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா முதலிய இடங்களுக்குப் பாதசாரிகளாகச் செல்பவர்களும் அவ்வூர்களிலிருந்து தங்கள் தங்கள் கிராமங்களுக்குச் செல்பவர்களுமாகிய வழிப்போக்கர்கள் அவருடைய வீட்டுக்கு வந்து திண்ணையில் தங்கி இருப்பார்கள். அவர்களைச் சுப்பையர் உள்ளே அழைத்துப் பசியாற அன்னமிட்டு உபசரிப்பது வழக்கம். அவர் அன்னமிடுவதை யறிந்து பல பிரயாணிகள் அவர் வீட்டுக்கு வருவார்கள். அவருடைய வீடானது ஒரே சமயத்திற் பலர் இருந்து சாப்பிடும்படி விசாலமாக அமைந்திருந்தது. எல்லா வகையினருக்கும் அவரவர்களுக்கேற்ற முறையில் அவர் உணவளிப்பார். பசியென்று எந்த நேரத்தில் யார் வரினும் அவர்கள் பசியை நீக்கும் வரையில் அவரது ஞாபகம் வேறொன்றிலும் செல்லாது.

தம்முடைய வீட்டிற்கு இரவும் பகலும் இங்ஙனம் வந்து போவாரை உபசரித்து அன்னமிடுவதையே தம்முடைய வாழ்க்கையின் பயனாக அவர் எண்ணினார். பசிப்பிணி மருத்துவராகி வாழ்ந்து வந்த அவருடைய புகழ் எங்கும் பரவியது. அவரை யாவரும் *1அன்னதானமையரென்றும், அன்னதானம் சுப்பையரென்றும் வழங்கலாயினர்.

சுப்பையர் குடும்பம் மிகவும் பெரியது; அவருடைய சகோதரர்கள், அவர்களுடைய மனைவிமார், பிள்ளைகள், பெண்கள், மருமக்கள், முதலியோர் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அன்னதானம் செய்யும் பொருட்டு அவர் தனியே சமையற்காரர்களை வைத்துக்கொள்ளவில்லை. அவர் வீட்டிலுள்ள பெண்பாலாரே சமையல் செய்வதும் வந்தோரை உபசரித்து அன்னமிடுவதுமாகிய செயல்களைச் செய்து வந்தனர். சிறு பிள்ளைகள் முதற் பெரியவர்கள் வரையில் யாவரும் இலைகளைப் போட்டும், பரிமாறியும், பிறவேலைகளைப் புரிந்தும் தம்முடைய ஆற்றலுக்கேற்றபடி உரிய காரியங்களைக் கவனிப்பார்கள். அதிதிகளுக்கு உபயோகப் படும்பொருட்டு, அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய்கள் முதலியவற்றை அவ்வப்போது செய்து வைக்கும் வேலையில் அவ்வீட்டுப் பெண்பாலார் ஈடுபட்டிருப்பார்கள். அவருடைய வீடு ஒரு சிறந்த அன்ன சத்திரமாகவே இருந்தது. குடும்பத்தினர் யாவரும் தர்மத்திற்காக அன்புடன் உழைக்கும் பணியாளர்களாக இருந்தனர்.

“இப்படி இருந்தால் எப்படிப் பணம் சேரும்? எப்பொழுதும் இந்த மாதிரியே நடந்து வருவது சாத்தியமா?” என்று யாரேனும் சிலர் சுப்பையரைக் கேட்பார்கள். அவர், “பரம்பரையாக, நடந்துவரும் இந்த தர்மத்தைக் காட்டிலும் மேற்பட்ட லாபம் வேறொன்று எனக்கு இல்லை. பசித்து வந்தவர்களுக்கு அன்னமிடுவதே சிவாராதனமென்று எண்ணுகிறேன். தெய்வம் எவ்வளவு காலம் இதை நடத்தும்படி கிருபை பண்ணுகிறதோ அவ்வளவு காலம் நடத்தியே வருவேன். நான் செய்வது கெட்டகாரியமில்லையென்ற திருப்தியே எனக்குப் போதும்” என்பார்.

இங்ஙனம் அவர் இருந்து வரும் காலத்தில் ஒரு சமயம் மழையின்மையாலும் ஆறுகளில் ஜலம் போதியளவு வாராமையாலும் நிலங்களில் விளைச்சல் குறைந்தது. ஆயினும் அவர் அன்னதானத்தைக் குறைக்கவில்லை. இப்படி ஒருவர் அன்னமிடுகிறாரென்ற செய்தியை அறிந்த பல ஏழை ஜனங்கள் அங்கங்கே உண்டான விளைச்சற் குறைவினால் ஆதரவு பெறாமல் சுப்பையர் வீட்டிற்கு வந்து உண்டு அவரை வாழ்த்திச் சென்றார்கள். இதனால் அக்காலத்தில் வழக்கத்திற்கு மேல் அவர் அன்னதானம் செய்ய நேர்ந்தது. ஆயினும் சுப்பையர் மனங்கலங்கவில்லை. நாயன்மார்களுடைய வரலாற்றை உணர்ந்திருந்த பரமசிவ பக்தராகிய அவர் அந்நாயன்மார்கள் இறைவன் சோதனைக்கு உட்பட்டுப் பின் நன்மை பெற்றதையறிந்தவராதலின், தம்முடைய நிலங்கள் விளைவு குன்றியது முதலியனவும் அத்தகைய சோதனையே என்றெண்ணினார். தர்மம் தலை காக்குமென்ற துணிவினால், எப்பொழுதும் செய்துவரும் சிறப்புக்குக் குறைவில்லாமல் அன்னதானத்தை நடத்தி வந்தார். பொருள் முட்டுப்பாடு உண்டானமையால் தம் குடும்பத்துப் பெண்பாலரின் ஆபரணங்களை விற்றும், அடகு வைத்தும் பொருள் பெற்று அன்ன தானத்திற்குப் பயன்படுத்தி வந்தார். அதனாற் குடும்பத்தினருக்குச் சிறிதேனும் வருத்தம் உண்டாகவில்லை; அப்பெண்களோ அந்த நகைகள் ஒரு நல்ல சமயத்தில் பயன்பட்டது கருதி மகிழ்ந்தார்கள். அந்தக் குடும்பத்திலுள்ள யாவரும் ஆடம்பரமின்றியிருந்தார்கள்.

பொருள் முட்டுப்பாடு அவ்வருஷத்தில் நேர்ந்தமையால் அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய ‘கிஸ்தி’யை அவராற் செலுத்த முடியவில்லை. பெருந்தொகையொன்றை வரிப்பணமாக அவர் செலுத்த வேண்டியிருந்தது. அவ்வூர்க்கணக்குப் பிள்ளை, மணியகாரர் ஆகியவர்கள் வரி வசூல் செய்ய முயன்றார்கள். சுப்பையர் தம்முடைய நிலைமையை விளக்கினார். அவர்கள் சுப்பையருடைய உண்மை நிலையையும் பரோபகார சிந்தையையும் நன்கு அறிந்தவர்களாதலால் அவர் கூறுவது மெய்யென்றே எண்ணினர். ஆயினும் மேலதிகாரிகளுக்கு எவ்விதம் பதில் சொல்லுவது??

அதனால் சுப்பையரை நோக்கி, “நாங்கள் என்ன செய்வோம்! உடனே வரியை வசூல் செய்ய வேண்டுமென்று எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறதே!” என்றார்கள். சுப்பையர், “என்னால் வஞ்சனையில்லை யென்பது உங்களுக்கே தெரியும். நான் வரியைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக மேலதிகாரிகளுக்கே தெரிவியுங்கள். அவர்கள் இஷ்டம்போலச் செய்து கொள்ளட்டும். அவர்கள் நிலத்தை ஏலம் போடக் கூடும். தெய்வம் எப்படி வழி விடுகிறதோ அப்படியே நடக்கும்; அதுவே எனக்குத் திருப்தி” என்றார்.

சிலர் அவரிடம் வந்து, “இந்தக் கஷ்டகாலத்திற் கூட அன்னதானத்தை ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்? சிலகாலம் நிறுத்தி வைத்தால் வரியையும் கொடுத்துவிடலாம்; உங்களுக்கும் பணம் சேருமே” என்றார்கள். அவர், “இந்தக் காலத்தில் அன்னம் போடாவிட்டால் இவ்வளவு நாள் நான் போட்டும் பயன் இல்லை; இப்போதுதான் அவசியம் இந்தத் தர்மத்தைச் செய்துவரவேண்டும். நஷ்டமென்பது எல்லோருக்கும் இருப்பதுதானே? பல ஏழைகள் பசியோடு வரும்போது நாம் சும்மா இருப்பதைவிட இறந்துவிடலாம். இப்பொழுது கடன்பட்டாவது இந்தத் தர்மத்தைச் செய்து வந்தால் நன்றாக விளையும் காலத்தில் உண்டாகும் லாபத்தினால் ஈடு செய்து கொள்ளலாம். இப்பொழுது செய்யாமல் நிறுத்திவிட்டால் அந்த நஷ்டத்திற்கு ஈடு செய்யவே முடியாது” என்றார்.
கணக்குப் பிள்ளையும் மணியகாரரும் நடந்ததைப் *2பேஷ்காரிடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தார்; அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை; தாசில்தாருக்குத் தெரிவித்தார். அவர் மிக்க முடுக்கோடு வந்து பயமுறுத்தினார். சில ஹிம்சைகளும் செய்து பார்த்தார். சுப்பையர் தம்முடைய நிலைமையை எடுத்துச் சொன்னார்; தாசில்தார், “இந்த அன்ன தானத்தை நிறுத்திவிட்டுப் பணத்தைக் கட்டும்” என்று சொல்லவே சுப்பையர், “தாங்கள் அதை மட்டும் சொல்லக்கூடாது. எங்கள் பரம்பரைத் தர்மம் இது. இதை நிறுத்தி விடுவதென்பது முடியாத காரியம். என்னுடைய மூச்சு உள்ள வரையில் இதை நிறுத்த மாட்டேன்; எனக்கு என்ன துன்பம் வந்தாலும் வரட்டும்” என்றார்.

தாசில்தார், “இதெல்லாம் வேஷம்! அன்னம் போடுகிறேனென்று ஊரை ஏமாற்றுகிற வழி” என்றார். சுப்பையர் மேல் சில காரணங்களால் பொறாமை கொண்ட குமாஸ்தாக்கள் சிலர் தாசில்தாரிடம் அவரைப் பற்றி முன்னமே கோள் கூறி இருந்தனர். தாசில்தாரும் கோபியாதலின் சுப்பையருடைய குணத்தை அறிந்து கொள்ளவில்லை.

“உம்மால் பணம் கொடுக்கமுடியாவிட்டால் உம்முடைய நிலத்தை ஏலம் போடுவேன்” என்றார் தாசில்தார்.

“அவ்விதம் செய்வது அவசியமென்று உங்களுக்குத் தோன்றினால், தெய்வத்தினுடைய சித்தமும் அதுவாக இருக்குமானால், நான் எப்படி மறுக்கமுடியும்?” என்று சுப்பையர் பணிவாகக் கூறினார்.

தாசில்தார் நிலத்தை ஏலம் போட்டார்; ‘இந்த தர்ம தேவதையின் நிலத்தை ஏலம் எடுத்தால் நம் குடும்பமே நாசமாகிவிடும்’ என்ற எண்ணத்தால் அவ்வூரிலுள்ளோரேனும் அயலூரினரேனும் வந்து ஏலம் எடுக்கத் துணியவில்லை. தம் அதிகாரமொன்றையே பெரிதாக நினைத்த தாசில்தாருக்கோ கோபம் பொங்கியது; மீசை துடித்தது; கண்கள் சிவந்தன. “இந்த மனுஷன் பொல்லாதவனென்று தெரிகிறது. இவனுக்குப் பயந்தே ஒருவரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இருக்கட்டும். இவனுக்குத் தக்கபடி ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லித் தாசில்தார் போய்விட்டார். சுப்பையரைப் போலவே வேறு பலர் வரி செலுத்தவில்லை. ஆயினும் அவர்கள் செலுத்தவேண்டிய தொகை சிறிதாதலின் எவ்வாறேனும் வசூல் செய்து விடலாமென்ற தைரியம் தாசில்தாருக்கு இருந்தது. சுப்பையர் பெருந்தொகை செலுத்த வேண்டியவராக இருந்தமையின் அவர்மீது தாசில்தாருக்கு இருந்த கோபத்துக்கு அளவில்லை. உடனே, பலரிடமிருந்து வரிவசூல் செய்யப் படவில்லை யென்பதையும், அவர்களுள் பெருந்தொகை செலுத்தவேண்டிய சுப்பையர் முயற்சியொன்றும் செய்யாமல் இருப்பதையும், அவருடைய நிலத்தை ஏலம் எடுக்க ஒருவரும் துணியாததையும் ஜில்லா கலெக்டருக்கு எழுதித் தக்க ஏற்பாடுகள் செய்யவேண்டுமென்று தெரிவித்தார்.

‘எல்லாம் பரமசிவத்தின் திருவுள்ளப்படி நடக்கும்’ என்ற மனச்சாந்தியோடு சுப்பையர் அன்னதானத்தைக் குறைவின்றி நடத்திவந்தார்.

தாசில்தாருடைய கடிதத்தைக் கண்ட கலெக்டர் லாலுகுடிக்கு வந்து ‘முகாம்’ போட்டார். அவர் ஒரு வெள்ளைக்காரர்; மதியூகி; எதையும் ஆலோசித்துச் செய்பவர்; தர்மவான்; நியாயத்துக்கு அஞ்சி ஒழுகுபவர்; தமிழ்ப் பயிற்சி உள்ளவர். பிறர் தமிழ் பேசுவதைத் தெளிவாக அறிவதோடு தாமே தமிழிற் பேசவும் தெரிந்தவர். அவர் லாலுகுடிக்கு வந்து தாசில்தாரையும் வரச் செய்து அவரிடம் சுப்பையரைப் பற்றி விசாரித்தார்.

தாசில்தார் தம்முடைய அதிகாரமொன்றும் சுப்பையரிடத்திற் செல்லவில்லையென்ற கோபத்தினால் அவரைப்பற்றி மிகவும் கடுமையாகக் குறை கூறினார். “அவன் பெரிய ஆஷாடபூதி. இவ்வளவு நிலம் வைத்திருக்கிறவனுக்குப் பணம் இல்லாமலா போகும்? ஏதோ சிலருக்குச் சோற்றைப் போட்டுவிட்டு அன்னதானமென்று பேர் உண்டாக்கிக் கொண்டு பணத்தை மறைவாகச் சேகரித்து  வைத்திருக் கிறானென்று நான் எண்ணுகிறேன். தன் வீட்டிலுள்ள நகைகளைக் கூட ஒளித்து வைத்துவிட்டான். துரையவர்கள் சிறிதேனும் இரக்கம் காட்டாமல் அந்த மனுஷனைத் தக்கபடி சிக்ஷிக்கவேண்டும்” என்றார்.

தாசில்தாருடைய பேச்சில் கோபம் தலைதூக்கி நிற்பதைக் கலெக்டர் உணர்ந்தார். அவருடைய வார்த்தைகளை அப்படியே நம்புவது அபாயமென்றெண்ணினார். ஆதலின், அந்தப் பக்கங்களில் இருந்த வேறு சிலரிடம் சுப்பையரைப் பற்றி இரகசியமாக விசாரித்தார். அவ்வந்தண உபகாரியிடம் பொறாமை கொண்ட சிலரையன்றி மற்றவர்களெல்லாம் அவரைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார்கள்; அவர் செய்யும் அன்னதானத்தைப் பற்றி உள்ளங்குளிர்ந்து பாராட்டினார்கள். கலெக்டர் துரை எல்லாவற்றையும் கேட்டார்.

ஒருநாள் இரவு சுப்பையர் வழக்கம்போலத் தம்முடைய வீட்டுத் திண்ணையிலே படுத்திருந்தார். பகலிலும் இரவிலும் யாவருக்கும் அன்னமிட்டபின்பு அகாலத்தில் யாரேனும் பசியோடு வந்தால் அவர்களுக்கு உதவும்பொருட்டு உணவு வகைகளைத் தனியே வைத்திருக்கச் செய்வது அவருடைய வழக்கம். சில சமயங்களில் மழை முதலியவற்றால் துன்புற்று வழிநடைப் பிரயாணிகள் நள்ளிரவில் வருவார்கள். அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு அவ்வுணவு உதவும்.

சுப்பையர் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது நெடுந்தூரத்திலிருந்து, “சாமீ! சாமீ!” என்ற ஒரு சத்தம் கேட்டது. அது சுப்பையருடைய தூக்கத்தைக் கலைத்தது. அவர் விழித்தெழுந்து சத்தம் கேட்கும் வழியே சென்றார். அக்கிரஹாரத்தின் கோடியிலிருந்து யாரோ ஒருவன், “சாமீ! சாமீ!’ என்று கத்திக் கொண்டிருந்தான்.

“யாரப்பா அது? ” என்று கேட்டார் சுப்பையர்.

“சாமீ! நான் பக்கத்திலுள்ள ஊர்ப்பறையன், வேறு ஊருக்குப் போய்த் திரும்பி வருகிறேன். பசி தாங்க முடியவில்லை. இவ்வளவு தூரம் நடந்து வந்தேன்; மேலே அடியெடுத்து வைக்க முடியவில்லை ” என்றான்.

“அப்படியானால், சற்று நேரம் இங்கே இரு; இதோ வருகிறேன்” என்று சொல்லிச் சுப்பையர் தம் வீட்டுக்கு வந்தார். வந்து வெளிக்கதவைத் திறக்கச் செய்து சமையலறையிற் புகுந்தார். அங்கிருந்த கறி, குழம்பு, ரஸம், மோர் முதலியவற்றைத் தனித்தனியே தொன்னைகளிலும் கொட்டாங்கச்சிகளிலும் எடுத்து, அன்னத்தை ஒரு பெரிய மரக்காலில் போட்டு அதன் மேல் கறி முதலியவற்றை வைத்து மேலே இலையொன்றால் மூடினார். அப்படியே அதை எடுத்துக்கொண்டு தெருவின் கோடிக்கு வந்து, “இந்தா அப்பா! இந்த மரக்காலில் சாதம், குழம்பு, கறி, ரஸம், எல்லாம் வைத்திருக்கிறேன். அதோ இருக்கிறதே, அந்த *3வாய்க்காலுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு உன் ஊருக்குப் போ. முடியுமானால் மரக்காலை நாளைக்குக் கொண்டுவந்து கொடு; இல்லாவிட்டால் நீயே வைத்துக்கொள்” என்று சொல்லி அந்த மரக்காலைக் கீழே வைத்தார்.

பறையன் அதை எடுத்துக்கொண்டு, “சாமீ! உங்களைத் தெய்வம் குறைவில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலை காக்கும்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றான். அவனுடைய பேச்சில் ஒருவிதமான நாக்குழறல் இருந்தது; “பாவம்! பசியினால் பேசக்கூட முடியவில்லை! நாக்குக் குழறுகிறது! என்று சுப்பையர் எண்ணி இரங்கினார். அவன் பசியைத் தீர்க்க நேர்ந்தது குறித்து மகிழ்ந்து வீடு வந்து சேர்ந்தார்.
லாலுகுடியில்  ‘முகாம்’ செய்திருந்த கலெக்டர் மேற்சொன்ன நிகழ்ச்சி நடைபெற்றதற்கு மறுநாள் தம்மிடம் வரவேண்டுமென்றும், தாம் விசாரணை செய்யவேண்டுமென்றும் சுப்பையருக்கு உத்தரவு முன்பே அனுப்பியிருந்தார். விசாரணை நாளன்று சுப்பையர் உரியகாலத்தில் செல்லாமல் நேரம் கழித்துச் சென்றார்.

அவர் கலெக்டர் துரையின் முன் நிறுத்தப்பட்டார். நீர்க்காவி ஏறிப் பழுப்பு நிறமாயிருந்த அவர் வஸ்திரம் இடையிடையே தையலையுடையதாயும், சில இடங்களில் முடியப்பட்டும் இருந்தது; அவருடைய உடம்பில் விபூதி விளங்கியது; மார்பில் ருத்திராட்ச மாலை இருந்தது. அவர் நேரம் கழித்து
வந்ததனாற் கோபம் கொண்டவரைப் போல் இருந்தார் கலெக்டர். முகத்திற் கோபக்குறிப்புப் புலப்பட்டது; “இவரா சுப்பையர்?” என்று கேட்டார் துரை.

அருகிலிருந்த தாசில்தார், “ஆமாம்!” என்றார்.

கலெக்டர், ” இவ்வளவு ஏழையாக இருப்பவரையா நீர் பெரிய பணக்காரரென்றும், வரிப்பணம் அதிகமாகத் தரவேண்டுமென்றும் எழுதியிருக்கிறீர்?” என்று கேட்டார்.

தாசில்தார்: இதெல்லாம் வேஷம். இப்படி வந்தால் துரையவர்கள் மனமிரங்கி வரியை வஜா செய்யக் கூடுமென்ற வஞ்சக எண்ணத்தோடு வந்திருக்கிறார்.

கலெக்டர் அவரைக் கையமர்த்திவிட்டுச் சுப்பையரைப் பார்த்து, “நீரா ஆங்கரைச் சுப்பையர்?” என்று கேட்டார்.

சுப்பையர்: ஆம்.

கலெக்டர்: நீர் ஏன் சரியான காலத்தில் வரவில்லை? சர்க்கார் உத்தரவை அலக்ஷியம் செய்யலாமா?

சுப்பையர்: துரையவர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது: காலையில் எழுந்து ஸ்நானம் செய்து பூஜையை முடித்துக்கொண்டு நான் வருகிறவர்களுக்கு ஆகாரம் செய்விப்பது வழக்கம். இன்று அந்த வழக்கப்படியே யாவரும் போஜனம் செய்தபிறகு வந்தேன்.

கலெக்டர்: உம்முடைய வரிப்பணம் அதிகமாகப் பாக்கி இருக்கிறதே, தெரியுமா??

சுப்பையர்: தெரியும், என்மேல் வஞ்சகம் இல்லை; நிலம் சரியானபடி விளையாமையால் வரிப்பணத்தை என்னால் இப்பொழுது செலுத்த முடியவில்லை.

கலெக்டர்: அன்னதானம் மட்டும் எப்படிச் செய்கிறீர்?

சுப்பையர்: கிடைக்கும் நெல்லையெல்லாம் வைத்துக்கொண்டு செய்கிறேன். முன்பு அன்னதானம் செய்தது போக மிஞ்சுவதில் வரியைச் செலுத்துவேன். இப்பொழுது அது முடியவில்லை. அன்னதானத்திற்கே போதாமையால் என் வீட்டு நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியிருக்கிறேன்; சிலவற்றை விற்கவும் செய்தேன்.

கலெக்டர்: இவ்வளவு கஷ்டப்பட்டு நீர் அந்த அன்னதானத்தை ஏன் செய்யவேண்டும்?

சுப்பையர்: அது பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் நடந்து வருகிறது.

கலெக்டர்: அன்னம் போடுவது பகலிலா ? இரவிலா?

சுப்பையர்: இரண்டுவேளையும் போடுவதுண்டு. பாதசாரிகளாக வருகிறவர்கள் பசியோடு எப்போது வந்தாலும் போடுவது வழக்கம்.

கலெக்டர்: எந்தச் சாதியாருக்குப் போடுவீர்?

சுப்பையர்: பிராம்மணருக்கும் மற்றச் சாதியாருக்கும் அவரவர்களுக்கு ஏற்ற முறையில் போடுவோம். பசித்து வந்தவர்கள் யாரானாலும் அன்னமிடுவேன்.

கலெக்டர்: பறையருக்கும் போடுவதுண்டா?

சுப்பையர்: ஆகா, போடுவதுண்டு, எல்லோரும் சாப்பிட்ட பிறகு போடுவோம்.

கலெக்டர்: இதுவரையில் அப்படி எத்தனை தரம் பறையர்களுக்குப் போட்டிருக்கிறீர்?

சுப்பையர்: எனக்கு நினைவில்லை; பலமுறை போட்டதுண்டு.

கலெக்டர்: சமீபத்தில் எப்போது போட்டீர்?

சுப்பையர்: நேற்றுக் கூட ஒரு பறையன் பாதிராத்திரியில் பசிக்கிறதென்று வந்தான்; சாதம் கொடுத்தேன்.

கலெக்டர்: அப்படியா! என்ன என்ன கொடுத்தீர்? எல்லாரும் சாப்பிட்டு மிச்சமான சோற்றையா கொடுத்தீர்?

சுப்பையர்: அகாலத்தில் யாராவது வந்தால் உபயோகப்படுமென்று ரசம், குழம்பு முதலியவற்றிலும் ஓரளவு வைத்திருப்பது வழக்கம். ஆதலால் நேற்று வந்தவனுக்கு அன்னம், கறி, குழம்பு, ரஸம், மோர் எல்லாம் கொடுத்தேன்.

கலெக்டர்: இலை போட்டா சாப்பாடு போட்டீர்?

சுப்பையர்: இல்லை; அது வழக்கமில்லை. ஒரு மரக்காலில் அன்னத்தை வைத்து, அதன்மேல் தனித்தனியே தொன்னையிலும் கொட்டாங்கச்சிகளிலும் குழம்பு முதலியவற்றை வைத்துக் கொடுத்தேன்.

கலெக்டரோடு வந்திருந்த உத்தியோகஸ்தர்கள் யாவரும் இவ்வளவு விரிவாகக் கலெக்டர் விசாரணை செய்வதை நோக்கி வியப்புற்றார்கள். தாசில்தார், “எல்லாம் பொய்” என்று சொல்லி முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார்.

கலெக்டர்: உமக்கு அந்தப் பறையனைத் தெரியுமா?

சுப்பையர்: இருட்டில் இன்னாரென்று தெரியவில்லை.

கலெக்டர்: அவனிடம் கொடுத்த மரக்காலைக் கொண்டு வந்து காட்டுவீரா?

சுப்பையர்: அதை அவன் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.

கலெக்டர்: அப்படியானால் நீர் அவனுக்கு அன்னம் கொடுத்ததற்குச் சாக்ஷி வேறு என்ன இருக்கிறது?

சுப்பையர்: சாக்ஷி எதற்கு? தெய்வத்துக்குத் தெரியும். அப்படி நான் செய்ததை வேறு யாரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும்?

கலெக்டர்: அந்த மரக்காலை அவன் திருப்பிக் கொடாவிட்டால் என்ன செய்வீர்?

சுப்பையர்: ‘முடியுமானால் கொடு, இல்லாவிட்டால் நீயே வைத்துக்கொள்’ என்று நானே சொல்லிக் கொடுத்தேன்; அவன் கொடுக்காவிட்டால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.

கலெக்டர், “அப்படியா!” என்று சொல்லிக் கொண்டே மேஜை முழுவதையும் தரை வரையில் மறைத்து மூடப்பட்டிருந்த துணியை மெல்லத் தூக்கினார். என்ன ஆச்சரியம்! அதன் கீழே ஒரு மரக்கால் வைக்கப் பட்டிருந்தது. “நீர் கொடுத்த மரக்கால் இதுதானா பாரும்!” என்று சொல்லித் துரை அதை எடுத்து மேஜையின்மேல் வைத்தார்.

சுப்பையர் திடுக்கிட்டார்; தம் கண்களையே அவர் நம்பமுடியவில்லை. கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தார். தாம் முதல்நாள் பாதிராத்திரியில் ஒரு பறையனிடம் கொடுத்த மரக்கால் அங்கே வந்ததற்குக் காரணம் தெரியவில்லை. அங்கே இருந்த யாவரும் ஒரு நாடகத்தில் மிகச் சுவையான காட்சியொன்றில் ஈடுபட்டு மெய்ம்மறந்தவர்போல் ஆனார்கள்.
“என்ன, பேசாமல் இருக்கிறீர்! ராத்திரி நீர் செய்த அன்னதானத்துக்குச் சாக்ஷியில்லை யென்று எண்ணவேண்டாம். பாதி ராத்திரியில் வந்த பறையன் நான்தான்! நீர் கொடுத்த மரக்கால் இதுதான்! இந்த இரண்டு சாக்ஷியும் போதாவிட்டால், என்னுடன் அங்கே வந்த குதிரைக்காரன் வேறு இருக்கிறான். நீர் சொன்னதெல்லாம் உண்மையே. உம்முடைய வீட்டு அன்னத்தையும் கறி முதலியவற்றையும் நான் ருசி பார்த்தேன். உம்முடைய ஜன்மமே ஜன்மம்” என்றார் கலெக்டர்; அவருடைய கண்களில் நீர் ததும்பியது; உள்ளத்தில் உண்டான உருக்கம் அவர் தொண்டையை அடைத்தது. சிறிது நேரம் அவராற் பேசமுடியவில்லை. பிறகு, “உமக்கு எந்தக் காலத்திலும் குறைவே வராது. தெய்வம் உம்மைக் குறைவில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலை காக்கும். உமக்காகத் தான் மழை பெய்கிறது” என்றார்.

அந்த வார்த்தைகளின் தொனியில் முதல்நாள் இரவு பறையன், ‘தெய்வம் உங்களைக் குறையில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலைகாக்கும்’ என்று சொன்ன வார்த்தைகளின் தொனி ஒலிப்பதை அப்போதுதான் சுப்பையர் உணர்ந்தார்; தமிழைப் புதிதாகக் கற்றுக்கொண்ட வேற்று நாட்டாராகிய துரையின் பேச்சானது, பசியினால் நாக்குழறிப் பேசுபவனது பேச்சைப் போல ராத்திரியில் தமக்குத் தோன்றியதென்பதையும் அறிந்தார். அவருக்கு இன்னது சொல்வதென்று தோற்றவில்லை.

“அப்படியே அந்த நாற்காலியில் உட்காரும்! நீர், வரிப்பணத்தை மோசம் செய்ய மாட்டீரென்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் உம்முடைய மரக்காலை மோசம் செய்யாமல் இதோ கொடுத்துவிட்டேன்; எடுத்துக்கொள்ளும். உம்முடைய தர்மம் குறைவின்றி நடைபெற இந்த வரிப்பணம் உதவுமானால், அதை விட இந்த ராஜாங்கத்துக்கு வேறு லாபம் இல்லை. உம்மால் எப்போது முடியுமோ, அப்போது வரியைக் கட்டலாம்! உம்மை ஒருவரும் நிர்ப்பந்தம் செய்யமாட்டார். நான் இந்த ஜில்லாவில் இருக்கும்வரையில் உமக்கு ஒருவிதமான துன்பமும் நேராது” என்றார் கலெக்டர். பிறகு தாசில்தாரை நோக்கி,”உம்முடைய வார்த்தையை நான் நம்பியிருந்தால் பெரிய பாவம் செய்தவனாவேன். இனிமேல் இந்த மாதிரி ஒருவரைப் பற்றியும் தீர விசாரியாமல் நீர் எழுதக்கூடாது” என்று கண்டித்துக் கூறினார்.

மேஜைத் துணியாகிய திரையை தூக்கியதும், அம்மேஜைக்கடியில் அவ்வந்தண வள்ளலது அன்னதானத்தை அளந்த மரக்கால் இருந்ததும், அதனைத் துரை எடுத்து மேஜையின்மேல் வைத்து மனமுருகிப் பேசிக் கண்களில் நீர் ததும்ப வீற்றிருந்ததுமாகிய அக்காட்சிகளை நம்முடைய அகக்கண்ணால் நோக்கும்போது நமக்கே மயிர் சிலிர்க்குமாயின், அங்கேயிருந்து கண்ணால் பார்த்தவர்களுடைய உள்ளமும் உடலும் எப்படியிருந்திருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

(கும்பகோணம் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராக இருந்த வித்துவான் ஸ்ரீ சி. தியாகராச செட்டியாரவர்கள், 1833-வருஷம் திருவானைக்காவில், திருமஞ்சனக் காவேரிக்கரையில், ஆங்கரைச் சுப்பையருடைய பரம்பரையினர் சிலரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தனர். நானும் உடனிருந்தேன். அப்பொழுது செட்டியார், அவர்களைப் பாராட்டிவிட்டு இவ்வரலாற்றைக் கூறினார். அவர்களும் சொன்னார்கள். மேற்படி சுப்பையருடைய பெண்வழியிற்றோன்றிய மணக்கால் மகாஸ்ரீ கந்தசாமி ஐயரென்பவர்களாலும் சமீபத்தில் சில விஷயங்கள் அறிந்து கொண்டேன்.)

  • இவருடைய பரம்பரையினருக்கும், இவருறவினர் பரம்பரையினருள்ளும் அன்னதானமென்ற பெயரையுடையவர்கள் சிலர் உண்டு.
  • பேஷ்கார்- ரெவினியூ இன்ஸ்பெக்டர்
  • இது மலட்டாறென்று வழங்கும்.


Categories: Devotee Experiences

12 replies

  1. So many moral incidents like this were published and taught to school children in those days. Since it was taught on the early stages the moral of the stories were stamped in their heart and made the reader as a human being. No moral stories and no moral education classes to school childrenn now a days – made them a self-fish person.

  2. However the local Brahmin’s act is not unusual. In olden days people of all fields lived well in India and Britishers confused the society successfully to make the locals to disbelief in those
    customs, resulting in break up of the core of the society that prevailed at that time.
    Even now, if proper measures are taken the Indian society of olden days can be revived.
    Unfortunately, the powers are in wrong hands in every state and regions of India.
    Present day political parties should be outlawed and new parties based on the prosperity of the nation should be established. The freedom and democracy should be redefined to fit the
    necessity of each and every individual’s prosperity and good life.
    Religion, race, colour and work habits should be considered only at appropriate places.
    No party should be allowed based on these to contest in an election. Of course they can
    function for those purposed and that is all.
    Parties contesting for election for parliament or government of any sort should be allowed to
    contest on the principles of governing the region for the betterment of the people. If any one
    fails that person should be removed from public office after 6 months.
    There are so many ways to do away with corruption and hoarding money from the public
    coffers.Things can be done and India can be a nation better than China and become number
    one in all fields.
    India has the money, potential , strength and man power.
    Hope soon the mass of India recognize this fact and change occurs.
    India must join hands with China and Japan.
    If these 3 countries unite and function the region will be prosperous rich and paradise on earth.
    Mr.R.Subramanian, Brossard, Canada, 14 41 hrs.EDT. 23 09 2012.

  3. These were many of the ways that the habitual cheaters of the societies of the world did things initially to establish a solid foundation to rob each and every countries of the world
    in the past(if not careful, even to day) of their natural resources and destroy their heritage.
    One should not been fooled in those days nor do anyone think that Britishers are honest,
    they are leeches of the society and should be treated with caution. Any visitor from UK should
    be treated as visitors and must not be allowed after the front porch.
    Those who do will face the dire consequences- they will loose their house, land and resources,
    be ware.
    Mr.R.Subramanian, Brossard, Canada, 14 20 hrs.EDT. 23 09 2012, Sunday.

  4. மனமுருகி விட்டேன். தானத்தில் சிறந்து அன்னதானம். அந்த நாட்கள் இனி என்று வருமொ!!!

  5. How great? Annadhanamee DhaangkaLil thalai Siranthathu! Extremely glad that this great incident has been recorded by Tamizh Thaththaa and presented in Maha PeriyavaL experiences blog!

  6. An excellent information to everyone to read.

    Balasubramanian NR

  7. Beautiful story. This was how our ancestors had led their life. we are coming to know such things in the context of Periyava. I am remembering my school prayer song “Lead kindly light amidst encircling gloom” by Cardinal Newman. Periyava is guiding us exactly like that. We have to just give ourselves to him and he will carry us safe.

  8. I am doing an ordinary job. Upon reading the ‘Aangarai’ story I remember Shri Krishnamoorthy Ghanapatigal who hail from this holy place ‘Aangarai’. He is a very much short-tempered person but also affectionate from the core of his heart. He was the priest of Shri Ganesh temple in Guwahati and taught us the holy Vedas telling that ‘Vidya daanam’ is very much sacred one . Without expecting any remuneration he taught us the Vedas, before going to office directly, at times he used to feed us with breakfast (roti & sabji) and coffee, in spite of ill health of his wife. The Aangarai vasanai is still with him……………..

  9. you always bring tears in me whenever i open my mail as i read your posts first and then only others! apart from the greatness of periava, we note the meanness of some people who were and are serving as government servants. i only hope they all improve. (i am not the one to advice but as a very senior government servant i can vociferously say that we can always bend the rules to help persons without breaking any rule. that is my 3 decades of experience- no bragging but only to say that we should take this as a lesson and try fo follow periayava always.

  10. Thanks you very much for reminding this story / incident which I have already read in “My story” written by MahaMahopadyaya.Final scene brought tears again.

Trackbacks

  1. Story of how Sri Kantan Swamigal’s Adishtanam in Angarai – Sage of Kanchi

Leave a Reply to Mr.R.Subramanian, CanadaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading