Never knew the meaning of “kesava” before reading this….Enjoy!
மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த மடத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவர் பாலு. மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
”கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது, தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.
அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும், அவளின் பார்வை திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி, ‘கவலைப்படாதீங்க, கண்பார்வை கிடைச்சுடும். ஆனால், நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி, கும்பகோணம், திருவிடைமருதூர்னு புண்ணிய தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்’னு சொல்லியிருக்கார்.
அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி, வைத்தீஸ் வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில், குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டிய தும், ஆரத்தி எடுத்துக்கொண்டவள், தட்டில் நூறு ரூபாய் தட்சணை வைத்தாளாம். குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர், ‘அம்மா… இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு’ என்று சொல்லி யிருக்கிறார். இவளும், ‘பரவாயில்லை… எடுத்துக்கோங்க’ என்றாளாம். உடனே அந்தக் குருக்கள், ‘நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?’ என்று கேட்டாராம். அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக் குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறாள். ‘காஞ்சிபுரத்தில் இருக்காரே, சங்கர மடத்தில்… அவரை தரிசனம் செய்யுங்கோ’ என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.
இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு, சிதம்பரம் சென்றுவிட்டு, அப்படியே காஞ்சிபுரத்துக்கும் வந்தாளாம். அன்று, சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரசாதம் எல்லாம் அனுப்பிவிட்டு, மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா. அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி, தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு, தனது நிலைமையை விவரித்தாள். வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி, காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத் தையும் கண்கலங்கச் சொன்னாள்.
உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா, ‘என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டே கேளுங்க!’ என்றார். அத்துடன், அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து, தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரியவா.
அதே நேரம் அந்தப் பெண், ‘குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!’ என்றாளாம் சத்தமாக… பரவசம் பொங்க!
ஆமாம்… காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. ‘நம்பினார் கெடுவதில்லை…
இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்! காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.
அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மகா பெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.
ஆனால் இதுகுறித்து மகா பெரியவாளிடம் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?
‘என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாட்சியோட கருணை… எல்லாம்தான் காரணம்!’ என்றார்” எனக் கண்கள் பனிக்க விவரித்த பாலு இன்னொரு சம்பவத்தையும் சொன்னார்.
”பக்தர் ஒருவர் வெளிநாடு போயிட்டு வந்திருந்தார். அவருக்குப் பெரியவா கிட்ட அசாத்திய பக்தி. பெரியவாளைத் தரிசிக்க தேனம்பாக்கம் வந்திருந்தார். தரிசனம் எல்லாம் ஆச்சு. ஆனால், அவருக்குப் பெரியவா தீர்த்தம் கொடுக்கலை (கடல் கடந்து போயிட்டு வந்தா தீர்த்தம் கொடுக்க இயலாது).
பக்தருக்கு மிகுந்த வருத்தம். கிட்டத்தட்ட ஒருவாரமா சாப்பிடவும் பிடிக்காமல் மனம் வாடிக் கிடந்தார். மேலும், ஒரு நல்ல காரியம், சிராத்தம் போன்றவற்றிலும் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த பக்தரின் நிலை, அன்பர்கள் சிலரது மூலம் பெரியவாளுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர், ஒரு ஸனாதன மடத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து விலகி எதுவும் செய்ய முடியாதே!
அதே நேரம் அந்த பக்தரை அப்படியே விட்டுவிடவும் முடியாது. மகா பெரியவா ஒரு வழி செய்தார். மணக்கால் நாராயண சாஸ்திரிகளை அழைத்தார். அவரிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து, ‘இதை உடைத்து எடுத்துக் கொண்டு வா; இளநீர் கீழே சிந்தாமல் கவனமாக உடைக்க வேண்டும்’ என்றார். அவரும் அப்படியே தேங்காயை உடைத்து எடுத்து வந்தார். அதைத் தொட்டு ஆசி வழங்கிய பெரியவா, அந்த பக்தரைக் கூப்பிட்டு, ‘இதோ தீர்த்தம். இந்த இளநீரை வாங்கிக்கோ!’ என்றார். பக்தருக்கு அளவில்லா மகிழ்ச்சி; பெரியவா தீர்த்தம் கொடுத்துட்டார்னு பரம சந்தோஷம். ஒரு வாரம் காத்திருந்தது வீண்போகவில்லை என்று அவருக்குத் திருப்தி.
மகா பெரியவாளுக்கோ, தானும் சம்பிரதாயத்தை மீறி (நேரடியாக) தீர்த்தம் கொடுக்காமல், தேங்காயை உடைத்து அதன் இளநீரைத் தந்து, பக்தரை மகிழ்வித்த நிம்மதி.
ஆமாம்… மகா பெரியவா எதைச் செய்தாலும், அதில் மற்றவர்கள் நலனே உள்ளடங்கி இருக்கும்.
எல்லா தேவர்களுக்குச் செய்யும் நமஸ்காரமும் ஒரே ஈஸ்வரனைத்தான் போய்ச் சேருகிறது என்று சாஸ்திரம் சொல்கிறது: ‘ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி’
ஒரே பரமாத்மாதான் பல ஸ்வாமிகளாக ஆகியிருக்கிறது. ஆஸாமிகள் அத்தனை பேராகவும் கூட அதுவேதான் ஆகியிருக்கிறது. ஆகையால், எந்த ஸ்வாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும்… எந்த ஆஸாமிக்குப் பண்ணும் நமஸ்காரமும் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டும்… ஏக பரமாத்மாவையே சென்றடைகிறது. ‘கேசவம்’ என்று சொல்லியிருப்பதை கிருஷ்ணர் என்ற அவதாரம் என்றோ அல்லது அநேக தெய்வங்களில் ஒன்றாக இருக்கப்பட்ட விஷ்ணு என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது.
க, அ, ஈச, வ என்ற நாலு வார்த்தை களும் சேர்ந்து ‘கேசவ’ என்றாகி யிருக்கிறது. ‘க’ என்றால் பிரம்மா; ‘அ’ என்றால் விஷ்ணு; வேத புராணாதிகளில் பல இடங்களில் பிரம்ம- விஷ்ணுக்களுக்கு இப்படி (முறையே ‘க’ என்றும், ‘அ’ என்றும்) பெயர் சொல்லியிருக்கிறது. ஈச என்பது சிவன் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. க, அ, ஈச மூன்றும் சேர்ந்து ‘கேச’ என்றாகும். அதாவது பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்களான த்ரிமூர்த்திகளைக் ‘கேச’ என்பது குறிக்கும். ‘வ’ என்பது, தன் வசத்தில் வைத்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும். த்ரிமூர்த்திகளை எவன் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறானோ, அதாவது த்ரிமூர்த்திகளும் எவனுக்குள் அடக்கமோ, அவனே கேசவன்.
ஆசார்யாள் இப்படித்தான் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான மூவரையும் தன் வசத்தில் வைத்துக்கொண்டிருப்பவன் என்றால், அவன் ஏக பரமாத்மாவாகத்தான் இருக்க வேண்டும். எந்த ஸாமிக்கும் ஆஸாமிக்கும் செய்கிற நமஸ்காரத்தை அந்த ஸாமிக்குள், ஆஸாமிக்குள் இருந்துகொண்டு அவன்தான் வாங்கிக் கொள் கிறான். ஸர்வ தேவ நமஸ்கார கேசவம் ப்ரதிகச்சதி.
நமஸ்காரம் என்றால் என்ன? உடம்பினாலே தண்டால் போடுகிற மாதிரி காரியமா? இல்லை. இங்கே காரியம் இரண்டாம் பக்ஷம். பாவம்தான் முக்கியம். பக்தி பாவத்தைப் பலவிதமாகத் தெரிவிக்கத் தோன்றுகிறது. அப்போது, பகவானுக்கு முன்னால் தான் ஒண்ணுமே இல்லை என்று மிக எளிமையோடு விழுந்து கிடப்பதைக் காட்டவே நமஸ்காரம் என்ற க்ரியை. ஆக, நமஸ்காரம் என்று க்ரியையைச் சொன்னாலும், அது பக்தி என்ற உணர்ச்சியைக் குறிப்பதுதான். எவருக்குச் செய்கிற நமஸ்காரமும் ஒரே பரம்பொருளான கேசவனுக்குப் போய்ச் சேரும் என்று சொன்னால், எவரிடம் செலுத்தும் பக்தியும் பரமாத்மா என்ற ஒருவனுக்கே அர்ப்பணமாகும் என்றே அர்த்தம்.
(‘தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து…)
Categories: Devotee Experiences
Hara Hara Sankara,
Jaya Jaya Sankara.
Maha Periyaval’s Divine messages are most suitable for everyone, easy to follow & observe on all occasions.
Tranquebar Nityanandan.
Dear Sri Mahesh, can you please UPLOAD interview of Shri Balu FROM WHOM WE CAN GET VARIETY OF HOLY EXPERIENCES OF SHRI MAHA PERIYAVA. . In fact, as you advised i can spare my time and efforts for taking the interview. But I have only Mobile Camera. If you say Ok, the i am happy to take this assginment.
Thanks
K. Suresh Padmanaban
Thanks for the offer. I will definitely pass on the message to Shri Shivaraman and ask him to cover Shri Balu mama.
Anantharaman Viswanathan
Jaya Jaya Sankara Hara Hara Sankara
Very good article.Sree Mahaperiyava explores the essence of advaita in a nutshell.