ஞானம் to ஆனந்தம்

நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒருநாள் நாம் ஆசைப்படும் வஸ்துகள் நம்மைவிட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை  ராஜிநாமா செய்துவிட்டால், அத்ததனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனையாலும் நம்மைக் கட்டிப்போட்டுக் கொண்டு துக்கப்படுகிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்கத் துக்க ஹேதுவும் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்த்தைப் படவேண்டாம். அப்படியே பரமாத்மாவில் கரைந்த ஆனந்தமாகிவிடலாம்.

மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமை அடைகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்துவிடுகிறான்? நாயும், நரியும், கரப்பான் பூச்சியும் கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகின்றன. பொதுவாக மனிதனும் இதற்கு மேல் ஏதும் செய்வதாகத் தெரியவில்லை. அப்பொழுது அவனுடைய விசேஷ ஞானத்தில் பெருமைப் பட என்ன இருக்கிறது. எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். மனிதன் இப்படிப் பட்ட நிலைத்த ஞானத்தைப் பெறுகின்றானா? யோசித்துப் பார்த்தால், பரம தாத்பரியமாகத் தெரிவது, இந்த ‘ஞானம்’,

’ஆனந்தம்’.  ‘நாம்’. என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞானமயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம்.

வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கின்றது. நமது உண்மை சொரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட ‘நம்முடையது’ என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும் போதுதான், அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய்விட்டால், ஆனந்தம் போய்விடுகிறது.

உதாரணம் சொல்கிறேன்’

ஒருவருக்குகச்சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் முதலில், வருஷத்துக்கு வருஷம் விளைச்சல் அதிகமாவதாக வைத்துக்கொள்ளுங்கள். ‘இந்த வயல் என்னுடையது’ என்பதால் விளைச்சல் அதிகமாகும் போதெல்லாம் அவருக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவருக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார்.  மறுபடி அடுத்த வருஷம், அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும் போது இவர் மனம் குளிரவா செய்கிறது? “அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரி பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருத்தனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே!” என்று வயிற்றெரிச்சல் தான் உண்டாகிறது. ‘எனது’ என்ற சம்பந்தம் இருந்தமட்டும்தான் அதிக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

என்னிடம் பல பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து, ”அவர்களுக்குச் சித்த பிரமை இருக்கிறது. அது நிவிருத்தியாகவேண்டும்” என்று கேட்டுக் கொள்வார்கள். இதற்கு நேர் மாறாக ஒரு தகப்பனார் நடந்து கொண்டார். அவர் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டவர். இளையாளுக்கு, மூத்தாள் பிள்ளையோடு ஒத்து வரவில்லை. ஏகச்சண்டை போட்டுக் குடும்பம் பிரிந்தது. இவர் இளையாள் தரப்பிலேயே இருந்தார். பிள்ளையைக் கைவிட்டுவிட்டார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து, ’மூத்தாள் பிள்ளை இளையாளுக்கு பில்லி சூனியம் வைத்தான். நல்ல வேளையாக அது அவனையே திருப்பி அடித்துவிட்டது.’ என்றார். எல்லாத் தகப்பனார்களும் பிள்ளைக்குச் சித்தப் பிரமை ஏற்படும் போது கவலைப் படுகின்றார்கள் என்றால், இவரோ அதிலேயே சந்தோஷப்படுகிறார். ஏன்? இவருக்கு அவனிடம் ‘நம்முடையவன்’ என்ற சம்பந்தம் போய்விட்டது. இளையாளிடம் மட்டும் ‘நம்முடையவள்’ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் தான் அவளுக்கு ஹானி யில்லை யென்றால் இவர் ஆனந்தப்படுகிறார்.

மாயைக்கு ஆளான ‘நான்’ என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கின்றதென்றால், எதிலும் சம்பந்தப் படாமல் பூரண ஞானமாக இருக்கின்ற அந்த வெறும் ‘நான்’ எத்தனை ஆனந்தமயமாயிருக்கும்!

வெல்லம் போட்டால் பாகற்காய்க் கறியிலும் சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால் அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் என்ன! கசப்பான துக்க உலகத்தின் ‘நான்’ என்பதில் மாயக் கிரணங்கள் சம்பந்தப்படுகிற போதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம் என்றால், அந்த நான் மட்டுமே ஸ்வச்சமாஅக நிற்கிறபோது, எத்தனை தித்திப்பாக ஆனந்தமயமாக இருக்கவேண்டும்?

சிறிய ஓட்டைகள் கொண்ட சட்டியால் ஒரு தீபத்தை மூடிவைத்தால், துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக் கிரணங்கள் வெளிவரும். மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த ஒளியைப்பார்க்கிறோம். மாயச் சட்டியை உடைத்துவிட்டால் ஆனந்த ஜோதிர்மயமாகவே ஆகிவிடலாம். துவாரங்களின் அளவைப் பொருத்துப் பலவேறு அளவுகளில், ஒளி வெளி வந்தாலும் உள்ளேயிருப்பது ஏக ஜோதிதான். நாம் மாயச் சட்டியை உடைத்துவிட்டால், உலகத்தில் பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எலாம் ஒன்றான ஆனந்த ரூபமாகவே தெரியும்.

மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசசைகளை அடக்குவதுதன். வழி. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கிவிட வேண்டும்.மனம் அடங்கி விட்டால் ‘மரண நிலைமையில் இருப்பது போல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம்’ என்று எண்ணக் கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. சாதாரணமாக ஏதாவது ஒரு அங்கத்தில் ஊனம் உளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும்.. பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஒரு அங்கத்தில் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது . ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லா இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டுவிட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.

ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகளின் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல லோகங்களுக்கும், சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காதுக்குக் கேட்காத சப்தங்களை ஆகாயத்தில் கேட்டு, வேத மந்திரங்களைக் கொடுத்தார்கள். “எப்படி ஆசையை அடக்குவது? எப்படி மனத்தை நிறுத்துவது? எப்படி ஆனந்தத்தை அடைவது ” என்று” கேட்கிறவர்கள்,அந்த வேதங்கள் சொன்னபடி நடந்தாலே போதும்; முடிவில் பேரானந்தம் அடையலாம். இதற்குப் பரமேசுவரன் அநுக்கிரஹம் செய்வாராக. 



Categories: Mahesh's Picks, Upanyasam

Tags:

3 replies

  1. hi

    sent a pdf file to your gmail id – Chennayil-Jagadhguru-Sammelanam-Invitation. cud u pls publish this?

  2. hari om,
    Yes i do agree like the saying desire is the root cause of all evils.Genuine desire is good we should know what to desire and what not.THe moment our wish is fulfilled do we stop with that no we continue to wish for something else.so the annada which comes to us is from inside only bahya karanangalal varuvadu unmaiyana aanandam alla this we should realise.

  3. Great share, Mahesh

Leave a Reply to v.srinivasanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading