Importance of Sumangali Puja

கலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை. இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் என்பது காஞ்சிப்பெரியவரின் விருப்பம்.

ஒரு சந்தர்ப்பத்தில் வயதான தம்பதியர், தட்டில் பழம், பூ, அம்பாளுக்கு பட்டுப் புடவை, ரவிக்கையோடு பெரியவரைக் காண காஞ்சிபுரம் வந்திருந்தார்கள். மாயவரத்தில் இருந்து வந்த அவர்களிடம், “”காவிரிக்கரையில் இருந்து வரும் நீங்கள் துலா ஸ்நானம் (ஐப்பசி மாதம் காவிரியில் நடக்கும் தீர்த்த நீராடல்)செய்து விட்டீர்களா?” என்று கேட்டார்.

தம்பதிகள் இருவரும்,””ஆமாம்! சுவாமி! துலாஸ்நானம் ஆயிடுச்சு!” என்றனர்.

பெரியவர் அடுத்த கேள்வியாக,””மாயவரம் ஆற்றங்கரைக்கு துலாஸ்நானம் செய்ய ஏகபட்ட சுமங்கலிகள் வருவாளே!” என்றார்.

“”வருவா” என்றனர் அவர்கள்.

“”அது சரி! உங்க அகத்திலே சுமங்கலிப் பிரார்த்தனைஎல்லாம் ஒழுங்கா நடக்கிறதா?” என்று பெரியவர் கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் தம்பதியர் முகம் வாடினர்.

“”முன்பெல்லாம் ஒழுங்காக நடந்தது. இப்போ சுமங்கலி பிரார்த்தனை நடந்து பல வருஷமாச்சு!” என்று சொல்லி அந்த அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அந்த அம்மாளின் கணவர் மனைவியை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தினார். பெரியவரிடம்,””சுவாமி! என்னோட கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண். ஒரே ஒரு பெண். அவளும் மூன்று வருஷத்திற்கு முன் இறந்துவிட்டாள். அதற்கு முன்பே சுமங்கலி பிரார்த்தனையை நடத்தாமல் விட்டுவிட்டோம். இப்போ எங்கள் குடும்பத்தில் வசதிக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. ஆனா, குடும்பத்தில் யாருக்கும் சுகமோ, மனநிம்மதியோ இல்லை. என் ஐந்து வயது பேரனுக்கு பேச்சு வரவில்லை. என் மூத்த நாட்டுப்பொண்ணுக்கோ (மருமகள்) ரத்தப் புற்றுநோய். மனநிம்மதி வேண்டியே உங்களைத் தரிசிக்க வந்தோம்,”என்று சொல்லி முடித்தார்.

சற்றுநேரம் மவுனம் காத்த பெரியவர், “”இப்போ என் முன் வைத்திருக்கும் பழம், பூ தான் உங்களுக்கு கொடுக்கும் பிரசாதம். கொண்டு வந்த பட்டுப்புடவையை மூத்த நாட்டுப் பொண்ணுக்கு கொடுத்து கட்டிக்கச் சொல்லுங்க! இனிமேல் பட்டுப்புடவையே வேண்டாம். அது நல்லதல்ல. அது ஒண்ணும் உசத்தியானது
கிடையாது. ஆடம்பரம் நமக்கு எதுக்கு? குலதெய்வத்திற்கு கொண்டு வந்த பூவைப் போடுங்கோ. அதோடு முக்கியமான ஒரு காரியமும் செய்ய வேணும்,”என்று சொல்லி பெரியவர் பேச்சை நிறுத்தினார்.
கேட்டுக் கொண்டிருந்த தம்பதியர் வணங்கி, “”பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் அதை அப்படியே செய்றோம்” என்று கண் கலங்கினர்.

“”உன் சகோதரியின் நினைவுநாளில் 108 சுமங்கலிகளுக்கு சாதாரண நூல் புடவை, ரவிக்கை, மங்கல திரவியங்கள் கொடுப்பதோடு, முடிஞ்சா அன்னதானமும் செய்யவேண்டும். அதன்பிறகு எல்லாம் நன்மையாகவே முடியும்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார். தம்பதிகள் பெரியவரின் உத்தரவுபடியே சுமங்கலி பூஜையைச் செய்தனர். மூன்று ஆண்டுகளில் பேரனும் பேசத்தொடங்கி விட்டான். மூத்த மருமகளும் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணம் பெற்றார். பெரியவரின் வழிகாட்டுதலால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.Categories: Devotee Experiences, Upanyasam

Tags: ,

2 replies

  1. Namaskaram, I saw your msg and felt I could probably translate this, and then just remembered.. there’s a easy translation tool available. Just right click on this page and click Translate to English and it does beautifully.

  2. Can someone translate this for me please

Leave a Reply

%d bloggers like this: