Recollections from Shri Pattabi

காஞ்சி முனிவரைப் பற்றிச் சொல்லும்போதே, அந்தப் பழைய நினைவுகளில் மூழ்கி, மெய்ம்மறந்துவிடுகிறார் பட்டாபி சார். நெகிழ்ச்சி மிகுதியில், அவரது கண்களில் தேங்கி நிற்கிறது நீர்.

”வைதீகம் கலந்த பொதுக்காரியங்களில், அவரவருக்குண்டான தர்மத்தையும் கர்ம அனுஷ்டானங்களையும் விட்டு விடாமல் கடைப்பிடிக்க வேணும்னு அடிக்கடி சொல்லுவா பெரியவா! 25, 30 வருஷத்துக்கு முன்னே, ஜீவாத்மா கைங்கர்ய சபைன்னு ஒண்ணு ஆரம்பிச்சார். அனாதை பிரேத சம்ஸ்காரம் பண்றது ரொம்ப முக்கியம்கிறது பெரியவா கருத்து. ஆஸ்பத்திரிலேருந்தும் போலீஸ்கிட்டேருந்தும் சில தருணங்கள்ல தகவல் வரும். அதுக்கு, அரசு சட்டப்படி என்ன உண்டோ அத்தனையும் செய்துட்டு, அந்த அனாதை இந்துப் பிரேதத்துக்கு, கங்கா ஜலத்தை புரோக்ஷணம் (தெளித்தல்) செஞ்சு, தகனம் பண்ண ஏற்பாடு செய்தார், பெரியவா! இது, அரசாங்கத் துக்கும் பெரிய உதவியா இருந்துது.

இந்த அமைப்புல 50-60 வாலன்டியர்ஸ் இருந்தாங்க. எல்லாரும் இளவட்டப் பசங்க. பெரியவா சொல்லிட்டா, தயக்கம் இல்லாம, எடுத்துச் செய்யறதுக்குக் காத்துட்டிருப்பாங்க எல்லாரும்! இப்பவும் இந்தக் சேவை தொடர்ந்துண்டிருக்கு. ஆனா, முன்போல வாலன்டியர்ஸ் கிடைக்கறதுதான் கஷ்டமா இருக்கு.

‘இறந்து போனவர் யாரோ… அவர் நமக்குச் சொந்தமோ பந்தமோ கிடையாது. அதுக்காக, யாரோ ஒருத்தர்தானேன்னு சும்மா இருந்துடலாமா? இந்துவா இருந்தா, முறைப்படி பிரேத சம்ஸ்காரம் செஞ்சுதானே ஆகணும்?’னு பெரியவா ஆதங்கப்படுவா. இறந்த வங்க மேலயே அப்படியரு கருணை அவருக்கு இருந்துதுன்னா, உயிரோடு இருக்கிறவா மேல பெரியவா காட்டற கருணைக்குக் கேக்கணுமா? சிறைக்கைதிகளோட குழந்தைகளுக்கு யூனி ஃபார்ம், புஸ்தகம்லாம் வாங்கிக்கொடுக்க ஏற் பாடு பண்ணினார். கைதிகளோட மனைவிமார் களுக்கு உடம்பு சரியில்லைன்னா, சிகிச்சை தரவும் ஏற்பாடு பண்ணினார். இதுக்காகவே, கும்பகோணத்துல அத்வைத சபான்னு ஒண்ணு ஆரம்பிச்சு நடத்திண்டு வந்தார்.

வாக்யார்த்த சதஸ் அங்கே அடிக்கடி நடக்கும். இதுவும் மகா பெரியவா ஆரம்பிச்சு வைச்சதுதான். இங்கே, நல்ல விஷயங்களை நுணுக்கமா ஆராய்ஞ்சு பேசுவா. பிரதோஷம், தீபாவளி, சங்கராந்தி மாதிரி நாட்கள்ல ஜெயிலுக்குப் போய், அங்கே இருக்கிற கைதிகளுக்கு நல்ல மனசு அமைஞ்சு, அவாளும் நல்லபடியா வாழணும்கற நோக்கத்தோடு, பகவானைப் பத்தி விவரிச்சு, நீதி போதனைகள் சொல்லிட்டு வருவோம்.

அதேபோல, ஆஸ்பத்திரிகளுக்குப் போய் நோயா ளிகள்கிட்ட, அவங்க விருப்பத்தோடு ராம நாமம், சிவ நாமம்லாம் சொல்லி, அட்சதை, விபூதி, குங்குமம் கொடுப்போம். இதுலேயே அவாளோட வியாதி பாதி குணமாகிடும். ‘டெர்மினல் பேஷன்ட்ஸ்’னு சொல்லுவாளே, அப்படிக் கடைசி கட்டத்துல இருக்கிற நோயாளிகளுக்குப் பக்கத்துலயே உட்கார்ந்து ஜபம் பண்ணி, பத்துச் சொட்டு கங்கா ஜலத்தை அவாளுக்குக் குடிக்கக் கொடுப்போம்.

இப்படித்தான் கேன்சர் பேஷண்ட் ஒருத்தர்… வலியால துடிச்சுண்டு இருந்தார். தினமும் அவர் பக்கத்துல உட்கார்ந்து, சிவ நாமமும் ராம நாமமும் சொல்லிண்டே இருந்தோம். ‘எனக்கு இப்ப வலியே தெரியலை; நிம்மதியாச் சாகறதுக்கு நான் தயார்’னு நெக்குருகிப் போயிட்டார். அப்புறம், அவர் இருந்த பதினைஞ்சு நாளும், வலியோ வேதனையோ இல் லாம நிம்மதியா இருந்தார். ஒரு மனுஷனோட பிராண அவஸ்தையைப் போக்கறது எவ்வளவு பெரிய தொண்டுன்னு பெரியவா மூலம்தான் தெரிஞ்சுண்டோம்.

பெரியவா பண்ணின இன்னொரு மகத்தான விஷயம், பிடி அரிசித் திட்டம். இதுல கிடைச்ச அரிசியைக் கொண்டு சமைச்சு, ரெண்டாவது மற்றும் நாலாவது ஞாயித்துக் கிழமைகள்ல, சென்னை போரூருக்குப் பக் கத்துல, கெருகம்பாக்கம் ஸ்ரீநீலகண்டேஸ்வரர் கோயில்ல கொடுத்து நைவேத்தியம் பண்ணி, எல்லாருக்கும் பிரசாதமா தந்தோம். இப்படித் தான், திருச்சி திருவானைக்காவல் அகிலாண் டேஸ்வரி கோயில்ல, ஒரு கடைசி வெள்ளிக் கிழமை அன்னிக்கி சர்க்கரைப் பொங்கல் வழங்கணும்னு ஆசைப்பட்டார் பெரியவா.

சுந்தரம்னு ஒரு அன்பர் ரொம்ப சிரத்தையா எங்ககூட சேர்ந்து சேவை பண்ணுவார். சர்க்கரைப் பொங்கலுக்கு பத்து மூட்டை அரிசி ஆகும்னா, அதுக்கு வெல்லம் எவ்வளவு தேவைப்படும்னு பாருங்கோ! நாலு பேர் உடைக்க, நாலு பேர் சமைப்பா. அதிகாலை ரெண்டு, ரெண்டரைக்கெல்லாம் சமையல் பண்ண ஆரம்பிச்சிடுவோம். வடக்கு வீதியில, நகரத்தார் சத்திரம் ஒண்ணு இருக்கு. அந்த இடத்துல, மிகப் பெரிய கோசாலை நடத்தினா பெரியவா (இப்போ, அங்கே ரிக்வேத பாடசாலை நடக்கிறது). அங்கேதான் பிரசாத விநியோகம் பண்ணுவோம். ஆடி கடைசி வெள்ளியின்போது, அன்னதானம் நடக்கும். அந்த விழாவுக்கு, வட நாட்டுக்காரா உள்பட, எல்லாரும் வந்து கலந்துப்பா.

‘வீட்டு விசேஷங்கள்ல கலந்துக்கறவா தான் லட்டு, ஜிலேபிலாம் சாப்பிடணுமா?’னு கேப்பார் பெரியவா. அதனால, அந்த அன்னதானத்துல வெறும் சாதம், குழம் புன்னு மட்டும் இல்லாம, ஸ்வீட்டும் போடு வோம். பரிமாறும்போது, ‘வேஸ்ட் பண்ணப் படாது’ன்னுதானே எல்லாரும் சொல்லு வோம்?! ஆனா, ‘எறியற மாதிரி பரி மாறுங்கோ!’ன்னு சொல்லுவார் பெரியவா.அதாவது, திருப்தியா சாப்பிட்டுட்டு, இலையில கொஞ்சம் மிச்சமே வெச்சிருக் கணும்; அந்த அளவுக்கு ஒருத்தர் வயிறு நிறையற மாதிரி பரிமாறணும்கிறது பெரி யவாளோட திருவுள்ளம்.

காஞ்சிக் கடலாடின்னு திருவண்ணா மலை மாவட்டத்துல ஒரு கிராமம். ஒரே காடா இருக்கும்; மலையும் உண்டு. பயங்கர மிருகங்கள்கூட அந்தக் காலத்துல இருந்து தாம்! அந்த ஊர்ல, பெரியவாளோட பூர்வாஸ்ரம பந்துக்கள் (உறவுகள்) இருந்தா. இப்பவும் ஒருத்தர் ரெண்டுபேர் அங்கே இருக்கா. மகா பெரியவாளுக்கு ‘தண்டம்’ பண்றதுக்கு, இங்கேருந்துதான் மூங்கில் வரும். மூங்கிலை வெட்டி, தண்ணியில அடிப்பா. அப்ப உடையாம இருந்தா, அது ஆண் மூங்கில்! ‘திக்’கா இருக்கும். பிஞ்சு மூங்கிலைத்தான் பெரியவாளுக்குத் தண்டம் செய்யறதுக்கு எடுத்துண்டு போவோம். ஏதாவது சின்னதொரு அனாசாரமாயிட்டா கூட, பெரியவா உடனே தண்டத்தை மாத்திடுவா. அதனால, அவர் எங்கே யாத்திரை போனாலும், கூடவே இருபது, இருபத்தஞ்சு தண்டங்களையும் எடுத்துண்டு போவோம்!

காஞ்சிக் கடலாடிக்குப் பக்கத்துல பர்வதமலைன்னு ஒரு இடம்; பெரிய மலை அது; கஷ்டப்பட்டு, கவனமா ஏறணும். கொஞ்சம் அசந்தா, அவ்ளோதான்! மலை மேல அழகான கோயில் ஒண்ணு இருக்கு. ஸ்வாமி பேரு, மல்லிகார்ஜுன ஸ்வாமி. அம்பாள் பேரு பிரம்மராம்பிகை. மலையைப் பிரதட்சிணமா வந்தா, எப்படியும் 36 கி.மீ. இருக்கும். பெரியவா அந்த மலையைப் பல தடவை பிரதட்சிணம் பண்ணியிருக்கார். நாங்களும் அவரோடு கூட நடந்து போயிருக்கோம்.

மார்கழி ஒண்ணாம் தேதி, அங்கே சுத்துப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவா, கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம் பேர் மலைப் பிரதட்சிணம் பண்ணுவா. பெரி யவா அதிகாலைல மூணே கால் மணிக்கெல்லாம் நடக்க ஆரம்பிச்சிடுவா. ஒருநாள்… 36 கி.மீ. தூரம் சுத்திட்டு, அசதில நாங்கள்லாம் அப்படியே தூங்கிட்டோம். ‘நீங் கள்லாம் சின்னவா; பசியைப் பொறுத்துப்பேள். இந்தக் கிராமத்து ஜனங்க பாவம்… என்னடா பண்ணுவா? குழந் தைங்களையும் தூக்கிண்டு எத்தனை பேர் நடக்கறா? அவாளுக்கெல்லாம் பசிக்காதா? குழந்தைகள் பசி தாங்குமா?’ன்னு பெரியவா எங்க சொப்பனத்துல வந்து கேக்கற மாதிரி இருந்தது. சட்டுன்னு எல்லோரும் பதறியடிச்சு எழுந்துண்டோம். அத்தனை பேருக்கும் வாய்க்கு ருசியா, ஸ்வீட்டோட அன்னதானம் பண்ற துன்னு தீர்மானம் பண்ணினோம்.

பிடி அரிசித் திட்டத்துல சேர்ற அரிசியை எல்லாம் தனியா வைச்சோம். மொத்தம் 25 மூட்டை அரிசி கிடைச்சுது. புளியஞ்சாதம் மாதிரி கிளறிப் போட அவ்ளோ அரிசி தேவை. அதே போல 15,000 ஜாங்கிரி பண்ணினோம். எல்லாத்தையும் லாரில ஏத்திண்டு போய், மூணு இடத்துல நிறுத்தி, பிரசாதமா விநியோ கிச்சோம். வருஷத்துல ஒருநாள், இப்படிப் பிரசாதம் பண்ணிக் கொடுக்கறது வழக்கம். இதெல்லாத்துக்கும் காரணம் பெரியவாளோட கருணைதான்.

மனசுல அன்பு சுரந்தால்தான், அது கருணையா பிறத்தியார்கிட்ட வெளிப்படும். பெரியவாளோட மனசு அப்படிப்பட்டது! அவர், கருணைத் தெய்வம். அவரோட கருணை மழைல நனையற பாக்கியம் நமக்குக் கிடைச் சிருந்தா, அதைவிட வேறென்ன வேணும், நமக்கு?!Categories: Devotee Experiences

Tags:

Leave a Reply

%d bloggers like this: