How Periyava chose Orikkai?


 

கா பெரியவாளின் அளவற்ற அன்புக்குப் பாத்திரமானவர் எனப் பிரதோஷம் மாமாவைச் சொல்வார்கள், எல்லோரும்! ஓரிருக்கையில், காஞ்சி மகானின் மணிமண்டபம் அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், அவர். பிரதோஷம் மாமா குறித்த சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார், பெரியவாளின் பக்தர்களில் ஒருவரான அகிலா கார்த்திகேயன்.”அதிகாலை நான்கு மணி தரிசனத்தின்போது ஒருநாள், பிரதோஷம் மாமாவை அருகில் அழைத்த மகாபெரியவாள், ‘உனக்கு மாணிக்கவாசகர் பாடின திருவாசகம்- கோயில் திருப்பதிகத்துல வரிகள் ஏதாவது தெரியுமோ?’ என்று கேட்டார். பிறகு பெரியவாளே, ‘தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா ஆர்கொலோ சதுரர்-னு பாடியிருக்கார். எங்கே, நீ அதைத் திருப்பிச் சொல்லு!’ என்றார்.

அப்படியே பிரதோஷம் மாமா சொல்ல, மகா பெரியவாளும் அதைத் தொடர்ந்து சொல்ல… ஏதோ மந்திர உச்சாடனம்போல், ‘தந்தது உன் தன்னை, கொண்டது என்தன்னை’ என மாற்றி மாற்றி இருவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர். நிசப்தமான அதிகாலை வேளையில், இப்படிப் பெரியவாளும் பிரதோஷம் மாமாவும் சொல்வதைக் கேட்டு அனைவரும் அதிசயித்துப் போனார்கள். ‘இப்படியரு பாக்கியம் எவருக்குக் கிடைக்கும்?’ எனத் திளைத்தார் பிரதோஷம் மாமா. நிமிட நேரத்தில், கரகரவென வழிந்தது கண்ணீர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த பிறகு, அடுத்தடுத்துத் தொடர்ந்தன ஆச்சரியங்கள்!

கடம் வித்வான் விநாயக்ராம், அவரின் சகோதரர் சுபாஷ் சந்திரன், வயலின் கலைஞர்கள் கணேஷ்- குமரேஷ் போன்ற பக்தர்கள் பலரும் பிரதோஷம் மாமாவிடம் பேசும்போது, அவர் கட்டளை போலவோ, அறிவுறுத்துவது போலவோ ஏதேனும் சொல்வதைக் கேட்டனர். அடுத்து அவர்கள் மகா பெரியவாளைத் தரிசனம் செய்கிறபோது, பிரதோஷம் மாமா ஏற்கெனவே தங்களிடம் சொல்லிய அதே வார்த்தைகளையே மகா பெரியவாளும் சொல்வதைக் கேட்டு வியந்தனர்.

இப்படித்தான் ஒருமுறை சுபாஷ் சந்திரன், கணேஷ்-குமரேஷை அழைத்துக்கொண்டு பிரதோஷம் மாமாவின் இல்லத்துக்குச் சென்றார். சாந்நித்யம் நிறைந்த புனிதமான இடம் அது. வயலின் கலைஞர்கள் இரண்டு பேரும் அங்கேயிருந்த பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன்னே பவ்யமாக அமர்ந்து இசைத்தனர். பிறகு மாமாவை நமஸ்கரித்து, ‘உங்கள் கையால் தங்கக் காசு கிடைத்தால், அது எங்களுக்குப் பொக்கிஷம்’ என வேண்டினர். உடனே மாமாவும், ‘அதற்கென்ன குழந்தைகளா, அடுத்த மாசம் 23-ஆம் தேதி வாங்கோ; கட்டாயம் தரேன்!’ எனச் சொல்லி அவர்களை வாழ்த்தினார்.

அதன்படி அவர்கள், அந்தக் குறிப்பிட்ட தேதியில் காஞ்சிபுரம் வந்தபோது, பிரதோஷம் மாமாவின் வீட்டுக்குச் செல்லாமல், முதலில் பெரியவாளைச் சந்திக்க மடத்துக்குச் சென்றனர். பெரியவாளைத் தரிசித்து விடைபெறும் வேளையில், அவர்களைச் சற்றே காத்திருக்கச் சொல்லிவிட்டு, மடத்துச் சிப்பந்திகளிடம் ஏதோ சொன்னார் பெரியவா.

பெரியவாளின் ஆசீர்வாதமாகவும் பிரசாதமாகவும் பழங்கள் மற்றும் சால்வைகளைப் பெறுவது பக்தர்களின் வழக்கம். ஆனால், மூங்கில் தட்டில் வெற்றிலை-பாக்கு, பழங்களுடன் அந்த முறை தங்கக் காசுகளையும் அளித்தார், காஞ்சி மகான். ஆம், பிரதோஷம் மாமா தருவதாகச் சொன்ன தேதி; அதே தங்கக் காசு! இருவரும் அதிர்ந்தனர்.

‘தந்தது உன்தன்னை; கொண்டது என்தன்னை’ என மகாபெரியவா, தன்னுள் பக்தரை ஐக்கியமாக்கிக் கொண்டுவிட்டதுபோல அமைந்தது, அந்த நிகழ்வு!

இந்த வார்த்தைகளை மேலும் மெய்ப்பிப்பது போலான இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. அது…

கையில் ஏதுமின்றி, சிவனாருக்குக் கோயில் எழுப்பப் புறப்பட்டாரே, பூசலார்நாயனார்! அதே போல், பெரியவாளுக்கு கோயில் எழுப்ப வேண்டும் எனும் ஆசை, பிரதோஷம் மாமாவுக்கு. முதலில், கோயில் கட்டுவதற்கான நிலத்தைத் தேடினார் பிரதோஷம் மாமா. நண்பர்களிடமும் இதுகுறித்துச் சொல்லி வைத்திருந்தார். இப்படி, இரண்டு பக்தர்கள் இடம் தேடிச் சென்றபோது, காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஓரிருக்கையில், பாலாற்றங் கரையில் கோயில் எழுப்பினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணினார்கள், அவர்கள்.

அன்று மாலை, பிரதோஷம் மாமா வின் வீட்டுக்குச் சென்றவர்கள், ‘பாலாற்றங்கரையில் ஓர் இடம் இருக்கு. ரம்மியமான சூழல் அங்கே நாலஞ்சு குடியானவப் பிள்ளைகள் விளையாடிண்டிருந்தாங்க. பக்கத் துலயே பாலாறு’ என்று தெரிவித்தனர். அப்போது, அந்த அறையின் மின் விளக்கு கொஞ்சம் ஒளி மங்கி, அந்த விநாடியே சட்டெனப் பிரகாசமானது. ‘இது நல்ல சகுனமா இருக்கே!’ என்று பூரித்துப்போன பிரதோஷம் மாமா, உடனே பெரியவாளைத் தரிசிக்கச் சென்றார். அப்போதைய அவரின் ஒரே பிரார்த்தனை… ‘கோயிலுக்கான நிலத்தை சூட்சுமமாக அங்கீகரிக்கணும், பெரியவா!’ என்பதுதான்.

மடத்தை அடைந்தபோது, பெரியவா விச்ராந்தியாக ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டதால், திரையிடப்பட்டிருந்தது. வருத்தமாகிப் போனார் பிரதோஷம் மாமா. அந்த வருத்தம், உள்ளே பெருங்கவலையாக மெள்ள மெள்ள வளர்ந்த நிலையில், மடத்தில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த வேதபுரி என்பவரை, அருகில் வரும்படி அழைத்தார் மகாபெரியவா. அவரும் பெரியவாளுக்கு அருகில் செல்ல, அவரிடம் பெரியவாள் பேசுவது தெளிவாகக் கேட்டது.

‘காஞ்சியிலேருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்துல, வந்தவாசி போற வழியில நான் போயிண்டிருக்கேன். அங்கே ஒரு மணல் மேடு. நாலஞ்சு குடியானவப் பிள்ளைங்க விளையாடிண்டிருந்தா. திடீர்னு இருட்டிடுத்து. அப்புறம் சட்டுனு பிரகாசமாச்சு. நான் அங்கேயே தங்கிடறேன். அங்கே ஒரு பாட்டியம்மா இருந்தா!’ என்று தாம் கண்ட கனவை பெரியவா சொல்லச் சொல்ல… சிலிர்ப்பில் உடம்பே நடுங்கிப் போனது, வெளியே இருந்து கேட்டுக்கொண்டு இருந்த பிரதோஷம் மாமாவுக்கு. எதற்காக வந்தோமோ அதற்கான சம்மதத்தை, ‘நான் அங்கேயே தங்கிடறேன்’ என்று சூட்சுமமாக பெரியவாள் அருளினால், யாருக்குத்தான் தூக்கிவாரிப் போடாது?! தன்னைத் தன்னுள் இருந்தபடி இயக்குவது, அந்தக் கருணைத் தெய்வமே என நினைத்துப் பூரித்தார் மாமா.

தனது பக்தியாலும், பெரியவாளின் அனுக்கிரகத்தாலும், 1992-ஆம் வருடம், பிரதோஷம் மாமா வாங்கிய அந்த ஆறு ஏக்கர் நிலம், மகா பெரியவாளின் மணிமண்டபமாக இப்போது மாறியிருக்கிறது. அன்பர்களின் பேருதவியாலும் கடும் உழைப்பாலும் ஓரிருக்கையில் உருவாகியுள்ள அந்த மணிமண்டபத்துக்கு, வருகிற ஜனவரி 28-ஆம் தேதி, கும்பாபிஷேகம். இந்த நன்னாளில், மணிமண்டபத்தைத் தரிசியுங்கள்; காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்!Categories: Devotee Experiences

Tags:

5 replies

  1. அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன், யாது நீ பெற்றது ஒன்று என்பால்

  2. Pradosham mama’s Bakthi is unparallelled..I have visited his house near the Kamakshi amman temple and was amazed to see an enclosure in his drawing room so that None can set their feet on that space.I was explained that that place was where Periyava sat for His Pada Puja and from that day mama has enclosed that spsce so that none can set foot on that..that is Bakthi!

    • Please share pradosham mamas address. We would love to visit the place. Thank you.

      • Namaskarams. Sri Pradhosham Mama’s address: No.54, Sri Sri Sri Chandra Sekarendra Saraswathy Swamigal Street, Bangaru Amman Thottam, Kanchipuram, India. Phone:044-27237360

Trackbacks

  1. Orikkai Periyava’s blessings to Aurelie – Sage of Kanchi

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: