Chidambaram Visit

”எல்லா க்ஷேத்திரங்களுக்கும் பெரியவா போனாலும், சிதம்பரவாசிகளுக்கு ரொம்ப காலமாவே பெரிய குறை ஒண்ணு இருந்துது. ‘நம்ம ஊருக்கு பெரியவா வரலியே’ங்கறதுதான் அது! அந்த ஊர்மக்களோட குறையை, பெரியவா எப்படித் தீர்த்து வைச்சார் தெரியுமா?” என்று கேட்டபடியே தொடர்ந்தார் லட்சுமிநாராயணன்.

”அது 1933-ஆம் வருஷம். சிதம்பரத்துக்கு பாத யாத்திரை யைத் தொடங்கினார் பெரியவா. சிதம்பரத்துல பஞ்சாட்சர யந்திரம், அன்ன ஆகர்ஷண யந்திரம்னு ரெண்டு யந்திரங்கள் உண்டு. இந்த ரெண்டையும் பிரதிஷ்டை செஞ்சு வழிபட்டவர் ஆதிசங்கரர்.

ஆதிசங்கரரின் குரு, கோவிந்த பகவத் பாதர்; பரமகுரு கௌட பாதர். இவர், பதஞ்சலி முனிவர் கிட்ட பாடம் படிச்சவர். இந்த பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ர பாத முனிவருக்கும் சிதம்பரம் தலத்தில் நடராஜ பெருமான் திருக்காட்சி தந்ததுடன், திருநடனம் புரிந்து ஆட்கொண்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அப்பேர்ப்பட்ட சிதம்பரம் க்ஷேத்திரத்தை, பூலோக கைலாசம்னு சொல்வாங்க. அதுமட்டுமா… இந்தத் தலம், எவராலும் உண்டாக்கப்பட்டதல்ல என்பார்கள்!

சரி… பெரியவா விஷயத்துக்கு வரேன்.

சுமார் 250 வருஷத்துக்கு முன்னால, காஞ்சி சங்கர மடத்தோட ஆச்சார்யாளுக்கும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கும் சின்னதா சர்ச்சை உண்டாச்சு. விபூதியை நாங்க கொடுத்து, அதை ஆச்சார்யாள் வாங்கிக்கணும்னு சொன்னாங்க, சிதம்பரத்து தீட்சிதர்கள். ”தீட்சிதர்களான நாங்கள், கைலாச பரம்பரையைச் சேர்ந்தவங்க. அதனால, நாங்க கொடுக்கிற விபூதியைத்தான் எல்லாரும் வாங்கிக்கணும்!” – இது அவங்களோட வாதம்.

”சங்கர மடத்தோட ஆச்சார்யாள், ஜகத்குரு. அதனால, எதையும் கை நீட்டி வாங்கிக்கற சம்பிரதாயம் கிடையாது!” – இது சங்கர மடத்தோட கருத்து.

ஆனா, சிதம்பரம் தீட்சிதர்கள் இதுல பிடிவாதமா இருக்கவே, காஞ்சி மடத்தோட ஆச்சார்யாள் யாரும் சிதம்பரம் கோயிலுக்குப் போறதில்லை. வெளியே இருந்தபடியே தரிசனம் பண்ணிட்டு, அப்படியே அடுத்தடுத்த ஊர்களுக்குப் போயிடுவாங்க. இப்படித்தான் பல வருஷமா நடந்துக்கிட்டு வந்துது.

அப்புறம்… 1933-ஆம் வருஷம், தீட்சிதர்களுக்கு என்ன தோணித்தோ… ‘சுவாமிகள் எங்க கோயிலுக்கு வரணும்’னு ஆசைப்பட்டாங்க. ஊர் ஜனங்களும், ‘பெரியவாளை எப்படியாவது கோயிலுக்கு வரவழைச்சுடணும்’னு ஏங்கினாங்க.

தீட்சிதர்களோட வேண்டுகோள், பெரியவாகிட்ட வந்துது. பெரியவாளுக்கும், பழைய கசப்பான சம்பவத்தையெல்லாம் எல்லாரும் மறந்து, சுமுகமான உறவோட இருக்கணும்னு விருப்பம். அதனால, சிதம்பரம் கோயிலுக்கு வர்றதுக்கு சம்மதம் தெரிவிச்சார். கோபதாபங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் காஞ்சி மகான்; கருணைத் தெய்வம்!

அதன்படி, சிதம்பரத்துக்கு வந்துசேர்ந்தார் பெரியவா. விடியற்காலைல… யார்கிட்டயும் எதுவும் சொல்லாம, நேரா விறுவிறுன்னு கோயிலுக்குப் போயிட்டார்.

அங்கே… சிவகங்கை தீர்த்தக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, நித்திய அனுஷ்டானத்தையும் முடிச்சிண்டு, நேரா நடராஜர் சந்நிதிக்குப் போய் நின்னுட்டார்.

அப்பத்தான் உஷத் கால பூஜைக்குத் தயாராகிட்டிருந்தாங்க தீட்சிதர்கள். சுவாமிகளைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டுது அவர்களுக்கு! சாட்சாத் பரமேஸ்வரனே தரிசனம் தர்றதுபோல எண்ணிப் பரவசமானாங்க. பெரியவாளை இத்தனை நெருக்கத்துல பார்த்த சந்தோஷத்துல, தங்களையே மறந்துபோய் சிலையா நின்னுட்டாங்க.

அப்புறம், ஒருவழியா நிதானத்துக்கு வந்தவங்க, பூர்ண கும்ப மரியாதையெல்லாம் செஞ்சு, எந்தக் குறையும் இல்லாம பெரியவாளை நமஸ்காரம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டாங்க.

அதேநேரம்… சிதம்பரம் கோயிலுக்குள் காஞ்சிப் பெரியவா வந்திருக்கிற தகவலைக் கேள்விப்பட்டு, ஊர் ஜனங்க மொத்தமும் தபதபன்னு கோயி லுக்குள்ளே வந்துட்டாங்க. எல்லாரும் பெரியவாளை தரிசனம் பண்ணி, சிலிர்ப்பும் தவிப்புமா நிக்கறாங்க. ‘இந்தச் சம்பவம் நடக்காதா? காஞ்சி மகானை கண்ணாரப் பார்க்கற பாக்கியம் கிடைக்காதா?’ன்னு எத்தனை வருஷத்து ஏக்கம் இது! தங்களோட பிரார்த்தனை பலிச்ச சந்தோஷமும் நிறைவும் அத்தனை பேர் முகத்துலயும் தெரிஞ்சுது.

சரி… சிதம்பரத்துக்கு வந்தாச்சு; எல்லாரையும் பார்த்தாச்சுங்கறதோட பெரியவா கிளம்பிடலை. அடுத்த நாள் துவங்கி, பதினைஞ்சு நாளைக்கு, ஆயிரங்கால் மண்டபத்துல தங்கி, உபந்யாசம் பண்ணினார் பெரியவா. சிதம்பரத்து தீட்சிதர்களுக்கும் ஊர் மக்களுக்கும் பரம சந்தோஷம்!

காஞ்சி மகான், பழுத்த ஞானி. வேற யாரும் செய்யாத, சுவாமிகள் மட்டுமே செஞ்ச காரியம் இது. ‘இருநூத்தம்பது வருஷத்துல… பீடத்துல இருந்தவா யாருமே சிதம்பரம் கோயிலுக்குப் போனதில்லை. நாம மட்டும் போய், எதுனா பிரச்னையை உண்டாக்கணுமா?’ன்னெல்லாம் அவர் யோசிக்கலை. ‘செயற்கரிய செய்வோர் பெரியோர்’னு சொல்வாங்களே… அப்படித்தான் அமைஞ்சுது இந்தச் சம்பவம்!

சிதம்பரம் கோயில்ல, நடராஜ பெருமானை தரிசனம் பண்ணினப்ப, பெரியவா சங்கல்பம் ஒண்ணு செஞ்சுண்டார். அதாவது, ‘தூக்கிய திருவடி’ம்பாங்களே… அந்தக் குஞ்சிதபாதத்துக்கு நவரத்தினக் கவசம் ஒண்ணு சார்த்தணும்னு பிரார்த்தனை பண்ணிண்டார்.

அதுக்கப்புறம், சுமார் 20 வருஷம் கழிச்சு, நவரத்தினத்தாலான கவசத்தை, குஞ்சிதபாதத்துக்குச் சார்த்தி, தன் ஆசையை, பிரார்த்தனையை பூர்த்தி செஞ்சுண்டார் பெரியவா.

அன்னிக்கி என்ன நாள் தெரியுமா?

திருவாதிரை!

தீட்சிதர்களுக்கெல்லாம் மனம் கொள்ளாத பூரிப்பு; முகம் முழுக்க அப்படியரு சந்தோஷம். ஆடல்வல்லான் நடராஜபெருமானை, நவரத்தின கவசம் சாத்தின அலங்காரத்துல பார்த்துட்டு, சிதம்பரத்து மொத்த மக்களும், மெய்ம்மறந்து நின்னாங்க!” என்று உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்தார் லட்சுமிநாராயணன்.



Categories: Devotee Experiences

Tags: ,

3 replies

  1. I recall a rare picture of Periyavaa,when the first Periyavaa’s exhibition was launched in 1995 in Old Eros thetre,where in all devotees are looking ‘away’from Mahaperiyavaa..commenting on that pic,Jayendrar mentioned’this is a rare Photo as normally all dvotees will be looking at Periyavaa but this one is uniqu because Periyavaa also is standng as one of the devotees in Chidambaram to have the Darshan of the Lord.’
    Periyavaas single minded devotion in creating Uttara Chidambaram with all 4 CMs from north(Maharashtra),east,(karunakaran)west (NTR)and south(by MGR)for each of the towers in Satara is a monument(you can see my blog on the same).There is no parallele in Indian History in the recent past for such a great Nat Integration when different parties combined and contributed for temple Towers.Nadamadum Deivam!!

Leave a Reply

%d bloggers like this: