Book Release

”மகா பெரியவருக்குச் சேவை செய்த காலங்கள்தான், என் இந்த ஜென்மத்தை நிறைவு செய்ததாக எண்ணுகிறேன்” என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார் பட்டாபி சார்.

புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், காஞ்சிப் பெரியவா கலந்துகொள்ள நேரிட்டபோது என்ன நடந்தது?

பட்டாபி சாரே விளக்குகிறார்…

”மகா பெரியவா, பிட்சை பண்ற நேரம் மத்தியானம் ஒரு மணின்னாலும், அது சில தருணங்கள்ல ரெண்டு ரெண்டரைகூட ஆயிடும். அதுக்குக் குறைஞ்சு பெரியவா பிட்சை பண்ணினதா சரித்திரமே இல்லை.

பிட்சை முடிஞ்சு, அரை மணி நேரமோ முக்கால் மணி நேரமோ கழிச்சு, விச்ராந்தி பண்ணிட்டு, தரிசனம் தருவா பெரியவா!

அந்த வேளைல, தரிசனம் பண்ண வந்தவா யாரு, என்னன்னு கேட்டுப்பேன். பெரியவாகிட்ட ஒரு வழக்கம்… தரிசனத்துக்கு வந்தவாகிட்ட, மீடியேட்டர் மாதிரி ஒருத்தரை வைச்சுண்டுதான் பேசுவார். பாபு, கண்ணன் மாமா, இல்லேன்னா நான்… இப்படி யாராவது இருப்போம்.

ரொம்பவும் எளிமையானவர் பெரியவா. குழந்தை மனசு உள்ளவரும்கூட! ஆனாலும், பெரியவாளோட சாந்நித்தியத்தை மட்டுமே தெரிஞ்சவா, கொஞ்சம் பயந்த மாதிரியே பேசுவா; சொல்லவேண்டியதை சரியா சொல்ல முடியாம திணறுவா. இன்னும் சில பேர், பெரியவா என்ன சொல்றானு புரிஞ்சுக்க முடியாம மருகுவா. அவாளுக்கு உதவும்படியான பணிதான் எங்களுது!

அப்போதைய திருநெல்வேலி ஜில்லா, இலஞ்சி கிராமத்துலேருந்து 65 வயசுப் பெரியவர் ஒருத்தர் வந்தார். இரண்டு சாகுபடி பண்ற அளவுக்கு நிலபுலங்கள் இருக்கு, அவருக்கு! தமிழ் மேல அலாதிப் பிரியம்! ஆனாலும், சம்ஸ்கிருதமும் கத்துண்டாராம்! அப்படியரு இலக்கண சுத்தமா சம்ஸ்கிருத விஷயங்களையும் சொன்னார்.

பகவத் கீதை, உபநிஷத், வேதம் இந்த மூணையும் ‘பிரஸ்தான த்ரயம்’னு சொல்லுவா. ஆச்சார்யாள் இதற்கு பாஷ்யம்கூடப் பண்ணி இருக்கார். முழுக்க முழுக்க, அத்வைதக் கருத்துக்களை விவரிக்கற பாஷ்யம் அது!

அதையெல்லாம் தமிழ்ல அப்படியே கவிதையா எழுதி, புஸ்தகமா பிரிண்ட் பண்ணி எடுத்துண்டு வந்திருந்தார் அந்த திருநெல்வேலிக்காரப் பெரியவர். பெரியவாளை நமஸ்காரம் பண்ணிட்டு, ‘இந்தப் புஸ்தகத்தை ஐயாதான் வெளியிடணுமுங்க’ என்று பெரியவாளைக் காட்டிச் சொன்னார்.

உடனே பெரியவா, ‘அவரை முன்னால வரச் சொல்லுடா’ன்னார். அவரும் வந்து நின்னார். ‘ஏ.சி. பண்ணின ஹால்ல, பெரிய பெரிய மினிஸ்டர்ஸ் எல்லாரையும் கூப்புட்டுன்னா, புஸ்தகத்தை வெளியிடணும்? எங்கிட்ட என்ன இருக்கு? சொல்லுடா பட்டாபி, அவர்கிட்ட!’ன்னார்.

அதற்கு அந்தப் பெரியவர், ‘அதென்னங்க அப்படிச் சொல்லிட்டீங்க..! ஐயாகிட்டதான் எல்லாம் இருக்கு. எனக்கு ஐயா வெளியிட்டாப் போதும்’ என்றார்.

அதைக் கேட்டு பெரியவா லேசா சிரிச்சுண்டார். ‘இதை என்ன பண்ணப் போறீங்க?’ன்னு அவரையே கேட்டார்.

இப்படியரு புஸ்தகம் வெளியிட்டு, அந்தத் திருநெல்வேலிப் பெரியவர் நஷ்டப்பட்டுடக் கூடாதேங்கிற கவலை பெரியவாளுக்கு!

‘ஐயாவைப் பார்க்க வர்றவங்க வட்டத்துல… தெரிஞ்சவங்ககிட்ட கொடுக்கணும்னுதான் அச்சுப் போட்டேன்’னார் அந்தப் பெரியவர்.

ஒரு நிமிஷம் யோசிச்ச பெரியவா, ‘புஸ்தகத்துக்கு விலைன்னு ஒண்ணு வைக்க வேணாமா? பத்து ரூபானு விலை வைச்சிடுங்கோ!’ன்னார்.

திருநெல்வேலிப் பெரியவருக்கு சந்தோஷம் தாங்கலை. அப்படீன்னா, புஸ்தகத்தை பெரியவா ஏத்துண்ட மாதிரிதானேன்னு ஒரே பூரிப்பு அவருக்கு!

ஒரு புஸ்தகத்தை எடுத்துண்டு வந்து, மகாபெரியவாளோட திருப்பாதத்துல சமர்ப்பிச்சார். உடனே பெரியவா, ‘ஒரு பத்து ரூபா இருந்தா குடுடா, பட்டாபி!’ன்னார் குழந்தை மாதிரி!

அந்தக் கிராமத்துப் பெரியவர் பதறிட்டார். ‘ஐயாகிட்டேர்ந்து பணம் வாங்கறதா? அது மகா பாபம். வேணாம்… வேணாம்’னார்.

அதுக்குள்ளே பெரியவா என்னிடம், ‘உங்ககிட்டே ஏதுடா பணம்? அதுவும் உன்னண்டை போய்க் கேட்டேனே! நான்னா உனக்கே பணம் தரவேண்டியிருக்கு!’ன்னு சிரிச்சுண்டே சொன்னார். அப்ப, எதிர்ல பொள்ளாச்சி ஜெயம்னு ஒரு மாமி இருந்தா. முக்கால்வாசி நாள், அந்த மாமி, மடத்துலதான் இருப்பார்.

உடனே மாமிகிட்ட பெரியவா, ‘நான்தானே வார்த்தை கொடுத்தேன். அதைக் காப்பாத்த வேண்டாமா? ஒரு பத்து ரூபா கொடுங்கோ’ன்னார். மாமி, உடனே பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தா. பெரியவா கேட்டு, தான் கொடுப்பது எத்தனை பெரிய பாக்கியம்னு பூரிச்சுப் போயிட்டா மாமி. நான் அந்த ரூபாயை வாங்கி, பெரியவாகிட்ட கொடுக்க… பெரியவா அதைக் கிராமத்துப் பெரியவர்கிட்டத் தந்தார். அந்தப் பெரியவர், சாஷ்டாங்கமா விழுந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார். ரூபாயை வாங்கிக் கண்ல ஒத்திண்டார். அவர் முகம் முழுக்க சந்தோஷக் களை!

நெல்லைப் பெரியவர் பண்ணியிருந்தது ரொம்பப் பெரிய காரியம்; உன்னதமான செயல். அத்தனை கர்ம சிரத்தையா அதைப் பண்ணி முடிச்சதோட இல்லாம, அவ்வளவு தூரத்துலே இருக்கிற கிராமத்துலேருந்து, பெரியவாகிட்ட காண்பிச்சு ஆசீர்வாதம் வாங்கணும்னு சிரமம் பாக்காம வந்திருக்கார்!

‘ஐயாட்டதான் எல்லாம் இருக்கு’ன்னு எத்தனை தெளிவா காஞ்சி மகானை நம்பி, தேடி வந்தார்! அவர் மட்டும் அன்னிக்கி, பெரியவாளைப் பார்க்கமுடியாம போயிருந்தா, அவர் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்?!

அந்தப் பெரியவர், அத்வைத தத்துவத்தை அப்படியே பாட்டா, தமிழ்ல எழுதி புஸ்தகமா பண்ணி எடுத்துண்டு வந்தது, மகா பெரியவாளை ரொம்பவே நெகிழப் பண்ணிடுத்து. புஸ்தகத்தை இனாமா கொடுத்தா, வாங்கிக்கிறவா அதைப் படிக்காம, அலட்சியமா வைச்சுடுவானு பெரியவாளுக்குத் தோணியிருக்கணும். அதே நேரம்… கிராமத்துப் பெரியவருக்கு பண நஷ்டமும் ஆயிடக்கூடாதுன்னு பெரியவாளுக்கு அக்கறை… அதான் பெரியவா!

அப்பறம்… அந்தப் பெரியவர், காமாட்சியம்பாள் கோயிலுக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் போய், சேவிச்சுட்டு வந்தார்.

மறுநாள். மகாபெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்கிண்டு, இலஞ்சி கிராமத்துக்குக் கிளம்பிப் போகும்போது, அவர் நடையிலயும் முகத்துலயும் தெரிஞ்சது, பரிபூரணமான சந்தோஷம்!

 Categories: Devotee Experiences

Tags:

Leave a Reply

%d bloggers like this: