Sri Bodendra Swamigal

லக்ஷ்மிநாராயணனின் பெரியப்பா நடேசய்யரும் பெரியவாளும் திண்டிவனம் அமெரிக்க மிஷன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பெரியவர் விழுப்புரம் வரும்போதெல்லாம், நகர எல்லையில் உள்ள பாப்பான்குளத்தில் இருக்கும் பாபுராவ் சத்திரத்தில்தான் தங்குவார். பெரியவரை லக்ஷ்மி நாராயணனின் தந்தைதான் பூரணகும்பம் கொடுத்து வரவேற்று, சத்திரத்துக்கு அழைத்துச் செல்வார்.

மடத்தின் பரிவாரத்தில் யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. சத்திரத்தில் அவற்றையெல்லாம் கட்டிப் பராமரிக்க அப்போது வசதி இருந்தது.

அப்படி ஒருமுறை, பெரியவா பாபுராவ் சத்திரத்தில் வந்து தங்கியபோதுதான், அவரை முதன்முறையாகத் தரிசித்தார் லக்ஷ்மிநாராயணன்.

”எனக்கு அப்போ ஆறு வயசு இருக்கும். என் பெரியப்பா என்னை பெரியவாகிட்ட கூட்டிண்டு போய், ‘என் தம்பி பிள்ளை இவன். மூணாங் கிளாஸ் படிக்கிறான்’ என்று அறிமுகப்படுத்தினார்.

‘பையனுக்குப் பூணூல் போட்டாச்சோ?’ன்னு விசாரிச்சார் பெரியவர். ‘இல்லை’ன்னு சொன்னதும், ‘சரி, சீக்கிரம் பூணூல் போட்டுடு. ஸ்கூல்ல லீவு சமயத்திலே இங்கே என்னண்டை அனுப்பி வை’ன்னார்.

அதுக்கப்புறம் நாலு வருஷம் கழிச்சு 1946-47-ல அதே பாபுராவ் சத்திரத்துல மறுபடியும் பெரியவா வந்து தங்கினா. அதுக்குள்ளே எனக்குப் பூணூல் போட்டாச்சு. பெரியவா சொன்னாப்பல, ஸ்கூல் லீவ் நேரத்துல மடத்துக்குப் போய் பெரியவாளுக்குச் சேவை செய்ய ஆரம்பிச்சேன். அதுதான் ஆரம்பம். வில்வம் ஆய்ஞ்சு கொடுக்கறது தான் என் முதல் டியூட்டி. பெரியவா பத்து நாள் அங்கே இருந்தா.

ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஜெயராமய்யர் பெரியப்பாவுக்கு சீனியர். அவர் பெரியவாளை வந்து தரிசனம் பண்ணினார். ‘நீங்க ஊருக்குள்ள வரணும்’னு கேட்டுண்டார். ‘ஊருக்கு வந்தா என்ன தருவே?’ன்னு கேட்டா பெரியவா. ‘உன்னோட வீட்டைக் கொடுத்துடறியா? நான் பத்து மாசம் இங்கேதான் தங்கப் போறேன்’னார். குறும்பா கேக்கறாப்பல இருக்கும்; ஆனா, அதுக்குப் பின்னாடி பெரியவா மனசுக்குள்ளே பெரிய திட்டம் ஏதாவது இருக்கும்.

‘தினம் என்னால அவ்ளோ தூரம் நடந்து பெண்ணையாத் துக்குப் போக முடியாது. அதனால எனக்கு இங்கேயே ஒரு குளம் வெட்டிக் குடுக்கறயா?’ன்னு கேட்டா பெரியவா.

பாணாம்பட்டுன்னு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல ஒரு ஊர். தோட்டத்துல வேலை பாக்கறவா 200 பேர் சேர்ந்து மூணு நாள் தோண்டினதுல, அஞ்சு அடியிலேயே ஜலம் வந்துடுத்து. ராமருக்கு அணில் உதவின மாதிரி நானும் இந்தக் குளத் திருப்பணியில பங்கெடுத்துக்கிட்டேன். முட்டிக்கால் ஜலம்தான். ஆனா, ஸ்படிகம் மாதிரி இருந்துது. அதுல இறங்கி ஸ்நானம் பண்ணிட்டு, கங்கா பூஜை பண்ணினார் பெரியவா.

பத்துப் பதினைஞ்சு நாள் போயிருக்கும். ஒரு நாள்… ‘இங்கே ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்துல வடவாம்பலம்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே சுப்பிரமணிய ரெட்டியார்னு ஒருத்தர் இருக்கார். அவரைக் கூட்டிண்டு வாங்கோ’ன்னார் பெரியவா. அவரைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொன் னோம். பெரியவா நம்மளை எதுக்குக் கூப்பிடறானு அவருக்கு ஒண்ணும் புரியலே. அவர் நல்ல வசதியானவர். அவர் வந்து பெரியவரைப் பார்த்து, ‘நான் என்ன செய்யணும்?’னு கேட்டார். ‘தாசில்தாரை அழைச்சுண்டு வாங்கோ’ன்னார் பெரியவா. அந்தக் காலத்துல, தாசில்தார்னா கலெக்டர் மாதிரி… அவ்வளவு பவர் அவருக்கு.

தாசில்தார் வந்தார். அவர் கும்ப கோணத்து பிராமணர். அவர்கிட்டே பெரியவா, ‘இந்த ஊர்ல என்ன விசேஷம்? ஃபீல்டு மேப் இருக்குமே? அதுல பாத்து கண்டுபிடிச்சு சொல்லு’ன்னா.

ஃபீல்டு மேப்பை வெச்சு அவரால ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலே!

அப்புறம் பெரியவாளே, ‘ஒரு இருநூறு வருஷத்துக்கு முன்னால பெண்ணையாறு இங்கே வடவாம்பலம் கிராமத்துக் குப் பக்கத்துலதான் ஓடிண்டிருந்திருக்கு. நாளாவட்டத்துல ஒதுங்கி ரொம்ப துரம் தள்ளிப் போயிடுத்து’ன்னார்.

‘வடவாம்பலத்துல முன்னே ஒரு பெரிய சித்தர் இருந்திருக்கார். அங்கேதான் ஸித்தி அடைஞ்சிருக்கார். ஆத்ம போதேந்திரான்னு ஒரு பீடம் இருந்திருக்கு. அதை எல்லாம் வெள்ளம் அடிச்சிண்டு போயிடுத்து’ன்னா பெரியவா.

தை மாசம் அஞ்சாம் தேதி வரை கங்கை அங்கே வர்றதா ஐதீகம். ஆத்துத் திருவிழாவா கொண்டாடுவா. சாப்பாடு எல்லாம் கட்டி எடுத்துண்டு போவா. அந்த இடத்துல ஆத்ம போதேந்திரா சமாதி ஆகி, லிங்கம் வச்சு அதிஷ்டானம் கட்டியிருக்காளாம். திடீர்னு ஒரு நாள் ராத்திரி, ‘இந்த க்ஷணமே அங்கே போகணும்’னா பெரியவா. நாங்க ரெண்டு பேர் டார்ச்லைட் எடுத்துண்டு அவரோடேயே நடந்து போனோம். ராத்திரி ரெண்டு மணி சுமாருக்கு அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்துல உட்கார்ந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டார் பெரியவா. விடியற்காலை நாலு மணி வரைக்கும் ஜபம் பண்ணினார். அப்புறம், இருள் பிரியறதுக்கு முன்னே ஊருக்குத் திரும்பி வந்துட்டார்.

அப்புறம், மூணு மாசம் கழிச்சு மறுபடியும் கிளம்பி, பெரியவரோடு அதே இடத்துக்குப் போனோம். ஒரு பெரிய ஸர்ப்பம் எதிரே வந்துது. நடுங்கிப் போயிட்டோம். ‘ஒண்ணும் பண்ணாது. ஒரு நிமிஷம் நில்லுங்கோ’ன்னார் பெரியவா. அது ஊர்ந்து போய் மறைஞ்சுடுத்து. முன்பு போலவே பெரியவா அங்கே குறிப்பிட்ட இடத்துல உட்கார்ந்து ஜபம் பண்ணினார். நாலு மணிக்கு ஜபத்தை முடிச்சுண்டு எழுந்து வந்துட்டார். அங்கே அப்படி என்ன விசேஷம்னு எங்களுக்கு எதுவும் புரியலே.

மறுபடி சுப்பிரமணிய ரெட்டியாரை அழைச்சுண்டு வரச்சொல்லி, அவர்கிட்ட, ‘எனக்கு இங்கே ரெண்டு ஏக்கர் நிலம் வேணும். வாங்கித் தர முடியுமா?’ன்னு கேட்டார் பெரியவா. ‘ஆகட்டும்’னார் ரெட்டியார்.

தஸ்தாவேஜு எல்லாம் ரெடி பண்ணி, ஏக்கர் 200 ரூபா மேனிக்கு ரெண்டு ஏக்கர் 400 ரூபாய்னு பத்திரம் எழுதிக் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியாச்சு. பணம் வாங்கமாட்டேன்னு மறுத்தார் ரெட்டியார். ‘இல்லே! நீங்க வாங்கிக்கத்தான் வேணும். இல்லேன்னா நாளைக்கு ஒரு பேச்சு வரும்’னு சொல்லி, மடத்துலேருந்து 500 ரூபாயை ரெட்டியாருக்குக் கொடுக்கச் சொல்லிட்டார் பெரியவர்.

அப்புறம், அந்த ரெண்டு ஏக்கர் நிலத்துல தோண்டிப் பார்க்கணும்னா பெரியவா. அவருக்கு மாமா பிள்ளை ஒருத்தர் இருந்தார். அவரையும் அழைச்சுண்டு அந்த இடத்துக்குப் போனோம். ஒரு இடத்தை செலக்ட் பண்ணி, அங்கே கடப்பாரையால தோண்டினார் அவர். வெளியே எடுத்தப்போ கடப்பாரை முனையெல்லாம் ரத்தம்!

அவர் அதைப் பார்த்து மூர்ச்சையாகி, அங்கேயே தடால்னு விழுந்துட்டார். என்ன பண்றதுன்னு தெரியாம கையைப் பிசைஞ்சுண்டு நின்னோம். அரை மணி கழிச்சு அவரே, ‘எனக்கு ஒண்ணும் இல்லே’ன்னு எழுந்து உட்கார்ந்துட்டார்.

பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னோம். ‘பயப்படாதீங்கோ! அங்கே, அடியிலே ஒரு கோயில் புதைஞ்சு கிடக்கு. நாளைக்குத் தோண்டிப் பாக்கலாம்’னார்.

அப்படியே மறுநாள் போய்த் தோண்டினப்போ, முன்னே ஒரு காலத்துல அங்கே கோயில் இருந்ததுக்கான அடையாளங்கள் தெரிஞ்சுது. ஒரு சிவலிங்கம் கிடைச்சுது. ரெண்டு மாசம் அங்கேயே இருந்து, அந்தக் கோயிலை மறுபடி புதுப்பிச் சுக் கட்டிட்டு, காஞ்சிபுரம் திரும்பிட்டா பெரியவா.

அந்த நேரத்துல நான் 3, 4 மாசம் பெரியவாளோடு கூடவே இருந்தேன். அந்தச் சம்பவங்களையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்கிறப்போ சிலிர்ப்பா இருக்கு!” என்று சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மிநாராயணன்.Categories: Devotee Experiences

Tags:

4 replies

 1. THANKS FOR THIS RARE INFORMATION

 2. Dear Sir,

  The temple is “ADHISHTANAM” of 52nd Peetadhipathi of Kanchi Sankara mutt. It is in between Villupuram & Banrutti Road. While going from Villupuram to Banrutti near about eight to ten kilometres you have to take left to go to that Village. Before entering village you will find that Adhishtanam.

  Regards,

  Sundar

 3. Dear Sir,

  Could you let us know which temple is this? Are you referring to the adhishtanam at vadavambalam?

  namaskaram

 4. Thank you.
  Our Namaskarams.
  Anbudan,
  Srinivasan. V.

Leave a Reply

%d bloggers like this: