Chicago Maharudram

periyavaa_oorvalam2

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர என்றால் நமக்கு உடனே காஞ்சிபுரம் சங்கர மடம் தான் நினைவுக்கு வரும். இந்த வருடம் காஞ்சி மடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 75 வது ஜெயந்தியை படு Maharudram101209419விமர்சையாக  இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு அமெரிக்காவில் பல இடங்களில் வேத நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில் மிக முக்கியமாக அக்டோபர் 2, 3 & 4, சிகாகோ நகரில் காஞ்சி காமகோடி சேவை பௌண்டஷனின் மத்திய அமெரிக்க கிளை (http://www.maharudram.net) , ஸ்ரீ மகா ருத்ர யக்ஞ்ம் நிகழ்ச்சியை லோக க்ஷேமத்தையும் , பெரியவாளின் ஜெயந்தியையும் முன்னிட்டு  மிக  பிரம்மாண்டமான முறையில்  வில்லோப்ரூக்கில் உள்ள சின்மயா மிஷன் வளாகத்தில்  நடத்தியது. ஒரே நாளில் 130 க்கும் அதிகமான வேத மாணவர்களைக் கொண்டு ஸ்ரீ மஹா ருத்ர யக்ஞ்ம் நடத்துவது அமெரிக்காவில் இதுவே முதல் முறை. இந்த விழாவில் கலந்து கொள்ள அமெரிக்காவின் பல மாகாணங்களிலிருந்தும், கனடா நாட்டிலிருந்தும்
பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அமெரிக்காவில் இந்த அளவுக்கு  ஒரு வேத நிகழ்ச்சி நடத்துவது நிஜமான ப்ரஹ்ம பிரயத்தனம்  – ஹோமத்துக்குத்  தேவையான தர்பை, தீபாராதனை விளக்குகள், கலசங்கள், விபூதி, குங்குமம், சந்தனம், வேஷ்டி, வஸ்திரம் இத்யாதி அனைத்தும் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.  இந்தியாவில் நடக்கும் இது போன்ற விழாவில் கடைபிடிக்கப்படும் வேத நியதிகள் அனைத்தும் இங்கேயும் பின்பற்றப்பட்டது. இந்த ப்ரஹ்மாண்ட விழாவுக்குப் பிரதான ஆச்சார்யாளாக ஸ்ரீ சந்திரசேகர குருக்கள் முன்னின்று நடத்தி வைத்தார். இவரை தவிர 14 வேத பண்டிதர்கள் கலந்துகொண்டனர். இதில் சதுர் வேத பண்டிதர்களும் அடக்கம். சுமார் எழுநூறுக்கும் மேற்பட்டோர் இதில் தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சி போல் கலந்து கொண்டு இறை ஆசி பெற்று இன்புற்றனர்.

 

முதல் நாள் நிகழ்ச்சியாக, Oct 2 வெள்ளியன்று காலை, மங்கள வரவேற்புடன் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் ஐந்து பாதுகைகளும், ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர பெரியவாளின் நான்கு பாதுகைகளையும் சேர்த்து மொத்தமாக ஒன்பது பாதுகைகள் மண்டபத்தின் உள்ளே பூரண கும்பத்துடன் வரவேற்கப்பட்டது. இதை Maharudram101109274தொடர்ந்து ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்ரஹ  ஹோமம், ஆவந்தி ஹோமம்  முதலிய நிகழ்ச்சிகள் காலை நன்று நடந்தன.. மதியம் ஸ்ரீ காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வான் ஸ்ரீ ரமணி பாகவதரின்  நாமசங்கீர்த்தனையில்  பக்தர்கள் நனைந்தனர். மாலையில் 108 பெண்மணிகள் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் படத்திற்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் ஜபித்து  குங்கும அர்ச்சனை செய்தனர். இதில் அநேகம் பேர் மடிசார் புடவையணிந்து பூஜை செய்ததைப பார்த்த போது மாம்பலம் அயோத்யா மண்டபத்திலோ அல்லது காஞ்சி மடத்திலோ இருப்பதை போன்று பிரமிப்பை அளித்தது.  வாஷிங்டன் டி சி யை சேர்ந்த பண்டிதர் பாஸ்கரின் கைவண்ணத்தில் மூன்று  குத்துவிளக்குகள் மூன்று தேவியராக புடவையால் மிக நேர்த்தியாக அலங்காரம் செய்யப்பட்ட காட்சி காண்போர் நெஞ்சை கொள்ளை கொண்டது. முடிவில் நடந்த தீபாராதனை அன்று நடந்த நிகழ்ச்சியின் உச்சகட்டம்.

Maharudram101209451இரண்டாம் நாள், காலையில், விஸ்வரூப தரிசனத்துடன் நாள் தொடங்கியது. இதனை அடுத்து 130 வேத மாணவர்களும், 15 வேத பண்டிதர்களும்  உள்பட  கிட்டத்தட்ட 3 மணி நேரம்  ஸ்ரீ மகான்யாசத்துடன் ஸ்ரீ மஹா ருத்ர ஜபம் செய்தனர். இந்த ஜபத்தின் போது சிவன், அம்பாள் மற்றும் அனைத்துப் பாதுகைகளுக்கும் இணையாக அபிஷேகம் நடந்தது. ஒரே கூரையின் கீழ் 145  பேரின் வேத மந்திர ஒலி அனைவைரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மதிய போஜனத்தின் பின் சுவாமி அமிதானந்தா “குரு பக்தி” என்ற தலைப்பில் அருளுரை ஆற்றினார். மாலை வேத பண்டிதர்கள் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு ஸ்ரீ ருத்ர க்ரம அர்ச்சனை செய்தனர். நன்கு வேதம் கற்ற பண்டிதர்கள் அனைவரும் சேர்ந்து க்ரமம் ஓதுவதை கேட்பதற்கு பல புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும்!  முதல் இரண்டு நாட்களிலும் குழந்தைகளுக்காக நடந்த ஸ்லோகம் சொல்லும் நிகழ்ச்சியிலும் எண்பதுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் ஹிந்து மதம் பற்றிய புத்தகங்கள் பரிசாக அளிக்கப் பட்டன.

கடைசி நாள் (ஞாயிறு) அன்று காலையில், விஸ்வரூப தரிசனத்துடன் நாள் தொடங்கியது. காலையில் இருந்த குளிரையும் பொருட்படுத்தாது அனைவரும் மண்டபத்தின் வெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் 3 மணிக்கும் மேலே அமர்ந்தனர். ருத்ர ஹோம குண்டத்தை சுற்றி உட்கார்ந்த  வேத பண்டிதர்கள் ஸ்ரீ ஏகா தச ருத்ர ஜபத்துடன் மஹா ருத்ர ஹோமம் வேத வழிப்படி மிக பக்தியுடன் நடத்தி வைத்தனர்.நியூ ஜெர்சி  ஸ்ரீ மணி  மாமா வேதத்தின் rudra_homam3மகத்துவத்தை மிக அழகாக விளக்கினார். பூர்ணாஹூதியுடன் விழா இனிதே முடிந்தது. இந்த மூன்று நாட்களும் செவிக்கு மட்டுமன்றி வயிற்றுக்கும் சுவையான உணவை  கிருஷ்ணா கேடேரிங்கைச சேர்ந்த முரளி வழங்கினார். மதிய போஜனத்திற்கு பின் வெளியூரிலிருந்து வந்த அனைவரும் பிரிய மனமின்றித் திரும்பினர்.

காஞ்சி ஆச்சர்யாளின் கருணையும் ஸ்ரீ பரமேஸ்வரனின் கருணை மட்டுமே இந்த யக்ஞ்ம்
வெற்றிகரமாக முடிய காரணமானது. இது அங்கு வந்த அனைவரும் உணர்ந்த ஒரு விஷயம். இது போன்ற விழா அமெரிக்காவில் வசிக்கும் வேத மாணவர்களையும், பண்டிதர்களையும் ஒரு குடும்பமாக இணைக்க பெரிதும் வழி வகுத்துள்ளது.

மூன்று நாள் நடந்த இந்த வேத விழா காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் பாதங்களில் சமர்ப்பணம்.

அடுத்து வரும் ஆண்டில் மே மாத இறுதியில் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு .www.maharudram.net

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கரCategories: Announcements

Leave a Reply

%d bloggers like this: