பெரியவா தான் காமாட்சி… காமாட்சி தான் பெரியவா

Thanks to Smt Saraswathi Thyagarajan mami for FB share

வைகுண்ட ஐயர், நாகலட்சுமி மாமி தம்பதிகள், புஷ்பங்கள், பழத் தட்டை பெரியவா எதிரில் வைத்து சேர்ந்து நமஸ்காரம் செய்தார்கள் .தம்பதிகளை நோக்கி ஒரு தீட்சண்யமான பார்வை…. தன் பாணியில் விசாரிக்க ஆரம்பித்தார்…
பெயர், பிறந்த ஊர், இப்பொழுது வசிக்குமிடம், வேலை,… என்று ஒவ்வொன்றாக விசாரித்தவர் ஆபீஸ் வேலையை தவிர வேறு என்ன செய்யறே என்று கேட்டார்.. இல்ல பெரியவா ஆபிசுக்கு போயிட்டு சாயங்காலமா வீட்டுக்கு வந்துடுவேன், வேற ஒன்னும் இல்லை.. வைகுண்டம் ஐயர் பயந்து கொண்டே சொன்னார்.. அப்போ 24 மணி நேரமும் ஆபீஸ் வேலை என்று சொல்லு…பெரியவா இப்படி சொன்னதும் பக்கத்தில் நின்றவர்களும் சிரித்தார்கள்… இப்பொழுது நாகலக்ஷ்மி மாமி என்ன நீயும் நாள் முழுக்க சமையல் செய்துண்டு இருக்கேன் அப்படின்னு சொல்ல போறியா…
மாமிக்கு பயத்தில் வியர்த்துக் கொட்டியது. சமாளித்தபடி.. இல்ல பெரியவா காத்தால காவேரி ஸ்நானம் பண்ணிட்டு ஒரு சொம்பு தண்ணி மலைக்கோட்டையில் கீழே இருக்கிற விநாயகருக்கும், ஒரு குடம் தாயுமானவர் சுவாமிக்கும், உச்சி பிள்ளையாருக்கு ஒரு பாத்திரம் காவேரி ஜலத்தை அபிஷேகத்துக்கு கொடுத்துட்டு தரிசனம் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துடுவேன்…அப்புறம் இவருக்கு, பசங்களுக்கு, வீட்டில் பெரியவாளுக்கு சமையல் சாப்பாடு எல்லாம் செய்து கிடைக்கற ஒரு மணி நேர அவகாசத்தில் எனக்கு தெரிஞ்ச நாலு ஸ்லோகத்தை சொல்லுவேன் பெரியவா.. அவ்ளோதான் எனக்கு தெரியும் பெரியவா..
மாமியின் கண்களின் ஓரத்தில் ஜலம் எட்டிப் பார்த்தது.
வீட்டை சம்ரக்ஷனம் பண்றதே பெண்களுக்கு பெரிய புண்ணியம்.அவாளுக்கு தர்மமே அதுதான்… என்று சொன்ன பெரியவா மீண்டும் வைகுண்டம் ஐயர் பக்கம் திரும்பி இந்த புண்ணியத்தில் உனக்கு பங்கு கிடைக்காது , தெரியுமோ.. பெரியவா ஒரு சிரிப்பை உதிர்த்தார்.ஐயர் மாமாவுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது..
பெரியவா இன்னும் என்ன சொல்ல போறாரோ..
நீ என்ன செய்யற, நாளையிலிருந்து காலையில் உன் சந்தியாவை செய்துட்டு மலைக்கோட்டை கிரிப் பிரதட்சிணம் மௌனமாக தினசரி செய்து கொண்டு வா என்று சொல்லி விட்டு மீண்டும் மாமியின் பக்கம் திரும்பி நீ அம்பாள் ஜெபம் எடுத்துக்கோ.. என்று சொல்லியவாறு இரண்டு பேருக்கும் பரிபூரண ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.
காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சிக்கு வரும் வரை மாமா வழியில் பேசவே இல்லை. மறுநாள் விடியல் காலையில் தன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மலைக்கோட்டை கிரிப் பிரதட்சிணம் செய்ய கிளம்பி விட்டார்.நாகலட்சுமி மாமி அடுத்த நாள் முதல் மீண்டும் சம்சார சாகரத்தில் மூழ்கி விட்டார்.. பெரியவா சொன்னதெல்லாம் மறந்தும் போயிற்று.
இரண்டு மாதம் சென்ற நிலையில் குடும்பத்து நெருங்கிய நண்பர் பூஜைகளில், விஷய ஞானம் மிகுந்தவர் நாகலட்சுமி மாமியின் வீட்டுக்கு திடீரென்று வந்தார்.மாமியைப் பார்த்து உனக்கு பெரியவா அனுக்ரஹம் நிறைய இருக்கு.. நான் குடுக்கிற மந்திர உபதேசத்தை அம்பாள் ஜெபமாக எடுத்துக்கோ என்று சொல்லி உபதேசித்து விட்டு போய்விட்டார்.
நாகலட்சுமி மாமிக்கு அப்போதுதான் சுரீரென்று உரைத்தது. பெரியவா சொன்னதை மறந்து விட்டோமே…
மனதில் ஒரு வைராக்கியத்துடன் மறுநாளிலிருந்து ஜெபம் செய்ய ஆரம்பித்தாள்.. முதலில் மன சோர்வு நீங்கியது. எப்போதும் மஹாபெரியவாளின் ஸ்மரணை மனதில் இருந்து கொண்டே இருந்தது.
காஞ்சிபுரம் போக வேண்டும் என்று அடிக்கடி மனதில் ஒரு எண்ண அழுத்தம் கொடுத்தது. கணவரை நச்சரிக்க ஆரம்பித்தாள்.. அப்படி அவர் முடியாது என்ற சமயத்தில் நெருங்கிய தோழியான வேலூர் ராஜம் மாமியை அழைத்துக்கொண்டு போக ஆரம்பித்தாள்.
அன்றைக்கு அதிசயமாக மாமாவே காஞ்சிபுரம் போகலாம் என்று சொல்ல இருவருமாக சேர்ந்து பெரியவா தரிசனத்திற்கு சென்றார்கள்.உலக அதிசியம்.. அன்றைக்கு பெரியவாள் இடத்தில் கூட்டமே இல்லை. பெரியவா மேனாவில்உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் ஒரு அணுக்கத் தொண்டர் மட்டும் நின்றிருந்தார்.பெரியவா இவர்களுக்கு பிரசாதம் கொடுத்தவுடன் அணுக்கத் தொண்டர் இவர்களை நகர சொல்லவும், மாமா மட்டும் ஆதிசங்கரர் சன்னிதானத்திற்கு சென்றார். நாகலட்சுமி மாமி சிறிது தள்ளி போய் உட்கார்ந்தார்.
ஒரு ஐந்து நிமிடத்தில் அந்த அணுக்கத் தொண்டர் வேகமாக வந்து மாமி உங்களை பெரியவா கூப்பிடுறா என்று சொல்லிக் கொண்டே எங்கேயோ போனார்.நம்மை எதுக்கு கூப்பிட போறா என்று மாமி நினைக்க திரும்பிப் பார்த்த அந்த தொண்டர் உங்களைத்தான் சொல்லிட்டே இருக்கேன் என்று அதட்டலாக சொல்லிவிட்டு உள்ளே ஓடினார்.ஓடிவந்த நாகலட்சுமி மாமி மேனாவில் உள்ளே அமர்ந்திருந்த பெரியவாளை ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு நிமிர்ந்து பார்த்தாள்…அவ்வளவுதான்…..அண்ட சராசரங்களும் சுழன்றது… தலையிலிருந்து பாதம் வரை மின்சாரம் பாய்ந்தது… சுற்றுப்புற காட்சிகள் கண்ணை விட்டு மறைந்தது…தலைக்குப் பின்னால் ஒரு ஒளி வட்டத்துடன் பெரியவா காமாட்சியாக கழுத்திலும், கைகளிலும் வைர நகைகள் ஜொலிக்க அபய ஹஸ்த முத்திரையுடன் அமர்ந்திருக்க நாகலட்சுமி மாமி காமாட்சி .. காமாட்சி என்று உரக்கச் சொல்ல ஆனால் வார்த்தைகள் வெளியே வராமல் உள்ளேயே சிறைப்பட்டு போக, உடல் வியர்க்க.. கால்கள் பூமியில் நிற்கமுடியாமல் தள்ளாட கண்களில் தாரையாக கண்ணீர் கொட்ட அப்படியே கீழே விழுந்து நமஸ்காரம் செய்தாள்..
கண்ணை திறந்து பார்த்த பொழுது பெரியவா ஒரு புன்சிரிப்புடன் ஜெபத்தை விடாதே செய் என்று சொல்லிக்கொண்டே கதவை இழுத்து மூடிக்கொண்டார்.
எங்கேயோ போன அணுக்கத் தொண்டர் வரவில்லை, தன் கணவரும் பக்கத்தில் காணவில்லை, வேறு யாருமில்லை.. மாமி உணர்ச்சிப் பெருக்கில் நிற்க முடியாமல் மீண்டும் ஒரு ஓரமாக உட்கார்ந்து விட்டாள்.
மாமா வந்தவுடன் நடந்ததை சொல்லி.. அவர் கையைப் பிடித்துக் கொண்டு நான் சொல்றத நீங்க நம்புவீர்களா என்று அடிக்கடி கேட்டு உணர்ச்சிவசப்பட்டாள்.நாட்கள் நகர நகர நாகலட்சுமி மாமியின் ஜெப எண்ணிக்கை நிமிடங்களை தாண்டி மணிக்கணக்கில் விஸ்வரூபம் எடுத்தது.பெரியவாளின் ஸ்மரணையும் அதிகரிக்க, அம்பாள் குதூகலித்து மாமியின் ஜெபத்தில் உள் அமர்ந்து கொண்டாள்.பூஜையில் ஜெபம் செய்யும் நேரத்தில் வீட்டிற்குள் மகா பெரியவா குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் சப்தம் நாகலட்சுமி மாமிக்கு நன்றாக புலப்பட்டது. உன்னிப்பாக கவனித்து, நிதானித்து, யோசித்து மாமி இதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள் .
தன்னுடன் நெருங்கி பழகும் பலரில் உன்னதமான எண்ணம் கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை உட்கார வைத்து. மகா பெரியவா தான் காமாட்சி, காமாட்சி தான் மகா பெரியவா என்று பெரியவாளின் மகத்துவத்தை தாரைதாரையாக கண்ணீர் வழிய சொல்லிக் கொண்டிருப்பாள்.
அம்பாளின் கடாட்சத்துடன் நாகலட்சுமி மாமி மகா பெரியவா என்ற பிரம்மஞானியிடம் ஐக்கியமாகி கொண்டிருக்கிறாள் என்பது மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
காற்று, மழை, இடி, மின்னல், வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் மகாபெரியவா உத்தரவுபடி 20 வருடம் தொடர்ந்து திருச்சி மலைக்கோட்டை கிரிவலம் மேற்கொண்ட வைகுண்டம் ஐயரைப் பற்றியும்….
ஸ்ரீ பெரியவாளின் அற்புதங்களை, பக்தியில் தன்னை உருக்கிக் கொண்டு பலரை அந்த சாகரத்தில் மூழ்கடித்த நாகலட்சுமி மாமி பற்றியும்…பரந்து, விரிந்து ஓடும் காவிரி நதியும், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமியும் இன்றும் அங்கு வீசும் காற்றோடு பிரஸ்தாபித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நேரில் பேட்டி கண்டவர்
சங்கர் திருவேதி
944 53 19 632 (wa)

Loading

One Response

  1. Guess only those who have abundant poorva janma sukrutham alone get this direct personal experience. My elder brother is one

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading