கல்வியா செல்வமா இரண்டுமா? Gleanings from the writings of Sri Ra.Ganapathy Anna – Part 1

கனகதாரை எனில் மஹாலக்ஷ்மி நினைவே வரும். ஒரு மஹாலக்ஷ்மியம்மாள் இந்த உலகு முழுதற்கும் ஈந்த கருணை – ஞானக் கனகதாரைதான் ஸ்ரீ மஹா பெரியவாள்.
அவரது பீடாதிபத்தியப் பொன்விழாவையொட்டி அவருக்குக் காஞ்சியில் கனகாபிஷேகம் செய்தபோது அவர் காஞ்சிக்கும் கனகதாரைக்குமுள்ள பொருத்தத்தை அவருக்கே உரிய அரிய பார்வையில் கண்டு, அவையோருக்குப் பொன்னுரையாக வழங்கினார்.
காஞ்சி பீடத்தின் ஆதாரசக்தியான அம்பிகை, அப்பீடத்தைப் புதுப்பொலிவோடு நிறுவி, தாமே அங்கு புதிதாக ஸ்தாபித்த ஸ்ரீமடத்துடன் இணைத்த ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஆகிய இருவருக்கும் உள்ள கனகதாரைத் தொடர்பை எடுத்துரைத்தார்.
பாலப் பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில் ஸ்ரீசங்கரர் பிக்ஷை எடுத்தபோது ஒரு த்வாதசியன்று ஓர் ஏழை அந்தண மாது அவருக்கு ஈய ஏதுமில்லையே என்று தாரை தாரையாகக் கண்ணீர் வடித்து, த்வாதசிப் பாரணைக்கென்று வைத்திருந்த ஒரே ஒரு பண்டமான அழுகல் நெல்லிக்கனியை பிக்ஷையிட்டாள். அதைக் கண்டு உருகியே கருணைச் சங்கரர் திருமகளைத் துதித்து அவளுக்குக் கனகதாரையை பொன் நெல்லிக்காய் மழையாக வரவழைத்துக் கொடுத்து விட்டார் என்று நயமுறக் கூறினார். ஏழை மாதின் அன்பு, கண்ணீர் தாரையாகவும், அருளாளர் சங்கரரின் கருணை, கனகதாரையாகவும் ஆனதைக் காட்டினார். முன்வினைப் பாபந்தான் அவளை வறுமையெனும் வெப்பத்தால் பொசுக்கிற்றென்றாலுங்கூட, கருணை என்ற காற்றில் திருமகள் கடாக்ஷ முகிலை அவளிடம் தள்ளிவந்து திரவிய மழை பொழியவேண்டும் என பால சங்கரர் வேண்டியதைக் குறிப்பிட்டார்.
வாழ்க்கைத் தொடக்கத்தில் இவ்வாறு கருணைக் கனகதாரை பெருக்கிய அந்த பால ப்ரஹ்மசாரியே ஸந்நியாஸச் சக்ரவர்தியான ஸ்ரீ சங்கர ஜகத்குருவானபின் வாழ்க்கையின் இறுதியில் இந்தக் காஞ்சிக்கு வந்தபோது, உக்ர ரூபிணியாயிருந்த காமாக்ஷியை அநுக்ரஹ மூர்த்தியாக்கிக் கருணை தாரை பொழிய வைத்ததையும் சொன்னார்.
அதோடு நில்லாமல், அபூர்வமான பூர்வ கதையொன்றும் சொல்லி அந்தக் காமாக்ஷியும் கனகதாரை பொழிந்திருப்பதை விவரித்து அவையோரைப் புளகிக்க வைத்தார்.

(TO BE CONTINUED)

Loading

One Response

Leave a Reply to Venkataraman JagadesanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading