Shri Karthi Nagaratnam has painstakingly and lovingly typed these 9 parts and had posted it in Sage of Kanchi forum in Facebook.
Here they are:
நன்றிகள் திரு. மகேஷ் அவர்களுக்கு.
இதில் பதியப்பட்ட சம்பவங்களில் ஒன்றொன்றாக அண்ணா ஸ்ரீ. ரா.க அவர்களின் சொந்த எழுத்தில் மறுபடியும் தமிழில் பதியலாம் என்று தோன்றியது.
மகாபெரியவாள் விருந்து – I
========================
எழுபதாண்டுகளுக்கு முன் ஒரு சங்கராச்சாரிய சுவாமிகள் முஸ்லீம்களுக்கு அறுசுவை விருந்தளித்தார் என்பது ஆச்சிரியமான விஷயம் தானே? அந்த முஸ்லீம்களின் அருமையான ஐக்கிய மனப்பாங்கும் அதற்கு காரணமாக இருந்தது.
1921 ஆம் வருஷத்திய மாமாங்கத்தில் பணிபுரிவதற்கு சென்னை முஸ்லீம் இளைஞர் சங்கத்தில் இருந்து இருநூறு வாலிபர்கள் கும்பகோணம் சென்று சீரிய தொண்டாற்றினர். ஊருக்கு வெளியில் பட்டீஸ்வரத்தில் முகாமிட்டிருந்த மஹா பெரியவாள் அது பற்றி கேள்வி பட்டது தான் தாமதம், அவர்களை தம்மிடம் அழைத்து வர ஸ்ரீ மடத்தின் சிப்பந்திகளை அனுப்பி வைத்தார்.
சங்கராச்சாரியார் தங்களை கூப்பிட்டிருக்கிறார் என்பதில் அந்த வாலிபர்கள் அடைந்த மகிழ்ச்சி சொல்லத்தரமன்று. பட்டீஸ்வரத்திற்கு வந்து அவரை பணித்து அடக்க ஒடுக்கமாக நின்றனர்.
பெரியவாள் அவர்களுடைய சேவையை பாராட்டினார். அவரகளது சங்கத்தை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அது மட்டுமல்ல. அந்த இருநூறு பேரில் ஒவ்வொருவரிடமும் ஊர், பேர், படிப்பு, தொழில் முதலியவை பற்றி கேட்டு அகமகிழ செய்தார். ‘உங்கள் சங்கத்துக்கு மடத்தின் அன்பளிப்பு’ என்று கூறி ஒரு வெள்ளிக் கோப்பையை பரிசில் வழங்கினார்.
முத்தாய்ப்பாக அருமையான அறுசுவை உண்டியும் அளித்தார்.
மகாபெரியவாள் விருந்து – II
===========================
1924 -ஆம் ஆண்டு காவிரியும் கொள்ளிடமும் ஒன்று சேர்ந்து விடுமாறு திருவையாற்று பகுதியில் பெரு வெள்ளம் புரண்டது. அப்போது சுமார் பதினைந்து நாட்களுக்கு ஸ்ரீ மடத்தின் ஆதரவில் வண்டி வண்டியாக உணவு சமைத்து ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு அனுப்பப்பட்டது. மடத்தின் தேவைகளை அதம பக்ஷமாக குறைத்து கொண்டு அந்த ஏழை மக்களுக்காக உக்கிராணத்தை காலி செய்தார், காவிரியுடன் போட்டி போட்டுக்கொண்டு கருணை வெள்ளம் பெருக்கிய மடாதிபர். திருவையாறு காங்கிரஸ் கமிட்டி தலைவரான வழக்கறிஞர் சாரங்கபாணி ஐயங்காரின் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் அரிய முறையில் இந்த அன்ன விநியோகத்தை செய்தனர்.
“உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே” என்று நிதர்சனமாக உணர்ந்த பல்லாயிர ஏழையர் ஒரு பக்ஷ காலம் தங்களுக்கு பக்ஷமாக உணவிட்ட மகானை தெய்வமாகவே போற்றி வழிபட்டனர்.
சனாதன சமய பீடமொன்று இவ்வளவு பெரிய அளவில் சமூக பணி செய்தது இதுவே முதன்முறை என்று பத்திரிகைகள் பாராட்டி எழுதின.
மஹா பெரியவா விருந்து – III (நன்றிகள் – ஐயனுக்கும், அண்ணாவுக்குமே)
=========================================================================
காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆசாரிய பெருமான் அன்னம் பாலித்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியும் உண்டு. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் 1931 இறுதி பகுதிகளில் பிரிட்டிஷ் சர்க்காரின் அடக்குமுறை மிகவும் தீவிரமாய் இருந்தது. காங்கிரஸ் காரர்களுக்கு சிறிது ஆதரவு காட்டினாலும் ஆபத்து என்று மக்களும் ஸ்தாபனங்களும் பயப்பட்ட சமயம் அது.
மஹா பெரியாவாள் வடார்க்காடு ஆரணியில் முகாம் இட்டிருந்தார். அப்போது காங்கிரஸ் தொண்டர் படையொன்று அவரை சந்திக்க அனுமதி கோரிற்று.
விஷயத்தை பெரியவாளிடம் விக்ஞாபனம் செய்த ஸ்ரீமட நிர்வாகிகள், ‘சர்க்கார் கெடுபிடி ரொம்பவும் அதிகமாக இருக்கிறது. காங்கிரஸ் காரர்களுக்கு பெரியவா பேட்டி கொடுப்பதால் மடத்துக்கு பல தொல்லைகள் ஏற்படலாம்’ என்று தெரிவித்துக்கொண்டனர்.
அவர்கள் கூறியதை பெரியவாள் கூர்ந்து கேட்டுக்கொண்டார். ‘அத்தனை பேரையும் வரச்சொல்லுங்கள். மடத்திலேயே அவர்களுக்கு போஜனமும் ஏற்பாடு பண்ணுங்கள்’ என்று பரம சாந்தமாக ஒரு வெடிகுண்டை தூக்கி போட்டார்.
அஸ்தியில் ஜுரத்தோடு மடத்து நிர்வாகிகள் அவ்வாறே செய்தனர்.
ஆபத்து எதுவும் வரவில்லை.
மேனேஜர் இதை மகிழ்ச்சியுடன் பெரியவாளிடம் கூற, அவர், ‘நம்மை பாக்கணும் ன்னு ஒத்தர் சொல்றச்சே, அவா யாரானாலும் அதனாலே நமக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோ ன்னு பயந்துண்டு கதவை சாத்திக்கறதுன்னா ‘ஜகத்குரு’ பட்டம் போட்டுண்டு இந்த பீடத்துலே ஒக்காந்திருக்கறதுக்கு லாயக்கே இல்லே ன்னு அர்த்தம்’ என்று ரத்தின சுருக்கமாக மறுமொழி தந்தார்.
மஹா பெரியவா விருந்து – IV (நன்றிகள் – ஐயனுக்கும், அண்ணாவுக்குமே)
=====================================================================
‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்ற ஆப்தர் மொழியை பெரியவாள் மேற்கோள் காட்டி, உணவிடுவதில் வித்தியாசம் பாராட்டவே கூடாது என்பார். கேரளத்தில் செருக்குன்னம் என்னும் தலத்திலுள்ள அன்னபூரணி ஆலயத்தில் சேவார்த்திகளுக்கு எல்லாம் அன்னம் படைத்த பிறகு, இரவில் அவ்வழியே செல்லும் திருடர்களுக்காக என்றே ஒரு மரத்தில் சோற்று பட்டை கட்டி வைக்கும் பழக்கம் இருப்பதாக அவர் பல உரைகளில் உவகையுடன் கூறியிருக்கிறார். எதிரெதிர் கட்சிகளான பாண்டவ படை, கௌரவ படை இரண்டிற்குமே உதியன் சேரலாதன் என்ற சேர மன்னன் உணவு அனுப்பி பெருஞ்சோற்று சேரலாதன் என்றே பெயர் எடுத்ததாக சங்க இலக்கியங்களில் காண்கிறது என்று வெகுவாக ரசித்து கூறுவார்.
சிவபெருமானுக்கு வேடன் கண்ணப்பன் படையல் இட்டான். ராமபிரானுக்கு வேடன் குகன் அமுது செய்வித்தான். நம் மஹா பெரியவாளோ வேடர்களுக்கு தாமே விருந்திட்டிருக்கிறார். ஸ்ரீசைல காட்டில் வாழும் செஞ்சுக்கள் எனும் வேடர்களுக்குத்தான்.
போக்குவரத்து வசதிகள் மிக குறைவாக இருந்த 1934 இல் பெரியவாள் தம் பரிவாரத்துடன் நிர்மானுஷ்யமான ஸ்ரீசைல அடவிகளில் சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் செஞ்சு கோஷ்டியினர் எதிர்ப்பட்டனர். மடத்தினரை எதிரிகளாகவே கருதி முதலில் அவர்கள் வில்லையும் அம்பையும் சித்தம் செய்து கொண்டனர். ஆனால் அன்பின் மூர்த்தமான ஆசார்யபெருமானின் திவ்விய தேஜோமய தோற்றத்தை கண்டவுடன் அடியோடு மனம் மாறி அடி பணிந்தனர். இந்த கலியிலும் அன்புக்கும் தவத்துக்கும் உள்ள சக்தியை எடுத்தியம்பிய அசாதாரணமான சம்பவம்!
எதிர்க்க வந்தவர்கள் அப்புறம் அப்பரிவாரத்திற்கு காவலாக உடன் சென்று இரவு வேளையில் பாராக்காரர்களாக தொண்டு செய்தனர். சுமைகளையும் தூக்கி வந்தனர்.
அடுத்த முகாமில் அவர்களை பத்திரமாக சேர்த்த பின்தான் அவர்கள் விடைபெற வந்து நின்றனர்.
பெரியவாள் அவர்களுக்கு திரவிய வெகுமதி அளிக்கும்படி மானேஜரிடம் உத்தரவிட்டார்.
பணத்தை தொடமாட்டோம் என்று அவர்கள் ஒரேடியாக மறுத்து விட்டனர்.
செஞ்சு தலைவர் மானேஜரிடம் என்னவோ சொன்னான்.
அது நடக்காத காரியம் என்று அவர் கைவிரித்தது தலையாட்டினார்.
பெரியவாள் கையை சொடக்கு போட்டு மானேஜரின் கவனத்தை ஈர்த்தார். ‘அவன் என்ன கேக்கறான்? நீ என்ன முடியாதுங்கறே?’ என்று கேட்டார்.
‘அவாள்ளாம் பெரியவா முன்னாடி டான்ஸ் பண்ணி காட்டணுமாம்’ என்றாம் மானேஜர்.
‘அதை நான் பார்க்க முடியாதுன்னு நீயே சொல்லிட்டியாக்கும்! ஏன்? அது நமக்கு கௌரவ ஹானின்னு மானேஜர் -அப்படிங்கற முறையிலே உன் அபிப்ராயமாக்கும்!’.
கனல் தெறிக்காமல் சாதாரணமாகத்தான் பெரியவாள் கேட்ட போதிலும் மானேஜரின் தலை கவிழ்ந்தது.
மாபெரும் நாடிய கலைஞர்களும் ஆடி பார்க்க மறுத்த சங்கர மடாதிபர் காட்டுக்குடிகள் நாட்டியமாடிக்காட்ட அனுமதி வழங்கினார். ஒரே நிபந்தனை. ஆடவர்களில் யாவரும் ஆடலாம் ஆயினும் பெண்களில் வயது வந்தவர்கள் ஆடக்கூடாது என்று.
‘ஸ்வாமிக்கான ஆட்டம், வீரத்துக்கான ஆட்டம், விளையாட்டு ஆட்டம், ன்னு பல தினுசு இருக்குமே. இப்போ என்ன ஆட போறீங்க?’ என்று பெரியவாள் கேட்டார்.
இன்று எழுதும்போதும் உடல் சிலிர்க்கும் படியான மறுமொழியை அவர்கள் கூறினார்கள். ‘ரொம்ப கிட்டத்து உறவுக்காரங்க வந்தா என்ன ஆட்டம் ஆடுவோமோ அதைத்தான் ஆட போறோம்!’.
அப்படியே அந்த செஞ்சு ஆடவர்களும் சிறுமியரும் ஆட ரசிக சிரோமணியும் அதனை மகிழ்ச்சியுடன் கண்ணுற்று ஆசி நல்கினார்.
அதோடு அன்று அவர்களுக்கு அறுசுவை உண்டியும் அருளினார்.
மஹா பெரியவா விருந்து – V (நன்றிகள் – ஐயனுக்கும், அண்ணாவுக்குமே)
====================================================================
குறவர் மறவர் விடுதலை பாட்டில் தொடக்கம் பறையர் எனப்பட்டவர் பற்றித்தானே? அவர்களுக்கு நமது ஐயன் விருந்திட்ட நிகழ்ச்சிகள் பல. அவற்றிலொன்றில் மலர்ந்த அவரது உள்ள செம்மையை வைதிகத்தில் ஊறிய சேங்காலிபுரம் தீக்ஷிதரவர்கள் உருகி கூற கேட்க வேண்டும்.
குடவாசல் – கொறடாசேரி மார்க்கத்தில் பெரியவாள் ஸபரிவாரம் சென்று கொண்டிருந்தார். வழியிலே திருக்களம்பூரில் சேரி மக்கள் அக்காலங்களில் அவர்களுக்கே இருந்த அதி வினய பக்தியுடன் கைகூப்பி நின்றார்கள், காணிக்கையும் கூட சமர்ப்பித்தார்கள்.
தீனதயாளனின் இயற்கை கருணை மேலும் பெருக, அவர்களது நலன்களை, நலன்கள் இல்லாமையையும் கேட்டுக்கொண்டார் – ஓடாமல், பறக்காமல் நின்று நிதானமாக! இல்லாத நலன்களை இருக்குமாறு நிறைவேற்றி தர மடத்தால் என்ன ஆகுமோ, மடம் பரிந்துரைத்தால் பிரமுகர்களாலும், துரைத்தனத்தாராலும் என்ன ஆகுமோ எல்லாவற்றையும் மானேஜரிடம் விவாதித்து முடிவு செய்தார்.
இதிலேயே ஓரளவு நேரம் சென்றதில் அடுத்த முகாம் தாமதமாகுமே என்று மானேஜரும் மற்ற பரிவாரத்தினரும் எண்ணினர்.
ஆனால் ஏழையர் தெய்வமோ நிம்மதியாக உட்கார்ந்துவிட்டது. சிப்பந்திகளை அனுப்பி அவ்வளவு நந்தன்-நந்தினிகளுக்கும் வேட்டி புடவை வாங்கி வர சொல்லி விட்டது. அந்த சிற்றூரில் அவ்வளவு ஜவுளி ஸ்டாக் இல்லை என்று தெரிந்த பின்னும் விடாமல் அருகில் உள்ள சற்று பெரிய ஊரான குடவாசலுக்கே போய் வாங்கி வர ஆணை பிறப்பித்தது.
அந்த நடுவழி மர நிழலிலேயே அவர்களுக்கு திண்டியாக ஒரு சாம்பார் சாதமும் தயாரிக்க உத்தரவு இட்டு விட்டது.
இதெல்லாம் முடித்து புறப்பட இரண்டு மூன்று மணி அவகாசம் பிடிக்குமே, வெயிலும் நன்றாக ஏறி விடுமே, அதற்கப்புறம் அடுத்த முகாம் போய் பெரியவாளுக்கே உரிய அந்த பல மணி நேர பூஜை செய்வதென்றால் மிகவும் ஆயாசம் ஆகிவிடுமே! இதை பற்றி எண்ணி மானேஜர் கவலை பட்டார்.
‘இப்பவே டயம் ஆயிடுத்து. இன்னும் உத்தரவானத்தை எல்லாம் பண்ணிட்டு போய் அப்புறம் பூஜை….’ என்று அவர் சொல்லி வரும் போதே….
ஸ்ரீ சரணர் குறுக்கிட்டு ‘இதுவும் பூஜை தான்’ என்றார்.
மஹா பெரியவா விருந்து – VI (நன்றிகள் – ஐயனுக்கும், அண்ணாவுக்குமே)
=====================================================================
காசி சென்று இரண்டாண்டுகளுக்கு பின்னர் மஹா பெரியவாள் திரும்பும்போது கியோஞ்சர் சமஸ்தானத்தில் மலைக்காட்டு பகுதிகளில் மூன்று நாட்கள் முகாம் இட நேர்ந்தது. அங்கு வசித்த பழங்குடி மக்களை ஏழ்மையை கண்டு அருளாளரின் உள்ளம் உருகிற்று. ‘நாம இங்க இருக்கற மூணு நாளும் இவா வயித்துக்கு போட்டுடணும்’ என்று மானேஜரிடம் கூறினார்.
மானேஜர் தயங்கி தயங்கி ‘அவா நூத்தைம்பது குடும்பத்துக்கு மேலே இருக்கா. இந்த ஊர்லயோ நம்ம மடத்து காராளுக்கு சமையல் பண்றதுக்கே வசதி போறலே’ என்று இழுத்தார்.
‘அப்போ உலுப்பையா குடுத்துடுங்கோ’ என்று பெரியவாள் ஒரு படி இறங்கி கூறினார்.
மூன்று நாட்களும் அவ்விதமே ஏழையருக்கு வழங்கப்பட்டது.
சமைத்த உணவாக இன்றி கச்சா தானியம், காய்கறி, எண்ணெய் முதலியன வழங்குவதற்கு ‘உலுப்பை’ என்று ஸ்ரீ மடத்தில் பெயர் சொல்லுவார்கள்.
இதேபோல் பல்லாண்டுகளுக்கு பின் மஹா பெரியவாளின் இளையாத்தாங்குடி முகாமில் அப்போதுதான் மூடப்பட்ட ஒரு சர்க்கஸ் கம்பெனியின் தொழிலார்கள் வந்து முறையிட்டபோது அவர்களுக்கு மூன்று நாட்களுக்கான உலுப்பை வழங்க உத்தரவிட்டார்.
மஹா பெரியவா விருந்து – VII (நன்றிகள் – ஐயனுக்கும், அண்ணாவுக்குமே)
======================================================================
ஸ்ரீ மடத்து யானையின் தலையில் அரிசி ஏற்றி அனுப்பியது மடத்தின் வரலாற்றிலேயே ஒரு முறைதான் நடந்ததாக தெரிகிறது. ஹரிஜன மக்களின் உதரம் நிறையவே உதாரமூர்த்தி இவ்விதம் சரித்திரம் படைத்தார்.
1940 நவம்பர். பெரியவாள் திருமருகலில் இருந்து திருச்செங்கட்டாங்குடி வந்தபோது அவ்வூர் வெள்ளக்காடாக ஆயிற்று. வானம் கல்லாக கறந்தது.
ஐநூற்றுக்கு மேற்பட்ட ஹரிஜனங்கள் படும் அவதி ஐயனின் செவிக்கு எட்டியது.
அவர்களுக்கு உணவு பண்டங்கள் உடனடியாக கொண்டு சேர்க்குமாறு சிப்பந்திகளை விரைவு படுத்தினார்.
சேரி செல்லும் வழியில் ஜலம் ஆழமாக ஓடுவதால் வண்டி போக கஷ்டப்படும் என்று சிப்பந்திகள் தெரிவித்தனர்.
‘அப்படியானா, யானை மேல ஏத்தி அனுப்புங்கோ. இந்த ஊர் கோவிலுக்கு கணபதீச்வரம் ன்னு பேர். அதனாலே தீன ஜன சேவைக்கு யானையே போனா பிள்ளையார் சந்தோஷப்படுவார்’ என்று பொருத்தம் காட்டினார் குரு பெருமான்!
இதெல்லாம் இருக்கட்டும், பிடி அரிசி திட்டத்தின் மூலம் எத்தனை லக்ஷம் பேரின் வயிற்றை அவர் நிறைவித்திருக்கிறார் என்பதற்கு யாரே புள்ளி விவரம் காட்ட முடியும்?
மஹா பெரியவா விருந்து – VIII (நன்றிகள் – ஐயனுக்கும், அண்ணாவுக்குமே)
=======================================================================
நாயை தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால் நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திர காவலர் இருக்கிறார்.
1927 ஆம் வருஷத்தில் ஒரு நாய் மடத்து முகாமுக்கு தானாகவே வந்து காவல் காக்க தொடங்கியது. தமது பிக்ஷை முடிந்தவுடன் அதற்கு ஆகாரம் போடுமாறு பெரியவாள் ஆக்ஞாபித்தார்.
விந்தையாக மடத்து பிக்ஷை சேஷத்தை உண்ண ஆரம்பித்த பின் அது வேறெவர் எது கொடுத்தாலும் உண்ண மறுத்தது.
ஸ்ரீ மஹா பெரியவாள் பல்லக்கில் ஊர் ஊராக சென்று கொண்டிருந்த காலத்தில் அந்த நாய், ஒன்று, அந்த பல்லக்கின் கீழேயே போகும். அல்லது, யானையின் தூண் போன்ற நாலு கால்களுக்கு உள்ளாகவே போகும். பல்லக்கு நிறுத்தப்பட்டவுடன் எட்டத்திற்கு ஓடி சென்று, பெரியவாள் இறங்கி செல்வதை அங்கிருந்தே கண்குளிர கண்டு வாலை ஆட்டும்.
ஒரு முறை அதற்கு வெறி பிடித்து விட்டதாக சிப்பந்திகள் எண்ணினர். சேவகன் ஒருவனிடம் அதன் கண்ணை கட்டி நாற்பது கிலோ மீட்டர் தள்ளியிருந்த ஒரு கிராமத்தில் கயிற்றால் பிணித்து விட்டு திரும்பி வருமாறு பணித்தனர்.
அப்படியே அச்சேவகன் செய்து திரும்பினான்.
அவன் திரும்பும் முன்னரே பைரவனாரும் திரும்பி இருந்தார். அவருக்கு வெறியில்லை என்று தெரிந்தது.
அன்றிலிருந்து மஹா பெரியவாளை தரிசிக்காமல் உண்பதில்லை என்று அந்த நாய் உயிர் பிரியும் வரையில் விரதம் காத்தது.
அக்காலத்தில் பிக்ஷை முடித்தபின் சிறிது சிரம பரிஹாரம் செய்து கொண்டு பெரியவாள் தமது அருள் ஆபிஸை மீண்டும் தொடங்கும்போது கேட்கும் முதல் கேள்வி ‘நாய்க்கு போட்டாச்சா?’ என்பது தான்.
மஹா பெரியவா விருந்து – IX (நன்றிகள் – ஐயனுக்கும், அண்ணாவுக்குமே)
=====================================================================
நாய் பட்டாளம் ஒன்றுக்கே மஹா பெரியவாள் விருந்து வைத்த ஒரு நிகழ்ச்சியும் உண்டு.
1947 – இல் திருக்கோவலூருக்கு அருகே உள்ள வசந்த கிருஷ்ண புரத்தில் பெரியவாள் சாதுர்மாஸ்யம் அநுஷ்டித்தார். அங்கிருந்து பார்த்தால் மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவண்ணாமலையின் சிகரம் தெரியும். தாம் இருக்கும் இடத்தில இருந்தே சிவஸ்வரூபமான அந்த கிரிக்கு பெரியவாள் தினமும் பூஜை செய்வார்.
அப்படியொரு நாள் பூஜையின் போது அவர் கண் கூடி தியானம் செய்கையில் குடுகுடுவென்று ஒரு நாய் ஓடி வந்து அவரது கமண்டலுவில் வாய் வைத்து விட்டது.
எல்லோரும் பதறி போனார்கள். ரிடையர் ஆன ஆபிசர் ஒருவரோ நாயை கல்லாலேயே அடித்து விட்டார்.
அது ஊளை இட்டுக்கொண்டு ஓடி எட்டத்தில் நின்றது.
சந்தடியில் பெரியவாளின் கண் மலர்கள் திறந்தன.
சுற்றி இருந்தவர்களை பார்த்தார் பெரியவாள். நடந்த விஷயம் தெரிந்து கொண்டார்.
‘அக்ராஹாரத்து வீடுகளில் இப்போ இருக்கிற எல்லா ஆகார தினுசுகளையும் போய் சேகரம் பண்ணிண்டு வாங்கோ. நெறைய பக்கெட் ல ஜலமும் கொண்டாங்கோ’ என்று பணித்தார்.
ரிடயர்டு ஆபிசர் உட்பட பலர் சென்று அவ்விதமே ஏராளமாக உணவு வகைகளும் தாராளமாக நீரும் கொண்டு வந்தனர்.
பெரியவாள் சமிஞ்ஞை செய்ய எட்ட இருந்த பைரவர் அருகே வந்தார். ஆயினும் வெகு அருகே வந்து விடாமல் சற்று ஒதுங்கி நின்றார்.
பெரியவாள் மேலும் மேலும் சமிக்ஞை செய்ய, என்ன ஆச்சிரியம்! ஏதோ காந்த சக்தி இழுத்தாற்போல் அந்த ஒரு பைரவர் மட்டுமல்ல, ஏராளமான பைரவர்கள் ஒரு படையாகவே வந்து விட்டார்கள்.
அருகிலேயே இருந்த உணவுக்கு பாயாமல் அத்தனை சுவானங்களும் அமரிக்கையாக அணிவகுத்து நின்றன.
அக்ரஹாரத்தில் இருந்து வந்த உணவையும் நீரையும் அந்த ஓய்வு பெற்ற உயர் அதிகாரியை கொண்டே அத்தனை நாய்களுக்கும் படைக்கவும் செய்தார் கருணா மூர்த்தி.
Categories: Devotee Experiences
Excellent effort which enable us to learn the incidents & Maha Periyaval’s humility towards every souls.
Hara Hara Sankara,
Jaya Jaya Sankara.
Showing us a path to think of periyava everday by reading his anugraham.
Dear all DIVINE lovers,All the articles speaking,detailing the glory of OUR SAINTS inspires not only me but also the other followers.As per our OM SRI
MAHA PERIYAVA’s teachings all religions lead to the same GOD in different directions.SAINTS envy those who goes against GOD’S saying.Don’t
ever be a mere believer of GOD,be an ardent follower of their principles of FAITH,COMPASSION,LOVE to all souls.Wearing leather,silk made
products,eating cake etc,hurting other’s feeling etc are surely against GOD.OM SHANTI,OM SHANTI,OM SHANTI
ஒவ்வொன்றையும் படித்த பின்னர், மேலே தொடர்ந்து படிக்க முடியாமல் கண்ணீர் மல்கியது. அற்புதமான சேவைக்கு என் பணிவன்பான வணக்கங்கள் ஐயா!
கார்த்தி, மிகப் பெரிய சேவையைச் செய்கிறீர்கள்…..எத்துணை முறை படித்தாலும் நமது பெரியவாளது சரிதம் இனிக்கவல்லதன்றோ?. உங்களுக்கும், இங்கு பதிவிடும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கல்.
Dear Fellow Devotees, This is not translated by me, I just reproduced the original articles of Anna Sri. Raa.Ganapati,(as mentioned in the beginning). இதில் பதியப்பட்ட சம்பவங்களில் ஒன்றொன்றாக அண்ணா ஸ்ரீ. ரா.க அவர்களின் சொந்த எழுத்தில் மறுபடியும் தமிழில் பதியலாம் என்று தோன்றியது.
An interesting article to read and I thank Mr Karthi Nagaratnam for his excellent efforts.
Balasubramanian NR
It is only after 1947 due to politicians HINDU -Muslim divide came.what a Pity. Mahapriava was a Great Mahan..
Brilliant effort by Shri Karthi Nagaratnam.