Sage of Kanchi

விநாயகர் அகவல் – பாகம் 5

Thanks to Sri B.Srinivasan for the article.

 

mukkuruni-vinayagar

 

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்.

7.  அஞ்சு கரமும் அங்குச பாசமும்

பதவுரை:

அஞ்சு கரமும் – ஐந்து திருக்கைகளும்

அங்குச பாசமும் – அவைகளில் இரு கரங்களில் இருக்கும் அங்குசம், பாசம் என்ற இரு கருவிகளும்

விளக்கம்:

அங்குசம் ஒரு கரத்தில்; பாசம் மற்றொரு கரத்தில் – என்று வெளிப்படையாக சொன்னவர், ஒரு கரத்தில் மோதகம்,

ஒரு கரத்தில் எழுத்தாணி, துதிக்கையில் அமுத கலசம் – என்பவைகளை வெளிப்படையாக கூறாமல் குறிப்பால் காட்டுகின்றார்.

ஐந்து கரங்களைக் கொண்டு, ஐந்து தொழில்களை ஆனந்தமாக, அனாயாசமாக செய்கிறார் கணபதி.

ஐந்து தொழில்கள் என்பவை:  1) படைத்தல், 2) காத்தல் 3) அழித்தல் 4) மறைத்தல், 5) அருள் புரிதல்.

1) கணபதியின் எழுத்தாணி இருக்கும் திருக்கரம் – படைத்தல் தொழில் (சிருஷ்டி)

2) மோதகம் ஏந்திய திருக்கரம் – காத்தல் தொழில் (ஸ்திதி)

3) அங்குசம் ஏந்திய திருக்கரம் – அழித்தல் (சம்ஹாரம்)

4) பாசம் ஏந்திய திருக்கரம் – மறைத்தல் (திரோதனம்)

5) அமுத கலசம் ஏந்திய திருக்கரம் – அருள் புரிதல் (அனுக்ரஹம்)

ஆஹா: நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறதே!

இதனால், இவர் முழுமையாக சிவஸ்வரூபி என்றல்லவா விளங்குகிறது.

கஜமுகனை அழிக்க தன் தந்தத்தை ஒடித்தார்.  அதையே எழுத்தாணியாக் கொண்டு மஹாமேரு பர்வதத்தில் மகாபாரதத்தை

எழுதினார் ஹேரம்பர். உலகம் முழுவதும் அழியும் பிரளய காலம் ஒன்று வரும்.  அப்பொழுது அழிந்த உலகை மீண்டும் உருவாக்க

முன்கூட்டியே உலகப்படத்தை எழுதிவைக்கவும் உதவுகிறது அந்த எழுத்தாணி.

மீண்டும் ஒரு கஜ முகன் தோன்றி தேவர்களுக்கு தொல்லை கொடுக்காதபடி அச்சுறுத்தி க்கொண்டே இருக்கிறது அந்த எழுத்தாணி.

ஏன்.  நம்மையும் பல இடர்பாடுகளிலிருந்து ரக்ஷிப்பதும், அந்த எழுத்தாணிதான்.

ஐங்கரன் செய்யும் ஐந்தொழில்களை இன்னும் கொஞ்சம் விளக்கலாம்:

1) 36 கருவிகளுடன் உடல் போகங்களை அனுபவிப்பது – ஜாக்ரத அவஸ்தை – (சிருஷ்டி)

2) ஜாக்ரதத்தில் அனுபவித்ததை கனவில் காண்பது – ஸ்வப்ன அவஸ்தை – (ஸ்திதி)

3) கனவுபோல் சிறிது நிழல் மாதிரி தோன்றி உடனே மறைவது – சுஷுப்தி (சம்ஹாரம்)

4) பிராண வாயு இயக்கம் இல்லாமல் அப்படியே நிற்பது – துரீய அவஸ்தை  (திரோதனம்)

5) ஒரு கருவியும் இல்லாமல் அஞ்ஞானம் நீங்கி குருமுகம் காட்டி ஆனந்த மயமாதல் – துரியாதீத அவஸ்தை  (அநுக்ரஹம் )

இவ்வாறு  5 அவஸ்தை  நிலைகளில் 5 தொழில்கள் .  இவற்றை ஊன்றிப் படித்தால் உள்ளம் உருகுகிறது.  மேலோட்டமாக

படித்தால் ஒன்றும் புரிவதில்லை.  குருவருள் இருந்தால் தான் இதன் தாத்பர்யத்தை அறியமுடியும்.

இன்னும் ஒரு விதமாக பார்த்தால், உடலில் மூன்றும், உயிரில் இரண்டும் – ஆக ஐந்துதொழில்களும் உள்ளன.  அவை:

உடல் தோன்றுவது (படைத்தல்), உடல் நிற்பது (காத்தல்), உடல் அழிவது (அழிதல்)

உயிரில் மயக்கம் தோன்றுவது (மறைத்தல்), அதன் பின் தெளிவு வருவது (அருள் புரிதல்)

பொறிகளால் வரும் ஐந்து தொழில்களும் உண்டு.  அவை:

1) பொறிகளால் ஆத்மா தொடர்பு கொள்ளல் – சிருஷ்டி

2) அதனால் அறிந்தவைகளை அனுபவித்தல் – ஸ்திதி

3) அதன்மயமாய் அழுந்தல் – சம்ஹாரம்

4) அதனின் இன்பமயமாதல் – திரோதனம்

5) அதிலிருந்து விடுபட்டு தெளிவு பிறத்தல் – அநுக்ரஹம்

கரண நிலையிலும் ஐந்து தொழில்கள் நடைபெறுகின்றன:  அவை:

1) மனத்தால் ஒரு பொருளை நினைத்தல் – ஸ்ருஷ்டி

2) அப்பொருளின் மீது ஆசை கொள்ளுவது – ஸ்திதி

3) அது எப்பொழுது கைகூடுமோ என்று திகைத்து நிற்பது – சம்ஹாரம்

4) அப்பொருளின் மேல் மயங்கி நிற்பது – திரோதனம்

5) அதன் ஸ்வரூபத்தை தெரிந்து கொள்வது – அநுக்ரஹம்

முக்தியில் அருள் வடிவாக ஆவது – ஸ்ருஷ்டி – படைத்தல்

ஆனந்த பேறு அடைவது – ஸ்திதி – காத்தல்

அந்த ஆனந்தத்தினின்றும் அதீத படுவது – சம்ஹாரம் – அழித்தல்

காண்பவன், காட்சி, காணப் படும் பொருள் – இவை மூன்றும் தோன்றாமல் மறைவது – திரோதனம் – மறைத்தல்

இந்த நான்கும் எக்காலமும் இருந்துகொண்டே  இருப்பது – அநுக்ரஹம் – அருள் புரிதல்

இவ்வாறு, எல்லா தத்துவ நூல்களும் ஐந்தொழில்களை விளக்குகின்றன.

கணபதியின் ஐந்து கரங்களுக்கு இவ்வளவு மஹத்துவமா?

அடுத்ததாக அங்குசமும் பாசமும்:

தான் என்ற ஆணவத்தால் அல்லல் படும் ஜீவன்கள்:  அது அவ்வளவு லேசில் தானாகவும் விலகாது,

விலக்கிகொள்ளும் வழியும் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் நாம் விடும் அபயக்குரலைகேட்டு ஆணவத்தை, அங்குசத்தால் அடக்கி,

பாசக்கயிற்றால் நன்றாக கட்டி, நமக்கு விடுதலையை (மோக்ஷம்) அளிக்க வல்லவர் ஸ்ரீ மகாகணபதியே.

இவரை ஸ்மரித்தால் அஹங்காரம் (ஆணவச் செயல்) எல்லாம் ஓம்காரத்தில் அடங்கி, உள்முக நாதம் உண்டாகும்.  இது கணபதி உபாசகர்களுக்கு ப்ரத்யக்ஷம்.

(மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.  ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்)

Exit mobile version