Thank you RVS for this wonderful share. What an amazing narration of Swamigal! We are blessed to be born in the Bharatha desam where these mahans have born also!
சுவாமிகள் வசித்த காலத்தில் அவரை நேரில் பார்த்தவர்கள் சொன்னதாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார் மதுரையம்பதியில் 1949ல் சன்மார்க்கர்களின் மாநாட்டில் பேசிய உரையிலிருந்து…….
“சுவாமியவர்கள் ஒரு வெள்ளையாடையை முக்காடிட்டுப் போர்த்தியிருப்பார்களாம். சில சமயம் தலை திறக்கப்படும்போது தலைமீதுள்ள உச்சிக் குழிக்கும் சூரியனுக்கும் ஓர் ஒளி ஓடிக்கொண்டிருக்குமாம். உதாரணமாக ஜன்னல் துவாரங்களின் மூலமாகச் சூரியக் கதிர்கள் பரவும்போது,கோடு போன்ற ஒரு வெளிச்சமும் அதில் தூசி போன்ற துணுக்குகள் பலவும் பறந்து கொண்டிருக்க காண்கிறோமோ அதே போன்று! அந்தச் சரீரம் ஞானதேகம். ஆகையால்தான் அவரைப் படமெடுக்கப் பலர் முயன்றும் உருவம் நிழல் விழாததால் படத்தில் விழவில்லை. ஆகையால் உருவப்படம் பிடிக்க முடியவில்லை. இன்று பார்க்கிற படம் அவரின் பக்தனான ஒரு குயவன் களிமண்ணில் செய்த உருவம். அதை அவரிடம் அக்குயவன் பாதகாணிக்கையாகச் சமர்ப்பிக்க அவர் அதை வாங்கி “பொன்னான உடல் மண்ணாயிற்றே” என்று சொல்லிக் கீழே போட, உடைந்து நொறுங்கிப் போயிற்று. பின்னர் அவ்வுருச் செய்வதற்கு காரணமாகயிருந்த சிலவற்றைக் கொண்டுதான் பிற்காலப் படம் வரையலாயிற்று”
— பசும்பொன் தேவரின் எழுச்சிப் பேருரைகள் – க. பூபதிராஜா.
~~~~~~~~~~~~~~~
மனிதநேயம் பேசுபவர்கள் வாடியபயிரைக் கண்டபோதெல்லாம் வாடி ஜீவகாருண்யத்தில் பயிர்நேயமும் பாராட்டிய வள்ளலாரைப் பின்பற்றுதல்தான் பொறுத்தமாக இருக்கும். ஒளியாகிய ஜோதியை கும்பிடச் சொன்னார். நமக்குள்ளே அதே ஜோதி இருப்பதாகத்தான் அத்வைத தத்துவமும் சொல்கிறது.
வள்ளலார் படிப்பில் கவனம் செலுத்தாததால் அவரது அண்ணன் வீட்டில் சாப்பாடு போடக்கூடாது என்கிறார். இராமலிங்கம் என்ற பெயர் கொண்ட வள்ளலாருக்கு அவருடைய அண்ணியார்தான் அண்ணனுக்கு தெரிந்தும்தெரியாமலும் திருவமுது படைக்கிறார். தனது தந்தையாரின் திதியின் போதும் எல்லோரும் உண்டு முடித்ததும் கொல்லைப்புறமாக வந்து யாருக்கும் தெரியாமல் அமுதுண்ணும் கொழுந்தனை நினைத்து வேதனைப்பட்டு அன்னமிடும்போது அண்ணியாரின் கண்ணீரும் சேர்ந்து இலையில் விழுகிறது.
“ஏன் அண்ணி அழறீங்க?”
“சொந்த வீட்டிலேயே அப்பாவின் திதிக்குக் கூட இப்படித் திருட்டுத்தனமா பின்பக்கமா வந்து சாப்பிடறியேப்பா… உங்க அண்ணன் உன்னைப் படின்னுதானே சொல்றாரு…. படியேன்…”
“சரி அண்ணி… நாளையிலேர்ந்து படிக்கிறேன். தனியறையில் ஒரு கண்ணாடியும் விளக்கும் வேணும்..”
அண்ணியார் இராமலிங்கம் கேட்டதை ஏற்பாடு செய்தார்கள். வீட்டின் மேல் மாடியில் இருந்த அறைக்குள் சென்று கண்ணாடியை சுவற்றில் சாய்த்து அதன் முன்னால் திருவிளக்கை ஏற்றி அதைப் பார்த்தவண்ணமே அமர்ந்திருப்பார். இப்படி சில தினங்கள் கடந்தது.
ஒருநாள் அந்தக் கண்ணாடியில் விளக்கின் உருவமோ அல்லது எதிரில் அமர்ந்திருக்கும் தன்னுடைய உருவமோ தெரியாமல் திருத்தணிகை முருகனின் உருவம் காண்கிறார். அவ்வளவுதான்! படிப்பு முடிந்துவிட்டது. சர்வமும் கற்றுக்கொண்டு சாகாக்கலை அறிந்துவிட்டார். முருகனே பாடம் நடத்திவிட்டதால் அதற்கு பின்னர் அவர் எழுதிய பாடல்கள் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கிறது.
கருங்குழியில் எழுதிக்கொண்டிருக்கும்போது அருகிலிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீர் ஊற்றி விளக்கெரித்த மகான் அவர்! அன்னசத்திரத்தினால் அனுதினமும் ஆயிரமாயிரம் பேர்களுக்கு திருவமுது படைத்திட்ட அன்னபூரணர்! மனிதனின் இன்றியமையாத தேவைகளில் முதல் அடிப்படைத் தேவையான “உண்ண உணவு” என்பதை வலியுறுத்தி அன்னதானமளித்த அன்னதாதா! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றும் உத்தமர்தம் உறவு வேண்டும் என்றும் பிரார்த்தனை வைத்தார்.
பள்ளிக்கூடத்தில் கல்லாதவரின் வாக்கின் இனிமையும் சத்தியமும் நம்மைக் கட்டிப்போடுகிறது. அன்பையே போதிக்கும் அவர் பரசிவ வணக்கத்தில் சொல்லும் ஒரு பாடலோடு முடித்துவிட்டு அவர் சொல்லும் அந்த அன்பையே கடைப்பிடிப்போம்.
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரோளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே!
நீ அன்பெனும் கைப்பிடிக்குள் அகப்படும் மலை! அன்பு எனும் பெரும் குடிலுக்குள் புகுந்து அருளிச்செய்யும் அரசு நீ! அன்பென்ற வலைவிரித்தால் அதில் அகப்பட்டுக்கொள்ளும் பரம்பொருள் நீ! அன்பாகிய கையை நீட்டினால் அதில் வந்து அடங்கும் அமுதம் நீ! நீ கடல். இருந்தாலும் ஒரு அன்புக் குடத்தினுள் அடங்கிவிடுவாயே! அறிவென்ற உயிர் ஒளியே நின் அன்புதானே! அன்பு என்னும் அணுவுள் அமைந்த பேரொளியே! பரசிவமான உன்னை நான் வணங்குகிறேன். அருள் புரிவாய் , ஐயனே!.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
