
கிரிவல மகிமை பற்றி பகவான் ஸ்ரீ ரமணர் கூறிய கருத்துக்களை
ஸ்ரீ குஞ்சு சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ பகவானைத் தரிசிக்க வந்த சாது ஒருவர் ஆசிரமத்தில் தங்கிக் கொண்டு தினம் தவறாமல் கிரிப் பிரதக்ஷிணம் செய்து வந்தார். அது தவிர வேறு தியானமோ, ஜபமோ ஒன்றும் செய்வதில்லை. அவர் ஒரு நாள் ஸ்ரீ பகவானிடம் ஒரு குறிப்பிட்ட புத்தகம் வேண்டும் என்று கேட்டார். ஸ்ரீ பகவானும் என்னைக் கூப்பிட்டு எடுத்துத் தரச் சொன்னார்கள்.
பிறகு
—-அவருக்கு புத்தகம் கொடுத்தாயா ? —-என்று கேட்டார்கள்.
நான் கொடுத்து விட்டதாகச் சொன்னேன்.
ஸ்ரீ பகவானிடம் மெதுவாக—-அவர்தான் பிரதக்ஷிணம் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லையே !
ஒன்றும் தெரியவும் தெரியாதே ! அவருக்கு புத்தகம் எதற்கு ? —-என்றேன்.
ஸ்ரீ பகவான் என்னைப் பார்த்துச் சொன்னார் :—-
பிரதக்ஷிணத்தை விட மேலானது வேறு என்ன இருக்கிறது ? அது ஒன்றே போதுமே ! ஒரே இடத்தில் அமர்ந்து தியானமோ, ஜபமோ செய்தால் கூட மனம் வெளியில் அலைபாயும். ஆனால் பிரதக்ஷிணம் செய்யும்போது கருவிகரணங்கள் வேலை செய்து கொண்டிருந்தாலும் மனம் ஒரே தாரையில் நிற்கும். வேறு ஒரு எண்ணமும் இல்லாமல் தியானமோ, ஜபமோ செய்து கொண்டு ஏகாக்ர சிந்தையுடன் செல்வதுதான் சஞ்சார சமாதி என்பதாகும். அதனால்தான் அந்தக் காலத்தில் எந்த ஒரு வாகன வசதியும் இல்லாமலே, நடந்தே யாத்திரை செல்வது என்பது முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதிலும் கிரி பிரதக்ஷிணம் மிக விசேஷமானதாகுமே ! இந்த மலையில் பலவித மூலிகைகள் இருப்பதால் அதன் காற்று உடம்பிற்கும் நல்லது. மலையில் பல சித்தர்களும் மஹான்களும் இப்பொழுதும் இருக்கிறார்கள். நம் கண்களுக்குப் புலப்படாமல் அவர்களும் கிரிவலம் வருகிறார்கள். ஆகையால் நாம் கிரி பிரதக்ஷிணம் செய்யும்போது நமக்கு இடது புறமாக ரோடு ஓரமாக நடக்க வேண்டும். அப்படிச் சென்றால் அந்த சித்தர்களுக்கு நாம் இடையூறாக இல்லாமலும் அவர்களையும் சேர்த்துச் சுற்றிய பலனும் கிடைக்கும். அவர்கள் ஆசியும் கிடைக்கும். உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியமும் ஆத்ம சாந்தியும் கிடைக்கிறது. ஆகையால் கிரி பிரதக்ஷிணம் சாமான்யமானது அல்ல —-என்றும், மற்றும் பல மகிமைகளையும்
ஸ்ரீ பகவான் சொன்னார்கள்.
கிரி பிரதக்ஷிணம் போவதில் ஆர்வமும், ஆனந்தமும் ஏற்பட்டது.
நன்றி :—-
எனது நினைவுகள் —-
ஸ்ரீ குஞ்சுசுவாமி
என்ற நூல்.
Thanks to Hariharasubramanian for the share..