
விநாயகர் அகவல் – பாகம் 22
மூன்று மண்டலத்தின் – சூர்ய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என்ற மூன்று மண்டலங்களினும் முட்டிய தூணின் – பேதித்துக்கொண்டு நேர் செங்குத்தாக செல்லும் வீணாதண்டம் போல்
நான்று ஏழு பாம்பின் – சுருட்டிக்கொண்டு தொங்கி கொண்டு இருக்கும் பாம்பு போன்று விளங்கும் குண்டலினி சக்தியின்
சரீரத்தில் உள்ள ஆறு சக்ரங்களும் மூன்று மண்டலங்களாய்ப் பிரிந்து அவை சூரிய மண்டலம், அக்னி மண்டலம், சந்திர மண்டலம் என்று விளங்குகின்றன. மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் சேர்ந்தது அக்னி மண்டலம், மணிபூரகமும் அநாஹதமும் சேர்ந்தது சூரிய மண்டலம்; விஷுத்தியும் ஆக்ஞா சக்கரமும் சேர்ந்தது சந்திர மண்டலம். இப்படியாக ஆறு ஆதாரங்களும் இரண்டு இரண்டாகப் பிணைந்து இருக்கின்றன. இந்த மூன்று மண்டலத்தினூடே ஊடுருவிச் செல்லும் தூண் போல் சுஷூம்னா நாடி மூலம் குண்டலினி சக்தி அடியில் பாம்பு போல் தொங்கி கொண்டிருக்கிறது. மூலாதாரத்தில் விளங்கிவரும் குண்டலினி, இதயத்தில் (அநாகதம் ) உள்ள சூரிய மண்டலத்தில் ஊடுருவிச் சென்று, அதற்கு மேல் உள்ள சந்திர மண்டலத்தை அடைந்து அங்கு இருந்து கொண்டு, சரீரத்தில் உள்ள 72000 நாடிகளிலும் அமிர்தத்தை வர்ஷித்துவிட்டு தன்னுடைய இடமான மூலாதார சக்கரத்துக்கு வந்து பாம்பு போல் சுருட்டி படுத்து தொங்கிக்கொண்டு யோக நித்திரையில் இருக்கிறது.
ப்ரமரந்தரத்தில் சந்திர மண்டலத்திலிருந்து வர்ஷிக்கப்படும் அமிர்தமயமான கிரணங்கள் கீழுள்ள எல்லா நாடிகளிலும் சம்பந்தப்பட்டாலும், ஹ்ருதயத்தில் உள்ள சூர்ய மண்டலத்தின் வெப்பத்தினால் காய்ந்து போய்விடுகிறது. சூரிய மண்டலம் சிவஸ்தானம். சந்திர மண்டலம் சக்தி ஸ்தானம். சிவன் வெப்பத்தால் தபிக்கச் செய்பவன். சக்தியோ தாய் போல் ரக்ஷிப்பவள். மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியை பிராணாயாம கும்பகம் மூலம், அதிதீவிர தியானத்தால் ஹ்ருதயஸ்தானத்திற்கு அழைத்துகொண்டுவந்துவிட்டால் அது சூரிய மண்டலத்தையும் தாண்டிக்கொண்டு சந்திரமண்டலம் சென்று அமிர்தமயமான கிரணங்களை கீழ் நோக்கும்படி செய்து சகலவிதமான நாடிகளிலும் பெருகுகிறது. இப்படி செய்யும் சாதகன் என்றும் இறைவனோடு கலந்து, இறவா சிரஞ்சீவியாகிறான். அவனுக்கு மரணம் என்பது இல்லை. இந்த யோக ரகசியத்தை கணபதி தனக்கு ஸ்பஷ்டமாக உபதேசம் செய்கிறான் (நாவில் உணர்த்தி) என்ற மிக ரகசியமான விஷயத்தை இந்த வரிகளில் சொல்கிறார் ஒவ்வையார்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.