குறிப்பிட்ட தேதியில் வேத சம்மேளனம் நடை பெற்றது. உபநிஷத் ஆஸ்ரமத்தில் அப்போதெல்லாம் திரு. சீனு தீக்ஷிதர், சுப்புணி சாஸ்திரிகள் தான் முக்கிய கார்யங்களை எடுத்து நடத்துவது வழக்கம். நான்கு வேத பாராயணம், அதிலே பல பிரிவுகள் (சாகை), மாலை நேரங்களில் வேத நிபுணர்களால் உபன்யாசம், சம்ஹிதை, பதம், க்ரமம், ஜடை, மாலா, ரதோ, கணம், வர்ணக்கிரமம் என்று பல விதப்பட்ட பிரிவுகளைப் பற்றி பொது ஜனங்களுக்காக கூறுவது எனபது போல உபன்யாசம் நடக்கும். சம்மேளனத்தின் முடிவில் ஹோமம், சம்பாவனை முதலியவும் உண்டு. அந்த வருடம் உபநிஷத் ஆஸ்ரமத்தில் நடைபெற்றது. பெரியவ ஸ்ட்ரிக்டா வேறு யாரையும் கூப்பிடவேண்டாம் என்று உத்தரவும் போட்டார். பிறகு அவருடைய கேம்ப் சூலூர் பேட்டைக்கு மாற்றப்பட்டது.
விபரீத காலம் விதி விளையாடியது என்று தான் சொல்ல வேண்டும். சில க்ருஹஸ்தர்கள் கூடி கடைசி நாளன்று தாம்பரத்திலிருந்து ஒரு ஸ்வாமிகளை அழைத்தார்கள். ஹோமம் முடிந்தவுடன் நாங்கள் கலசங்களுடன் பெரியவாளிடம் சென்றோம். மதியம் ஒரு மணி இருக்கும். பெரியவா ஊர் கொட்டகையிலே அமர்ந்திருந்தார். நாங்கள் அனைவரும் கை கட்டி நின்று கொண்டிருந்தோம்.
மெதுவா பெரியவா ஆரம்பித்தார், “சம்மேளனம் நன்னா நடந்திருக்குமே! யார் தலைமை தாங்கினா?”
எங்களுக்கு சுருக் என்று முள் தைத்தாற்போல இருந்தது. எங்கோ நடந்தது பெரியவாளுக்கு தெரிந்துடுத்தே. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
“எங்கள் ஏற்பாடு இல்லை. க்ருஹஸ்தாள் எல்லாம் சேர்ந்துண்டு குழப்பிட்டா” என்றோம்.
அப்போதும் பெரியவா சமாதனம் ஆனா மாதிரி தெரியலை. கடைசியாக தீர்த்தத்தை அபிஷேகம் செய்து கொண்டார். மௌனமாக இருந்து விட்டார்.
இரண்டு தினங்கள் கடந்தன. மூன்றாம் நாள் பேப்பரிலே, அந்த ஸ்வாமிகள் ஏதோ கேசுலே அரெஸ்ட் ஆகிவிட்டார் என்று வந்தது. முன் கூட்டியே இப்படி நடக்கும் என பெரியவாளுக்கு தெரிந்தும், காலம் பதில் சொல்லட்டும் என விட்டு விட்டார்.
என்னே அவருடைய தீர்க்க தரிசனம்!!!
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
காலடி சங்கர காமகோடி சங்கர
