
“ஸ ஶிவஶ்சிதிமாத்ரைக ரூபஶ்சிதிரவிக்³ரஹா
த்ரிபுரா(அ)னந்தஶக்த்யைக்யரூபிணீ ஸர்வஸாக்ஷிணீ”
— ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யம் ஞான காண்டம்
“அந்த ஶிவம் சித் எனும் ஞான விக்ரஹமானது. அந்த சித்திற்கு தனி வடிவமைப்பில்லை. அந்த சித்தே ஸாக்ஷாத் ஶ்ரீத்ரிபுரஸுந்தரி. அவளே ஸர்வ ஸாக்ஷிணி
சைதன்ய வடிவான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் வடிவமே ஸாக்ஷாத் பரசிவஸ்வரூபம். ஸுத்த ஸம்வித் ஸ்வரூபமாக ப்ரகாஶ விமர்ஶ ஸாமரஸ்ய ஸ்வரூபமானவள் ஸாக்ஷாத் ஶ்ரீலலிதேஶ்வரி.
ஸா சிதி꞉ ஸர்வத : பூர்ணா பரிச்சே²த³விவர்ஜனாத்
காலோ தே³ஶஶ்ச லோகே(அ)ஸ்மின் பரிச்சே²த³கர꞉ ஸ்ம்ருʼத꞉ .
தத்ராகாரமயோ தே³ஶ : காலஸ்து ஸ்யாத் க்ரியாமய꞉
யாம்ʼ சிதிம்ʼ ஸமுபாஶ்ரித்ய ஸ்யாதா³கார꞉ க்ரியா(அ)பி வா .
தஸ்யா꞉ பரிச்சே²த³கத்வம்ʼ அனயோ꞉ ஸ்யாத் கத²ம்ʼ வத³
— ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யம் ஞான காண்டம்
“அந்த சித்தே எங்கும் பூர்ணமாக நிரம்பியவள். அவளை துண்டாடவோ பகுக்கவோ முடியாது.
உலகில் பகுப்பவை காலமும், தேசமும். தேசம் என்பது பூமி முதலியவைகளின் வடிவம். காலம் என்பது(ஸூரியன் முதலியோரின் கதி முதலிய) செயலே.
எந்த சித்தின் துணை கொண்டு தேசமும் காலமும் செயல்படுமோ, அந்த சித்தை பகுக்க அவைகளால் எங்ஙனம் இயலும்?? க
ஒப்பிடுக : தேஶகாலாபரிச்சின்னா
ப்ரகாஶ விமர்ஶ ஸாமரஸ்ய ப்ரஹ்மத்திற்கே ஸாக்ஷாத் ஶ்ரீலலிதை என்று பெயர். இந்த ப்ரஹ்மம் ஸுத்த ஸம்வித் ஸ்வரூபமானது.
ஸம்வித் என்பது தேசகாலவஸ்துக்களுக்கு அப்பாற்பட்டது. ஞானஸ்வரூபத்தையே பூர்ணமாய் சிதானந்தகன வடிவத்தைக் கொண்டது. ப்ரகாஶ விமர்ஶங்களின் ஸாமரஸ்யத்தைக் கொண்டது.
அந்த ஸம்வித் எனும் சித் உலகமாக விரிவடைவதன் வேண்டி, தன் சைதன்ய கனத்தைக் குறுக்கிக்கொண்டு தன்னிலிருந்து ஶிவ தத்வத்தை வெளிப்படுத்துகிறது.
பொதுவாக ஸ்ரீவித்யா ஸாஸ்த்ரத்தின்படி ஶிவம் எனும் தத்வமும் சைதன்ய வடிவமே எனினும், உலகமாய் விரிவடைய வேண்டிய ஸம்வித் ஸ்வரூபத்தின் கனம் குறைந்து வெளிப்பட்ட ஸ்வரூபம் என்று கொள்ளல் வேண்டும்.
இந்த தத்வத்தையே, த்ரிபுரா ரஹஸ்ய மாஹாத்ம்ய காண்டத்தில், ஸுத்த நிர்விகல்ப ஸம்வித்தான ஶ்ரீலலிதா பரமேச்வரி, தன்னிடமிருந்து காமேச்வர ஶிவனை வெளிப்படுத்தினாள் என்று கூறப்படுகிறது.
மூல ஸம்வித்தானது ஸகல தத்வங்களையும் தாண்டியுள்ள நிர்குண ஸ்வரூபம் என்பதை “தத்வாதீதா” முதலிய நாமங்களால் தெரிந்துகொள்ளலாம்.
ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதரும் “தவசரண பங்கஜோத்பவ தத்வ ஸமஷ்ட்யாகாரே” என்பார்.
இந்த மூலஸம்வித்திற்கே “த்ரிபுரா”, “ஸுந்தரி”, “லலிதா”, “காமேச்வரி”, “ராஜராஜேச்வரி”, “காமாக்ஷி”, “புவனேச்வரி” என்றெல்லாம் நாமம்.
மூலஸம்வித்திலிருந்து வெளிப்பட்ட குறுகிய சித்தான ஶிவ தத்வத்தின் “அஹம்” எனும் பாவமே “ஶக்தி” தத்வம். இதையே ஸௌந்தர்யலஹரியில் “புரமதிது: ஆஹோ புருஷிகா” என்பார்.
அஹம் எனும் பாவத்திற்கும், அதை உடைய தத்வத்திற்கும் பேதமில்லையாகையால் ஶிவதத்வத்திற்கும், ஶக்தி தத்வத்திற்கும் ஸமன்வயமே.
ஶிவதத்வத்தின் “அஹம்” எனும் பாவமான ஶக்தி தத்வமே மற்ற தத்வ ச்ருஷ்டிகளுக்கும் லயத்திற்கும் காரணமாகையால், ஸர்வத்திற்கும் காரணமான ஸம்வித்திற்கும், ஶக்தி தத்வத்திற்கும் அபேதத்துடனே ஸாஸ்த்ரங்கள் விளங்குகின்றன.
த்ரிபுரை எனும் காமாக்ஷி லலிதா மஹேஶ்வரியானவள் ஶிவ தத்வத்தையும், ஶக்தி தத்வத்தையும் தாண்டிய ஸுத்த பரா ஸம்வித் ஸ்வரூபம். ஸகல தத்வாதீதையானவள் என்பதையே ஶ்ரீலலிதா பரமேச்வரியின் பக்தர்கள் உணர வேண்டியது.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்