Sage of Kanchi

சார்வரி வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

காஞ்சி மஹானின் நினைவைப் போற்றும் இந்த இணையதளத்தை விடாமல் படித்து வரும் பெரியவா பக்தர்கள் அனைவருக்கும் ‘சார்வரி’ வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீமத் பாகவதத்தில், உத்தவ கீதையில், யது மகாராஜன், தத்தாத்ரேய மஹா யோகியைப் பார்த்து நமஸ்காரம் பண்ணிக் கேட்கிறார். “நீங்க எங்களை மாதிரி இந்த ஸம்சார தாபத்துல தவிக்காம பேரானந்தத்துல இருக்கேள். ஒரு காட்டுத்தீயில எல்லா மிருகங்களும் அவஸ்தை படும்போது, ஒரு யானை மட்டும் தப்பிச்சுப் போய் கங்கையோட ஒரு மடுவுல, ஜலத்துகுள்ள இருந்தா எவ்வளவு ஆனந்தமா இருக்குமோ, அந்த மாதிரி நீங்க இருக்கேள்.  அது எப்படீன்னு எங்களுக்குச் சொல்லிக் கொடுங்கோ”, அப்டீன்னு கேட்கறார். அந்த தத்தாத்ரேய மஹா யோகி “எனக்கு 24 குருமார்கள். அவாகிட்டயிருந்து நான் படிப்பினைகள் தெரிஞ்சுண்டேன்”, அப்டீன்னு சொல்றார்.

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் இந்த இடத்தில் “நாம மஹாபெரியவாளை ஆச்ரயித்து, பகவத் பஜனம், ராம நாம ஜபம் பண்ணிண்டு இருந்தால், உலகில் எந்த ஆபத்து வந்தாலும், கங்கை மடுவில் யானையை போல, பயமில்லாமல் இருக்கலாம்” என்று சொல்வார். அப்படி இந்த புது வருடத்தை மஹாபெரியவா பேரைச் சொல்லிக் கொண்டு ஆனந்தமாக வரவேற்போம். தைரியமாக எதிர்கொள்வோம்.

இந்த சார்வரி வருடம் இங்கே மாலை வேளையில் பிறக்கிறது. அதனால் நாளை விடியற்காலை எழுந்து விஷுக்கணி கொண்டாடுவோம். அதில் எங்கள் க்ருஹத்தில் கூடுதலாக, ஒரு மணி நேரம், ஒவ்வொரு ஸ்வாமியின் மூர்த்தியை கையில் வைத்துகொண்டு, அந்த ஸ்வாமி பரமான ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுவோம். இந்த சிவானந்த லஹரி பொருளுரையில், அந்த வழக்கத்தைப் பற்றி விஸ்தாரமாக பேசி இருக்கிறேன். எத்தனையோ தலைமுறைகளாக நம் குடும்பங்களில் இருந்து வரும் இந்த வழக்கத்தை, நீங்களும் கூட இந்த வருடத்தில் இருந்து பண்ணலாமே என்றெண்ணி, உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை

Exit mobile version