Sage of Kanchi

இந்த ஸ்தூல சரீரம் விழணும்னா அது ஏதோ ஒருவிதமான வியாதியைப் பிடிச்சுக்கணும் – Bagawan Ramanar

Thanks to RVS for his articles on Bagawan Ramanar in FB. In every incident that are related to mahans there are always key takeaways. Here also we have few.

 

“இந்த ஸ்தூல சரீரம் விழணும்னா அது ஏதோ ஒருவிதமான வியாதியைப் பிடிச்சுக்கணும்”. இது பகவான் ஒரு முறை சொன்னது. இடதுகை முட்டியில் பகவான் சார்கோமா என்னும் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டார். சார்கோமாதான் புற்றுநோய்களிலேயே மிகவும் வலி மிகுந்தது. இதுவே ஒரு முடிவின் ஆரம்பமாக இருந்தது. செல்வாக்கான நிலையில் இருந்த வல்லுனர்களை அவர் பக்கம் இழுத்ததுதான் அபாரமானது. பகவான் இதுபோன்ற மருத்துவர்களையெல்லாம் தன்னிடம் கொண்டு வந்தது நாடகத்தின் இறுதியான ஸ்தூல சரீரத்தை விடும் காட்சியை நடித்துவிடுவதற்காகத்தான்.

டாக்டர் அனந்தநாராயண ராவ் ஒரு பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர். 1929ல் ஒரு நாள் பம்பாயில் ரயிலில் சென்றுகொண்டிருந்தார். வரும் ஸ்டேஷனில் இறங்கும் வேளை வந்தது. அப்போது அருகில் அமர்ந்திருந்த சகபயணி ஒருவர் பகவானின் புகைப்படம் ஒன்றை டாக்டரின் கையில் கொடுத்து “இவர் தென்னிந்தியாவில் இருக்கும் திருவண்ணாமலையில் வசிக்கும் புகழ்பெற்ற சந்நியாசி” என்றார். டாக்டர் ராவிற்கு முனிவர்கள் சந்நியாசிகள் மீதிருந்த பெரும் மதிப்பு மற்றும் மரியாதையினால் நன்றியுடன் அதைப் பெற்றுக்கொண்டார். 1930ம் வருஷ வாக்கில் டாக்டர் ராவ் மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுவிட்டார். பகவான் புகைப்படம் கையில் வாங்கியது எல்லாம் மறந்துவிட்டது. அப்படி மறந்துபோகும்படி பகவான் விட்டுவிடுவாரா? 1932ம் வருஷம் இந்திய சர்க்கார் தென்னிந்தியாவில் ஒரு மருத்துவ ஆய்வு செய்யும்படி டாக்டர் ராவை நியமித்தது. தென் திசைக்கு வந்தபோது அவருக்கு ரயிலில் தனக்குக் கொடுக்கப்பட்ட பகவானின் புகைப்படம் நியாபகம் வந்தது.

“நாம் ஒரு சந்நியாசியைத் தரிசிக்கப் போகிறோம்” என்று மனைவியிடம் தெரிவித்துவிட்டு திருவண்ணாமலையில் வந்திறந்தினார். டாக்டர் ராவுடன் அவரது நண்பர் டாக்டர். சிவா ராவும் வந்திருந்தார். அவரும் பகவானுக்குத் தொண்டாற்றியவர்களில் ஒருவர்.

டாக்டர் அனந்தநாராயண ராவ் முனிவர்களுடன் சந்நியாசிகளுடன் இடைவிடாமல் தொடர்பில் இருந்தார். அப்படி இருந்தாலும் 1932ல் பகவானைப் பார்த்தவுடன் அவருக்கு மனசில் ஒரு மின்னலடித்தது.
“மனிதரூபத்தில் இங்கே ஒரு தெய்வம் இருக்கிறது. வேதங்கள் வர்ணிக்கும் சத்குரு, ஜீவன்முக்தர், சித்தபுருஷர், ஞானி இவர்தான்”

தனக்கு இயன்றபோதெல்லாம் ஆஸ்ரமத்திற்கு அடிக்கடி வந்துசென்றார். தனது இரண்டாவது வரவிலேயே மஹரிஷியின் தெய்வத்தன்மையை உணர்ந்ததோடு ஆத்மவிசாரம் பற்றிய நுண்ணறிவையும் பெற்றார். பகவானின் முன்னிலையில் அமர்ந்த போதெல்லாம் பெரும் முயற்சியின்றி ஆழ்நிலை மௌனத்திற்கு இலகுவாகச் சென்றார். அவர் இதுவரை படித்த அக ஒழுங்கு மற்றும் ஆத்மார்த்த பேரின்பம் ஆகிய நிலைகளுக்கு பகவான் முன்னால் அமர்ந்த கணமே பெறும் பாக்கியம் பெற்றார். இந்த அனுபவத்தோடு ஆத்மவிசாரத்தை அனுதினமும் பயிற்சி செய்தார்.

1943ல் ஆஸ்ரமத்திற்கு எதிரே வீடு கட்டிக்கொண்டு வசிக்க முடிவுசெய்தார். அந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் கனிகள் தரும் மரங்களை வளர்த்தார். அந்த மரங்களின் முதல் ஈடாக வரும் பழங்களை பகவானுக்குப் படைத்து மகிழ்ந்தார். பகவான் அந்த பழத்தை துண்டு துண்டாக வெட்டி தனக்கு ஒரு துண்டை எடுத்துக்கொண்டு டாக்டர் ராவிடம் கொடுத்து அங்கே குழுமியிருக்கும் பக்தர்களுக்குக் கொடுக்கச் சொல்வார். மூன்று வருஷங்களாக இப்படி நடந்த நிகழ்வில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவருக்கு ஒரு துண்டம் கூட பிரசாதமாகக் கிட்டியதில்லை. அப்படி ஒரு சமயம் பிரசாதமாக எல்லாத் துண்டுகளையும் பக்தர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தட்டில் ஒன்றும் இல்லாமல் பகவான் இருக்குமிடத்திற்கு திரும்பினார். “எனக்கேன் பகவானிடமிருந்து பிரசாதம் கிடைக்கவில்லை” என்று மனதுக்குள் புழுங்கியபடியே அமர்ந்தார். உடனே….

“அனந்தநாராயண ராவ்! இங்கே வா. இத்தனை வருஷமா எல்லோருக்கும் பழம் கொடுக்கிறியே தவிர ஒனக்கு ஒரு துண்டம் கூட கிடைக்கறதில்லை” இப்படிச் சொன்ன பகவான் அவர் அருகில் இருக்கும் பஒரு பழத் துண்டத்தை எடுத்து….. “உனக்காக நானொரு பழத் துண்டம் வச்சுருக்கேன். இந்தா” என்றார்.

டாக்டர் ராவிற்கு பெரும் ஆச்சரியம்!! இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த டாக்டர் ராவ் என்னிடம் (வி. கணேசன்) சொன்னார்.

“பகவான் அவர் கையால் எனக்குக் கொடுத்தார். நான் அதை வாங்கிச் சாப்பிட்டேன். இது ஒரு ஆன்மிக அனுபவம். ஏனென்றால் பகவான் என்னை அந்த நிலையில் வைத்தார்”

தீவிர தேடுதல் வேட்கை உள்ளவரான அவர் இதிலிருந்து இரண்டு பாடங்களைக் கற்றுக்கொண்டார். முதலாவதாக ஒருவர் தேடுபவராக இருந்தால் எதையும் பற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லாமல் எல்லாவற்றையும் கொடுத்துவிடவேண்டும். இரண்டாவதாக சத்குருவின் கருணைக்காகக் காத்திருக்கவேண்டும். இந்த இரண்டு ஆன்மிகப் பாடங்களில் மூழ்கிப்போன டாக்டர் ராவ் பகவானிடம்….

பகவானின் பாதங்களைப் பிடித்துவிடும் வேலை வேண்டும் என்பதற்காக”பகவானே! உங்களுக்கு நான் பிரத்யேகத் தொண்டராக பணியாற்றவேண்டும்” என்று வேண்டினார். புனிதமான மனிதர்களின் பாதங்களைத் தொடுவதினால் ஆன்மிகத்தில் பெருமளவு உயர்வு கிடைக்கும் என்று இந்து புனித நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாக்கியம் 1948ல் டாக்டர் ராவிற்கு நிரஞ்சானந்தா ஸ்வாமி மூலம் கிடைத்தது.

“பகவானுடைய பிரத்யேக தொண்டராக பணிபுரிய சம்மதமா?”

பிரத்யேக தொண்டராகப் பகவானின் கை கால்களைப் பிடித்துவிடும் வேலை. டாக்டர் அனந்தநாராயண ராவ் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றார்.

எல்லாவற்றையும் எல்லோருக்கும் பகிர்ந்தளித்த பகவான் தனது அங்கங்கங்களைக் கூட பகிர்ந்தளித்துவிட்டார். ஒரு தொண்டரை வலது கையைப் பிடித்துவிடச் சொல்வார். இன்னொருவரை இடது கை என்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாகம். இதுபோன்ற சின்னஞ்சிறிய பகவானின் செயல்கள் கூட பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று டாக்டர். அனந்த நாராயண ராவ் நினைத்தார்.

“ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு சைகையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் அசைக்கமுடியாத உண்மை ஒன்றிருக்கும். அதுஒன்றும் அந்தக்கணமே தோன்றி மறையும் அற்ப அனுபவமல்ல”

டாக்டர் ராவிற்கு காலுக்குப் பதிலாக இடது கையைப் பிடித்துவிடும் வேலை கொடுக்கப்பட்டதில் காரணம் இல்லாமலில்லை. அந்தக் கரம்தான் கான்சரினால் பாதிக்கப்பட்டது.

“இதில் கூட பகவான் மிகவும் கருணையுள்ளம் படைத்தவர். அவரது இடதுகையை என்னிடம் கொடுத்தார். கடைசி நாள்வரை அதற்கு கட்டுப்போட்டேன்” என்றார் டாக்டர் ராவ்.

பகவான் தனது ஸ்தூல சரீரத்தை விடும் முன்பு சுவாசித்த இறுதி மூச்சின் போது அங்கே இருந்தார். நானும் அங்கே இருக்கும் தனியுரிமை பெற்றிருந்தேன். பகவானுக்கு செயற்கை சுவாசம் கொடுப்பதற்காக ஆக்ஸிஜன் வைக்க மருத்துவர்கள் செயல்பட்டிருக்கொண்டிருக்கும் போது எல்லோரையும் அறையை விட்டு வெளியே செல்லும்படி பணித்தார்கள். என்னுடைய தாத்தா, என் அப்பா பகவானின் சகோதரி என்று எல்லோரும் சென்றுவிட்டார்கள். நிர்வாண அறைக்கு வெளியே நான் நின்றுகொண்டிருந்தேன். டி.பி. ராமச்சந்திர ஐயர் என்னிடம் “ஹே… இங்கேயே இரு” என்று சொன்னார். இப்படியாக பகவானின் ஸ்தூல சரீரத்தை விட்ட போது அதிலிருந்துப் புறப்பட்ட ஜோதியைக் காணும் பாக்கியம் பெற்றேன். டாக்டர் ஆர். சுப்ரமணியம், டாக்டர் டி. என். கிருஷ்ணஸ்வாமி போன்ற அதிர்ஷ்டசாலிகளுடன் இந்த அரியக் காட்சியைக் கண்ட சிலருள் டாக்டர் அனந்தநாராயண ராவும் ஒருவர்.

#ரமண_பெரிய_புராணம்

Exit mobile version