November 7th is the Aradhana day of Swamigal. Lord Muruga sent His favorite son to Tamilnadu to spread Sanatana Dharma during Swamigal’s lifetime. His contribution is limitless and His bakthi towards Mahaperiyava is beyond words and Mahaperiyava had lot of regards for Swamigal. On this day, let us do namaskaram too Swamigal.
Article courtesy – Maalaimalar.com
சிறந்த முருக பக்தரும், ஆன்மீகவாதியுமான கிருபானந்த வாரியார் மறைந்த நாள் (நவ.7, 1993)
கிருபானந்த வாரியார் தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகனாக பிறந்தவர். செங்குந்த வீர சைவ மரபைச் சேர்ந்த இவர், தனது ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணபத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றவர். இவா தனது 19-வது வயதில் அமிர்தலட்சுமி என்பவரை திருமணம் புரிந்தார். இவர் சிறந்த முருக பக்தர்.
தனது தந்தையாரிடம் கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்த இவர், எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.
இவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். இவரது ‘ஆன்மீக மொழி’ பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.
அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மீக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட ஏறதாழ 150 நூல்கள் இயற்றியுள்ளார்.
1993 ஆம் ஆண்டு வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். பின்னர் அதே ஆண்டு லண்டனில் இருந்து திரும்பும் வழியில் விமானப் பயணத்திலேயே நவம்பர் 7-ஆம் தேதி காலமானார்.
