ஓ ! பகவான் ! ஓ ! பகவான் “தயாகரோ பகவான் ! கிருபாகரோ பகவான் ! ”
இந்தத் தொனி ஆகாசத்தைப் பிளந்தது. பெரியவா சிரமப் பரிகாரம் செய்து கொண்டு இருந்தார்கள். பஜனை கோஷ்டி பெரியவாளிடம் வந்து, நாம சங்கீர்த்தனம் செய்தது. சாண்டூர் மகாராஜா, “இவர்கள் எங்கள் ஊர் பஜனை கோஷ்டி” என்றார்.
பெரியவா, “உங்கள் ஊரில் கிராமிய பஜனை கோஷ்டியில் நிறைய முஸல்மான்கள் பஜனை செய்கிறார்கள். அவர்கள் கார்த்திக் ஸ்வாமி (முருகன்) பேரில் ரொம்பவும் ஆனந்தமாய் பஜனை செய்கிறார்கள். அவர்களை வந்து இங்கு உட்கார்ந்து கொண்டு ஒரு நாள் பஜனை செய்யச் சொல்” என்று உத்தரவு இட்டார்கள்.
அதன்படி அந்த உள்ளூர் பஜனை கோஷ்டியினர் பெரியவாளிடம் வந்து பஜனை செய்து விட்டுப் போனார்கள்.
சாண்டூர் மன்னருக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. தன் ஊரில் உள்ள ஒரு பஜனைக் குழுவில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கு கொண்டு, பஜனை பாடல்கள் பாடி வருகிறார்கள் என்ற செய்தி அவருக்கே தெரியாது. “எனக்கே தெரியாத செய்தி! எங்கோ தென்னாட்டிலிருந்து வந்த ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு அது தெரிந்திருக்கிறதே !” என்று மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டார்.
