Sage of Kanchi

நாளாம் நாளாம்….திருநாளாம்…

Beautiful poem by Smt Padma Gopal. Very creative thinking! Love it! Non-Tamil readers – this is a tamil poem – can’t be translated to retain the same level of beauty and choice of words etc. Sorry!

திதிகளெல்லாம் ஒன்றுகூடி
தம்பெருமை பேசியதாம்!
பதியிதனில் எம்இணைதான்
யாரென்று பீற்றியதாம்!

பதிமூன்று திதிகளங்கே
பொலிவுடனே நடைபோட
பாவம் மூன்று திதிமட்டும்
பரிதவித்து நின்றதாம்!

முதல்திதியாம் ப்ரதமையதோ
முகச்சோபை இழந்ததாம்!
அதைப்போன்றே அட்டமியும்
அகம்வருந்தி இருந்ததாம்!

நற்றுணையாய் ஒருவரின்றி
நவமி நலிந்திருந்ததாம்!
ஒற்றுமையாய் மற்றதிதிகள்
ஒதுக்க வெம்பியிருந்ததாம்!

இகழ்ச்சியோடு நின்ற மூன்றும்
இறையை வேண்டித் தொழுததாம்!
எமக்கு மட்டும் இந்தநிலை
ஏனென்று அழுததாம்!

கருணையோடு வந்த‌ கடவுள்
கலங்காதீர் என்றனன்!
பெருமைபடுத்தி விடுகிறேன்
பாருமெனப் பகர்ந்தனன்!

நெஞ்சமெல்லாம் நொந்திருந்த
நவமிதனை நயந்தவன்
வஞ்சமில்லா ராமனாக
வந்தததிலே உயர்த்தினன்!

தஞ்சமான அட்டமிக்குத்
தனிப்பெருமை சேர்ப்பதாய்
அஞ்சன வண்ணனதில்
ஆயர்பாடி உதித்தனன்!

தான்மட்டும் தனியாகி
தவித்து ப்ரதமை இருந்தது!
ஏன்உன்னை விடுவேன்நான்
என்றிறைவன் இரங்கினன்!

பொறுத்தவரே புவியாள்வார்
வருந்தாதே என்பதுபோல்
இருமுறையே இன்பம்சேர்க்க
இறையோனும் இசைந்தனன்!

தேய்பிறையின் ப்ரதமையதில்
தேயாத தண்ணிலவாய்
தாணுநாத சுவாமியவன்
தரையிறங்கி நின்றனன்!

ஈதொன்று போதாது
என்பதவன் திருவுளமாய்
சாதுவேடம் ஏற்றிடவும்
தோததுவே கண்டனன்!

வளர்பிறையின் ப்ரதமையதில்
வந்தாரே ஜகத்குரு!
தளர்வேது ப்ரதமைக்கினி?
தளிர்ப்பித்ததே சிவகுரு!

Exit mobile version