Sage of Kanchi

ராம ஜய ராம ஜய ராம ஜய ராம

நாளை ஸ்ரீராம நவமி. தீயவனான ராவணனை கைவிட்டு, தர்மத்தின் வடிவமான ஸ்ரீராமரை விபீஷணன் சரணடைந்தான். தன்னை வந்து அடைக்கலம் புகுந்த விபீஷணனை, ராமர் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி, இலங்கைச் செல்வத்தையும் கொடுத்தார். நாமும்
‘आपदां अपहर्तारं दातारं सर्वसंपदाम् ।
लॊकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् ॥
ஆபதா3ம் அபஹர்தாரம் தா3தாரம் ஸர்வஸம்பதா3ம் |
லோகாபி4ராமம் ஸ்ரீராமம் பூ4யோ பூ4யோ நமாம்யஹம் || என்ற ஸ்லோகத்தை சொல்லி ஸ்ரீராமரை சரணடைவோம். ராமர் நம்மையும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் காத்து, உயரிய செல்வங்களை அருள்வார்.

சூர்ய  குலத்தில் அரசனாக அவதரித்த ஸ்ரீராமர், சத்யத்தையும் தர்மத்தையும், விரதமாகவும் தனமாகவும் கொண்டு, ராம ராஜ்யத்தை நிலை நாட்டினார். நம்மிடையே துறவி வேந்தராக அவதரித்த மஹாபெரியவாளும், அதே போல சத்யத்தையும் தர்மத்தையும் கடைபிடித்து, வேத மதத்திற்கு புத்துயிர் ஊட்டினார். ஸ்ரீராமர் அவதரித்த இந்த நன்னாளில் அவரை பூஜித்து, மஹாபெரியவா காட்டிய வழியில் வேத மத தர்மங்களை பின்பற்றுவோம்.

ஸ்ரீராம அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு; Sri rama ashtothara naamaavali audio

ஸ்ரீராம நவமி அன்று வால்மீகி ராமாயணத்திலிருந்து ஸ்ரீராம ஜனன கட்டத்தை கேட்பது விசேஷம் – ஸ்ரீ ராம ஜனனம் ஒலிப்பதிவு ‘Sri Rama Jananam slokams’ from Valmiki Ramayana – text and audio in mp3 

வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டத்தில் 59வது ஸர்கமான ‘ராம ராவண பிரதம யுத்தத்தை’  கேட்டால் கோரமான வியாதிகளிலிருந்து விடுபடுவோம் என்று உமா சம்ஹிதை என்ற நூலின் கூறப்பட்டுள்ளது. விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்த ரஸமான அந்த ஸர்கத்தின் வர்ணனையை இங்கு கேட்கலாம். – இன்று போய் நாளை வா


ராம நாமத்தை மகான்கள் பல விதத்தில் ஜபித்து ஸித்தி அடைந்து இருக்கிறார்கள். ஸமர்த்த ராமதாசர் ‘ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம’ என்று பதிமூன்று கோடி ஜபித்து ராம தர்சனம் பெற்றார். தியாகராஜ ஸ்வாமிகள் ‘ராம ராம, ராம ராம ராம’ என்று 96 கோடி ஜபித்து ராம தர்சனம் பெற்றார். க்ருஷண சைதன்யர் ‘ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே | ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ||’ என்ற மஹாமந்த்ரத்தை ஜபித்து கிருஷ்ண தர்சனம் பெற்றார். ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ‘ராம ஜய ராம ஜய ராம ஜய ராம’ என்று கணக்கின்றி ஜபித்து மஹாபெரியவா அனுக்ரஹம் பெற்றார். தினம் ஒரு மணி நேரம் ‘ராம ஜய ராம ஜய ராம ஜய ராம’ என்று ஜபமாலையை கொண்டு ஜபிப்பார். பிறகு மற்ற பாராயணங்கள் செய்தது போக, எல்லா நேரத்திலும் இந்த நாமத்தையே ஜபித்து கொண்டிருப்பார். வாழ்வில் எத்தனையோ பாராயணங்கள் ஜபங்கள் செய்திருந்தாலும், இந்த ராம நாம ஜபத்தை எல்லாவற்றுக்கும் மேலாக கருதினார். ராம நாம ஜபத்தால் எல்லா தெய்வங்களும் மகிழ்ந்து அருள் புரிவார்கள் என்றும் ‘ரா’ என்பது மூலாதாரம் ‘ம’ என்பது சஹஸ்ராரம், ராம நாம ஜபமே குண்டலினி யோகம் என்றும் சொல்வார். இறுதியில் எப்போதும் இந்த ஜபமே செய்து வந்தார்.

अमॊघं दर्शनं राम न च मॊघस्तव स्तव: ।
अमॊघास्तॆ भविष्यन्ति भक्तिमन्तस्च यॆ नरा: ॥

அமோக4ம் தர்சனம் ராம ந ச மோக4ஸ்தவஸ்தவஹ |
அமோகா4ஸ்தே ப4விஷ்யந்தி ப4க்திமந்தஸ்ச யே நரா: ||

ராம தர்சனம், ராம கதா ஸ்ரவணம், ராம நாம ஜபம், வீண்போகாது. குறைகளைப் போக்கும்.

Exit mobile version