Sage of Kanchi

Important – Daily Gho Matha Samrakshanam – Maha Periyavaa’s Wish & Appeal

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Dear All, this post is a bit lengthy but worth reading million times due to the priority, status quo, and more importantly what Periyava wants to us do in this regard.

தினம் கோமாதா ம்ரக்ஷணம் – காஞ்சி மஹா பெரியவாளின் ஆசையும் வேண்டுகோளும் (தொகுப்பு – தெய்வத்தின் குரல் – வால்யூம் 7 – கோமாதா ம்ரக்ஷணம்)

GhoMatha

                                               அரசாங்கக் கடமையும் மக்கள் கடமையும்

கோஹத்தித் தடுப்புச் சட்டம் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவில் கொண்டு வர வேண்டியதே. அது அரசாங்கத்தார் பண்ண வேண்டியது. ஆனால் அதோடு முடிந்து விடாமல் மக்கள் கடமை என்றும் ஒன்று இருக்கிறது. அது கோமாதா ஒரு நாளும் ஒட்டி உலர்ந்து நிற்க விடாமல், அதற்கு வேண்டிய அளவு தீனி போட்டும், ஸுகாதாரமான கொட்டில்களில் வாழுமாறு வைத்தும் ஸம்ரக்ஷிப்பதே. பல காலமாக கோஹத்திக்கு அரசாங்கத் தரப்பில் தடுப்புச் சட்டம் போட வேண்டும் என்று பல பேர் வற்புறுத்தி, கிளர்ச்சியெல்லாங்கூடப் பண்ணி வருகிறார்களே தவிர மக்கள் தரப்பில் கோமாதா ஸம்ரக்ஷணைக்கு என்னவெல்லாம் பண்ணவேண்டுமோ அதை வற்புறுத்தி விசேஷமாக எதுவும் சொல்லவோ செய்யவோ இல்லை. மொத்தத்தில் அரசாங்கச் சட்டம் அவசியம் தான்; அதே அளவுக்கு மக்கள் உரிய முறையில் கோக்களை அவற்றின் கடைசிக் காலம் வரையில் நன்கு நடத்த வேண்டியதும் அவசியம் என்றே சொல்ல வந்தேன்.

ஒரு பக்கம் பசுவைத் தெய்வமாகக் காட்டி கோபூஜை செய்யும் மதஸ்தர்களாக நாம் இருக்கிறோம்; இன்னொரு பக்கம் மாம்ஸத்துக்காகவும், தோலுக்காகவும் ஏராளமான கறவை நின்ற கோக்களை ஹத்திக்கு அனுப்பிக் கொண்டும் இருக்கிறோம்; அல்லது அவற்றை வயிறு வாடி வதங்கி நசியுமாறு வைத்திருக்கிறோம். இந்த ‘ஹிபாக்ரிஸி’ நமக்குப் பெரிய களங்கம். தானாக உயிர் பிரிகிற வரையில் கோமாதாக்களை நல்லபடி வைத்துக் காப்பாற்றாத வரையில் நம்மை ‘ஹிந்துக்கள்’ என்று சொல்லிக் கொள்வதற்கே லாயக்கில்லை.

                               கோமாதாவுக்கு தினமும் ஆகாரம் போடுவது மிக முக்கியமானது

பசுவைத் தெய்வமாகப் பூஜை பண்ணுவது  இருக்கட்டும். அது சிலர் தான் பண்ண முடியும். ஆனால் எவரானாலும் பண்ண வேண்டிய கடமையாக ஒன்று இருக்கிறது. கோமாதாவுக்கு ஆஹாரம் போடுவதுதான் அது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்குக் கைப்பிடி அளவு புல்லாவது கொடுக்கவேண்டும்.கோ க்ராஸம்’ என்று இதை சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. ‘க்ராஸம்’ என்றால் ஒரு வாய் ஆஹாரம். ‘கோ க்ராஸம்’ என்பதை வைத்துத்தான் புல்லுக்கு இங்கிலீஷில் ‘Grass’ என்று பெயர் வந்திருக்கிறது. திருமூலர் ‘திருமந்திர’த்தில் ப்ரதி தினமும் ஜீவர்கள் செய்யவேண்டிய கடமைகளில், ஈச்வரனுக்கு ஒரு பச்சிலை; அதாவது வில்வ பத்ரமேனும் அர்ச்சிப்பது, ஒரு கைப்பிடியாவது ஆஹாரம் பிச்சை போடுவது ஆகிய இரண்டுக்கும் நடுவில் கோக்ராஸம் கொடுப்பதையும் சொல்லியிருக்கிறார். முடிவாக ஜீவர்களிடம் இனிமையாகப் பேசுவதையும் சொல்லியிருக்கிறார்.

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானே.

எப்படி தினமும் கோமாதாவுக்கு ஆகாரம் போடுவது?  இது சாத்தியமா?

கோ ஸம்ரக்ஷணம் நம்முடைய அத்யாவசியக் கடமையாதலால், இதை நடைமுறை ஸாத்யமில்லாத கார்யம் என்று தள்ளி விடாமல், சில சிரமங்கள் இருந்தாலும் அவற்றைச் சமாளித்துக் கொண்டு, கஷ்ட நஷ்டப் பட்டாவது அவச்யம் இதைச் செய்ய வேண்டும். அப்படியொன்றும் கஷ்டமும் நஷ்டமும் பெரிசாக வந்து விடாது. பால் மறுத்த பசுக்களைக் கட்டித் தீனி போட முடியவில்லை என்பதால் தானே அவற்றைக் கசாப்புக் கடைக்கு அனுப்புவது? அப்படித் தாய்த் தெய்வமும், தெய்வத் தாயுமான கோமாதா கொலைக் களத்துக்குப் போகிறது தான் பெரிய கஷ்டமும் நஷ்டமும். அது நேராமல் பார்த்துக் கொள்வதற்குச் செய்கிற எந்த முயற்சியும் கஷ்ட நஷ்டங்களில் சேராது.

1. பசுக்களை வயிறு வாடாமல் ரக்ஷிப்பதற்கு நம்மில் அத்தனை பேரும் ஏதோ ப்ரமாத த்யாகம் பண்ண வேண்டும், சிரமப்பட வேண்டும் என்று கூட இல்லை. பசுவுக்காக எவ்வளவு த்யாகம் பண்ணினாலும் தகும், சிரமப்பட்டாலும் தகும் என்பதும் வாஸ்தவம். அப்படிச் சில பேரோ, பல பேரோ புறப்பட்டால் பாராட்ட வேண்டியது தான். ஆனால் எல்லோரும் அவ்வளவு தூரம் போகாமல் ஒரு சின்ன விஷயத்தைக் கவனித்தாலே போதும், எத்தனையோ கோமாதாக்களின் வயிறு நிறைந்துவிடும். அதாவது நாம் தினமும் சாப்பிடும் கறிகாய்களில் உதவாதது என்று சீவித் தள்ளுகிற மேல் தோலியெல்லாம் கோமாதாவுக்கு ஆஹாரமாகப் போடும்படித் தக்க ஏற்பாடு செய்து விட்டாலே எத்தனையோ பசுக்களின் வயிறு ரொம்பும். தினந்தோறும் வீட்டுக்கு வீடு கறிகாய்கள் நறுக்குகிறோம். ஹாஸ்டல்களிலும் ஹோட்டல்களிலும் நூற்றுக் கணக்கானவர்கள் சாப்பிடுவதால் ஏராளமாகக் கறிகாய்கள் நறுக்கப்படுகின்றன. நறுக்கும்போது ‘வேஸ்ட்’ என்று மேல் தோலிகளை குப்பைத் தொட்டியில் கொட்டி, தோட்டிகளுக்கு அவற்றை சுத்தப்படுத்தும் வேலையை வைக்கிறோம். இதற்குப் பதில் ஒவ்வொரு வீட்டிலும், ஹாஸ்டல், ஹோட்டல் போன்ற இடங்களிலும் கறிகாய்த் தோலியைப் போட்டு, ஈ, எறும்பு வராமல் மூடி வைக்கும் படியாகத் தனியாகத் தொட்டி வைத்திருக்க வேண்டும். இவற்றை வீட்டுக்கு வீடு சேகரித்துப் பசுவின் வயிற்றுக்குக் கொண்டு சேர்ப்பதற்கென்றே தொண்டர்கள் திரள வேண்டும்.

இதிலே அப்படியென்ன கிடைத்து விடப் போகிறது என்று அலக்ஷ்யமாக நினைக்க வேண்டாம். நாம் கோடானுகோடிப் பேரில் ஒவ்வொருவரும் கறிகாய் சேர்த்துக் கொள்கிறோமாதலால், வீட்டுக்கு வீடு தோலி சேகரிப்பு என்றால் மொத்தத்தில் போர் போராகக் குவியும். ஹாஸ்டல், ஹோட்டல்களில் சேர்வதைக் கேட்கவே வேண்டாம். ஜனத்தொகையின் விகிதத்தோடு பார்த்தால் பசுவின் ‘பாபுலேஷன்’ ரொம்பக் குறைச்சலாகவே இருக்கும். அப்படிப்பட்ட பசுக்களிலும் நல்ல முறையில் பண்ணைகளிலும், ஸௌகரிய தசையிலுள்ள சொந்தக்காரர்களின் வீடுகளிலும் பராமரிப்பு பெறுகிறவற்றிற்கு நாம் எதுவும் செய்ய வேண்டுமென்பதில்லை. கசாப்புக் கடைக்கும் இறைச்சிக் கூடத்துக்கும் போகக் கூடிய ஸ்திதியில் இருக்கும் பசுக்களைக் காப்பாற்றுவது தான் இங்கே நமக்கு முதன்மையான குறிக்கோள். அதில் கணிசமான அளவுக்கு இந்தத் தோலி சேகரிப்பு நமக்கு ஸஹாயம் பண்ணும் என்பதில் ஸந்தேஹமில்லை. சிறு துளி பெருவெள்ளம். கவனக் குறைவு சிறிதும் இல்லாமல் இந்த ஸுலபமான காரியத்தைச் செய்தால் அந்த வெள்ளத்தைப் பிரத்யக்ஷமாகப் பார்க்கலாம். கோபால க்ருஷ்ணனின் அருள் வெள்ளத்தையும் பெறலாம்.

2. கறிகாய்த் தோல் மாதிரியே சாதம் வடித்த கஞ்சியும் பசுவுக்கு ஆஹாரமானதால் அதையும் சேகரித்துப் பசுக்களுக்குச் சேர்க்கலாம். ஆனால், இப்போது பெரும்பாலான வீடுகளில் குக்கர் சமையல் வழக்கம் வந்து விட்டது. அப்படியில்லாத இடங்களில் இந்தக் கைங்கர்யமும் செய்யலாம். அரிசியை ஜலம் விட்டு அலம்புகிற கழுநீர் என்கிற கழிவு நீருங் கூடப் பசுவுக்கான ஆஹாரம் தான். அதுவும் பசு வயிற்றுக்குப் போகும்படிச் செய்யலாம். செய்ய வேண்டும்.

3. வீட்டுத் தோட்டங்களில் ஒரு சின்ன திட்டில் பசுவுக்கென்றே அகத்திக் கீரைப் பயிரிடுவது என்று ஏற்பட்டு விட்டால் அதுவும் கோ வதை நின்று கோமாதா ஸம்ரக்ஷணம் நடப்பதற்குக் கணிசமான உபகாரம் செய்ததாகும். அகத்திக் கீரையைப் பசு பரம ப்ரீதியோடு சாப்பிடும்.

பகவான் வாஸுதேவனின் வயிற்றுக்கே போடுவதாக நினைத்து இப்படியெல்லாம் எந்த முறையிலேனும் நாம் ஒவ்வொருவரும் பசுக்களை அவசியம் ரக்ஷிக்க வேண்டும். அந்த உணர்ச்சி வந்து விட்டால், சிரமமே ஏற்பட்டாலும் அது சிரமமாகத் தெரியாது. மனமிருந்தால் வழியுண்டு. இந்த விஷயத்தில் நிச்சயமாக மனம் இருந்தேயாக வேண்டும். அப்போது வழியும் தானே பிறக்கும்.

4. இது எத்தனை அவச்யம் என்று, Awareness Create செய்வது என்கிறார்களே, அப்படி வலுவான ப்ரசாரத்தால் ஜன ஸமூஹத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால் போதும், இத்தகைய பெரிய ஜனத் தொகையுள்ள நம் தேசத்தில் தேவையான பணமும் திரளும், தொண்டர்களும் திரளுவார்கள் என்றே நம்புகிறேன். அங்கங்கே நாலு பேர் விடா முயற்சியுடன் புறப்பட்டு விட்டால் போதும். பொருள் பலம், ஆள் பலம் இரண்டும் கிடைத்து விடும். இதில் ஒரு விஷயம் என்னவென்றால், பணம் கொடுக்கிறவர் வேறே, சரீரத் தொண்டு செய்கிறவர் வேறே என்று அடியோடு இரண்டாகப் பிரிந்து நிற்கக் கூடாது. பணம் கொடுக்கிறவரும் கொஞ்சமாவது உடம்பால் உழைக்க வேண்டும், உடம்பால் உழைக்கிறவரும் கொஞ்சமாவது பொருளுதவி பண்ணவேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் Total Involvement – பூர்ணமான ஈடுபாடு – இருக்கும். அதோடு ஸமூஹத்திலும் மக்கள் பணம் படைத்தவர், உழைப்பாளி என்று இரண்டு ஜாதிகளாகப் பிரிந்து நிற்காமல், எல்லோரும் ஒரே போல் கோமாதாவின் குழந்தைகளாக, ஒரே குடும்பமாக, ஐக்யப்படுவார்கள்.

என் ஆசை என்னவென்றால், ஹிந்துக்களான நாமெல்லோரும் இப்படி ஒரு குடும்பமாக கோமாதா சேவையில் சேர்வதோடு, மற்றவர்களுக்கும் நல்லபடியாக ப்ரேமையுடன் எடுத்துச் சொல்லிப் பிற மதஸ்தர்களையும் இதில் ஈடுபடுத்தி நம்முடைய ஒட்டு மொத்த ஜன ஸமூஹம் முழுதுமே ஏக குடும்பமாக ஒற்றுமையோடு இப்பணியில் ஈடுபடவேண்டும் என்பதே. மதாபிமானம் என்பது ஒவ்வொரு மதஸ்தருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாமானாலும், ஜீவகாருண்யம் என்பது ஸகலருக்கும் பொதுவானதாகையால் அந்த அம்சத்தைக் கொண்டு இந்தப் பணியில் இந்த நாட்டிலுள்ள அத்தனை மதஸ்தர்களும் ஒன்று சேர்ந்து தோள் கொடுக்கவேண்டும் என்பதே என் அவா.

ஒரு பணிவான வேண்டுகோள் நாம் தினமும் பல பசுக்கள் தெருவில் பசியோடு (கடுமையான வெயில்/மழையில்) அலைந்து திரிவதைப் பார்க்கிறோம். பசி, தாகத்தால் அவை குப்பை மேட்டையும், சாக்கடையையும் கிளறி ஏதாவது ஆகாரம் கிடைக்குமா என்று ஏக்கத்தோடு பார்க்கிறது.  குப்பைகளை பிளாஸ்டிக் பையில் கட்டி வீசுவதால் அவை பிளாஸ்டிக் கவர்களை கிழித்துப் பார்க்க நேரிடுகிறது. வீபரீதமாக பிளாஸ்டிக் கவரை உண்ணவும்  நேரிடுகிறது. இது பசுவின் உயிருக்கு மிகவும் ஆபத்தானதாகும்.

நாம் பெரியவாளின் பேரில் இன்றே சபதம் ஏற்போம்.

  1. குப்பைகளை பிளாஸ்டிக் பையில் கட்டி தெருவில் வீச மாட்டோம்.
  2. தினமும் ஒரு கோமாதாவுக்கு நம்மால் முடிந்த ஆகாரம் அளித்தே தீருவோம் என்று. கோமாதா ஸம்ரக்ஷணம் செய்ய நமக்கு செலவே இல்லாமல் பெரியவா பல வழிகளை மேலே கூறி உள்ளார். மனமிருந்தால் மார்க்கமுண்டு. அதில் சிலதை நடைமுறைப்படுத்துவோம்.
  3. இந்த அதிமுக்கியமான ஸத் கைங்கர்யத்தை நாலு பேருக்கு தெரியப்படுத்துவோம். கோமாதாவைக் காப்போம்! ஜெய ஜெய ஷங்கர  ஹர ஹர ஷங்கர!தினம் கோமாதா ஸம்ரக்ஷணம் – சில சாம்பிள்

    வீடியோக்கள் – 

    https://www.youtube.com/playlist?list=PLfxgEFC7hKsM4K0PggHXBF3pn7Su3Z79a

Exit mobile version