Thanks to Sri Subramanian Jayaraman for FB share….
எனது தகப்பனார் ஜெயராம அய்யர் ரயில்வேயில் உத்தியோகம் பார்த்ததால், அநேகமாக வாரா வாரம் ஒரு கதை சொல்லுவார். அப்படி சொன்ன ஒரு நிகழ்ச்சியின் சுருக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்
பின் வரும் இந்த நிகழ்வு துறவு கொள்ள இருந்த ஒரு நடு வயது நண்பரை நம் பரமாச்சாரியார் எப்படி வழி நடத்தினார் எனபது தான்.
அன்றும் தேனம்பக்கத்தில் பொழுது விடிந்து காலை ஏழு மணி இருக்கும். பெரியவரை பார்க்க காலை நாலு மணி முதல் ஒரு அன்பரும் அவருடைய மகனும் காத்து இருந்தார்கள். சங்கரரின் சிப்பந்தி இந்த செய்தியை பெரியவரின் பார்வைக்கு கொண்டு சென்றார்.
பரப்ரஹ்மம் கிணற்றுக்கு இந்த பக்கம் எழுந்து நின்று அவர்களை வரச் சொல்லு என்று சொன்னார்கள். அப்பாவும் பையனும் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார்கள். ரெண்டு பெரும் ஆகாரம் பண்ணினீர்களா என்றார். ஆமாம் என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதார்கள். பொறுமையாக அவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்டார்கள். அதன் சாராம்சம் இது தான்..
ஹைதராபாத் இல் இருந்து வந்து இருக்கிறார்கள். சமீபத்தில் பையனின் தாயார் காலமாகி விட்டார். காரியங்களையெல்லாம் முடித்து நேரே மடத்துக்கு வந்து இருக்கிறார்கள். அப்பாவும் பையனும் மடத்தில் சேரவேண்டுமாம். பை நிறைய நகை, பணம் எல்லாம் மடத்துக்கு கொடுக்க தயாராக வைத்து இருந்தார்கள்.
ஏண்டாப்பா நீ எல்லாம் ஆண்டு அனுபவிச்சுட்டே.. இந்த பையனை சாமியாராக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தா.. நான் ஒரு வழி சொல்றேன். உன் பையன் நாராயணனை இங்கே விட்டு வெய். கொஞ்ச நாள் இருக்கட்டும். நீ கிளம்பி நான் சொல்ற இடத்துக்கு போய் வெங்கட்ராமனை பார். கார்த்தால விபரமா சொல்றேன்.
அப்பாவுக்கு ஒன்னும் புரியலை. யார் வெங்கட்ராமன்.. இரவெல்லாம் தூக்கம் வரலை.
மருநாள் பொழுது விடிந்தவுடன் கூப்பிட்டு அனுப்பினார்கள். சித்தூரில் புள்ளையார் கோயில் குருக்கள் வெங்கட்ராமன் இருக்கார். அவாத்துக்கு போ விபரம் புரியும்.
காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு வழியாக ரேணிகுண்டா வந்து சேர்ந்தார். அங்கே சித்தூரில் வெங்கட்ராமன் வீட்டில் அவருடைய ஒரே மகள் பத்மா காலையில் எழுந்ததது முதல் பரபரப்பாக இருந்தாள். அம்மா அம்மா எனக்கு கல்யாணம் என்றாள். அம்மாவுக்கு தூக்கி வாரி போட்டது. என்னடி சொல்றே.. அந்த செவுத்துலே படத்துலே இருக்காரே அந்த உம்மாச்சி தாத்தா என் கனவுல வந்ததார். அவர் எங்கிட்ட ஒன்காத்துக்கு ஒரு மாமா வருவார். அவர் என் புள்ளைய கல்யாணம் பண்ணிகிரியான்னு கேட்டா சரின்னு சொல்லணும்.
போடி கையில ஒரு பவுன் கூட கெடையாது. கல்யாணமாம். தெனமும் ஒன்னோட உம்மாச்சி தாத்தாவை தான் வேண்டிக்கறேன்.. கடவுள் கண் திறக்கட்டும் பாக்கலாம் என்றாள் அம்மா.
சாயங்காலம் நாலு மணி இருக்கும். வாசலில் நிழல் ஆடியது. நாராயணணின் அப்பா வீட்டின் உள்ளே நுழைந்தார். நான் வெங்கட்ராமன் அவர்களை பாக்கணும். கோவிலுக்கு போனேன் வீட்டில் இருப்பதாக சொன்னார். மாமி அடுக்களையில் இருந்து வாசலை பார்த்தார். யாரோ ஜோல்நா பை, சின்ன பெட்டியுடன் நிற்பது தெரிந்தது. யார் நீங்க தெரியல்லியே.. அவர் இப்பதான் கடத்தெருவுக்கு போனார். அப்படி திண்ணையில் உட்காருங்கோ. வந்துடுவார். டீ.. பத்மா வாசல்ல ஒரு மாமா உக்காந்து இருக்கார் அவருக்கு குடிக்க தீர்த்தம் கொண்டு வா நான் காப்பி கலக்கறேன் என்று உள்ளே போனா.
பத்மா சொம்பில் தண்ணி கொண்டு வந்து கொடுத்ததை வாங்கி குடித்து பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார். என்னம்மா எத்தனாவது படிக்கிறாய் என்றார். அவ்வளவுதான் தன்னுடைய குடும்ப கதையை ஒப்பித்து விட்டாள். ஏண்டி பேசறதுக்கு யாரவது கெடச்சா போறுமே விட மாட்டியே என்று செல்லமாக அம்மா மகளை கடிந்துகொண்டாள்
காபியை வாங்கி குடிக்கும்போதே வெங்கட்ராமன் உள்ளே நுழைந்தார். யார் நீங்க திண்ணைல உட்காந்து இருக்கேளே. ஏண்டி இப்படியா வந்தவாளை வாசல்லையே உட்கார வெக்கறது என்றார்.
நாராயணின் அப்பா பேச ஆரம்பித்தார். ஹைதராபாத்தில் இருந்து தேனம்பாக்கம் வரை சொல்லி முடித்தார். மஹா பெரியவா உங்களை பாக்க சொல்லி அனுப்பினார். உங்க மகளை எங்க வீட்டுக்கு மருமகளாக ஆக்கிக்க சொன்னார். அடுத்த வெள்ளிகிழமை தேனம்பக்கத்தில் என் பையனுக்கும் உங்க பெண்ணுக்கும் பெரியவா முன்னாடி கல்யாணம் என்று சொல்லும்போதே பத்மா பக்கத்தில் வந்து நின்றாள். பத்மாவை பார்த்து என் புள்ளைய கல்யாணம் பண்ணிகிறையா அப்படின்னு கேட்டார்.
அம்மா அம்மா விடியகாலைல சொப்பனத்துல உம்மாச்சி தாத்தா சொன்னாரே அவர் இவர் தானா. தடாலென்று காலில் விழுந்து நமஸ்கரித்தாள். பத்மாவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒன்றும் புரியவில்லை.
வெங்கட்ராமன் திறந்த வாய் மூடாமல் ஒன்றும் பேசத்தெரியாமல் அசந்து போய நின்றார். சமாளித்துக்கொண்டு மாமா நானோ ஏழை குருக்கள். கல்யாணம் பண்ணிகொடுக்க கூட என் கிட்ட வசதி இல்லை.
.
இத பாருங்கோ. இது அத்தனையும் சத்குருவோட உத்தரவு. உங்களுக்கோ எனக்கோ அதை மாற்றவோ மறுக்கவோ உரிமை கிடையாது. இந்தாங்கோ இந்தப்பையிலே நாராயணனோட அம்மாவோட நகை, பணம் எல்லாம் இருக்கு. ரெண்டு நாளுலே தேனம்பாக்கம் பொண்ண கூட்டிண்டு வந்து சேருங்கோ. நானும் ஏன் சொந்தங்களை கூட்டிண்டு வரேன். பிராமணர் கிளம்பிட்டார்.
சொன்ன மாதிரியே அந்த வெள்ளிகிழமையும் வந்தது. தேனம்பக்கத்தில் கிணற்றுக்கு அந்தப்பக்கம் நின்று நம் பெரியவர் தாலி ஆசிர்வதித்து கொடுக்க நாராயணன் பத்மாவின் கழுத்தில் தாலியை கட்டினான். ஸ்ரீ சரணர் கண்களில் குறும்புடன் பத்மாவை பார்த்து ஏண்டிம்மா அதுக்குள்ளே ஒனக்கு என்ன கல்யாணத்துக்கு அவசரம் என்றார்.. என்ன உம்மாச்சி தாத்தா நீங்க தானே என் சொப்பனத்திலே வந்து சொன்னீங்க.மறந்து போச்சா. ஆமாம் ஆமாம் வயசாயிடுத்தோல்லியோ மறந்து தான் போச்சு என்றார். எல்லோரும் நடப்பது கனவா நனவா என்று மயங்கித்தான் போனார்கள்.
