Site icon Sage of Kanchi

“அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?”

 

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன் in facebook

சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காக உணவு தயாரிக்கப்படும் சமையற்கட்டுக்கு,’நைவேத்தியக்கட்டு’ என்று பெயர். அநாவசியமாக யாரும் உள்ளேபோய்விடக் கூடாது. போக முடியாது. எல்லாம் பித்தளை, வெண்கலம்,ஈயம் பூசிய பாத்திரங்கள்.

கறிகாய்ப் பக்குவங்களும் நைவேத்தியம் செய்யப்படும் என்பதால்,அந்த அறையில் கறிகாய்களும் வைக்கப்பட்டிருக்கும்.

நைவேத்தியக்கட்டுத் தலைமை பொறுப்பாளர் துரைசாமி அய்யர் மிகவும் முன் கோபக்காரர்.

ஒரு நாள் அறையில் வைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு புடலங்காயைக் காணவில்லை. துரைசாமி அய்யருக்கு வந்த கோபத்தைக் காண கோடிக் கண் வேண்டும். ரௌத்ரமூர்த்தி தான்! கன்னாபின்னாவென்று
வெகு நேரம் கத்திக் கொண்டிருந்தார்.

பெரியவாளுக்குச் சமாசாரம் தெரிந்து விட்டது.

கூடவே இருக்கும் தொண்டர்களில் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட தொண்டர் பேரில் சந்தேகம். ஏனென்றால் அந்தத் தொண்டர் வீட்டில் அன்றைய தினம் தகப்பனார் சிராத்தம். அதற்காகப் புடலங்காயை எடுத்துக் கொண்டு போய்விட்டார் – என்று தெரிந்திருந்தது.

துரைசாமி அய்யரைக் கூப்பிட்டனுப்பினார்கள் பெரியவா.

இன்னும் கோபம் தணியாத முகம்.

“உனக்குத் தெரியுமோ?…பல கன்னடக்காரார்களும் தெலுங்கர்களும் ‘ஸர்ப்பசாகம்’ என்று சொல்லி புடலங்காயை உபயோகப் படுத்துவதில்லை.

(பார்வைக்கு ஸர்ப்பத்தைப் போல் நீண்டதாக கோடுகளுடன்
இருப்பதால், சிலரிடம் அப்படி ஒரு பழக்கம் -புடலங்காயை
உபயோகப்படுத்துவதில்லை.)

“கயா போகிறவர்களில் பலர் புடலங்காயைத் தியாகம் செய்து விடுகிறார்கள்.

“இன்னிக்கு சந்திரமௌளீஸ்வரர் நைவேத்தியத்துக்குப் புடலங்காய் இல்லாவிட்டால் பரவாயில்லை” என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.

மறுநாள் வேலைக்கு வந்தார் அந்தத் தொண்டர். எப்போதும் இல்லாத புதுமையாக,

“அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?” என்று அவரிடம் மிகச் சாதாரணமாகக் கேட்டார்கள்.

அவ்வளவுதான்.(கேட்டது)

“சிராத்தத்துக்குப் புடலங்காய் முக்கியம் தான்.அதைக் கேட்டு வாங்கிக்கொண்டு போயிருக்கக்கூடாதோ?’ என்று கேட்கக் கூட இல்லை.

அதுவே அந்தத் தொண்டருக்குப் பெரியவாள் கொடுத்த பெரிய தண்டனை!

Exit mobile version