Site icon Sage of Kanchi

குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோக நிவாரணம்

Saanu Puthiran a.k.a Suresh is an incredibly talented and blessed soul. His poems are not new to the blog. Amazing stuthi on Periyava!

பெரியவா சரணம்.

1993-ம் ஆண்டு நிகழ்ந்த அற்புதத் தரிசனம் இது! தில்லைக் கோமகனின் குவிந்த பாதமதில் தவழும் ஸ்ரீகுஞ்சிதபாத பிரசாதத்தை தன் சிரசில் சுமந்து மருந்தீசனாய், அண்டினோர் குறைகளைத் தீர்த்தருளும் ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சங்கரனாக, ஸ்ரீ குஞ்சித சங்கரனாக காட்சி த்ச்ந்தருளிய எம்பெருமானின் கருணையை என்னென்று பகர்வேன். அடியேனின் கனவிலே வந்து அருளுரை பகர்ந்து, இந்த திவ்யாலங்கார தரிசனத்தை நினைந்து த்யானிப்போர்க்கெல்லாம் ரோக நிவாரணம் தந்தருளும் சத்தியம் பகர்ந்து, 2013ம் வருடம் முதலாக இன்றைய பொழுதுவரையிலும் அகிலத்து மாந்தர்க்கெல்லாம் அமுதீசனின் ஸ்ரீகுஞ்சித சங்கரனின் திருவுருவப் படத்தினை தந்து, அவரை த்யானிக்கும் அனைவருக்கும் ரோக நிவாரணமும் தந்தருளி வரும் கருணாசாகரனை என்னென்று போற்றுவேன்!

சங்கரா! இப்பிறப்பில் அடியேன் தவமொன்றை இயற்றுவேனெனில் இத்திருவுருவப் படத்தினை அனைவருக்கும் தருவது மட்டுமன்றி வேறேது? எல்லாம் உங்கள் கருணையன்றோ!

‪#‎ஸ்ரீகுருதுதி‬

திருச்சிற் றம்பலத்துச்
சீராளன் பதம்மேவி
அருமருந் தாயுதவும்
குஞ்சித பாதமேந்தும்

குருமணித் தூமணியாம்
சிவபுரத்து சீர்குருவாம்
குருபரன் குணசீலன்
குஞ்சித சங்கரனை

திருவெனத் தியானித்து
மனமுருகிப் பணிவோர்க்கு
வருவினைத் தீர்ந்தோடும்!
வவ்வினையும் நகர்ந்தோடும்!

தருவரம் கைகூடும்!
தவசீலன் அருள்கிட்டும்!
இருளேதும் தீண்டாமல்
குருவருளும் ஒளிசேர்க்கும்!

இருவிழியின் கருணையிலே
மனக்கவலை மறைந்துவிடும்!
குருகருணை துணையிருக்க
வலியெல்லாம் மறைந்துவிடும்!

ஆம்! இன்றளவிலே ஆயிரமாயிரம் பக்தர்களும் இப்பயன் பெற்று அடியேனிடம் பகிர்ந்தும் வருகிறார்கள். சர்வ சத்யமான வாக்காக குஞ்சித சங்கரன் அனைவரையும் காத்தருளும் வகைதனைக் கண்டு அகம் மகிழாதார் யாருமுளரோ!

கலி தோஷமெலாம் நமை விட்டகல
வளி வாகையுற அருள் குருநிதியே
நலி வாழ்விதனை உயர் மகிழ்வுடனே
கிலி யின்றிப்பெற அருள் சங்கரனே

என தோடகமாய் தோத்தரித்து ஸ்ரீகுஞ்சித சங்கரனை போற்றி நமஸ்கரித்து ரோக நிவாரணம் பெற்று, நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் எனும் பேற்றினை அடைந்து இன்புற வாழ்வோமாக!

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

Exit mobile version