Site icon Sage of Kanchi

புரட்டாசி மாத சிறப்புகள் – Purattasi Mahathmiyam

Thanks to Sri Madambakkam Shankar for the share. Very insightful! What a beautiful glasswork by Smt Anjana.

தமிழின் ஆறாவது மாதமே புரட்டாசி மாதம் ஆகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் புரட்டாசி மாதம் என அழைக்கின்றோம்.தெய்வங்களின் வழிபாடும், முன்னோர்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் புனிதமான மாதமாக விளங்குகிறது.

*விஷ்ணுவுக்கு உகந்த மாதம்.*

காக்கும் கடவுள் பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாக இம்மாதம் அமைந்திருக்கிறது. புரட்டாசி மாதம் புனித மாதமாகவும், பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் இருப்பதனால் வைணவக் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

*புரட்டாசி அமாவாசை.*
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை மஹாளய அமாவாசை என்று குறிப்பிடுவர். மகாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் ஆரம்பித்து அமாவாசை வரை நீடிக்கின்றது. மகாளய பட்சம் மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக ஒன்று சேரக் கூடும் காலம் எனக் கருதப்படுகின்றது.

கேதார கௌரி விரதம்.
சக்திஷரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களால் அழைக்கப்படுவதுண்டு.

புதன் கிரகத்துக்குரிய மாதம்.
புரட்டாசி மாதம் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்துக்குரியதாக காணப்படுகின்றது.

*விநாயகப் பெருமானுக்குரிய விரதங்கள்.*
புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். விரதங்கள் அனுஷ்டிப்பது மூலம் விநாயகப்பெருமானின் நல் ஆசியைப் பெறலாம்.
மஹாளயபக்ஷம்.

புரட்டாசி மாத அமாவாசை புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளய பட்சம் ஆகும். புரட்டாசி அமாவாசைக்கு பதினைந்து நாட்கள் முன்பு வருவது மஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகும்.
பல தெய்வங்களுக்கு விரதங்கள் அனுஷ்டிக்கும் மாதமாகும்.

புரட்டாசி மாதமானது மகாவிஷ்ணுவுக்கு மட்டுமல்லாமல் அவருடைய சகோதரியான அம்பிகைக்கும் உகந்த மாதமாகும். சிவபெருமானுக்கும், விநாயகப் பெருமானுக்கும் இம்மாதத்தில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

*புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு வாய்ந்தது.*
சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது சிறப்பென்றாலும், அதிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது கூடுதல் சிறப்பு. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பச்சரிசி வெல்லம் கலந்து மாவு உருண்டை செய்து தீபம் ஏற்றி பெருமாளை வணங்க திருமண தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பெருமாள் திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் என்று கூறப்படுகிறது.மகாவிஷ்ணுவின் அவதாரமாக காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகர் அவதரித்தது புரட்டாசி மாதத்தில் இவ்வாறு புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுக்கு உகந்த மாதம் ஆனது. சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். மாவு உருண்டை என்பது ஏழுமலையையும் அதன் மேல் பற்ற வைக்கும் தீபம் வேங்கடவனையும் குறிக்கும்.

சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சனி பகவானின் கெடு பலன்களிலிருந்து பக்தர்களை காப்பாற்றுகிறார். இந்த நேரத்தில் சனிபகவான் தன்னுடைய தீங்கு விளைவிக்கும் சக்திகளை இழக்கிறது என்று நம்பப்படுகிறது.

திருமணம் நடைபெறுவதில் பல தடைகள் ஏற்படுகின்றன. மாப்பிள்ளைக்கு பெண் அமைவதும் பெண்ணிற்கு மாப்பிள்ளை அமைவதும் பெரும்பாடாக இருக்கிறது. தோஷங்களும் தடைகளும் நீங்கி திருமணம் நடைபெற புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் இருக்க வேண்டும்.

வர்ஷ ருது.

ஒரு வருடம் 6 ருது களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வர்ஷ ருது தனங்களையும், தானங்களையும் அளிக்கக்கூடியது. ஆறு ருதுக்களில் முக்கியமான ருது புரட்டாதி மாதத்தில் தான் வருகின்றது.

புரட்டாசி நவராத்திரி.
சமஸ்கிருதத்தில் நவ என்பது ஒன்பது என்றும், ராத்திரி என்றால் இரவு என்றும் பொருள். புராட்டசி நவராத்திரி துர்கா நவராத்திரி என்றும் நவராத்திரிகளில் மிக முக்கியமானது என்றும் கூறப்படுகின்றது.

Exit mobile version