ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 3:
ஜகமெலாம் உன் மாய்கை புகழ என்னால் ஆமோ? சிறியனால் முடிந்திடாது.
“மித்யா ஜகததிஷ்டானா” எனும் நாமத்தின்படி மித்யையான ஜகத்திற்கு அதிஷ்டானமாக விளங்குபவள் அம்பாள். ஶாக்த ஸம்ப்ரதாயத்தில் இதன் கொள்கைகள் மாறுபடும். இருந்தாலும் பொதுவான அர்த்தம் எனில் “ஸத்” எனும் பதம் காமாக்ஷி ஒருத்தியையே குறிக்கும். ஸத்மாய் என்றும் நிலைத்திருக்கும் பரம்பொருள் காமாக்ஷியே.
கண்ணாடியில் பிம்பம் ப்ரதிபலிப்பது போல, ஸம்வித்தான காமாக்ஷியின் ப்ரதிபலிப்பே ஜகத். மூலம் நீங்கினால் பிம்பம் கண்ணாடியில் நீங்கிவிடுவது போல், ஞானி ஜகத்தின் பொய்த்தன்மையை உணர்ந்து, மெய்யான லலிதா ராஜராஜேச்வரி ஸ்வரூபத்தை உணர்கிறான்.
சுருங்கச் சொன்னால் இவன் ஜீவ ஸம்வித். அவளோ பரா ஸம்வித். “ஜீவ ஸம்வித்தான” இவன் தன்னை ஸம்வித் என்று உணராமல் ஜீவபாவத்தில் விளங்குகிறான். இந்த ஜீவத்தன்மையை நீக்கி, பரா ஸம்வித்தான காமாக்ஷிக்கும் தனக்குமான அபேதத்தை உணர்வதே ஸத்யம்.
இதையே கவி இந்த வரியில் வியக்கிறார். இத்தகைய தன்மையை உடைய காமாக்ஷியின் ஸ்வரூபத்தை புகழ தன்னால் இயலாது என்கிறார்.
சொந்த உன் மைந்தனாம் எந்தனை ரக்ஷிக்க சிறிய கடன் உன்னதம்மா
“அம்மா!! உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவனுக்கும் சொந்த தாயாராக விளங்குபவள் நீ. ஶ்ரீமாதா, ஜனனி, விதாத்ரி, ப்ரஸவித்ரி, அம்பா, அயி, அம்பிகா, லலிதாம்பிகா என்று மறுபடி மறுபடி ஸஹஸ்ரநாமம் உன்னைத் தாயாராகவே கூறுகிறது.
அப்படிப்பட்ட நீ!! உன் சொந்த மைந்தனான என்ன ரக்ஷித்து முக்தியளிக்க வேண்டும் எனும் கடன் உனக்குள்ளதை மறவாமல் அருள் புரிய வேண்டும் தாயே!!”
என்று கவி காமாக்ஷி அம்மையிடம் இறைஞ்சுகிறார்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
💐🙏💐🙏💐🙏