தாம்யத – தத்த – தயத்வம்

Thanks to Sri Madambakkam Shankar for sharing this wonderful article on Mahaperiyava’s narration of a story….

நம் காஞ்சி மஹா ஸ்வாமிகளும் கதை சொல்லும் விஷயத்தில் மகா கெட்டிக்காரர். புராணங்களில் இருந்து அவர் கதையை எடுத்துச் சொல்லும் அழகே அழகு! இதோ, இந்தக் கதையைக் கேளுங்கள்…

‘ப்ருஹதாரண்யகம்’ – இந்தப் பேருக்கு அர்த்தம் ‘பெரிய காடு’ என்பதாகும். அப்படிக் காடாக விரிந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது. உபநிஷத்துக்களில் தத்வங்கள் (ஃபிலாஸஃபி) மட்டும் அப்படியே கொட்டிக்கிடப்பதில்லை; நடுநடுவே ரசமான கதைகள் வரும். இந்தக் கதைகளில் மூலமும் ஒரு பெரிய தத்வம் பிரகாசிக்கும். அப்படி ‘ப்ருஹதாரண்யக’த்தில் கொடையைப் பற்றி ஒரு கதை வருகிறது.

தேவர்கள், அஸுரர்கள், மநுஷ்யர்கள் எல்லாருமே பிரம்மாவுக்கு ஒரே மாதிரி குழந்தைகள்தாம். பரமாத்மாவுக்கு பல தினுசான லீலை வேண்டி இருக்கிறது. நல்லது, கெட்டதுகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கிறது. அதற்காக அவர் பிரம்மாவைக் கொண்டு தேவஜாதி, அஸுர ஜாதி, மநுஷ்யஜாதி முதலானவைகளை ஸ்ருஷ்டிக்கிறார். இந்த மூன்று ஜாதிக்கும் நல்லதைச் சொல்ல பிரம்மா கடமைப்பட்டிருக்கிறார்.

ஒருமுறை தேவர்கள் எல்லோரும் பிரம்மாவிடம் போய், ”எங்களுக்குச் சுருக்கமாக ஒரு உபதேசம் பண்ணுங்கள்” என்றனர்.

அதற்கு பிரம்மா, ”த” என்ற ஒரேயரு அக்ஷரத்தை மட்டும் சொல்லி, ”இதுதான் உபதேசம். இதற்கு அர்த்தம் புரியுதா?” என்று கேட்டார்.

நம்மிடத்திலே இருக்கிற தப்பு நமக்கே நன்றாகத் தெரியுமானால், யாராவது ரொம்ப ஸ¨க்ஷ்மமாக, ஸ¨சனையாக எடுத்துக் காட்டினால்கூட உடனே புரிந்துகொண்டு விடுவோம். இந்த ரீதியில் தேவர்களுக்கு, பிரம்மா ‘த’ என்று சொன்ன உடனேயே, அதற்கு இன்னதுதான் அர்த்தமாக இருக்கும் என்று புரிந்துவிட்டது. தேவர்களிடம் இருக்கிற பெரிய கோளாறு ‘இந்த்ரிய நிக்ரஹம்’ (புலனடக்கம்) இல்லாததுதான். தேவலோகம் ஆனந்த லோகமல்லவா? அங்கே ஸுகவாஸிகளாக மனம் போனபடி இருப்பது தேவர்களின் வழக்கம். ஆனபடியால், ”இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றுதான் பிரம்மா ஹின்ட் பண்ணுகிறார் (குறிப்பால் உணர்த்துகிறார்) என்று புரிந்துகொண்டார்கள்.
”புரிந்துவிட்டது. ‘தாம்யத’ என்று தாங்கள் உபதேசித்துவிட்டீர்கள்” என்று பிரம்மாவிடம் சொன்னார்கள் தேவர்கள்.

தமம், சமம் என்று இரண்டு உண்டு. இரண்டும் அடக்கத்தைக் குறிப்பது. புலனடக்கம், மனஸடக்கம் என்ற இரண்டைக் குறிப்பிட தமம், சமம் என்று ஒரே ‘அடக்க’த்திற்குள்ள இரண்டு வார்த்தைகளைச் சொல்வது. ‘தாம்யத’ என்றால் ‘தமத்தைச் செய்யுங்கள்’. அதாவது, இந்த்ரியங்களையும் மனஸையும் கட்டுப்பாடு (control) பண்ணிக்கொள்ளுங்கள்” என்று அர்த்தம். ப்ரும்மா ‘த’ என்று சொன்னது ‘தாம்யத’வுக்கு (abbreviation) (சுருக்கம்) என்று தேவர்கள் அர்த்தம் பண்ணிக்கொண்டார்கள்.

ஒரு முழு வார்த்தையைச் சொல்வதைவிட, அதில் முதல் எழுத்தை மட்டும் சொன்னால் அதற்கு ஜாஸ்தி சக்தி இருக்கிறது. சர்ச்சில்கூட ‘வி ஃபார் விக்டரி’ என்று சொல்லி, எங்கே பார்த் தாலும் அந்த ‘வி’யை மந்திரம் மாதிரிப் பரப்பினார்.

”நீங்கள் அர்த்தம் பண்ணிக் கொண்டது சரிதான்” என்று சொல்லி தேவர்களை அனுப்பினார் பிரம்மா.

மநுஷ்யர்களுக்கும் இதே மாதிரி உபதேசம் வாங்கிக்கொள்கிற ஆசை வந்தது. அவர்களும் பூர்வகாலத்தில் பிரம்மாவை நெருங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அதனால் அவரிடம் போய், ”உபதேசம் பண்ணுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்கள்.

மறுபடியும் பிரம்மா ”த” என்று அதே சப்தத்தை மட்டும் சொன்னார்.

மநுஷ்யர்களுக்கும் தங்கள் குற்றம் உள்ளுக்குள் உறுத்திக்கொண்டிருந்ததால், தங்களுக்கு
அத்யாவச்யமான உபதேசம் இன்னது என்று பளிச்சென்று புரிந்துகொண்டார்கள்.

”அர்த்தம் தெரிந்ததா?” என்று பிரம்மா கேட்டவுடன், ”தெரிந்து கொண்டோம். ‘தத்த’ என்று உபதேசம் பண்ணியிருக்கிறீர்கள்” என்றனர்.

”தத்த” என்றால் ”கொடு”, ”தானம் பண்ணு” என்று அர்த்தம். ‘தத்தம் பண்ணுவது’,

‘தத்துக் கொடுப்பது’ முதலான வர்த்தைகள் வழக்கத்தில்கூட இருக்கின்றனவே!

”ஆமாம், நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று பிரம்மா மநுஷ்ய ஜாதியிடம் சொல்லி அனுப்பிவைத்தார்.

தேவர்களும் மநுஷ்யர்களும் உபதேசம் வாங்கிக்கொண்டால் அஸுரர்கள் மட்டும் சும்மாயிருப்பார்களா? அவர்களும் பிரம்மாவிடம் வந்து உபதேசம் கேட்டார்கள். அவரும் பழையபடி அந்த ‘க்ரிப்டிக்’ (சுருக்கமான) ”த” உபதேசத்தைப் பண்ணிவிட்டுப் ”புரிந்ததா?” என்று கேட்டார்.
அஸுரர்களும் உடனே, ”புரிந்துவிட்டது. ‘தயத்வம்’ என்று உபதேசம் பண்ணிவிட்டீர்கள்” என்றனர். பிரம்மாவும், ”ஆமாம்” என்றார்.

‘தயத்வம்’ என்றால் ‘தயையோடு இருங்கள்’ என்று அர்த்தம்.

இரக்கம் இல்லாதவர்களைத் தானே அரக்கர் என்று சொல்லியி ருக்கிறது? கொஞ்சம்கூட தயா தாக்ஷிண்யம் இல்லாத குரூர ஸ்வபாவம்தான் அஸுரர்களின் இயற்கை. அதனால் ‘த’வுக்கு இப்படி அர்த்தம் பண்ணிக்கொண்டார்கள்.

இடி இடிக்கிறபோது ‘ததத’ என்கிற மாதிரி சப்தம் கேட்கும். ”தாம்யத – தத்த – தயத்வம் என்பது தான் அந்த மூன்று ‘த’.

இது, ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிற கதை.நம் சங்கர பகவத் பாதாள் இதற்கு பாஷ்யம் எழுதுகிறபோது, ”இங்கே தேவர், அஸுரர் என்று சொன்ன தெல்லாமும் மநுஷ்யர்களுக்கு வேறல்லர். மனிதர்களிலேயே எல்லா நல்ல குணங்களும் இருந்து, புலனடக்கம் இல்லாதவர்கள் தேவர்கள்; கொடுக்கிற ஸ்வபாவமே இல்லாமல் லோப குணத்தோடு இருப்பவர்கள் அசல் மநுஷ்யர்கள்; ஹிம்ஸை பண்ணிக்கொண்டு க்ரூரமாக இருக்கிற மனிதர்களே அஸுரர்கள். ஆனதால், மூன்று உபதேசங்களும் நமக்கே ஏற்பட்டவை என்றுதான் நாம் அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.Categories: Deivathin Kural

2 replies

  1. Mahaperiava has used these words Dhaamyatha, Dhattha, Dayatho in His popular and well-known song for the UN Assembly, “Maithreem Bajata”

  2. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: