ஶ்ரீபராசக்தியின் ஶாக்த மஹாபீடங்கள் 2:

பகவதி ஶ்ரீ ஹிங்குலாம்பிகா

ஜகதம்பா ஶ்ரீதாக்ஷாயணியின் ப்ரஹ்மரந்த்ரம் விழுந்த ஹிங்குலாம்பாள் சரித்ரத்தை சிந்தித்தோம்!! ஶ்ரீபரஶுராமர் பகவதியை பூஜித்த சரித்ரம் பின்வருமாறு.

க்ஷத்ரிய வம்ஶத்தினை பூண்டோடு ஒழிக்கும் ஆவேசத்தில் இருந்த ஶ்ரீபரஶுராமர், ஸிந்து ப்ரதேசத்தினை ஆண்டு வந்து ரத்னஸேனன் எனும் ராஜாவிடம் யுத்தம் செய்ய வந்தார். விஷயமறிந்த ராஜன் பரஶூராமரின் கோபத்தைக் கண்டு பயந்து, கர்ப்பவதிகளாய் இருக்கும் தனது மனைவிகளை ஶ்ரீததீசி முனிவரின் ஆச்ரமத்தில் அவரது பாதுகாப்பில் இருக்கும்படி செய்தான். அங்கே ரத்னஸேனனுக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். ததீசி மஹருஷியே அக்குழந்தைகளை வளர்த்து வந்தார்.

பரஶுராமர் பின்னர் ரத்னஸேனனை வதைத்ததும், அவ்விஷயமறிந்த ரத்னஸேனனின் மனைவிகள் உயிர் நீத்தனர். ததீசி மஹருஷியே அக்குழந்தைகளை வளர்த்து வந்தார்.

மூத்த பிள்ளை பெயர் ஜயஸேனன். தன் ஸஹோதரர்களுடன் அவன் அந்த
முனிவராச்ரமத்தில் ஸகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தான்.

பின்னர் மஹருஷி ஜயஸேனனிடம் “குழந்தாய்!! க்ஷத்ரிய வம்ஶத்தை பூண்டோடு ஒழிக்க சபதமேற்றிருக்கும் ஜாமதக்னி, உங்களையும் விட மாட்டார். அந்த பார்க்கவ ராமனிடமிருந்து உங்களைக் காக்க ஶ்ரீமஹாஶக்தியால் மட்டுமே முடியும்!! அவளே பரமாத்மன். அப்பராஶக்தி ஶ்ரீஹிங்குலா எனும் நாமத்திலே விளங்குகிறாள். அவளே மஹாசண்டி!! தூம்ராக்ஷனையும், சும்பனையும், நிசும்பனையும் ஒழித்தவள். மஹிஷவிநாசினி!! துஷ்ட ஸம்ஹாரி!! ஶிஷ்ட பரிபாலினி!! அந்த மஹாஶக்தியை சரணடையுங்கள்!! அவளது மூலமந்த்ரத்தை உபதேசிக்கிறேன்!!” என்றுரைத்து பகவதி ஶ்ரீஹிங்குலையின் மூலமந்த்ரோபதேசம் செய்தார்.

பின்னர், ஹிங்குலாம்பாள் அனுக்ரஹத்துடன் ஐந்து ஸஹோதரர்களும் தங்கள் ராஜ்யத்திற்கு அதை ஆள வந்தனர். விஷயமறிந்த பரஶுராமர், அந்த ஐந்து ஸோதரர்களை ஸம்ஹரிக்க வந்தார். கோபங்கொண்ட அக்னிபோல் ஜ்வலிக்கும் பரஶுராம மூர்த்தியைக் கண்டு பயந்து, ஐந்து ஸோதரர்களும் பகவதி ஶ்ரீஹிங்குலா பராஶக்தியை ஸ்தோத்தரித்தனர்.

ஜகதம்பிகையான ஶ்ரீபராஶக்தி உருக்கி வார்த்த ஸ்வர்ணம் போல் ஒளி பொருந்தியவளாய், அஷ்டபுஜங்களைக் கொண்டவளாய், அஷ்டாயுதங்களை ஏந்தியவளாய், மூம்மூர்த்திகளின் கிரீடத்தினால் தோன்றும் நீராஜனத்தை ஏற்றுக்கொள்ளும் ஶ்ரீபாதத்தைக் கொண்டவளாய்த் தோன்றினாள்.

தன் குழந்தைகளான ஜயஸேனன் முதலிய ஐவரை ரக்ஷிக்க அவர்களுக்கு முன் தோன்றி நின்ற ஶ்ரீஹிங்குலாம்பாளைக் கண்டு, ஶ்ரீபரஶுராமர் ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தார்!!

“ஓ!! பார்க்கவ ராம!! குழந்தாய்!! இனியும் இது என்ன கோரமான சபதம்!! இனி இதை விடு!! க்ஷத்ரிய வம்சத்தை பூண்டோடு ஒழிக்கும் உனது ஸபதத்தால் பல தீமைகளே இனி விளையும்!! ராஜாக்கள் இல்லையேல் எங்ஙனம் ராஜ்ய பாலனம் நடக்கும்!! இருபத்தோரு தலைமுறை க்ஷத்ரியர்களை வதைத்த உன் மனம் சாந்தி அடைந்ததா!! சொல்!! வீணான இந்த சபதத்தை விடு!! இனி மனம் மாறி தபஸ்விகளுக்கே உரிய ஸாத்வீக குணத்தைக் கொள்வாய்!! இதுவே ஆதிஶக்தியான என் ஆணை!!” என்று பகவதி மதுரவசனத்துடன் கூறினாள்.

பகவதியின் கனிவு மிகுந்த வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தம் மிகுந்தவரான பரஶுராமர், அனேகந்தடவை ஶ்ரீஹிங்குலேச்வரியை நமஸ்கரித்து இத்தகைய கொடுஞ்செயலை விடுவதாக அம்பிகைக்கு வாக்களித்தார்.

பிறகே, ஶ்ரீராஜராஜேச்வரியான அம்பாளின் ஶ்ரீவித்யோபாஸனையை ஶ்ரீதத்தாத்ரேயரிடம் உபதேசம் பெற்றுக்கொண்டு, ஶ்ரீபரஶுராமர் பரதேவதையின் ஸாக்ஷாத்காரத்தை அடைந்தார்.

ப்ரத்யக்ஷமாக இன்றும் அம்பாளின் இருப்பை அங்கு உணர முடியும்!! தாக்ஷாயணி அம்பாளின் ஸஹஸ்ராரம் விழுந்த ஸ்தானமானதால், யோகிகளுக்கு முக்யமான ஸ்தானம்.

பகவதி ஶ்ரீஹிங்க்லாஜ் அம்பாளை நமஸ்கரித்து ஸகல ஸௌபாக்யத்தையும் அடைவோம்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Upanyasam

Leave a Reply

%d bloggers like this: