திருக்குற்றாலத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீதிரிகூடப் பராசக்தி மஹிமை:
“சிவபெருங்கோணம் நான்கு சிற்பரை கோணம் ஐந்தாம்
நவபெருங் கோணத்துள்ளே நன்னும் இருபான் முக்கோண்
இவர் தரு வட்ட மேன் மேல் எட்டிதழ் ஈரெண்கோணம்
உவரி மூவட்ட மூன்று சதுரமும் உளதோர் பீடம்”
— திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றால புராணம்
“சிவபெருங்கோணமாம் நான்கு முக்கோணங்களும், சிற்பரையான ஶ்ரீபராசக்தியின் கோணங்களான ஐந்து பெருங்கோணங்களும் இணைய, நவகோணமாக விரிந்த ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் ஶ்ரீசக்ர வடிவாகவே திருக்குற்றால தரணிபீட காமாக்ஷி ஜ்வலிக்கிறாள்.
நவகோணங்களுக்கு மேல் எட்டிதழ்க் கமலமும், அதன் மேல் பதினாறிதழ்க் கமலமும், அதன் மேல் மூன்று வளையங்களும், அதன் மேல் மூன்றுக்கோட்டுப் பூபுரமும் ஆக ஒன்பது ஆவரணங்கள் சூழ தானாகத் தோன்றிய தரணி மஹாபீடத்தில் “ஶ்ரீபராசக்தி” எனும் நாமத்துடனே மஹாயோக பீடத்திலே ஶ்ரீலலிதாம்பிகை, ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி ஜ்வலிக்கின்றாள்.
பிரம விஷ்ணு ருத்திரர்களை கற்பந் தோறும் ஈன்றெடுக்கும் பராசக்தி வீற்றிருக்கும் தலமாதலின் திரிகூடம் என்றே இந்த க்ஷேத்ரத்திற்குப் பெயர். ஆதிசக்தியான் அம்பாளுக்கோ திரிகூடப் பராசக்தி என்றே திருநாமம்.
பராசக்தியின் மந்த்ர பீஜாக்ஷரங்கள் கர்பிதமான ஶ்ரீமேரு வடிவிலேயே அம்பாளின் ஸ்வரூபம் அமைந்துள்ளது. கல்பந்தோறும் மும்மூர்த்திகளை ஈன்றெடுக்கும் ஶ்ரீலலிதாம்பாள், திரிகூட க்ஷேத்ரத்தினில் தொட்டிலில் இட்டு மும்மூர்த்திகளைத் தாலாட்டிய “தாணுமாலயன் பூந்தொட்டில்” திருக்குற்றாலத்தின் பெருஞ்சிறப்பு.
“முகிண்முலை ஆதிசத்தி மூவரைப் பயந்ததாலும்
திகழுமூவிசேடத்தாலும் திரிகூடமென்னும் நாமம்
நிகழ்வது தவத்துக்குந்த நிமலை சந்நிதிக்கு
செகமெலாந் தொழநின்றாடுந் தாணுமலயபூந்தொட்டில்”
— திரிகூடராசப்பக் கவிராயர்
தாணுமலயனாகிய மூவரை ஈன்று தொட்டிலிலிட்டு ஆட்டிய பராசக்தி அங்கே நவகோண வாஸினியான ஶ்ரீவித்யா பரமேச்வரியாகவே விளங்குகின்றாள். பிரமவிஷ்ணுருத்திரரைப் பயந்த ஶ்ரீபராசக்தி அங்கே அம்மூவரையும் தொட்டிலில் இட்டு ஆட்டியதற்குச் சான்றாக இன்றும் திரிகூடப்பராசக்தியான ஶ்ரீமஹாமேரு ஸந்நிதியில் தாணுமாலயன் பூந்தொட்டில் ஆடிக்கொண்டிருக்கின்றது.
“வேணுவாக்விலாஸினி” எனும் நாமாவுடன் “குழல்வாய்மொழி” அம்பாள் மஹாசக்தியாக ஜ்வலிக்கின்றாள். ஶ்ரீபீடவாஸினியாக அவளே “ஶ்ரீபராசக்தியாக” பொலிகின்றாள். திரிகூடபர்வதத்தினில் “ஶ்ரீசம்பகாரண்யேச்வரி” எனும் நாமாவுடன் ஶ்ரீசெண்பகப்பூங்கோதை அம்மன் ப்ரகாசிக்கின்றாள்.
மூன்று மஹாசக்தி வடிவில் த்ரிகூடமான குற்றாலத்தில் அம்மை பொலிவது த்ரிகூடத்தின் பெருமையைக் காட்டுகிறது. மஹாசண்டிகையாக பதினெட்டு கரங்களில் பதினெட்டு ஆயுதந் தாங்கி உதும்பரனை ஸம்ஹரித்து ஸித்தவனமான செண்பக வனத்தில் ஶ்ரீசக்ர பீடத்தில் “ஶ்ரீசெண்பகா தேவி” என் செண்பகப்பூங்கோதை ஜ்வலிக்கின்றாள்.
ஸாக்ஷாத் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாக ஶ்ரீமேருவை மட்டுமே தன் ஸ்வரூபமாய்க் கொண்டு ஶ்ரீவித்யா பரமேச்வரியாக, ஶ்ரீராஜராஜேச்வரியாக “ஶ்ரீபராசக்தி” எனும் ஶ்ரீதிரிகூடப் பராசக்தி ஜ்வலிக்கின்றாள்.
இமயபருவத ராஜன் மனங்குளிர அவர் மகளாய் தோன்றி பார்வதி எனும் நாமங்கொண்ட லலிதை “குழல்வாய்மொழி” எனும் மஹாசக்தியாக ஶ்ரீமத் த்ரிகூடாசலேச்வரர் ஸஹிதமாக ப்ரகாசிக்கின்றாள்.
ஶ்ரீவித்யா பீடங்களில் ஒரு முக்யமான பீடமாக தரணி பீடமும், செண்பகா தேவி பீடம் சண்டிகா உபாஸனையின் பீடமாகவும் விளங்கி வருகின்றது. தாமிரபரணி மாஹாத்ம்யம் ஶ்ரீலலிதையின் முக்யமான பீடம் ஶ்ரீபராசக்தி பீடம் என்கிறது. பிரமாதி மூவர் கல்பாரம்பத்தில் ஶ்ரீலலிதையாகிற ஶ்ரீபராசக்தியைத் தேடிக் கண்டுபிடித்த ஸ்தானம்.
ஶ்ரீமேரு வடிவில் விளங்கும் ஶ்ரீராஜராஜேச்வரியான ஶ்ரீலலிதாம்பாளை நாமும் குற்றாலத்தில் தேடிக் கண்டு கொள்வோம்!!
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
மயிலாடுதுறை ராகவன்
Categories: Upanyasam
ரொம்ப அருமையான விளக்கம் ! அம்பாள் பிரத்யக்ஷம் !
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
OM SRI MATREY NAMAHA
Arumaiyana tagaval
🙏🙏 மிக அருமை.நன்றி தாயே காமாக்ஷி