ஶ்ரீவித்யா காமாக்ஷி த்யான விமர்சம் 2:
“பத்மாஸனே நிஷன்னா ஸா காமபீட நிவாஸினி
சதுர்புஜா த்ரிநயனா மஹாத்ரிபுரஸுந்தரி” 2
“பராசக்தியான ஶ்ரீலலிதை மஹாயோகத்தில் வீற்றிருக்கும் க்ஷேத்ரம் காஞ்சிபுரம். மஹாயோகபீடத்தில் ஶ்ரீமேருவினுடைய பிந்துவின் மத்தியில் மஹாஸிம்ஹாஸனேச்வரியாக ஶ்ரீபராம்பாள் ஜ்வலிக்கின்றாள். பொதுவாக வெளிப்பார்வைக்கு ஶ்ரீகாமாக்ஷியம்பாள் பத்மாஸனத்தில் வீற்றிருப்பது போல் தோன்றினாலும், ஶ்ரீதேவி யோகபீடத்தில் இரு கால்களையும் இறுக்கி மடித்து அமர்ந்த நிலையில் வீற்றிருக்கின்றாள்.
அம்பாளுடைய மஹாபீடம் “காமபீடம்” அல்லது “காமகோடி மஹாபீடம்” என்று பெயர் பெறும். ஸஹஸ்ரநாமா, த்ரிசதி, அஷ்டோத்ரம் மூன்றிலுமே முறையே ஶ்ரீகாமாக்ஷியாக அம்பாள் வீற்றிருக்கும் பீடத்தை “காமகோடிகா”, “காமகோடி நிலயா” மற்றும் “காமகோடி மஹாபீட பத்மஸ்தா” என்று மிகவிஷேஷமாக கூறப்பட்டுள்ளது.
பூமியில் ஶ்ரீபராசக்திக்கு அறுபத்துநான்காயிரம் மஹாபீடங்கள் உண்டென்றும், அவற்றில் சிறந்தது அறுபத்துநானூறு என்பதும், அவற்றுள்ளும் நூற்றெட்டு சிறந்தது என்பதும், அவற்றுள் அறுபத்துநான்கு சிறந்தது என்பதும், அவற்றுள்ளும் ஐம்பத்தொன்று விஷேஷம் என்பதும், அவற்றுள்ளும் பதினெட்டு மிகவுயர்வு என்பதும், அவற்றுள்ளும் நான்கு (காமகிரி, பூர்ணகிரி, ஜாலந்தரம், ஓட்யாணம்) மிகவுயர்வு என்பதும், அவற்றுள்ளும் மஹோட்யான பீடமான ஶ்ரீகாமகோடீ எனும் காமபீடமானது மிகவுயர்ந்தது என்பது தந்த்ர ஸாஸ்த்ரங்களின் துணிபு.
இத்தகைய அதிவுயர்ந்த ஸ்தானமாகிய மஹாகாமகோடி எனும் பீடத்தின் கண் நிலைத்தவள். ஶ்ரீசக்ரத்திற்கே காமகோடி எனும் பெயர் விளங்குவதால், ஶ்ரீதேவியான காமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி ஆலயத்தில் ஶ்ரீதூர்வாஸரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டதும், ஶ்ரீஆதிசங்கர பகவத்பாதாளால் புனர்நிர்மானம் செய்யப்பட்டதுமான மஹாஶ்ரீசக்ர ராஜமாம் காமகோடி எனும் பீடத்தின் அதிஷ்டாத்ரியாக ஶ்ரீராஜராஜேச்வரி காமாக்ஷி ஜ்வலிக்கின்றனள்.
சதுர்புஜங்களிலே விருப்பாம் பாசமெனும் ஆயுதத்தையும், வெறுப்பாம் அங்குசத்தையும், மனதின் வடிவான கரும்புவில்லையும், இந்த்ரியங்கள் வடிவான ஐந்து மலர்க்கணைகளையும் ஏந்தியவள். பிரமாதி மூம்மூர்த்திகளை ஈன்ற முக்கண்களைக் கொண்டவள்.
நுதற்கிழித்து விழித்த மூன்றாவது நேத்ரத்தினள். வலதுகண்ணால் சூர்யனையும், இடக்கண்ணால் சந்த்ரனையும், நெற்றிக்கண்ணால் அக்னியையும் தோற்றுவித்தவள்.
ஸாக்ஷாத் ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி. உருகும் நெஞ்சு உடையவள். ஶ்ரீயந்த்ரத்தில் நிலைகொண்டவள். தக்ஷிணாமூர்த்தி, ஆனந்தபைரவர் என இருநிலைகளில் பரமசிவனால் உபாஸிக்கப்பட்டவள். ஹயக்ரீவ மஹாவிஷ்ணுவால் நமஸ்கரிக்கப்பட்ட பாதாரவிந்தகளைக் கொண்டவள். ஶ்ரீலலிதேச்வரி. சிந்மயமான பரமூல விக்ரஹமானவள்.
“பத்மாஸனத்தில் அமர்ந்தவள். காமபீடத்தில் ஜ்வலிப்பவள். நான்கு கரத்தினள். முக்கண்ணி. மஹாத்ரிபுரஸுந்தரி”. இத்தகைய காமாக்ஷியம்மையையே சரணாகதி செய்வாம்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Upanyasam
Ram Ram,
Since this posting is part of a series, can you add link to previous posts in this series for easy navigation…
Sorry for this request, please ignore if it is a too big ask
Ram Ram,
Sure Ji
I will Add link on the posts
Kamakshi Sharanam
Thank you
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
OM SRI MATREY NAMAHA