ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அம்பாள் வைபவம் 3:

பஞ்சப்ரஹ்மாஸனத்தின் மத்யத்தில் ஶ்ரீபரதேவதை அமர்ந்து விளங்கிய வைபவத்தை சிந்தித்தோம்!! சிவசக்தி அனாதி மிதுனமான காமகாமேச்வராளின் வடிவம் இவ்வண்ணமே ப்ரஹ்மாண்டங்களுக்கு அப்பால் இங்ஙனமே விளங்குகின்றது.

அங்ஙனமே, காஞ்சிபுராலயத்திலும் ஶ்ரீதேவியான காமாக்ஷி சிவசக்தி ஸம்மேளன மஹாசக்தியாகவே காயத்ரி மண்டபத்தில் விளங்குகின்றாள். யோகீச்வராளின் நேத்ரங்களுக்கே ஶ்ரீகாமாக்ஷி பராம்பிகையின் திவ்யமங்கள ஸ்வரூபம் வித்யுத் லதையைப் போல் காக்ஷியளிக்கிறது. ஶ்ரீகாமாக்ஷியை ப்ரத்யக்ஷமாக ஒரு சில புண்யாத்மாக்கள் ஶ்ரீதேவியின் அவ்யாஜ கருணையினாலே தர்சித்துள்ளனர்.

வாங்மனோதீதையான ஶ்ரீபராசக்தி லீலா மாத்ரமாக காஞ்சிபுராலயத்தில் காயத்ரி மண்டபத்தில் ஶ்ரீசக்ர மத்யத்தில் பஞ்சப்ரஹ்மாஸனத்தில் ஜ்வலிக்கிறாள். அப்பராசக்தியின் கருணை எப்படிப்பட்டது எனில், பூர்வம் ஜகந்நாதன் எனும் ஒரு அந்தணன் மஹாபாபியாகி, பசுக்களையும் மற்ற ம்ருகங்களையும் வதைத்து, கோ மாம்ஸத்தை உண்டு க்ரூரமான தொழிலை உடையவனாய் இருந்தனன்.

அவனைக்கண்ட மற்ற எல்லோரும் இவன் மஹாபாபி என ஒதுக்கி, இவனோடு பேசுவதையும் தவிர்த்தனர். ஒரு சமயம் ஶ்ரீகாமாக்ஷியின் பக்தசிரோன்மணியான ஒரு மஹான் காசி க்ஷேத்ரத்திலே விளங்கும் ஶ்ரீவிச்வநாதரையும், ஶ்ரீஅன்னபூர்ணா விசாலாக்ஷியையும் தர்சிக்க வேண்டிய சித்தத்துடன், காஞ்சிபுரத்திலிருந்து காசிக்கு புறப்பட்டார்.

செல்லும் வழியிலே, ஜகந்நாதனது ஸ்வபாவம் தெரியாத இவர், அவனைக் கண்டு காசிக்கு செல்ல சிறிது பொருளை யாசித்தார். எள்ளளவும் உதவும் குணம் இல்லாத ஜகந்நாதனோ இவரைக் கண்டு மனமிறங்கி சிறதளவு பொருளளித்து உதவினான். அவரும் காசிக்கு சென்று ஸ்வாமி அம்பாளை தர்சித்து, மறுபடி காஞ்சி வந்து சேர்ந்தார்.

சிறிது காலம் கழித்து ஜகந்நாதன் தன் ப்ராணனை இழக்க, யமகிங்கரரங்கள் அதி க்ரூரமாக அவனை சித்ரவதை செய்துகொண்டு யமபட்டனத்திற்கு அழைத்துச்செல்லத் தொடங்கினர்.

அப்பொழுது ஶ்ரீதேவியான லலிதா பரமேச்வரியின் தூதர்கள் ஸ்வர்ண விமானத்திலே தோன்றி, யமகிங்கரர்களை மிரட்டி, ஜகந்நாதனின் ஆத்மாவை ஶ்ரீபுரம் அழைத்துச் சென்றனர்

விஷயமறிந்து யமதர்மனோ, ஆஸ்சர்யம் கொண்டு மஹாபாபியான இவனை ஶ்ரீகாமாக்ஷியின் தூதர்கள் அம்பாளின் புவனத்திற்கு அழைத்துச்சென்ற காரணம் என்ன என்பதை அறிய, ஶ்ரீபராசக்தியின் பாதாரவிந்தங்களை நினைத்துத் தவமிருந்தான்.

யமனது தவத்திற்கு மகிழ்ந்த ஶ்ரீபராம்பாளோ, தன் திவ்யமங்கள ஸ்வரூப தர்சனம் அளித்து “குழந்தாய்!! ஜகந்நாநன் க்ரூர பாபங்களை செய்திருந்த பொழுதிலும், என்னுடைய பக்தனுக்கு காசி யாத்திரைக்குச் சிறிது பொருளுதவி செய்ததால், அவன் பாபங்களை மன்னித்தோம்!! என் பக்தர்களை தர்சிப்பவர்களின் பாபமே அழிந்துவிடுகிறது என்றால், இவ்விஷயத்தில் ஜகந்நாதனின் பாபம் அழிந்ததைப் பற்றி பேச்சை இல்லை!! ஆகையால் உன் ஸந்தேஹத்தை விடுவாய்!! என்னுடைய தர்சனமும், நாம பாராயணமும் ஸகல பாபங்களையும் பொசுக்கும்!! ஸௌபாக்யத்தை அளிக்கும்!!” என்றுரைத்து ஶ்ரீகாமாக்ஷி அந்தர்தானம் ஆயினள்.

யமனும் தெளிந்து ஶ்ரீசக்ர வாஸினியான ஶ்ரீபராசக்தியை உபாஸித்து க்ஷேமத்தை அடைந்தான்.

ஶ்ரீகாமாக்ஷி நாமத்தை பாராயணம் செய்கிறவர்களுக்கு ஸகல ஸௌபாக்யமும், ஶ்ரீதேவியின் பூர்ண கடாக்ஷமும், கிடைப்பதற்கு துர்லபமான கைவல்யமும் கிடைக்குமென்றால் ஶ்ரீபராம்பாளின் உத்கர்ஷத்தை என்னவெனச் சொல்வது!!

ஶ்ரீலலிதாம்பிகையின் பாதாரவிந்தத்தையே சரணாகதி அடைவோம்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Upanyasam

Tags: , , ,

2 replies

  1. I want to know rules reg ஶ்ரீசக்ர பூஜை at home .how to do it ?

    • நமஸ்காரங்கள்

      ஶ்ரீசக்ர பூஜை ஶ்ரீவித்யோபதேசம் இல்லாமல் செயக்கூடாது. அதுவும் தகுந்த குருநாதாளின் உபதேசம் பெற்று பின் அவர் அனுமதியோடே செய்ய வேணும்!! குரூபதேசம் இல்லாமல் செய்யும் ஶ்ரீசக்ர பூஜை பலனளிக்காது.

      காமாக்ஷி சரணம்

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading