ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அம்பாள் வைபவம் 2:

பஞ்சப்ரஹ்மாஸனத்தில் ஶ்ரீபராசக்தி வீற்றிருக்கிறாள் என்பதை போன பதிவில் பார்த்தோம்!!

பஞ்சப்ரஹ்மாஸனமானது பராசக்திக்கு எங்ஙனம் ஏற்பட்டது என்பதை ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யம் எனும் மஹாக்ரந்தத்தில், ஶ்ரீமாஹாத்ம்ய காண்டத்தில், ஸுமேதஸ்(ஹரிதாயனர்) நாரத ஸம்வாதமாக விளங்குகின்றது. அந்த வைபவத்தினை ஶ்ரீலலிதாம்பாள் அனுக்ரஹத்துடன் காண்போம்!!

ப்ரஹ்மாண்ட ச்ருஷ்டியில் ஆதியில் ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்கள் மூவரும் ச்ருஷ்ட்யாதி கார்யங்களை விட்டுவிட்டு ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரியைக் குறித்து உக்ரமான கடுந்தபஸில் ஈடுபட்டனர். அனேக கோடி வருஷங்கள் இங்ஙனம் இவர்கள் தபஸில் இருந்ததால், ஶ்ரீதேவியான பராசக்தி, தானே அதுவரையில் கார்யங்களை கவனித்து வந்தாள்.

ப்ரஹ்மாதிகளுக்கு அருள்புரியும் சித்தத்துடன் ஶ்ரீபராம்பாள், அவர்கள் தபஸிற்கு மனமகிழ்ந்து, அசரீரியாக “ஓ!! குழந்தைகளே!! யாது வரம் வேண்டும்!!” கூறுவீர் என்றனள்.

ப்ரஹ்மாதிகளும் “ஓ!! ஜனனி!!  ஸகலபுவனாதீச்வரி!! வாங்மனோதீத பரப்ரஹ்மஸ்வரூபிணி!! த்ரிபுராம்ப!! ஜகதம்ப!! எங்களுக்கு ச்ருஷ்ட்யாதி க்ருத்யங்களியற்றி சலிப்பு ஏற்பட்டது!! அக்காரியங்களை விட்டோம்!! எங்களை உன்னுடன் ஐக்யப்படுத்திக்கொள்வாய்!” என்று ஶ்ரீபராம்பிகையை ப்ரார்த்தித்தனர்.

“ஓ!! த்ரிமூர்த்திகளே!! ச்ருஷ்ட்யாதி கார்யங்களை இயற்றவே உங்களை ச்ருஷ்ட்டித்தோம்!! எனில் இப்போது உங்களுக்கு லயமில்லை!! வேறு ஏதாகிலும் வரம் கேளுங்கள்!!” என்றனள் ஶ்ரீபராசக்தி.

“எனில் தாயே உன்னுடைய ஸாக்ஷாத்காரத்தை அளித்தருள்வாய்!! அங்ஙனம் நீ அருளினால் உன்னை உபாஸித்துக்கொண்டு, சலிப்பில்லாது அக்காரியங்களைச் செய்வோம்!!” இவ்வரத்தை அருள்வாய் என்றனர்.

ஶ்ரீலலிதையும் “அவ்வண்ணமே ஆகுக!! குழந்தைகாள்!! எனில் நான் ப்ரஹ்மாண்டத்திற்குள் என் பூர்ண ஸ்வரூபத்துடன் வந்தால், ப்ரஹ்மாண்டம் சிதறி விடும்!! நீங்கள் ப்ரஹ்மாண்டத்திற்கு வெளியே வாருங்கள்!! ஞானாகாசத்தின் மத்தியில் என் ஸ்வரூப தர்சனம் பெறுவீர்கள்!!” என்று அசரீரியாய் இயம்பினாள்.

த்ரிமூர்த்திகளும் ஆனந்தத்துடன் “ஆகட்டும் அம்மையே!! எங்களது பாக்கியம்!!” என்றுரைத்து பராம்பாளை நமஸ்கரித்து ப்ரஹ்மாண்ட வெளிக்குச் சென்றனர்.

அங்கே மும்மூர்த்திகள் மூவரும் அந்தர்முகமாக ஶ்ரீவித்யா மஹாயாகக்ரமம் எனும் மஹாயாக்த்தைச் செய்ய கேவலாத்மஸ்வரூபியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான காமாக்ஷி பரதேவதை ஆவிர்பவித்தாள்.

ஶ்ரீபராம்பாளின் தர்சனம் கண்ட த்ரிமூர்த்திகள் ஆனந்த பாஷ்மத்துடன் ஶ்ரீகாமேச்வரியான அம்பாளை நமஸ்கரித்தனர்.

ஶ்ரீதேவியும் “குழந்தைகாள்!! நிர்குணையான என்னை ரூபந் தாங்கி வருமாறு மஹாயாகக்ரமத்தைச் செய்தீர்கள்!! ஆதிசக்தியான நானும் வந்தேன்!! நான் அமர்வதற்கான ஆஸனம் எங்கே!!” என்று கேட்டனள்.

ப்ரஹ்மா ரத்ன மயமான ஒரு ஸிம்ஹாஸனத்தைச் செய்ய, அது ஶ்ரீஅம்பாளின் நகநுனி பட்டக்ஷணத்தில் பொடிப்பொடியானது. மறுபடியும் ப்ரஹ்மா ரத்னஸிம்ஹாஸனத்தை உண்டாக்க, அதுவும் ஶ்ரீதேவியின் பாதநகநுனியில் சிதறியது.

மும்மூர்த்திகள் கலங்கினர். மந்தஹாஸ வதனியான ஶ்ரீகாமாக்ஷி ஸதாசிவனை வருமாறு உத்தரவிட்டாள். பஞ்சப்ரஹ்மங்களில் ஐந்தாவதான ஸதாசிவமூர்த்தியும் ஶ்ரீகாமாக்ஷியை பணிந்து ப்ரார்த்திக்க, ஶ்ரீலலிதையும் “குழந்தாய்!! எனக்கு ஒரு ஆஸனத்தை கல்பிப்பாய்!!” என உத்தரவிட்டாள்.

ஸதாசிவனும் பராம்பாளை உபாஸித்து ஶ்ரீலலிதா பரமேச்வரிக்கு மஹாத்புதமான ஆஸனத்தை உண்டாக்கினார். கோடிக்கணக்கான ப்ரஹ்மாண்டங்களில் விளங்கும் கோடிக்கணக்கான ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ர, ஈச்வரர்களை ஸமஷ்டியாகச் செய்து, ஶ்ரீலலிதை அமரும் ஆஸனத்தின் நான்கு கால்களாகவும், தன்னைப் போல் விளங்கும் கோடி ஸதாசிவர்களை ஸமஷ்டியாக்கி ஆஸனத்தின் மேற்பலகையாகவும் செய்து, அதன் மீது ஹம்ஸதூளிகையாலான மெத்தையையும் செய்தார்.

பின்னர் ஐந்து ப்ரஹ்மங்களும் தங்களை பாகமாய்க் கொண்ட ஆஸனத்தை ஏற்குமாறு ஶ்ரீகாமாக்ஷியை ப்ரார்த்திக்க, ஶ்ரீமஹாத்ரிபுராம்பாள் மனமகிழ்ந்து ஆஸனத்தை ஏற்றுக்கொண்டனள்.

பின்னர் தனது வலது பாகத்திலிருந்து சிவத்தை வெளிப்படுத்தி, தன்னைப்போன்ற புருஷவடிவான ஶ்ரீமஹாகாமேச்வரரின் இடது மடியை பீடமாய்க்கொண்டு, அவர் மடிமீது அகண்ட ஸச்சிதாநந்த சிவசக்தயைக்ய ரூபிணியாக விளங்கி வருகின்றனள்.

ஸம்ஹாரகாலத்தில் மீள பஞ்சப்ரஹ்மசக்திகளையும் தனக்குள் சேர்த்துக்கொண்டு, பஞ்சப்ரேதாஸனத்தில் மஹாகாமேசர் ஸஹித காமேச்வரியாக விளங்குவாள்.

இப்படி பஞ்சப்ரஹ்மங்களும் ஶ்ரீலலிதையின் த்யானபரராக அம்பாளை த்யானித்துக்கொண்டு ஶ்ரீகாமாக்ஷியின் ஆஸனத்தின் பலகையாகவும், கால்களாகவும் விளங்கி வருகின்றனர்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

ஶ்ரீமாத்ரே நம:

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Upanyasam

Tags: , , , ,

6 replies

  1. Blessings.. Raghavan..

  2. ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!!!

  3. அருமை!

  4. மிக்க நன்றி அண்ணா 🙏
    காமாக்ஷி

Leave a Reply

%d