Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 2 – RVS


2. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
==========================================
-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ்.

ஸ்ரீ மஹாஸ்வாமிகள் என்னுடைய பெயரை மீண்டும் சரியாகக் கேட்பதற்காக தலையை லேசாகச் சாய்க்கிறார். இரண்டு மீட்டர்கள் தூரத்தில் நான் அவருக்கு நேராக பவ்யமாக நிற்கிறேன். அவரது கண்கள் என்னைத் துளைக்கிறது. அவரது பார்வை என்னுடைய இருதயத்தின் அடியாழத்திற்குள் புகுந்தது.

“டிமிட்ரியன், டிமிட்ரியன்” என்று நிறுத்தி நிதானமாகச் சொன்னார் எங்கள் குழுவின் தலைவர். சில கணங்களுக்குப் பிறகு அவர் தனது நினைவில் தேக்கி வைத்த பெயர்களை ஒருமுறை வேகமாகச் சரி பார்த்துவிட்டு தலையை இப்படியும் அப்படியும் இல்லையென்று ஆட்டிவிட்டு மீண்டும் என்னை உட்காரும்படி சைகை செய்தார். திரும்பி நடக்கும்போது அவரது பார்வை என்னை முதுகு வழியாகத் துளைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தாவாறே நான் என்னுடைய இடத்திற்குச் சென்றேன். எங்கள் குழுவின் பின்னால் சென்று நான் அமர்ந்திருந்தாலும் அவரது பார்வைக்கு நேரே இருந்தேன். நான் உட்கார்ந்த பின்னரே அவர் அடுத்த பக்தரிடம் பேசச் சென்றார்.

எங்கள் குழுவில் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொருவரும் எழுந்து நின்று அவரது பெயர், மனைவியின் பெயர் மற்றும் தன்னைப் பற்றிய சிறு குறிப்புடன் செய்திகள் சொல்வார்கள். அவர்கள் பிராந்திய மொழியான தெலுங்கில் பேசினார்கள். அறிமுகச் சுற்று முடிந்தது. என்னுடைய மெட்ராஸ் நண்பர்கள் மடத்துடன் நெடுங்காலமாகத் தொடர்பில் இருந்தாலும் அவர்களும் தங்களது பெயர்களை திரும்பவும் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.
எங்கள் இடங்களில் அமர்ந்து அமைதியாகக் காத்திருக்கிறோம். ஸ்ரீ மஹாஸ்வாமி பெரும் சிந்தனையில் இருக்கிறார். அவருக்கு அவசரம் எதுவுமில்லை. சிறிது நேரத்துக்குப் பின்னர் தெலுங்கில் எங்கள் குழுவினருடன் பேச ஆரம்பித்தார். அவர்களது பேச்சு மிகவும் விஸ்தாரமாக நீண்டுகொண்டிருந்தது. அவருக்கு நேரெதிரே இரண்டரை மீட்டர் தொலைவில் அமர்ந்திருந்த நான் இந்த நேரத்தை எனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவரைக் கூர்ந்து கவனிக்கலானேன்.
நாங்கள் சிறிது அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் அவர் அமர்ந்திருக்கிறார். அவரது தலைக்கு முக்காடிட்டிருக்கும் காவித் துணியின் வெளிவரம்புகள்/ஓரங்கள் பின்னாலிருக்கும் வாசலும் அதற்குள்ளிருக்கும் அறையின் இருளையும் மீறி வெள்ளிக் கம்பிபோலப் பிரகாசிக்கிறது. ஸ்ரீ மஹாஸ்வாமிகள் நிமிர்ந்து சம்மணமிட்டிருப்பது கம்பீரமாக இருந்தாலும் இடையிடையே அவருடன் அளவளாவிக்கொண்டிருப்பவர்களை அது மிரட்டும்படியாக இல்லை. அவர்கள் தாராளமாகப் பேசுவதை ஊக்குவிக்கும்படி மிகவும் சகஜமாக இருக்கிறார். நான் புச்சரெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது என்னுடைய பிரியத்திற்கும் மரியாதைக்குமுரிய உயிரியல் பேராசிரியர் போன்று தோராயமான தோற்ற ஒற்றுமையில் இருக்கிறார்.

பெரும்பாலான இந்தியர்களைப் போலில்லாமல் அவரது தோல் பொன் போல மினுக்கிறது. அவரது காவியாடையும் அந்த நிறத்தை உச்சரிப்பது போல ஒளிர்கிறது. அவரது முகபாவங்கள் குறைவானதாக இருந்தாலும் சம்பாஷணைகளில் அவரது மொத்த சரீரமுமே பேசுவது தெரிகிறது. கை அசைவுகளிலும் அதனோடு சேர்ந்து அபிநயிக்கும் விரல்களினால் அவர் பேசும் வார்த்தைகளை அடிக்கோடிடுகிறார். குறிப்பாக அவர் கேள்விகள் கேட்கும்போதோ அல்லது தான் சொன்ன கருத்தை அழுத்தம்திருத்தமாகச் சொல்லும் போதோ இதுபோன்ற சில சைகளைக் காட்டி உரையாடலை உயிர்ப்புடனும் புரியும்படியாக இருக்கச் செய்கிறார்.

கேள்வி கேட்பவரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து உள்வாங்கிக் கொள்கிறார். எப்போதாவது சிரிக்கிறார். பக்தர்கள் பேசும் வாசகத்தை, குறிப்பாக யாராவது பிரார்த்தனை பண்ணிக்கொள்ளும் போது, அதை அடிக்கடி திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டு தீர்மானமாகச் சிந்திந்துவிட்டு பிறகே பதிலளிக்கிறார். அவ்வப்போது எங்களுக்கு மேலேயும் எங்களைச் சுற்றியும் பார்த்துக்கொள்கிறார்.

திடீரென்று சில குட்டிப் பசங்கள் இடதுபுறம் அவரது தண்டமிருக்கும் பக்கம் ஓடி வருகிறார்கள். அதை அவர்கள் சாய்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் பேசுவதை நிறுத்திவிட்டு தண்டத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார். அவரது விரல்கள் சர்வசாதாரணமாக ஒரு அனிச்சை செயல் போல அதைப் பற்றி தன் பக்கம் இழுத்துக்கொள்வதைக் கவனித்தேன். பின்னர் அந்தச் சிறுவர்களை மிரட்டுவது போல கண்களை உருட்டிச் சைகை செய்கிறார். அவர்கள் வேறு பக்கம் ஓடுகிறார்கள்.
இதைப் பார்த்தவுடன் மூடன் ஒருவனால் இம்சைப்படுத்தப்பட்ட இளம் துறவியின் கதை எனக்கு ஞாபகம் வந்தது. இந்தியக் கதை தான். மடையனால் துன்புறுத்தப்பட்ட அந்த இளம் துறவி தனது குருவிடம் தனக்கு நேர்ந்தவைகளைச் சொல்லி அங்கலாய்த்தவுடன் எதிர்பாராத விதமாக குரு அவரைத் திட்டுகிறார்.

“உன்னை ஏன் நீ தற்காத்துக் கொள்ளவில்லை?”

“குருவே! நீங்கள்தானே எல்லா உயிர்களிடத்திலும் ஜீவகாருண்யம் காட்ட வேண்டும் என்று சொன்னீர்கள்?”

“அது உண்மைதான்! ஆனால் உன்னைக் காத்துக்கொள்வதற்காகவாவது சீற்றம் வந்தது போல நடிக்கவேண்டாமா?” என்று கேட்டார் அந்த குரு.

ஸ்ரீ மஹாஸ்வாமி என்னுடைய குழு அங்கத்தினர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவரது விசாரிப்புகளின் போதும் அங்க அசைவுகளிலும் பேசும் தோரணையிலும் கம்பீரம் தொணிக்கிறது. ஒரு ராஜா பிரஜைகளிடம் குறை கேட்பது போல் இருக்கிறது. அறுபது வருஷங்களாக இந்திய துணைக்கண்டம் முழுவதும் மேலும் கீழுமாக சென்று எத்துணை இது போல பார்த்திருப்பார்? அவரது பரந்துவிரிந்த அனுபவமே இந்த பராம்பரியத்தின் நீட்சி அல்லவா?

ஒருவர் அவரது கண்களின் ஒளியைக் கவனிக்காவிட்டால் இது போன்ற அவரது வழக்கமான விசாரிப்புக் கேள்விகளில் மூழ்கலாம். ஆனால் நான் அந்தக் கண்களின் ஒளியை பிரமித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சக்திகளின் ஊற்றுகளாக இருந்த அக்கண்கள் இரு வேறு திசைகளில் ஓடுவதைப் போலிருந்தது. அது வெளியே எல்லாவற்றையும் துளைத்து ஊடுருவிப் பாய்ந்து, எல்லாவற்றையும் பார்த்து, கிரகித்து, எல்லாவற்றையும் புரிந்துகொண்டு அந்த சக்தியின் மூலமான ஸ்ரீ மஹாஸ்வாமியின் இருதயத்துக்குள் – பார்ப்பவர்களின் இதயங்களிலிருந்து வேண்டியதை எடுத்துக்கொண்டு- சென்றுவிடுகிறது. நாம் விரும்பினால் அந்தக் கண்கள் நம்முடைய முழு இருதயத்தையும் வாத்சல்யத்துடன் அணைத்துக்கொள்கின்றன. இந்த இருதிசை மின்சார மாயாஜாலத்தினைப் புரிந்துகொள்வதற்கு நமக்கு முழுமையான திடபக்தி தேவைப்படுகிறது. ஆனால் அதில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அவர் நம்மை அதற்கு ஏற்றுக்கொள்ளவேண்டும். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு முன்னால் இருந்த பக்தர் வரை ஸ்ரீ மஹாஸ்வாமி வந்துவிட்டார்.
பின்னால் ஏதோ சலசலப்பு கேட்கவே திரும்பிப் பார்த்தேன். அந்தத் தொழிற்சாலையின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கூட்டம் கூட்டமாக தூரத்தில் பெஞ்ச்சின் மீதும் இன்னும் சிலர் ஏணிகளில் கூட ஏறி நின்று எங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீ மஹாஸ்வாமியின் காலடியில் இப்படி நாங்கள் சூழ்ந்திருப்பது வழக்கமான ஒன்றல்ல. ஒரு அந்நிய தேசத்தவனுக்கு இப்படி ஒரு தரிசன வாய்ப்பு என்பதை அறிந்த அவர்கள் அதைப் பார்க்க அது யார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் சலசலத்து முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஸ்ரீ மஹாஸ்வாமி என் முன்னால் இருந்த பக்தருக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டார்கள். இப்போது அவர் இரண்டு காரியங்களில் ஒன்றைச் செய்யலாம். என்னைப் பார்க்கலாம். அல்லது அவரது இடது புறத்தில் இருக்கும் என்னுடைய மெட்ராஸ் நண்பர்களிடம் பேசலாம். இவ்விரண்டில் ஏதாவது ஒன்று நிகழலாம் என்று காத்திருக்கிறேன். இதில் ஒரு வாய்ப்பு வருகிறது. அவர் நெற்றியை முன்னால் கவிழ்க்கிறார். சிரசை மறைத்திருக்கும் அந்தத் துணி லேசாக விலகுகிறது. அவரது கேசத்தைப் பார்த்து நான் வியக்கிறேன். வகிடு எடுத்தாற்போல நடுவிலிருந்து பின்னுக்கு இரண்டு இன்ச் அகலம் ஆறு இன்ச் நீளத்தில் நரைக் கேசம் ஓடுகிறது. இப்படிக் கொத்தாகச் சென்ற கேசத்தை நெற்றிப் பகுதியின் இருபக்கங்களிலிருந்தும் மயிரிழைகள் சேர்த்துப் பின்னால் கட்டப்பட்டிருக்கிறது. இதைப் பார்ப்பவர்களுக்கு அவர் சிரசின் மீது திரிசூலம் அணிந்திருப்பது போல தெரிகிறது.

ஸ்ரீ மஹாஸ்வாமி தனது தலையைத் தூக்கி மெட்ராஸிலிருந்து வந்த என்னுடைய நண்பர்களில் மூத்தவரான டாக்டர். டி.எம்.பி. மஹாதேவனிடம் தமிழில் என்னைக் காட்டிப் பேசுகிறார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் நான் எழுந்து நிற்கிறேன்.

என்னுடைய மெட்ராஸ் ஸ்நேகிதர் என்னிடம் ஆங்கிலத்தில் சொல்கிறார்.

”ஸ்ரீ மஹாஸ்வாமி நீங்கள் இந்தியாவிற்கு எப்போ வந்தேள்னு கேட்கறார்”

இந்த நாட்டில் கொஞ்சம் பழக்கமானதும் கேட்கப்படும் முதல் அறிமுக சம்பிரதாயக் கேள்வி.



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. புஸ்தகம் முழுவதும் தமிழில் படிபதற்கு.லிங்க் அனுப்பவும் தயவு செய்தூ

  2. Dear sir, Please let me know how to read the full tamil text, every episode is ending as a thriller story, could not resist my interest. Please notify.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading