எனக்குத்தானே அவரைப் பார்க்கணும்னு இருக்கு?

Good to see Sri Varagooran mama typing after a long gap. I have read this incident and not sure if I have shared this before. Great incident – key takeaway is how Periyava was keen in honoring the sampradhaya. His position as a peetathipathi didn’t matter at this point.

Periyava Sharanam

கட்டுரையாளர்——ரா.கணபதி

அபாரமான சாஸ்திரப் புலமை பெற்ற மஹாவித்வான் என்று ஒருவரைப் பற்றி ஸ்ரீசரணர் கேள்விப் பட்டிருந்தார். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்றபடி பண்டித திலகமான ஸ்ரீசரணர் அவரை சந்திக்க ஆர்வமாயிருந்தார்.

ஆனால் அந்தக் கற்றார் இந்தக் கற்றாரைக் காமுறவில்லை. காரணம் அவர் வீர வைஷ்ணவர், வீர சூர வைஷ்ணவர் என்றே சொல்லுமளவுக்குச் சென்றவர். ஸித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் சைவக் கோலத்தையும் மேற்கொண்ட ஒரு ஏகதண்ட ஸன்னியாஸியைப் பார்ப்பதே தோஷம் என்று கருதியவர்.

அவருடைய ஊருக்கே பெரியவாள் சென்றிருந்தார். அப்போதும் ஊரே திரண்டு வந்து கண்ட பெரியவாளைக் காண அவர் வராமலே இருந்தார். பேதமறியா மன இசைவே திரண்டு வந்த திருவடிவமான பெரியவாளோ அந்தப் பெரியவர் பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார்.

ஊர் முழுதும் பெரியவாள் பெருமை பேசுவதை வைணவப்பெரியார் கேட்டார். அது அவரை எவ்வளவு தூரம் தொட்டதோ? ஆனால் பெரியவாளிடம் வந்து போகும் பல மஹாவித்வான்கள் அவரது வித்வத் பெருமையைச் சொல்லக் கேட்டபோது அப்பெரியாரும் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளாமலிருக்க முடியவில்லை.அதுவே தருணமென்று பெரியவாள் ஸத்வகுணரான ஒரு வித்வான் மூலம் அவருக்கு அழைப்பு விடுத்தார். வித்வான் வைணவர் வீடு சென்று மரியாதை முறைப்படி பெரியவாளின் அழைப்பைத் தெரிவித்தார்.இவ்வளவு தூரம் பண்டிதர் பாமரர் புகழும் அந்தப் பெரியவரை தாமும்தான் சென்று பார்த்துவைப்போமே என்று வைணவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

“கூப்டு அனுப்பிச்சிருக்கார். மாட்டேன்னு சொல்லப்படாதுதான். ஆனாலும் எனக்குச் செல ப்ரதிக்ஞைகள் இருக்கு. அதை மீறுகிறத்துக்கில்லை. அது ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் ஸம்மதப்படாம இருக்கலாம். அதுதான் யோஜனையா இருக்கு.” என்றார் அவர்.

அந்தப் பிரதிக்ஞைகள் என்னவென்று ஸ்ரீமடத்து வித்வான் கேட்டார்.

வைஷ்ணவர் மூன்று ப்ரதிக்ஞைகள்—அல்லது நிபந்தனைகள்—-கூறினார். ஒன்று—பெரியவாளை அவர் நமஸ்கரிப்பதற்கில்லை. இரண்டு—-பெரியவாள் ப்ரஸாதம் கொடுத்தால் ஏற்பதற்கில்லை. மூன்று—வித்வத் ஸம்பாவனை என்று சால்வை போர்த்துவது போல் ஏதேனும் பெரியவாள் செய்தாலும் அதையுங்கூட அங்கீகரிப்பதற்கில்லை.

இப்படிக் கடும் நிபந்தனை போடுபவரை எதற்காக வர்வேற்க வேண்டும் என்று நமது வித்வானுக்கு—அவர் ஸத்வகுணிதான் எனினுங்கூட——தோன்றிவிட்டது.

மரியாதையாகவே அங்கிருந்து விடை கொண்டு ஸன்னிதானம் சென்று, “ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படலை. அவர் ரொம்ப நிர்தாக்ஷண்யமா கண்டிஷன் போடறார்” என்றார்.

“அப்படியா! ஸ்வாரஸ்யமாத்தானே இருக்கு! நல்ல சேதின்னா கொண்டு வந்திருக்கேள்!” என்றார் ஸ்ரீசரணாள்.

வித்வானுக்குப் புரியவில்லை. எந்த வித்வத்திற்கும் புரிபடாத ஸூக்ஷ்ம நோக்கில் பேசுபவரல்லவா பெரியவாள்?

“எப்படி நல்ல சேதின்னு புரியலையே?” என்றார் வித்வான்.

“கண்டிஷன் போடறார்னு நீங்க சொன்னதுலேந்தே அவர் முடுஞ்ச முடிவா ‘வரவே மாட்டேன்’னு சொல்லலை. கண்டிஷன் எதுக்கோ உட்பட்டா வரேன்—னு சொல்றார்—னுதானே ஆறது? அந்த மட்டுக்கும் நல்ல சேதிதானே?”—பெரியவாள் இன்னகை பூத்து “என்ன கண்டிஷன்?” என்றார்.

‘சொல்றத்துக்கே மனஸ் இடம் குடுக்கல்லை’ என்று கூறி, வித்வான் வீர வைஷ்ணவப் பெரியாரின் மூன்று நிபந்தனைகளை சிரமப்பட்டுத் தெரிவித்தார்.

பெரியவாளோ ஸகஜமாக, “அவர் இஷ்டப்படியே இருந்துட்டுப் போகட்டுமே! எனக்குத்தானே அவரைப் பார்க்கணும்னு இருக்கு? அவருக்கு இயலாதப்ப அவர் கண்டிஷன் போட்டதிலே என்ன தப்பு? எனக்கு நெஜமாவே அவர் ஒரு வித்வத் ஸ்ரேஷ்டர், அவர் கிட்ட புதுசா ஏதோ கொஞ்சமாவது க்ரஹிச்சுக்கப் பார்க்கலாம்னு இருந்தா கண்டிஷனை நான் பொருட்படுத்தாம ஏத்துக்கத்தானே வேணும்?” என்று நியாயம் கேட்டார் ஸத்யமூர்த்தி!.

அநுபூதி கண்ட மஹாபுருஷனுக்கு யாரைப் பார்த்து என்ன ஆக வேண்டும் என்று நாம் நினைப்போம். ஆனால் அவரோ நரவேடம் பூண்டு, ஆதரிச நிலைகளை நமக்குக் காட்டுவதில் வித்யையில் இருக்க வேண்டிய ஆர்வம், அதன் பொருட்டாகக் காட்ட வேண்டிய விநயம் இவற்றில் நமக்குப் பாடம் கொடுக்கவே, தாம் ஸர்வக்ஞராக இருந்த போதிலும் வேறொரு வித்வானிடமிருந்து கொஞ்சமாவது க்ரஹித்துக்கொள்ள இயலுமா என்று பார்ப்பதற்காக அவர் விதிக்கும் கடும்நிபந்தனைகளுக்கு உடம்பட்டுக் காட்டினார்.

வித்தையார்வம், விநயம் ஆகியவற்றின் எல்லை கண்ட ஸ்ரீசரணர் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் தம் இருப்பிடத்திற்கு அழைக்காமல் தாமே அங்கு சென்றிருக்கக் கூடியவர்தாம்! ஆனால் விபூதி—ருத்ராக்ஷதாரியான ஓர் ஏகதண்டியை வீட்டினுள் அனுமதிக்க அவருக்கு மனமில்லமலிருக்கலாம் என்றே போகாதிருந்திருப்பார்
வித்வான் ப்ரதிக்ஞா—பங்கமில்லாமலே தம்மிடம் வரலாம் என்று ஸ்ரீசரணர் செய்தியனுப்பினார்.

அவரும் பெருமிதத்துடன் வந்தார்.

பெரியவாள் அழகிய ஸம்ஸ்கிருதத்தில், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷைகளைக் கலந்து, அவரை கௌரவமாக வரவேற்று அவருக்கென இடப்பட்டிருந்த மணையில் அமரச் சொன்னார். அதுவே அவரது கடினத்தில் சிறிது நெகிழ்வை ஏற்படுத்தியதென்றாலும், நமஸ்காரம் செய்யாமலேதான் அமர்ந்தார்.

ஸ்ரீபாஷ்யம் (‘ப்ரஹ்ம ஸூத்ர’த்திற்கு ஸ்ரீ ராமாநுஜரின் பாஷ்யம்) பற்றியே முக்யமாகப் பெரியவாள் அவரிடம் கேட்கலானார். ‘கேட்கலானார்’ என்பது போகப் போக அந்தப் பெரியார் கேட்க இந்தப் பெரியவாள் சொல்வதாகவே உருமாறிற்று! அவரிடம் இவர் கொஞ்சமாவது க்ரஹித்துக் கொள்ள இடமிருந்ததோ என்னவோ, இவரிடமிருந்து அவர் நிறையவே க்ரஹித்துக் கொண்டார் என்பதை அந்த அறிஞர் கேட்டுக்கொண்ட ‘பா’வமும் அவரது முகமலர்ச்சியுமே காட்டியது.

பண்பு மிக்க ஸ்ரீசரணர் அவரை ஊக்கி ஊக்கி நிறையக் கூறவும் வைத்தார். ஓர் அறிவு மலையிடம் பேசுகிறோம் என்று புரிந்து கொண்ட வைஷ்ணவரும் உத்ஸாஹத்துடன் தமது பாண்டித்தியத்தைக் கொட்டித் தீர்த்தார்.

அவர்கள் ஸித்தாந்தத்திற்கு அத்வைதம் எப்படி மாறுபடுகிறது என்று உயர்த்திக் காட்டாமலே பெரியவாள் ஸ்ரீசங்கர பாஷ்யத்தில் இப்படி இப்படி என்றும் அங்கங்கே சொல்ல, அந்த அறிஞர் அவற்றிலும் ஆழ்பொருள் இருப்பதை ஒப்பி மகிழாமலிருக்க முடியவில்லை.

ஆக நெடுநேரம் சம்பாஷணை நடந்து இனிக்க முடிந்தது.

இரு வித்வான்கள் அறிவைப் பரிமாறிக் கொள்ளும் இனிமைதான்! நம் விஷயமான இதய இனிமை இல்லை!

அதுவும் வருகிறது இனி!

சிரம பாராட்டாது அந்தப் பெரியவர் வந்து நெடுநேரம் தம்மை வித்வத் கடலாட்டியதில் தமது மகிழ்ச்சியையும்—நன்றியையுமே—தெரிவித்து அவருக்குப் பெரியவாள் விடை கொடுத்தார்.

அவரோ தம்மைத் ‘தாஸன்’ என்று சொல்லிக் கொள்ளுமளவுக்குத் தழைந்து,” பெரியவாளுக்குத் தெரியாத சாஸ்த்ர ஞானம் தாஸனுக்கு இல்லை. ஆன தாஸனுக்குத் தெரியாத கருணை பெரியவாளூக்கு இருந்துதான் கூப்டு அனுப்பி அநுக்ரஹிச்சிருக்க”—என்று சொல்லி, தண்டகாரமாக நமஸ்கரிக்க முற்பட்டார்.

‘கருணை’, ‘அனுக்ரஹம்’ என்ற சொற்கள் வந்து விட்டதோ இல்லையோ? இதயமும் வந்து விட்டது!

நமஸ்கரிக்க முற்பட்டவரை, “வேண்டாம்!ப்ரதிக்ஞா பங்கமாயிடும்” என்று பெரியவாள் தடுத்தார்.

ஆனால் அவரோ, ‘ப்ரதிக்ஞையெல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டுப் பன்ணினதுதானே? ஸன்னிதானத்துல அதுக்கு ப்ரஸக்தியில்லே [அதைப் பொருத்துவதற்கில்லை]” என்பதாக தெய்வங்களின் மட்டத்தில் ஸ்ரீசரணாளைக் கூறி நமஸ்காரம் செய்தே தீர்த்தார்!

தெய்வமாகவே பொலிந்துகொண்டு ஸ்ரீசரணர் அதை ஏற்றார்.

“மந்த்ராக்ஷதை அனுக்ரஹிக்கணும்” என்றும் வைஷ்ணவர் தாமாகக் கேட்டுப் பிரஸாதம் பெற்றார். அதாவது, இரண்டாவது நிபந்தனையையும் அவரே தகர்த்துக் கொண்டார்.

“ என் ஆசைக்காக மூணாவது ப்ரதிக்ஞையையும் விடலாம்னு தோணினா, ஒரு மஹாவித்வான் வந்து மடத்துல அவருக்கு ஸம்பாவனை பண்ணலே—ங்கற கொறை எனக்கு இல்லாம இருக்கும்” என்றார் ஸ்ரீசரணர்.

“பெரியவா எது பன்ணினாலும் பாக்யமா ஏத்துக்கறேன்” என்று ஸ்ரீவைஷ்ணவர் கூற, பெரியவாள் மிக உயர்ந்த சால்வை தருவித்து ஸ்ரீமடத்து வித்வானைக் கொண்டு அதை அவருக்குப் போர்த்தினார்



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. அறிவுக்கடல் , ஞானக்கடல் இவைகளை கடந்து கருணை கடலாகவும் நமக்கெல்லாம் ஒரு வழி காட்டியாக அருள் பொழியும் அந்த தெய்வத்தை வணங்குகிறேன்

  2. Jaya jaya Sankara Hara Hara Sankara !

    L.Srinivasan
    95660 79862

Leave a Reply

%d bloggers like this: