
Thanks to Kannan / Yogitha Jaishankar for FB share. I do not recall seeing this photo before. The lady in the photo not related to the incident below (obviously).
கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் பெரியவா சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடித்து, தீர்த்தப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். கூட்டம் அபரிதமாக இருந்தது. பெண்கள் வரிசையில் சிறு வயதிலிருந்தே பெரியவாளின் பக்தையான ராஜம் என்ற பெண்மணி நின்று கொண்டிருந்தார்.
மகானின் திருக்கரங்களால் தீர்த்த பிரசாதம் பெற்ற பெண்கள், முகத்தில் ஆனந்தம் பொங்க நகர்ந்து கொண்டிருந்தனர். ராஜத்தின் முன்னால் நின்று கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு தர்ம சங்கடம் ராஜத்துக்கு!
காலையில் குளித்து முடித்து, பின்னிக் கொள்ளாமல் அப்படியே முடிந்து கொண்டு வந்திருந்தார் ராஜம். தலைமுடியை ஒன்றாக எடுத்து உச்சந்தலையில் போட்ட முடிச்சு பெரியவாளின் அருகே செல்லும் போது அவிழ்ந்து விட்டது. அதாவது தலைவிரி கோலமாக இருந்தது. தலையை முடிந்து கொண்டால், உடனே கழுவ வேண்டும். வரிசையை விட்டு சென்று தலையை முடிந்து கொண்டு வரலாமென்றால் அது முடியாத காரியமாக இருந்தது. பெண்கள் வரிசை மிக நீண்டதாக இருந்தது.
பெரியவா பார்வையில் இருந்து விலகித் தான் இருந்தார் ராஜம். ’ஆனது ஆகட்டும்’ என தலைமுடியை இரு கைகளாலும் எடுத்து அப்படியே முடிந்து கொண்டார். இருந்தாலும் தலை முடி பட்ட கையால் தீர்த்ததை எப்படி ஏற்பது என்ற சஞ்சலமும் இருந்தது.
இதோ ராஜத்தின் முறையும் வந்தது. தீர்த்தப் பிரசாதம் வேண்டி கைகளை நீட்டிக் கொண்டிருந்தாலும் நம் கை அவ்வளவு சுத்தமாக இல்லையே பெரியவாளின் திருச் சந்நிதியில் அபசாரம் செய்கிறோமே என்ற தவிப்பு மனதைப் பிசைந்தது. மனதை ஒருவாறு சமாதானப் படுத்தி கையை நீட்டிக் கொண்டிருந்தார் ராஜம்.
ஒரு புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்த அந்தப் பரப்பிரம்மம் , ஒரு உத்தரணி தீர்த்ததை ராஜத்தின் வலக் கையில் விட்டு, “இதைச் சாப்பிடாதே… கீழே விட்டுடு” என்றதே பார்க்கணும்! கண்களில் நீர் குபுக்கென்று எட்டிப் பார்க்க அந்த தீர்த்ததைக் கீழே விட்டு வலது கையால் இடது உள்ளங்கையையும் நன்றாகத் துடைத்துச் சுத்தப்படுத்திக் கொண்டார்.
“இப்ப ஒன் கை சுத்தமாயிடுத்து. ஜலம் வாங்கிக்கோ” என்ற படி ராஜத்தின் கைகளில் இன்னொரு முறை தீர்த்தம் விட்டார் பெரியவா. ‘மகா பெரியவா சரணம்….மகா பெரியவா சரணம்’ என்று அவரது திருநாமத்தை உச்சரித்தபடியே, அந்தத் தீர்த்தத்தை வாங்கி அருந்தி, தன் தலையிலும் பக்தி சிரத்தையுடன் தெளித்துக் கொண்டார் ராஜம்.
மகாபெரியவாளை ‘கலியுக தெய்வம்’, ‘கண் கண்ட தெய்வம்’, கருணை கடல் என்றெல்லாம் சொல்லுகிறோம். எல்லாமே சத்தியமான வார்த்தைகள்.
Categories: Uncategorized
Leave a Reply