வேலை வணங்குவது எமக்கு வேலை


இன்று கந்தஷஷ்டி உற்சவத்தின் முதல் நாள். இந்த ஆறு நாட்களும் முருகனை வழிபட்டு வரங்களை பெறுவோம். சூர சம்ஹாரம் செய்த ஸுப்ரமண்ய ஸ்வாமியின் கையில் உள்ள வேலை வழிபாட்டால் பகைவர்கள் ஒழிவார்கள். மஹாபெரியவா, பஞ்சாயதன பூஜையில் ஒரு வேலையும் சேர்த்துக் கொண்டு, ஷண்மத வழிபாடாக பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நாமும் அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பின் மூலம் வேலின் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்வோம். இந்த வகுப்பை பல முறை பாராயணம் செய்து, வேலை வழிபட்டு, நம் தெய்வ மதத்திற்கு ஏற்பட்டுள்ள பகைகளைக் கடிந்து, நம்மைக் காக்க, முருகப் பெருமானை வேண்டுவோம். -> அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு – விரிவான பொருளுரை

ஆசார்யாள் ஸுப்ரமண்ய புஜங்கத்தில் வேலின் மஹிமையை ம்ருகா: பக்ஷிண: என்ற ஸ்லோகத்தில் விவரித்துள்ளார்கள். அதன் பொருளை இங்கே காணலாம் ->ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகம் – வேலின் மஹிமை



Categories: Upanyasam

Tags: ,

3 replies

  1. Muruga Saranam
    Vetrivel Muruganuku
    Arokara

  2. நமது வைதீக மதத்திற்கு ஆதாரம் ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிதான். வைதீக மதத்தின் அடிப்படை வேள்விகள். அவற்றிற்கு அதிபதி இந்த்ரன். உலக நியதிகள் சரியாக நடக்க வேள்விகள் அவசியம். அதை நடத்தும் வேதியரும் அவசியம்.வேள்விகள் சரியாக நடக்காமல் தடுத்து, உலக நியதியையே கெடுத்து துன்பம் தருபவர் அசுரர்கள். இந்த அசுரர்களை அழித்து , வேள்வியையும் வேதியர்களையும் காப்பதற்கென்றே தோன்றியவர் ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி. அதனால் தான் வேதம் “ஸுப்ரஹ்மண்யோம், ஸுப்ரஹ்மண்யோம், ஸுப்ரஹ்மண்யோம்” என்று மூன்றுமுறை முழங்குகிறது! இப்படி வேறு எந்த தெய்வத்தையும் மூன்றுமுறை வேதம் துதிக்கவில்லை!

    ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் வைதீக ரக்ஷண மஹிமையை சுருக்கமாக திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பாடியிருக்கிறார்.
    ” ………………………… ஒருமுகம்
    மந்திரவிதியின் மரபுளி வாழாஅ
    அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ”
    இதற்குத் தகுந்தபடி, இருகைகள் கேடயத்தையும் வேலாயுதத்தையும் தாங்கி நிற்கின்றன—
    ” …………………… இருகை
    ஐயிரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப”.

    இப்படி ஸுப்ரஹ்மண்யர் வேள்வியை ரக்ஷித்துக் கொடுக்க , அவரே வேதியர்களின் செல்வம் ஆகிறார்:
    “அந்தணர் வெறுக்கை”.
    இப்படி நக்கீரர் சுருக்கமாகச் சொன்னதை முழுதும் உணர்ந்து விரிவாகப் பாடியவர் அருணகிரிநாதர்.

    வேறு எந்தத் தெய்வத்தின் எந்த ஆயுதமும் சூராதி அவுணர்களை அழிக்காது என்பதால் அவர்களை அழிக்க வேலுடன் வந்தார் ஸுப்ரஹ்மண்யர்:

    “வெங்காள கண்டர் கைச் சூலமும் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும்
    விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்கல்லி வெல்லா எனக் கருதியே
    சங்க்ராம நீ ஜயித் தருளெனத் தேவரும் சதுர்முகனும் நின்றிரப்பச்
    சயிலமொடு சூரன் உடல் ஒரு நொடியில் உருவியே
    தனி ஆண்மை கொண்ட நெடுவேல்”

    இப்படி வந்து அசுரர் கூட்டத்தை மாய்த்து, வேள்வியைக் காத்து, வேள்விக்கதிபதியான இந்த்ரனுக்கு வாழ்வளித்தார்.

    “இந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண இகல்வேல் வினோதன்” —
    இந்த்ராணியின் மாங்கல்யத்தைக் காப்பாற்றினார்- அதாவது இந்த்ரனைக் காப்பற்றினார் என்றால் வேள்விகளைக் காப்பாற்றினார், அவற்றைத் தடுக்கும் அசுரர்களை அழித்தார்.

    இதற்காகவே அவர் உதித்தார்:
    ” வானவர் பொருட்டும் மகவானது பொருட்டும்
    மலர் வாவியில் உதித்த முக மாயக்காரனும்”

    இவரே யாகத்தைக் காப்பவர்:
    “விப்ரகுல யாகச் சபாபதியும்”
    “அந்தண் மறை வேள்வி காவற்கார”

    இவரே பிராமணர்களுக்குத் தலைவர்:
    ” மகாவ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே”

    இவரே நமது மதத்தில் உள்ள அத்தனை தெய்வங்களையும் இணைப்பவர்:

    :அருவரை எடுத்த வீரன் நெரிபட விரற்கள் ஊனும்
    அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே
    அலைகடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சி கூறும்
    அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே”

    இப்படிப் பல வகையிலும் நமது வைதீக மதத்திற்கு ஆதாரமாகவும் அரணாகவும் இருப்பவர் ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி யாகும். இவரே நமது குறைகளைத் தீர்ப்பவர்:
    “வினைப்பகை யறுத்து நினைத்தது முடித்து மனத்துயர் கெடுத்தெனை
    வளர்த்தருள் க்ருபைக் கடலே”
    ‘மனோ துக்க பேதனனும்”
    ‘வாழி என நித்தம் மறவாது பரவிற் சரண
    வாரிசம் அளிக்கும் உபகாரக் காரனும்”

    இன்று நமது மதத்திற்கு உள் நாட்டிலும் வெளி நாட்டிலிருந்தும் பல வித தொல்லைகள் கிளம்பியுள்ளன. இவற்றை முறியடித்து நம்மைக் காக்க அந்த ஸுப்ரஹ்மண்யரையே சரணடைந்து போற்றித் துதிப்போம்;
    சுரர்க்கும் முநிவரர்க்கும் மகபதிக்கும் விதி தனக்கும்
    அரி தனக்கும் நரர் தமக்கும்
    உறும் இடுக்கண் வினை சாடும்
    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன்
    என துளத்திலுறை கருத்தன் மயில் நடத்து குஹன் வேலே

Leave a Reply

%d bloggers like this: