
तवाधारे मूले सह समयया लास्यपरया
नवात्मानं मन्ये नवरसमहाताण्डवनटम् ।
उभाभ्यामेताभ्यामुदयविधिमुद्दिश्य दयया
सनाथाभ्यां जज्ञे जनकजननीमज्जगदिदम् ॥
தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா
நவாத்மாநம் மந்யே நவரஸ – மஹாதாண்டவ – நடம் |
உபாப்யாம் ஏதாப்யாம் உதய – விதிம் உத்திச்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநக – ஜநநீமத் ஜகத் இதம் || 41
[ (தவ) உனது (ஆதாரே மூலே) மூலாதார சக்ரத்தில் (லாஸ்ய பரயா) (பெண்பாலருக்குரிய) லாஸ்யம் எனும் நடனத்தில்ஈடுபட்டிருப்பவளும் (ஸமயயா ஸஹ) ‘ஸமயா’ எனப்படுபவளுமான உன்னுடைய உருவ பேதத்துடன் (நவரஸமஹாதாண்டவ நடம்) (ஆண்பாலருக்குரிய) தாண்டவம் எனும் நடனத்தை நவரஸங்களுடன் மஹத்தான முறையில்ஆடுகின்ற (நவாத்மாநம்) ஆனந்த சிவனின் உருவ பேதத்தை (மந்யே) த்யானிக்கிறேன். (உதயவிதிம்) ஸ்ருஷ்டியைஆரம்பிக்கும் முறைமையை (தயயா) தயையுடன் (உத்திச்ய) உத்தேசித்து (ஸநாதாப்யாம்) ஒருவருக்கொருவர்ஆச்ரயமான தம்பதியாக ஆன (ஏதாப்யாம் உபாப்யாம்) இந்த உங்களது ஜோடியால் (இதம் ஜகத்) இவ்வுலகு (ஜநகஜநநீமத்) தந்தையும் தாயும் உடையதாக (ஜஜ்ஞே) ஆகிறது.]
மூலாதாரம் என்ற அடிச் சக்ரத்தில் அம்பாளை ஸ்வாமியோடு ஆராதித்து முடிக்கிற ச்லோகம். இங்கே ஸ்வாமியை“நவாத்மானம்” என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்த திவ்ய தம்பதியைச் சேர்த்துச் சேர்த்துச் சொல்கிற ச்லோகங்களில்முதலாவதான “சரீரம் த்வம் சம்போ:”-வில் இதே நவாத்மா பேர் வந்தது. முடிவான ச்லோகத்திலும் அதையேதிருப்பியிருக்கிறார். இங்கே அது மூலாதார சக்ரத்திலுள்ள ஈச்வரனின் ரூப பேதமான ஆனந்த பைரவரைச்சொல்வதாகும். இதோடு சக்ர ஸமாசாரம் பூர்த்தியாவதால் ‘நவாத்மா’ என்பதற்குக் காலம் முதலான நவ வ்யூஹம்உடையவர் என்பது மட்டுமில்லாமல், சக்ரங்கள் 6 ப்ளஸ் அவற்றில் இருக்கும் க்ரந்திகள் என்ற முடிச்சுகள் 3, இரண்டும்சேர்ந்த ஒன்பதற்கு ஆத்மாவாயிருப்பவர் என்றும் அர்த்தம் பண்ணலாம்.
இங்கே ‘ஆனந்தபைரவ’ருக்கு ஸ்த்ரி லிங்கமான [பெண் பாலான] ஆனந்தபைரவி என்ற பெயரோடு அம்பிகைஇருக்கிறாள். அவருக்கு ஸமமானவளானதால் ‘ஸமயா’ என்ற பெயரை ஆசார்யாள் போட்டிருக்கிறார்.
“தவாதாரே மூலே” என்ற ஆரம்பம் prose order-ல் “தவ மூலாதாரே”: “உன்னுடையதான மூலாதாரத்தில்” என்றுஅம்பாளைப் பார்த்து ஆசார்யாள் சொல்வதாக ஆகும். “ஸமயயா ஸஹ” என்றால் “ஸமயாம்பாளானஆனந்தபைரவியுடன்”. அவளுக்கு லக்ஷணம் சொல்லியிருக்கிறது: “லாஸ்யபரா” என்று. ஒருத்தர் த்யானத்தில்ஒருமுகமாக ஈடுபட்டிருக்கிறார் என்றால் அவரை ‘த்யானபரர்’ என்கிறோமல்லவா? அப்படி ‘லாஸ்யபரா’ என்றால்‘லாஸ்யத்தில் பூரணமாக ஈடுபட்டவள்’ என்று அர்த்தம்.
‘லாஸ்யம்’ என்றால் பெண்கள் செய்கிற நாட்டியம். அது லளிதமாக இருக்கும். புருஷர்கள் ஆடுகிற நாட்டியம் கொஞ்சம்ஆர்ப்பாட்டமாக இருக்கும். அதற்குத் தாண்டவம் என்று பெயர். நடராஜா தாண்டவம்; சிவகாம ஸுந்தரி லாஸ்யம். ‘ந்ருத்தம்’ என்கிற தாள விந்நியாஸமும் ஜதிபேத கதிபேதங்களும் தாண்டவத்தில் முக்கியம். லாஸ்யத்தில் வம், மனோபாவம், முகபாவம் முக்கியம்; அபிநயம் முக்கியம். இந்த இயல்புகளை ஒட்டியே அந்த நாட்டிய வகைகளை masculine, feminine என்று (ஆண்பால், பெண்பாலாக) வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பழைய நாளில்! இப்போது எல்லாமேmasculine ஆகிக் கொண்டு வருகிறது!
பரமேச்வரனுக்கு ‘மஹாநடன்’ என்று பெயர். அமரகோசத்தில் “மஹாகாலோ மஹாநட:” என்று வருகிறது. அவர்ஆடாவிட்டால் இந்த உலகம் ஆடாது, அசையாது. இது அழியவேண்டுமானால் அதற்கும் அவர் ஸம்ஹாரத் தாண்டவம், ஊழிக்கூத்து என்று ‘டான்ஸ்’ ஆட வேண்டியிருக்கிறது! அவரை அசைப்பதே அம்பாள்தான் என்று முதல்ச்லோகத்திலேயே சொல்லி விட்டபடியால் அவள் இப்படி அமர்க்களமாக ஆடுகிறார் என்றால் அவள் காரியந்தான்என்று ஏற்படுகிறது. அவரை ஆர்ப்பாட்டமாக ஆடவிட்டுவிட்டு, அவளும் வந்து கூடச் சேர்ந்து பரம கோமளமாக லாஸ்யநடனம் செய்கிறாள். நாம் வெளி லோகத்தில் கையால் காலால் ஆடுவது ஒடுவது; உள்ளுக்குள்ளே எந்த பாவம்ஏற்பட்டாலும், கோபமோ சோகமோ காமமோ எது வந்தாலும் அதற்கேற்றபடி நம் நாடி நரம்புகள் ஆடுவதுஎல்லாவற்றுக்கும் காரணம் இப்படி அந்த அகமுடையான் பெண்டாட்டி ஆடுகிற ஆட்டம்தான்! சோகம் வந்தால் கண்ஏன் துடிக்க வேண்டும்? கோபம் வந்தால் உதடு ஏன் துடிக்க வேண்டும்? நம் எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாகப்பரமேச்வரன் தானே இருக்கிறான்? அவன் நவரஸங்களோடும் ஸம்பந்தப்படுவது போல ஆடுதால்தான் நமக்கு இந்தஆட்டங்கள் ஏற்படுகின்றன. இதெல்லாம் பாவப் பிரதானமான லாஸ்யத்தைச் சேர்ந்தது; ஆகையால், பரமேச்வரன்அம்பாளின் லாஸ்யத்தோடு ஸம்பந்தப்பட்டு நவரஸங்களைக் காட்டுகிற நிலையைச் சேர்ந்தது. வம் இல்லாமல், அநேகஆட்டங்கள் இயற்கையில் இருக்கின்றன லோகங்கள் எல்லாம் அததன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுஆடுகின்றன. கிரஹங்கள் ஸூரியனைச் சுற்றி டான்ஸ் பண்ணிக் கொண்டு வருகின்றன. காற்று அடிக்கிறதே அது ஒருடான்ஸ். நெருப்பு தலையை விரித்துக் கொண்டு கொழுந்துவிட்டு பரவுகிறது ஒரு டான்ஸ். ஜலம் வெள்ளமாகப்பாய்கிறதும் டான்ஸ். இதெல்லாம் பாவம் சேராத தாண்டவம். ஆனால் இவற்றால் நம்மிடம் பல பாவங்கள், ரஸாநுபவங்கள் உண்டாகின்றன. தென்றல் அடித்தால் ஸந்தோஷமாயிருக்கிறது. அதே காற்று புயலானால்பயமாயிருக்கிறது. புயல் நம்மை பாதித்தும்விட்டால் ஒரே அழுகை, சோகம் உண்டாகிறது. சந்திரன் அதுபாட்டுக்குஎன்னவோ நிலாவைக் கொட்டிக் கொண்டிருந்தாலும், நிலாவினால் தான் விரஹம், அது, இது என்று கவிகள்பெரிசாகக் கட்டுகிறார்கள். ஆகவே தாண்டவமும் லாஸ்யமும் சிவ-சக்திகள் மாதிரிப் பரஸ்பர ஸம்பந்தப்பட்டுத்தான்இருக்கின்றன.
இந்த ச்லோகத்தில் இதைத்தான் சொல்லியிருக்கிறது. லாஸ்யபராவான ஸமயாவோடு ஆனந்தபைரவ மூர்த்தி நவரஸபரிதமான மஹா தாண்டவ நாட்யமாடுகிறார் என்று சொல்லியிருக்கிறது.
“மஹேச்வர மஹாகல்ப மஹா தாண்ட வஸாக்ஷிணி” என்று [லலிதா ] ஸஹஸ்ரநாமத்தில் பெயரிருக்கிறது. ஆனால்அங்கே சொன்னது ஸம்ஹார தாண்டவம்; இங்கே சொல்வது ஸ்ருஷ்டி தாண்டவம். அங்கே ஸ்வாமி அப்படி ஸம்ஹாரதாண்டவம் ஆடும்போது அம்பாள், — தாயாரில்லையா? அதனால் — அதை வெறுமே ஸாக்ஷிமாத்ரமாகப் பார்த்துக்கொண்டு மட்டுமிருக்கிறாள். ஸ்ருஷ்டி நாட்யத்தின்போதோ தானும் பதியின் தாண்டவத்தோடு கூடச் சேர்ந்துதன்னுடைய பங்காக லாஸ்யம் பண்ணுகிறாள்.
“ஸாக்ஷிணீ”- ஸாக்ஷியாய் பார்த்துக்கொண்டு மாத்திரமிருக்கிறாள் – என்று ஸஹஸ்ரநாமம் சொன்னாலும், அந்தஸம்ஹாரத்தின்போதுகூட அவர் அக்னி ப்ரவாஹமாகப் பொங்கவிட்டுப் பொசுக்கும்போது அவள் அருள் மழை பெய்துகுளிரப் பண்ணுகிறாளென்றே ஆசார்யாள் சொல்வதாகச் சொன்னேன். அதனால் ஸம்ஹாரம் நடக்காமல்பண்ணிவிட்டாளென்று அர்த்தமில்லை. லோக லீலையில் அதுவும் ஒரு அங்கமாக நடந்தாக வேண்டுமென்றுஅவளேதான் திட்டம் போட்டு, அதற்கு ருத்ரனை அதிகாரியாக அப்பாயின்ட் பண்ணியது. அதனால் அங்கேகுளிரப்பண்ணுவதென்பது, ஆபரேஷன் பண்ணும்போதே மயக்க மருந்து கொடுக்கிற மாதிரிதான். ராணுவம் சண்டைத்திட்டங்கள் போட்டுப் பண்ணுவதைக் கூட ‘ஆபரேஷன்’ என்றுதான் சொல்வது. அப்படி இது ருத்ரனுடைய ஸம்ஹாரஆபரேஷன்!
அப்புறம் மறுபடி ஸ்ருஷ்டி – அவரே ஆனந்த பைரவராகி ஆனந்த பைரவியான அம்பாளுடைய கோ-ஆபரேஷனோடுநாட்யமாடியே ஸ்ருஷ்டிப்பது!
“மூலாதாரத்தில் ஆனந்தபைரவ – ஆனந்தபைரவிகளின் தாண்டவ – லாஸ்யத்தைத் தியானம் செய்கிறேன்” என்கிறார்.ஆனந்தபைரவி என்பது ராகத்தின் பெயராக இருக்கிறது. அது பாட்டு. இங்கே ஆட்டமும் சேர்ந்திருக்கிறது.
ஆனந்தம் வந்தால்தான் ஆடுவது பாடுவது எல்லாம். வெள்ளைக்காரர்கள் குடித்து, குதித்து ball dance என்றுஆடுகிறார்கள். ஆனந்தப்படத் தெரியாத நாம் மூக்கைச் சிந்திப் போட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்? ஸாக்ஷாத்ஈச்வரனும் அம்பாளும் ஆனந்தப் பூரிப்பில் நாட்டியம் ஆடுகிறார்கள். அவர்கள் அப்படி இருக்கிறார்களே என்று நாம்ரொம்ப ஸ்வாதீனம் எடுத்துக் கொண்டுவிடக்கூடாது. அதனால் தான் ஆனந்தத்தோடு பைரவம் சேர்ந்தவர்களாகஇருக்கிறார்கள். பைரவம் என்பது பயமுறுத்துவதை, கோபத்தை, உக்ரத்தை காட்டுவது, நம்மை நல்ல கட்டுப்பாட்டில்கொண்டு வருவதற்காக இப்படி!
பைரவ குணம் டெம்பரரிதான். ஆனந்தந்தான் அவர்களுடைய பெர்மனன்ட் குணம். பெரிய ஆனந்தம் என்ன? அன்பாயிருப்பதுதான். ஸர்வ பூத தயைதான் இந்த தம்பதியின் ஆனந்தம். ‘தயயா‘ – ‘தயையினால்’ என்று மூன்றாம்வரியின் முடிவில் வருகிறது.
தயையால் என்ன பண்ணுகிறார்கள்? லோக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறார்கள். “இது என்ன தயை? ஸ்ருஷ்டியால்தான்அத்தனை அனர்த்தமும். இதைப் பண்ணுவது தயையே இல்லை; க்ருரந்தான்” என்று தோன்றலாம். அப்படியில்லை. இப்போது ஸ்ருஷ்டி பண்ணாமல் இவர்கள் நிறுத்திவிட்டாலும் இதற்கு முன்னாடி ஸ்ருஷ்டி என்று எப்போதோ ஏற்பட்டுவிட்டதே! ஒரு ஸ்ருஷ்டி முடிந்ததும் பிரளயத்தில் எல்லாருக்கும் ரெஸ்ட்; மறுபடி ஸ்ருஷ்டி. “இப்படி மறுபடி பண்ணவேண்டாம் என்பதுதான் ஸ்வாமி, எங்கள் கட்சி” என்றால் அதில் இருக்கிற தப்பைச் சொல்கிறேன். ஏழு நாளானால்ஒரு வாரம், முப்பது நாள் ஒரு மாஸம் என்கிற மாதிரி, ஸ்ருஷ்டி காலம் என்றும் இத்தனை லக்ஷோபலக்ஷம் வருஷம்என்று ஒரு கணக்கு உண்டு. அது ஆனவுடன் ப்ரளயம் வந்தாகணும். இப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திலே ப்ரளயம்வருகிறதென்றால், ஸரியாக அந்த ஸமயத்திலேயே ஸகல ஜீவ ராசிகளுக்கும் கர்மாவெல்லாம் தீர்ந்து அவர்கள்மோக்ஷத்திற்கு அர்ஹராகி [அருகதை பெற்றவர்களாகி]யிருப்பார்களா என்ன? அதெப்படி ஸாத்யம்? ஒவ்வொரு ஜீவனும்ஒவ்வொரு தினுஸில் ஏராளமான கர்மா பாக்கியுடன் இருக்கறபோதேதான் ப்ரளயம் வருகிறது. வந்து, அது வெளிப்பார்வைக்கு க்ரூரமானதாக் தெரிந்தாலும், வாஸ்தவத்தில் பரம க்ருபை பண்ணுகிறது. என்ன க்ருபை என்றால், யாருக்குஎத்தனை வண்டி கர்மா பாக்கி இருந்தாலும் அதை கவனிக்காமல் மறு ஜன்மாக்களிலிருந்து விடுவித்து, ஸம்ஹாரம்என்ற பெயரில் ரெஸ்ட் கொடுக்கிறது. ஆனால் இந்த ரெஸ்டும் சாச்வத மோட்சமில்லை. போனால் போகிறதென்றுரொம்ப நீண்ட காலம் கொடுக்கிற ரெஸ்ட்தான். சாச்வத மோட்சம் ஜீவாத்மாக்களே புண்யம் பண்ணி, ஸாதனைபண்ணிக் கர்மாவைக் கழித்துக் கொள்ளும்போது ஈச்வரனும் ஒட்டிக்கு இரட்டியாகக் க்ருபை காட்டி ஏற்படவேண்டியதுதான். ஜீவனுக்கு அந்த யோக்யதை ஸம்பாதித்துக் கொள்ள சக்தி உண்டு என்று ஈச்வரன் நம்பி இப்படிவைத்திருக்கிறான். இது மநுஷ ஜாதிக்குப் பெரிய பெருமையில்லையா? அந்தப் பெருமையை்ப் புரிந்து கொள்ளாமல், அதை வாஸ்தவமாகவே சம்பாதித்துக்கொள்ளாமல் கர்மா மூட்டையை பெருக்கிக்கொண்டு போகிறோம்; ஒயாமல்ஜன்மா எடுக்கிறோம். அப்போதுதான் நாமாக ஸம்பாதித்துக் கொள்ளாத மோக்ஷத்திற்கு ஒரு ஸப்ஸ்டிட்யூட் மாதிரிஈச்வரன் பரம கருணையோடு ப்ரளயத்தினால் ரெஸ்ட் தருகிறான். ஆனால் கர்மா பாக்கி இருக்கிறதே, அதைத் தீர்த்துக்கொண்டாலொழிய சாச்வத மோக்ஷம் என்ற ப்ரஹ்மானந்தம் எப்படிக் கிடைக்கும்? அதற்காகத்தான் மறு ஸ்ருஷ்டிஏற்படுத்துகிறான். அதுவும் நாம் கர்மாவைக் கழித்துக் கொண்டு ஆனந்தத்திற்கெல்லாம் மேலான மோக்ஷானந்தத்தைஸாதித்துக் கொள்ள சான்ஸ் கொடுப்பதுதான். இப்படியொரு சான்ஸ் கொடுப்பதும் பரம கருணைதானே?
இதை உத்தேசித்துத்தான் ஆனந்தபைரவ-பைரவிகள் தங்கள் நாட்டியத்தின் மூலமே மறு ஸ்ருஷ்டியை உண்டுபண்ணுகிறார்கள். ஜீவர்கள் கர்மாவைப் போக்கிக் கொண்டு மோக்ஷம் போக வாய்ப்புத் தரவேண்டும் என்றேபண்ணுவதால்தான் ‘தயயா’ என்று போட்டார். லோகத்தை உண்டு பண்ணும் தம்பதியானதால் ஜனக-ஜனனி, நம்எல்லோருக்கும் அவர்கள் தந்தையும் தாயும் ஆவார்கள் என்று உறவு சொல்லி நம்மை அவர்களோடு அன்பில் கட்டிப்போடுகிறார்.
உபாப்யாம் ஏதாப்யாம் உதய-விதிம் உத்திச்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநக-ஜநநீமத் ஜகத் இதம் ||
“ஏதாப்யாம், உபாப்யாம்” – ‘இப்படிப்பட்ட தாண்டவ லாஸ்யங்களைச் செய்பவர்களான உங்கள் இரண்டு பேராலும்’; “உதயவிதிம் உத்திச்ய” – ‘உலகை மறுபடி உதயம் செய்யும் முறையை உத்தேசித்து’ (“அந்த உத்தேசத்தை நீங்கள்காரியமாகவே பண்ணிவிட்டதால்” என்பது தொக்கி நிற்கிறது. ஸாக்ஷக்ஷாத் பரதேவதையும் பரமேச்வரனும் ஒருஉத்தேசம் பண்ணிவிட்டால் அது நிச்சயம் காரியத்தில் பலிதமாகிவிடும். காரியத்தில் அது நடந்தது என்று சொல்லவேண்டியதே இல்லை); “இதம் ஜகத்” – ‘இந்த லோகமானது’ (அதாவது ஸமஸ்தப் பிராணிகளும்) “ஜநக-ஜநநீமத்” – ‘தந்தையும் தாயும் உடையதாக’; “ஜஜ்ஞே” – ‘ஆகிறது’.
“ஐயோ, ஸ்ருஷ்டியில் மாட்டிக்கொண்டோமே! மாயை இழுக்க ஆரம்பித்துவிடுமே!” என்று பயப்படுகிற நம்மைப் பார்த்துஆசார்யாள் “பயப்படாதேயப்பா! அழாதேயப்பா!” என்று ஆறுதல் சொல்லி, “ஸ்ருஷ்டியை மட்டும் ஏன் பார்க்கிறாய்? பார்த்தால் பயந்தான். யார் ஸ்ருஷ்டி செய்தது என்பதை நினைத்துப் பார். அப்பாவும் அம்மாவுமாக ஈச்வரனும்அம்பாளுந்தான் இதை உண்டு பண்ணியிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார். தாய் தந்தை எங்கேயாவது கெடுதல்பண்ணுவார்களா? நம் நல்லதற்குத்தான் இதைச் செய்திருக்கிறார்கள். அவர்களை நினைத்தாயானால் கெட்டதுநம்மைத் தொடாமல் ரக்ஷித்து நல்லதிலேயே சேர்ப்பார்கள். நீ நாதியற்று அநாதையாகக் கிடப்பதாக நினைத்தால்தான்உன்னை மாயை வந்து தாக்கும். உனக்கு பலமாக இருக்கிற பராசக்தியைப் பரமேச்வரனோடு சேர்த்துத் தாயும்தந்தையுமாகத் துணைக்கு இருக்கிறார்களென்று நினைத்துப் பார். மாயை ஒடிப்போய்விடும் . நீஅநாதன் இல்லை; அந்த மாதா-பிதாக்களை ரக்ஷகர்களாகக் கொண்ட ஸநாதன்* நீ” என்கிறார்.
குழந்தைகளான நமக்கு மாதா பிதா என்று இரண்டு பேரும் இருப்பதாகச் சொன்னால்தான் நாம் ஸநாதர்கள் என்றுதோன்றுகிறது. லோகத்தில் எப்படி இருக்கிறது? தகப்பனார் மட்டும் இருந்து அவர் என்ன சவரணையாகப் பார்த்துக்கொண்டாலும் தாயாரில்லாவிட்டால், ‘ஐயோ பாவம், தாயில்லாக் குழந்தை’ என்று அலாதியாக ஒரு பரிதாபம்உண்டாகத்தான் செய்கிறது. அதே மாதிரி அம்மா மட்டுமிருந்து எத்தனை வசதியாக பராமரித்தாலும், ‘தகப்பனாரில்லாத அநாதைக் குழந்தை’ என்ற பரிவு ஏற்படுகிறது. பராசக்தி என்றோ பரமேச்வரன் என்றோ ஏதோ ஒருரூபத்தில் “பரப்பிரம்மம் லோகத்தை ரக்ஷிக்கிறது என்று சொன்னால் போதாதா? எதற்காக உமா-மஹேச்வரன், லக்ஷ்மி-நாராயணன், ராதா-கிருஷ்ணன், ஸீதா-ராமன் என்று இரண்டு பேரைச் சொல்ல வேண்டும்?” என்று கேட்பதற்குஇதுதான் பதில். நாம் எல்லாரும் குழந்தையானதால் ஜனக-ஜனனி இரண்டும் வேண்டும். ஜனகன்-பிதா; ஜனனி-மாதா. இவர்களில் ஒருத்தர் இல்லாவிட்டாலும் அநாதை மாதிரிதான் தோன்றும். இரண்டு பேரும் இருந்தால்தான் ‘ஸநாதர்’என்று அழுத்தமாகப்படும்.
ச்லோகத்தில் “ஸநாதாப்யாம்” என்று வருகிறது. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அது அநாதைகளாட்டமா[அநாதை போல] இருக்கிற நம்மைக் குறித்துச் சொன்னதில்லை; நமக்கு நாதனும் நாதையுமாக உள்ள ஸ்வாமியையும்அம்பாளையுமே குறித்துச் சொன்னது! அந்த இரண்டு பேரையுமே பார்த்து “உபாப்யாம், ஏதாப்யாம், ஸநாதாப்யாம்”என்கிறார். “ஸநாதர்களாக இருக்கிற உங்கள் இருவராலும்” என்று அர்த்தம். இப்படிச் சொன்னால் அம்பாளுக்கும்ஈச்வரனுக்கும் மேலே ப்ரபு ஸ்தானத்தில் யாரோ இருந்துகொண்டு அவர்களுக்கும் ரக்ஷணம் தருகிறாரென்று அல்லவாஆகிறது? இது விசித்ரமாயிருக்கிறதே! ‘நாம் எல்லாம் அநாதையில்லை. நமக்கு நாதனாக ஈச்வரன் இருக்கிறான்.அவனுக்குத்தான் நாதனில்லை — அவனை ரக்ஷிக்க என்று அவனுக்கு மேலே ஒரு ப்ரபு இல்லாததால்! அதனால்அவன்தான் அநாதை’ என்று ஒரு பெரியவர் சொன்னார். இதை ஆசார்யாள் மாற்றி விட்டாரா?
இல்லை. இவர்களுக்கு மேலே வேறு யாரோ இருந்து இவர்களை ஸநாதர்களாக்கவில்லை. இவர்களுக்குள்ளேயேதான் பரஸ்பரம் ஒருத்தருக்கு மற்றவர் நாதராக இருக்கிறார்கள். சக்தியின்றி சிவனில்லை; சிவனின்றி சக்தி இல்லை.ஒரு பாவத்தில் அவள் சேஷம் — அவன் சேஷீ, இன்னொன்றில் அவன் சேஷம் — அவள் சேஷீ என்று முன்னேஆசார்யாளே சொன்னாரல்லவா? அப்படி, அவர்களுடைய லீலா விநோதத்திலே இவள் அவனுக்கு மேலே இருந்துகொண்டு காலகூட விஷத்திலிருந்தும், மஹாப் பிரளயாக்னியிலிருந்தும் அவனை ரக்ஷிக்கிறாள்; தாக்ஷாயணி, பார்வதிமுதலிய ரூபங்களில் இவள் அடங்கி ஒடுங்கி இருக்கிறபோது அவன் கிருஹத்தின் யஜமானாக இவளை ரக்ஷிக்கிறான். தத்வ ரீதியிலும் சிவம் சக்திக்கு மேலாகவும், சக்தி சிவத்துக்கு மேலாகவும் இருந்து பரஸ்பரம் பரிபாலனம் பண்ணிக்கொள்வதை மந்திர சாஸ்திரங்களும், சிவாகமங்களும், ‘திருமந்திரம்’ முதலியனவும் சொல்கின்றன. இரண்டும் பலஉறவுகளில் பின்னிப் பிணைந்தவை. இருவர் அநுக்ரஹமாகவும் ஒரே பரமாத்மாவின் அநுக்ரஹத்தை நாம் பெறவேண்டும். இதற்காகத்தான் ஜனக-ஜனனியாக உபாஸிப்பது. அப்போதுகூட அவன் அநுக்ரஹித்தால்தான் அவள்அநுக்ரஹம் பண்ணுவாள், அவள் அநுக்ரஹம் இருந்தால்தான் அவன் அநுக்ரஹம் கிடைக்கும் என்றுசொல்லியிருக்கிறது:
சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாம்ச
த்தி அருள் தரிற் சத்தன் அருளுண்டாம்
[திருமந்திரம் – 333]
[சத்தன் — சக்தியோடு கூடிய ஈசன்; சத்தி — சக்தி]
பரமேச்வரனுடைய தாயுமானவர் என்று சொல்கிற போதுகூட, தாய் என்ற வார்த்தையைச் சொல்லி, ‘அதுவும் ஆனவர்’என்பதாலேயே தாய்-தந்தை என்ற இரண்டாகவும் நினைப்பூட்டியிருக்கிறது. இவரேதான் தாயுமாகி இருக்கிறார்என்பதால் மலைக்கோட்டையில் அம்மன் சன்னதி இல்லாமலிருக்கிறதா என்ன? அங்கேயும் பரம ஸாந்நித்யத்தோடு ஸ்ரீசக்ராகாரமான ஸந்நிதியில் ஸுகந்த குந்தளாம்பிகையாக ஒரு தனி அம்பாள் இருக்கத்தான் செய்கிறாள். அங்கே‘ஆனந்த லஹரி’ ச்லோகங்கள் பொறித்திருப்பதை முன்பே சொன்னேன்.
நாம் கடைத்தேறும் பொருட்டே அம்மையும் அப்பனுமாகி வந்து இம்மையும் மறுமையும் தரும் ஜனக-ஜனனிகளைப்பற்றிச் சொல்வதோடு ஆனந்த லஹரி பாகம் பூர்த்தியாகிறது.
“இந்த ஜகத் ஏதோ அறிவுகெட்டுக் குட்டிச்சுவராகப் போவதற்கு ஏற்பட்டதில்லை. இது ஜனக-ஜனனீமத் ஆக்கும்! அதாவது ஸாக்ஷாத் பரமேச்வரனையும் பராசக்தியையும் நம்மைக் கட்டிக் காக்கிற பெற்றோராகக் கொண்டதாக்கும்!” என்று ஆசார்யாள் தைர்யம் கொடுக்கிறார், பெருமை கொடுக்கிறார், உத்ஸாஹப்படுத்துகிறார். ‘ஜனக-ஜனநீமத்’என்றால் ‘தாய் தந்தையைப் பெற்றிருக்கும்படியான தன்மை’ என்று அர்த்தம். குழந்தைகளுக்கு வேண்டிய பெரிய உறவுஅதுதான். அது லோகத்து ஜனங்கள் அத்தனை பேருக்கும் இருக்கிறது என்று பெரிய அபயவாக்கு சொல்கிறார்.
நடுநடுவே ஸ்ரீ மடம் ஸமஸ்தானம் யந்த்ரம், மந்த்ரபீஜம், குண்டலிநீ முதலிய விஷயங்களைச் சொன்னாலும், இந்தபாகத்தையும் பூர்த்தி பண்ணும்போது எல்லாவற்றுக்கும், மூலாதாரமாக, நம்முடைய மூலாதார சக்ரத்தில் பிரியமாகக்கிட்டே போனால் பக்தி பண்ணும்படி பரம ஸுலபமாக ஒரு அப்பா-அம்மா இருப்பதைக் காட்டி நம்மை அவர்களுடையரக்ஷணையிலே இருக்கிற குழந்தைகளின் நிர்விசாரமான நிலையில் வைத்து ஆசீர்வாதம் பண்ணியிருக்கிறார். ‘ஆனந்த லஹரி’ இப்படித் தன் தாய் தந்தைகளைக் கண்டுபிடித்துவிட்ட குழந்தையின் நிர்மலமான ஆனந்தத்தோடுபூர்த்தியாகிறது.
Categories: Deivathin Kural
Leave a Reply