Navarathri Special – Day 6 – இஹ-பர நலன் தரும் இணையடிப் பொடி

अविद्यानामन्त-स्तिमिर-मिहिरद्वीपनगरी
जडानां चैतन्य -स्तबक-मकरन्द-स्रुतिझरी ।
दरिद्राणां चिन्तामणिगुणनिका जन्मजलधौ
निमग्नानां दंष्ट्रा मुररिपु -मुररिपुवराहस्य भ

அவித்யாநாம் அந்தஸ் திமிர-மிஹிர த்வீபநகரீ
ஜடாநாம் சைதந்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ  |
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதௌ  
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி (3)

திருவடித் தூளி என்னவெல்லாம் அநுக்ரஹம் செய்கிறதென்று மூன்றாம் ச்லோகத்தில் சொல்கிறார். ப்ரபஞ்சவியவஹாரம் முழுக்க அதனாலேயே என்று இரண்டாவது ச்லோகத்தில் சொன்னபின் ப்ரபஞ்சத்திலுள்ள ஜீவர்களுக்குஅது எப்படியெல்லாம் அநுக்ரஹிக்கிறது; ப்ரபஞ்சத்திலிருந்தே விடுவித்தும் அநுக்ரஹிக்கிறது என்று சொல்கிறார்.

அவித்யாநாம் அந்தஸ் – திமிர – மிஹிர – த்வீபநகரீ

அவித்யா என்றால் அஞ்ஞானம். அது ஒரு பெரிய இருட்டு; ‘திமிரம்’ என்று ச்லோகத்தில் சொல்லியிருக்கும் இருட்டு.ஸ்வயஞ்ஜோதியாக உள்ள ஆத்மா தெரியாதபடி அஞ்ஞான இருட்டு செய்கிறது. இப்படி அஞ்ஞானியாகஇருப்பவர்களுக்கு ஸூர்யோதய ஸ்தானமான ஒரு பிரகாசமான நகரம் மாதிரி ஞான வெளிச்சத்தை அம்பாளின்பாததூளி கொடுக்கிறது. ‘மிஹிரன்’ என்றால் ஸூர்யன். ‘த்வீப நகரம்’ என்பது ஒரு தீவிலுள்ள நகரம். உதய காலத்தில்பார்த்தால் ஸூர்யன் ஸமுத்ர மத்தியிலிருக்கும் ஒரு தீவிலிருந்து எழும்புகிறமாதிரி தோன்றும். அதை வைத்தே இங்கேசொல்லியிருக்கிறது.

”அஞ்ஞான தமஸுக்கு ஸூர்யனாக அம்பாளின் பாததூளி இருக்கிறதென்று சொன்னாலே போதுமே!’ ஸூர்யன்உதிக்கிற தீவிலிருக்கும் நகரமாக’ என்பானேன்?” என்று நினைப்பவர்கள் வேறே பாடபேதம் சொல்கிறார்கள்: ”திமிரமிஹிரோத்தீபநகரீ” என்று. திமிர மிஹிர உத்தீபந-கரீ2 என்று சந்தி பிரியும். ‘உத்தீபனம்’ என்றால் பிரகாசமாகத்தூண்டிவிடுவது. ஆகையால், இப்படி வைத்துக் கொண்டால் ‘அஞ்ஞானம் என்ற உள்ளிருட்டைப் போக்கி ஞானப்பிரகாசத்தை தூண்டி விடும் ஸூர்யன்’ என்று அர்த்தம் கொடுக்கும்.

ஸப்ரபஞ்சம், நிஷ்ப்ரபஞ்சம் என்று இரண்டு. ப்ரபஞ்ச விஷயங்களோடு ஸம்பந்தப்பட்ட ஸகுண ப்ரம்மம் ‘ஸப்ர பஞ்சம்’. ப்ரபஞ்சமும், அதற்கு ஹேதுவான மாயையும் அடிப்பட்டுப்போய் ஸத்தாமாத்ரமாயிருக்கும் நிர்குண ப்ரம்மம்நிஷ்ப்ரபஞ்சம். ஸப்ரபஞ்சமான ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கு அம்பாளின் பாதத்தூளியைக் காரணமாகச்சொல்லி முந்தின ச்லோகத்தில் அவளை ஸகுண ப்ரம்மமாகக் காட்டினார். இந்த ச்லோகத்தில் அவளை மாயையிருள்நீக்கும் ஸூர்யப் பிரகாசம் என்று சொல்லி, நிஷ்ப்ரபஞ்சமாக, நிர்குண ப்ரம்மமாகக் காட்டுகிறார்.

அவருக்கு அத்வைத நினைப்பு துருத்திக் கொண்டு அப்பப்போ வந்துவிடும்! பக்தி ஸ்தோத்ரமானாலும் வந்துவிடும்!உடனேயே, ‘த்வைத பாவத்தில் இருக்கிறவர்களுக்கல்லவா சொல்ல வந்தோம்? அதனால், எதுதான் முடிந்த முடிவானஸத்யமோ, லக்ஷ்யமோ அதை [அத்வைதத்தை] எல்லாருக்கும் அங்கங்கே தெரிவிக்கத்தான் வேண்டுமென்றாலும்விஸ்தாரம் பண்ணப்படாது’ என்று த்வைதமாக ச்ருதியை இறக்கிவிடுவார்! அப்படித்தான் இங்கே அவித்யா தமஸ்நிவ்ருத்தியானதைச் சொன்னவிட்டு, லோகத்தில் எல்லாரும் ஆசைப்படுகிற புத்திசாலித்தனம், ஐச்வர்யம்ஆகியவற்றைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

அவித்யை என்பது ஆத்மாவைத் தெரிந்து கொண்ட மஹான்களைத் தவிர பாக்கி அத்தனை பேரையுமே பிடித்திருப்பது. மஹா புத்திமான்கள், கெட்டிகாரர்களுங்கூட அவித்யையிலிருந்து விடுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். அம்பாளின் பத ரஜஸ் [தூளி] அவித்யையைப் போக்கி ஆத்ம ஞான பிரகாசத்தை அளிக்கிறது என்று உச்சஸ்தானத்தைச் சொன்னதற்கு அப்புறம் அதற்கு அடுத்த படியில் அது புத்திப் பிரகாசமான உயர்ந்த த்வைத ஞானத்தைமந்த புத்தியுள்ளவர்களுக்கு கொடுக்கிறது என்கிறார்:

ஜடாநாம் சைதந்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ

‘ஜடாநாம்’ என்றால் ‘ஜடம் மாதிரி அறிவு மந்தித்து இருப்பவர்களுக்கு’. அவர்கள் அறிவு வறண்டு போயிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குள்ளே அம்பாளின் பாததூளி ஒரு தேனான ப்ரவாஹத்தை ஃபௌன்டனாகப்பீய்ச்சியடித்து பசுமையாகப் பண்ணுகிறது. ‘மகரந்த ஸ்ருதிஜரீ’ என்றால் தேன் ப்ரவாஹத்தின் ஃபௌன்டன். தேனென்றால் அது ஒரு புஷ்பத்திலேதானே ஊறும்? இங்கே அப்படிப்பட்ட புஷ்பம் எது? எதுவென்றால், ‘சைதன்யஸ்தபகம்’ — ஜீவ ஓட்டமுள்ள அறிவென்கிற பூங்கொத்து. சைதன்யம் என்பது சித் என்கிற பரம ஞானந்தான். அதுவேமந்த புத்திகாரர்களுக்கு புத்திப் பிரகாசத்தை தேனாகப் பாய்ச்சுகிற பூங்கொத்தாக இருக்கிறது.

[லலிதா] ஸஹஸ்ரநாமத்திலேயும் ‘சைதன்ய குஸுமம்‘ என்று வருகிறது. குஸுமம் என்றால் புஷ்பந்தான். ‘ஞானப்பூங்கோதை’ என்றே காளஹஸ்தியில் அம்பாளைச் சொல்கிறது. சைதன்யமே அம்பாளுக்கு அர்க்யோபசாரம், சைதன்யமே அவளுக்கு அர்ச்சனையாகிற புஷ்பம் – ”சைதன்யார்க்ய ஸமாராத்யா, சைதன்ய குஸுமப்ரியா” என்றுஸஹஸ்ரநாமத்தில் வருகிறது. சேர்ந்தாற்போலவே ”ஸதோதிதா”, ”தருணாதித்ய பாடலா” என்றெல்லாமும் நாமாக்கள்வருகிறது. எப்போதும் உதயகாலம் போலப் பிரஸன்னமாக இருப்பவள் ‘ஸதோதிதா’. உதய ஸூர்யன் மாதிரி ஜோதிச்சிவப்பாக இருப்பவள் ‘தருணாதித்ய பாடலா’. ஆசார்யாள் ‘திமிர மிஹிர த்வீப நகரீ’ என்றும் ‘சைதன்ய ஸ்தபகம்’என்றும் இந்த ச்லோகத்தில் சொல்லியிருப்பது ஸஹஸ்ரநாமத்தின் இன்ஸ்பிரேஷனிலேயே இருக்கலாம்.

அவருக்கு ஸஹஸ்ரநாம நினைவு என்றால், மூகருக்கு அவர் சொல்லியிருப்பதன் நினைவு! ‘சைதன்ய ஸ்தபகம்’ என்றுஆசார்யாள் சொன்னதன் நினைவிலேயே மூகர் ‘பஞ்ச சதி’யின் ஆரம்ப ச்லோகத்திலே அம்பாளை ‘பர-சித்-ரூபா’ என்றுசொல்லி, அந்த சித்தே கருணை வடிவமாகிக் ‘காச்மீர ஸ்தபகம்‘, அதாவது குங்குமப்பூவின் பூங்கொத்து மாதிரிஅத்தனை கோமளமான சரீரம் எடுத்துக் கொண்டிருக்கிறது; காஞ்சீபுரத்தில் காமகோடி பீடத்தில் ஒரு கொடி படர்கிறமாதிரி எழுந்தருளியிருக்கிறது என்று பாடியிருக்கிறார்:

காரண-பரசித்ரூபா காஞ்சீபுரஸீம்நி காமபீடகதா |
காசந விஹரதி கருணா காச்மீர-ஸ்தபக-கோமலாங்க-லதா | |

ஸாதரணமாக லோக ஜனங்களுக்கு வேண்டியது அறிவும் செல்வமுந்தானே? [அம்பாளின் பாததூளி] அறிவுப் பிரகாசம்தருவதைச் சொன்னவுடனேயே செல்வம் தருவதையும் சொல்கிறார்:

தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா

சிந்தாமணி என்பது ஒருத்தர் இஷ்டப்படுவதையெல்லாம் கொடுக்கும் தெய்வாம்சமுள்ள மணி. எதைச் சிந்தித்தாலும்தந்துவிடுகிற மணியானதால் அப்படிப் பெயர். Philosopher’s stone என்று வெள்ளைக்காரர்கள் ஒன்றைச்சொல்கிறார்கள். ஆனால் அது வேறே, இது வேறே. ஃபிலாஸஃபர்’ஸ் ஸ்டோன் என்பது நாம் ‘ஸ்பர்ச வேதி’ என்றுசொல்கிற மாதிரியான ஒன்று. அது பட்டால் பித்தளை, ஈயம், இரும்பு எதுவானாலும் தங்கமாக மாறி விடும். அது[உ]லோஹ கன்வர்ஷன் மட்டுமே பண்ண முடியும். சிந்தாமணி அப்படியில்லை. நாம் என்ன இஷ்டப்பட்டாலும் அதைஉண்டாக்கிக் கொடுத்துவிடும்.

இப்படி மூன்று – காமதேநு, கல்பக வ்ருக்ஷம், சிந்தாமணி என்று. சிந்தாமணி அசேதனமான ஜட பதார்த்தத்தைச்சேர்ந்தது – கல்லு, மண்ணு மாதிரியான பதார்த்த வகை. கல்பக வ்ருக்ஷம் சேதனமும் ஜடமும் சேர்ந்த தாவர வகை.தாவரங்கள் ஜலத்தைக் குடிக்கிறது, வேர் கிளை என்று வளர்கிறது, இனவிருத்தி பண்ணிக் கொள்கிறது ஆகியஅம்சங்களால் சேதன ஜாதியில் வருகின்றன. ஆனால் அவை இருந்த இடத்தை விட்டு நடக்க முடியாது;மிருகங்களுக்கும் மநுஷ்யர்களுக்கும் உள்ள பலவிதமான அறிவு-உணர்ச்சிகளும் அவற்றுக்கு இல்லாததால் ஜடஜாதியிலும் வருகின்றன. காமதேநு பூர்ணமான சேதன ஜீவன். ரூபத்தில் மிருகமான பசுவாயிருப்பது. அறிவிலோமநுஷ்யர்களுக்கும் மேலே திவ்யமான நிலையிலிருப்பது. இப்படி, இஷ்டத்தைக் கொடுப்பதில் மூன்று தினுஸானஸ்ருஷ்டியினங்களில் ஒவ்வொன்றிலும் ஒன்று. Animal Kingdom , Vegetable Kingdom , Mineral Kingdom என்றமூன்றில் ஒவ்வொன்றிலும் ஸகல இஷ்ட பூர்த்தி பண்ணுவதாகக் காமதேநு, கல்பக வ்ருக்ஷம், சிந்தாமணி என்றுஒவ்வொன்று இருக்கின்றன.

அதில் அம்பாளின் பாததூளி தரித்ரர்களுக்கு இஷ்டப்பட்ட செல்வத்தையெல்லாம் தருவதில் சிந்தாமணியாகஇருக்கிறது – சிந்தாமணி குணனிகா! ‘குணனிகா’ என்றால் ஹாரம்.

பின்னாடி இந்த ஸெளந்தர்ய லஹரியிலேயே ஒரு இடத்தில்2 ருத்ராக்ஷமாலை, ஸ்படிக மாலை மாதிரிசிந்தாமணிகளைக் கோத்துச் செய்த ஜப மாலையையே உருட்டிக் கொண்டு சில மஹா பாக்யசாலிகள் அம்பாள்மந்திரத்தை ஜபிக்கிறார்களென்று வருகிறது: பஜந்தி த்வாம் சிந்தாமணி குண நிபந்தாக்ஷவலயா:. காமதேநுவின்பிரஸ்தாவமும் அந்த ச்லோகத்திலே வருகிறது. அந்த பாக்யசாலிகள் அம்பாள் மந்த்ரத்தால் ஹோமம் பண்ணும்போதுஸாதாரணப் பசு நெய்யால் பண்ணாமல் காமதேநுவின் பாலிலிருந்து எடுத்த நெய்யாலேயே பண்ணுகிறார்களாம்: சிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி சதை:. ‘ஸுரபிக்ருதம்’ என்றால் காமதேநுவின் நெய். ஸுரபி என்பதுகாமதேநுவின் இன்னொரு பெயர்.

ஒரு சிந்தாமணியே கேட்டதையெல்லாம் கொடுத்து விடும். கேட்டதற்கும் மேலே எத்தனையோ பங்கு [மடங்கு]அம்பாள் பாததூளி கொடுக்குமாதலால் பல சிந்தாமணிகளைக் கோத்த மாலையாக அதைச் சொல்லியிருக்கிறார்.

கல்பக வ்ருக்ஷம் பற்றியும் ஒரு ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்3. அதுவும் பாத மஹிமையைச் சொல்வதுதான். அங்கே4 கல்பகம் மாதிரியே இன்னும் நாலு தேவலோக விருக்ஷங்களும் கேட்டதையெல்லாம் கொடுப்பவையாதலால்எல்லாவற்றையும் சேர்த்து ‘தேவலோக தருக்கள்’ (”தரூணாம் திவ்யாநாம்”) என்கிறார். அந்த நாலு என்னவென்றால்பாரிஜாதம் ஒன்று. மந்தாரம் இன்னொன்று. பக்த ஜனங்களுக்கு பகவான் கேட்டதெல்லாம் கொடுப்பதால்தான் ”ச்ரிதஜன மந்தாரா!” என்று பஜனைப் பாட்டுகளில் வருவது. ஸந்தானம், ஹரிசந்தனம் என்பவை பாக்கி இரண்டு[தெய்விகமான மர வகைகள்]:

பஞ்சைதே தேவதரவோ: மந்தாரா: பாரிஜாதக: |
ஸந்தாந: கல்பவ்ருக்ஷச்ச பும்ஸி வா ஹரிசந்தநம் | |5

என்ன சொல்கிறாரென்றால், ”கல்பக விருக்ஷம் முதலான ஐந்தும் அதன் கீழே வந்து நிற்பவர்களுக்கு அந்த ஸமயத்தில்மாத்திரம் தங்கள் ஹஸ்தங்களான கிளை நுனியிலுள்ள துளிர்கள் மூலம் இஷ்ட பூர்த்தி தருகின்றன. தேவலோகவாஸிகள் மாத்திரந்தான் அப்படி அந்த விருக்ஷங்களுக்குக் கீழே போய் நிற்க முடியும். ஆனால் ஸர்வஜனங்களுக்குமே, எங்கேயோ குச்சில் குடிசையில் கிடக்கும் தரித்ரனுக்குங்கூட உன் பாதங்கள் ஸதாகாலமும் இஷ்டபூர்த்தி தருகின்றன” — என்று சொல்லி, இன்னும் சில சமத்காரங்களும் பண்ணியிருக்கிறார். இங்கே விட்டுப்போனVegetable Kingdom அங்கே வந்துவிடுகிறது என்பதற்காகச் சொல்ல வந்தேன்.

[மூன்றாம் ச்லோகப்படி] அம்பாளின் பாததூளி அவித்யை இருட்டுக்கு ஸூர்யோதயமாயும், ஜடத் தன்மை போக்கும்சைதன்யத் தேனாகவும், தரித்ரம் போக்கும் சிந்தாமணியாகவும் இருக்கிறது.

இன்னும் என்ன பண்ணுகிறது அந்தப் பாததூளி? நமக்கு முக்யமாகத் தெரிவது அறிவாளியாவதும், ஐச்வர்யவானாவதுந்தான். ஆனால் ஆசார்யாளுக்கு முக்யம் நம்முடைய அவித்யை போய் நாம் ஸம்ஸார நிவ்ருத்திபெறுவதுதான். அவித்யா தமோ நிவ்ருத்தியில்தான் [இந்த ச்லோகத்தை] ஆரம்பித்தார். முடிக்கிறபோதும் அதையேஸம்ஸார நிவ்ருத்தி என்ற பெயரில் சொல்கிறார். நமக்காக விட்டுக் கொடுத்து நடு இரண்டு வரியில் புத்திசாலித்தனம், ஐச்வர்யம் என்கிறவற்றைச் சொன்னாலும், அதற்கு இரண்டு பக்கமும் காவல் போடுகிற மாதிரி ஆரம்ப-கடைசி வரிகளில்அஞ்ஞான நிவ்ருத்தியையே சொல்லியிருக்கிறார். ”தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா” என்றவர் அடுத்தாற் போல”ஜந்ம ஜலதௌ நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி” என்று சொல்லி முடித்திருக்கிறார்.

‘பிறவிப் பெருங்கடல்‘ என்று திருவள்ளுவர் சொல்கிறாரே, அதுதான் ‘ஜன்ம ஜலதி’. ‘பொய்ம் மாயப் பெருங்கடல்‘என்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிற (‘திருவாரூர் திருத்தாண்டக’த் தொடக்கம்). ஸம்ஸார ஸாகரமும் அதுதான். அதிலே நாம் அப்படியே முழுகிப் போயிருக்கிறோம். ”நிமக்நாநாம்” என்றால் ‘முழுகிப்போனவர்களுக்கு’. ஸம்ஸாரஸாகரத்தில் முழுகிப் போனவர்களுக்கு அம்பாளுடைய பாததூளி என்னவாக இருக்கிறது என்றால், – ”முரரிபுவராஹஸ்ய தம்ஷ்ட்ரா பவதி”: வராஹமாக வந்த மஹாவிஷ்ணுவின் கோரைப் பல்லாக இருக்கிறது. ‘தம்ஷ்ட்ரம்’என்றால் கோரைப் பல். வராஹாவதாரத்தின் கோரைப் பல்லாக இருக்கிறதென்று சொன்னால் என்ன அர்த்தம்?

சில்பங்களில் பார்த்தால் தெரியும் – பூவராஹ ஸ்வாமி பூமாதேவியைக் கோரைப் பல்லின் மேலேதான் தூக்கி வைத்துக்கொண்டிருப்பார். ஹிரண்யாக்ஷன் பூமா தேவியை அபஹரித்துக் கொண்டு போய் ஒரு பெரிய ஸமுத்ரத்துக்குள்ளேஒளித்து வைத்துவிட்டான்! அப்போது ஸ்வாமி வராஹாவதாரம் பண்ணிக் குடைந்து கொண்டு போய் அந்தபூமாதேவியை — பூமியைத்தான் — தன்னுடைய அழகான கோரைப் பல்லால்தான் நெம்பியெடுத்து அப்படியே அதன்உச்சியில் நிறுத்திக் கொண்டு வெளியிலே கொண்டுவந்து விட்டார். அப்படி, ஸம்ஸார ஸாகரத்தில் முழுகியுள்ளநம்மையெல்லாம் அதிலிருந்து வெளியிலே கொண்டுவந்து தூக்கி நிறுத்தும் கோரைப் பல்லாக அம்பாளின் சரணபாம்ஸு [பாததூளி] இருக்கிறது: ‘‘ஜந்ம ஜலதௌ நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி.”

விஷ்ணுவின் அவதாரமான வராஹம் என்பதற்கு ‘முரரிபு வராஹம்’ என்று போட்டிருக்கிறார். முரன் என்ற அஸுரனைஸம்ஹரித்தவராகையால் ‘முரரிபு’ என்று பேர். ‘முராரி’ என்றாலும் அதே அர்த்தந்தான். [ரிபு, அரி என்ற இருபதங்களுக்கும் விரோதி என்று அர்த்தம்.] முரன் நரகாஸுரனின் கூட்டாளி. க்ருஷ்ண பரமாத்மாதான் நரகாஸுர வதஸமயத்தில் அவனுக்கு ஸஹாயமாக வந்த இவனையும் வதம் செய்தார். மஹாவிஷ்ணுவின் ஸாக்ஷாத் நாமாக்களில்எதையும் சொல்லாமல் முந்தைய ச்லோகத்தில் க்ருஷ்ணாவதாரத்தில் ஏற்பட்ட சௌரி என்ற பேரைச் சொன்னாற்போலேயே இங்கேயும் முரரிபு என்று போட்டிருக்கிறார். ஆசார்யாளுக்கு க்ருஷ்ணாவதாரத்திடம் ஒரு அலாதியானபக்தி உண்டு என்ற அபிப்ராயத்திற்கு இந்த மாதிரியான சான்றுகள் பலம் கொடுக்கின்றன.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: