Navarathri Special – Day 5 – இருட்டைப் போக்கடிக்கும் கறுப்பு!


ஒரே ஜகத்ஜ்யோதிப் பிரவாஹமாக கிரீட வர்ணனையை ஆரம்பித்த ஆசார்யாள் அதே ச்லோகத்தில் (43)  போகப் போகcooling glass போட்டுக் கொள்வது போல பனிமலை, பனிமதி இவற்றைச் சொல்லி மழைக் காலத்திலேயே தோன்றும்வானவில்லோடு முடித்தார். அடுத்ததில் முழு மாற்றாகக் கன்னங்கரேல் என்றிருக்கும் அம்பாளுடைய கேசபாரத்தைவர்ணிக்கிறார்.

धुनोतु ध्वान्तं नस्तुलितदलितेन्दीवरवनं
घनस्निग्धश्लक्ष्णं चिकुरनिकुरुम्बं तव शिवे ।
यदीयं सौरभ्यं सहजमुपलब्धुं सुमनसो
वसन्त्यस्मिन् मन्येवलमथनवाटीविटपिनाम् ॥

துநோது த்வாந்தம் நஸ் – துலித – தலிதேந்தீவர – வநம்க
ந – ஸ்நிக்த – ச்லக்ஷ்ணம் சிகுர – நிகுரும்பம் தவ சிவே |
யதீயம் ஸெளரப்யம் – ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸ:
வஸந்த் – யஸ்மிந் மந்யே வலமதந – வாடீ – விடபிநாம் || 1

“சிவே!” என்று அவளுடைய பரம மங்கள ஸ்வரூபத்தைச் சொல்லிக் கூப்பிடுகிறார். “த்வாந்தம் துநோது” என்றால்“இருளைப் போக்கடிக்கட்டும்” என்று அர்த்தம்.

அதுதான் கிரீடத்தை ஏகப் பிரகாசமானதாகச் சொல்லியாகி விட்டதே; இருட்டு எங்கேயிருந்து வந்தது?

இது வெளி இருட்டு இல்லை, உள்ளிருட்டு. அத்தனை பேரையும் பிடித்தாட்டும் அஞ்ஞானம் என்ற இருட்டு. “அவித்யானாம் அந்தஸ்திமிரம்” என்று ஆரம்பத்திலேயே [ச்லோ-3] சொன்ன இருட்டு.

“துநோது த்வாந்தம் ந:” என்பதில் “ந” என்றால் ‘நம்முடைய’: “நம் எல்லோருடைய அஞ்ஞான இருட்டையும்போக்கட்டும்.” எல்லாருக்காகவும் ஆசார்யாள் பிரார்த்தனை பண்ணுகிறார். அவரோ ஞான ஜ்யோதிஸ்ஸாக இருந்தவர்.அஞ்ஞான இருள் அவர் கிட்டேயே வரமுடியாது. ஆனாலும் நமக்காக நம்மோடு சேர்ந்து பிரார்த்தனை பண்ணுகிறார். இங்கே “துநோது த்வாந்தம் ந:”– “நம் எல்லோர் அஞ்ஞானமும் போகட்டும்” என்று ஆரம்பிக்கிறவர், அடுத்தச்லோகத்தில் “தநோது க்ஷேமம் ந:” – “நம் அனைவருக்கும் க்ஷேமத்தைக் கொடுக்கட்டும்” என்று ஆரம்பிக்கிறார்.

அஞ்ஞான தமஸை எது போக்கடிக்க வேண்டும் என்கிறார்? அம்பாளுடைய ஜ்யோதி ஸ்வரூபமா? இல்லை, இதுதான்வேடிக்கை! இரண்டாம் வரியில் வரும் “தவ சிகுர நிகுரும்பம்” என்பதுதான் இருட்டைப் போக்கடிக்க வேண்டிய வஸ்து. “தவ” என்றால் ‘உன்னுடைய’;அம்பாளுடைய. “சிகுரம்” – ‘கேசம்’. “நிகுரும்பம்” – ‘தொகை’, ‘கூட்டம்’, ‘அடர்த்தியாகப்பலது சேர்ந்த ஒன்று’. ‘சிகுர நிகுரும்பம்’ என்றால் நல்ல அடர்த்தியாகச் சேர்ந்திருக்கிற கேச பாரம். அப்படிப்பட்டதான பரதேவதையின் கேச பாரந்தான் நம் இருட்டைப் போக்கணும் என்கிறார்.

கேசமே கறுப்பாக இருப்பதல்லவா? அது இருட்டை உண்டு பண்ணத்தானே செய்யும்? ஒருவேளை அம்பாள் காலம்தோன்றுவதற்கு முன்பே தோன்றியவளானதால் நல்ல கிழவியாக தலையெல்லாம் ஒரே நரையாய் வெள்ளைவெளேரென்று இருந்து அது இருட்டைப் போக்கட்டுமென்று நாம் நினைத்தாலும் தப்பு. தேவர்களுக்கு மூப்பு கிடையாதுஎன்பதால்தான் நிர்ஜரர், அஜரர் என்று பேர். தேவர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தினியாக இருக்கப்பட்டவளுக்கு எப்படிக்கிழடு ஏற்படும்?

அவளுக்கு மத்யம வயஸுக்கு, நடுத்தரப் பிராயத்துக்கு உள்ள சரீர முதிர்ச்சி கூட இல்லை. லோகத்துக்கெல்லாம்தாயாக இருந்தும் ஒரு கன்யாக் குழந்தைக்கு இருக்கிற கோமளமான, பால்யமான தேஹவாகுதான் அவளுக்குஇருக்கிறது. ‘அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே!என்கிறார்கள்2.

‘கன்னி’ என்று மறை பேசிற்றாம்! அதாவது இது வேதம் வைத்த பேராம். இப்படிச் சொன்னது ஆதாரத்தோடுதான். வேதத்தில் ஒவ்வொரு தேவதைக்கும் காயத்ரீ சொல்கிற போதுதான் ஸாக்ஷாத் துர்கா பரமேச்வரியின் காயத்ரீயில்அவளை ‘கன்யாகுமாரி’ என்றே சொல்லியிருக்கிறது.

அதனால் அவளுடைய கூந்தல் கறுப்பாகத்தான் இருக்கும். ஸந்தேஹத்துக்கு இடம் தராமல் இப்படித்தான் இங்கேஆசார்யாளும் வர்ணித்திருக்கிறார்: “துலித – தலித – இந்தீவர – வனம்” என்கிறாரே, இதை ‘தலித – இந்தீவர – வனதுலிதம்’ என்று மாற்றிக் கொள்ள வேண்டும். ‘அன்றலர்ந்த கருநெய்தல் புஷ்பக் காட்டுக்கு ஸமமானது’ அவளுடையகேச பாரம் என்று அர்த்தம். பளபளவென்று, கன்னங்கரேலென்று இருக்கிறது அம்பாளின் கூந்தல் “கன – ஸ்நிக்த – ச்லக்ஷ்ணம்” – ‘கனம்’ என்றாலும் ‘கார்மேகம் மாதிரி’ என்று வைத்துக் கொள்ளலாம். ‘கன ச்யாம்’ என்று கிருஷ்ணனைச்சொல்லும்போது ‘கனம்’ என்றால் கார்மேகம் என்றே அர்த்தம்.அல்லது ‘கனம்’ என்றால் தலை மயிரின் அடர்த்தியை, dense-ஆக இருப்பதைச் சொல்வதாகவும் வைத்துக் கொள்ளலாம். ‘ஸ்நிக்தம்’ என்றால் நன்றாக தைலம் போட்டுதேய்த்து பளபளப்பது என்று அர்த்தம். ஸ்நேஹம், ஸ்நேஹிதன் என்கிறோமே, அது ‘ஸ்நிக்’ தாதுவிலிருந்துவந்ததுதான். எண்ணெய்ப் பிசுக்கு ஒட்டிக் கொள்கிற மாதிரி, ‘சிக்கெனப் பிடித்தேன்’ என்றபடி, மனஸோடு மனஸ்ஒட்டியிருப்பதுதான் ஸ்நேஹிதம். இங்கே சிக்கு, பிசுக்கு இல்லாமல் அம்பாளின் தலைமயிரைத் தைலம் போட்டுநன்றாக வாரிவிட்டிருப்பதாக அர்த்தம். “ஸ்நிக்தம்” என்றால் ‘மிருதுவான’ என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அப்புறம் “ச்லக்ஷ்ணம்” என்று இன்னொரு அடைமொழி. “ச்லக்ஷ்ணம்” என்றால் சிடுக்கு, கிடுக்கு இல்லாமல் நன்றாகவழவழவென்று இருப்பதாக அர்த்தம். கருநெய்தல் காடாக பட்டுப்போல, பளபளக் கறுப்பாக, அடர்த்தியாக, மிருதுவாக,வழவழப்பாக இருக்கிறது என்று ஒரு செயினாக வர்ணித்துக் கொண்டே போகிறார்! முன் ச்லோகத்தில் கெட்டியானதங்கக்கிரீடத்தை கடினமான வார்த்தைகளால் சொன்னவர் இங்கே “துலித – தலித – இந்தீவர – வனம்’, “கன – ஸ்நிக்த – ச்லக்ஷ்ணம்” என்ற வார்த்தைகளையும் மழமழவென்று ஸில்க் மாதிரிப் போட்டிருக்கிறார். அத்வைத வேதாந்ததத்வவாதியான ஆசார்யாள் கவிகளுக்கெல்லாம் கவியாகவும் இருப்பவர்.

அம்பாளின் கேசத்துக்குக் குளிர்ச்சியான கருநெய்தலின் நிறம், மென்மை முதலியவை மட்டுந்தான் உண்டா? இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. அதுவே மூன்றாம் வரியில் சொல்கிற “ஸஹஜ ஸெளரப்யம்’ – அதாவது‘இயற்கையான வாஸனை’.

பூ வைத்துக் கொள்ளாமலே, ஸ்வாபாவிகமாவே, அம்பாளின் கேசம் திவ்ய பரிமளம் வீசுகிறதாம்.

அம்பாள் கேசத்துக்கு இயற்கையாக வாஸனை கிடையாது என்று நக்கீரர் பிடிவாதமாகச் சொல்லி ஈச்வரன் நெற்றிக்கண்ணைக் காட்டியும் ஒப்புக் கொள்ள முடியாது என்று ஆக்ஷேபித்து அந்த அபசாரத்தினால் வியாதிக்கு ஆளாகிஅப்புறம் ‘திருமுருகாற்றுப்படை’ பாடி மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஸ்வஸ்தமானார் என்று நம் பக்கத்தில் பிரஸித்தமாகவிருத்தாந்தம் இருக்கிறது.

ஆசார்யாள் நிஸ்ஸந்தேஹமாக “ஸஹஜ-ஸெளரப்யம்” – ‘ஸஹஜமாகவே, இயற்கையாகவே ஸுகந்தம் பொருந்தியது’என்று சொல்லிவிட்டார்.

திரயம்பக மந்திரத்தில் ‘ஸுகந்தி’ என்று ஈச்வரனுக்கே பேர் சொல்லியிருக்கிறது. ‘ஸெளந்தர்ய லஹரி’த் தொடர்புநிறைய உள்ள மலைக்கோட்டைக் கோவிலில் தேவி ஸுகந்திதான் – ஸுகந்த குந்தளாம்பிகை. குந்தளம் என்றாலும்கேசபாரம்தான்.

இப்போதும் சில இடங்களில் அம்பாள் பூஜை, உபாஸனை நன்றாக ஸித்தித்து அவள் ஆவிர்பாவம் தெரிகிறபோது “ஒரேதாழம்பூ வாஸனை வந்தது!” என்றுதான் சொல்லக் கேட்கிறோம்.

இப்படிப்பட்ட ஸ்வயமாகவே பரிமளமுள்ள கேசத்தில் இந்திரனுடைய நந்தவனத்துப் புஷ்பங்களையும் சூட்டிக்கொண்டிருக்கிறாள். முதல் ச்லோகத்தில் இந்திர தநுஸைக் கிரீடத்தில் பார்த்தோம். இப்போது அவனுடைய உத்யானவனத்துப் புஷ்பங்களைக் கேசத்தில் பார்க்கிறோம்.

‘வலமதனன்’ என்றால் வலாசுரன் என்பவனை அழித்த இந்திரன். “வலமதன வாடீ” – இந்திரனுடைய தோட்டம். “வாடீவிடபிநாம்” என்றால் அந்தத் ‘தோட்டத்து மரங்களுடைய’. ‘விடபம்’ என்றால் மரம். “ஸுமனஸ:” என்று மூன்றாம்வரியில் வருவதை இங்கே சேர்க்க வேண்டும். ‘ஸுமனஸ்’ என்றால் பொதுப்படையாகத் தோன்றும் அர்த்தம். ‘நல்லமனமுள்ளவர்’ என்பது குறிப்பாக ‘ஸுமனஸ்’ என்பது தேவஜாதியைக் குறிக்கும். புஷ்பத்துக்கும் ‘ஸுமனஸ்’ என்று பெயர்.எப்படி ஒரு நல்ல மனஸ் தன்னால் மலர்ந்து ஒரு ப்ரதிப் பிரயோஜனமும் எதிர்பார்க்காமல் அன்பைப் பரப்புகிறதோஅப்படி புஷ்பமானது மலர்ந்து நல்லவர் கெட்டவர் என்று பேதம் பாராமல் எல்லாருக்கும் மணம் பரப்புவதால் இப்படிபேர். இங்கே ‘வலமதன வாடீவிடபினாம் ஸுமனஸ:” என்று சேர்த்து, தேவேந்திரனுடைய தோட்டமான நந்தனவனத்திலிருக்கும் மந்தாரம், பாரிஜாதம் முதலான விருக்ஷங்களின் புஷ்பங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

“அம்பாள் கேசத்திற்கேதான் தன்னால் வாஸனை இருக்கே, எதற்கு இந்தப் புஷ்பங்களை சூட்டிக் கொள்ள வேண்டும்?வாஸனைக்காக இல்லாமல், பூ ஸரம் பார்க்க அழகாயிருக்கே என்று அதற்காக வைத்துக் கொண்டிருக்கிறாளா? சிலபேர் பார்வையில் கோளாறு இல்லாமலே அழகுக்காக மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்கிறார்களாமே, அப்படிஇவள் பூ வைத்துக் கொண்டிருக்கிறாளா?”

அதெல்லாம் இல்லை. இவள் ஆசைப்பட்டு வைத்துக் கொள்ளவே இல்லை. அந்தப் புஷ்பங்கள்தான் ஆசைப்பட்டுஇவளுடைய கேச பாரத்தை வந்தடைந்திருக்கின்றன.

“அவற்றுக்கு என்ன ஆசை?” “யதீயம் ஸெளரப்யம் ஸஹஜம் உபலப்தும்” – இதுதான் தேவ லோகத்துப் பூக்களின் ஆசை. ‘யதீயம்’ – ‘கேசத்துடைய’; “ஸெளரப்யம் ஸஹஜம்’” – ‘இயற்கை மணத்தை’; “உபலப்தும்” – ‘கிட்ட இருந்து தாங்களும்அடையவேண்டும் என்று’ – இதுதான் புஷ்பங்களின் ஆசை. ‘லப்தும்’ என்றால் ‘அடைய’. எங்கேயோ இருந்து கொண்டுவாஸனைப் பிடித்து மட்டும் அடையாமல், அன்போடு பக்கத்தில் போய் கேச பாரத்திலேயே இருந்து கொண்டு அடையஆசைப்பட்டதைத்தான் ‘லப்தும்’ என்று மட்டும் சொல்லாமல் “உப-லப்தும்” என்று இரண்டு எழுத்தைச் சேர்த்துத்தெரிவித்திருக்கிறார். “வஸந்தி அஸ்மின்” என்று கடைசி வரியில் வருகிறது. “வஸந்த்யஸ்மின்” என்று வருவதைஇப்படிப் பிரித்துக் கொள்ள வேண்டும். அதாவது அம்பாளுடைய கேசத்தின் இயற்கை மணத்தை நன்றாக அதிலேயேவஸித்துத் தாங்களும் பெற வேண்டும் என்பதற்காகவே தேவேந்திர வனத்துப் புஷ்பங்கள் அதிலேகுடியேறியிருக்கின்றன. “அஸ்மின்” அதில் (கேச பாரத்தில்); “வஸந்தி”-வஸிக்கின்றன. “மன்யே” – என்றால்“நினைக்கிறேன்”. ‘இப்படி நான் நினைக்கிறேன்’ என்று அர்த்தம்.

பூலோகத்துப் புஷ்பங்களான மல்லி, மனோரஞ்சிதம் முதலானவற்றின் வாஸனையையும் காலில் கட்டி அடிக்கிறதேவலோகத்துப் புஷ்பங்களும் அம்பாளுடைய கேசத்தின் ஸஹஜமான ஸுகந்தத்தைப் பெற விரும்பி, அவளுடையகூந்தலில் புஷ்ப ஸரங்களாக வந்து உட்கார்ந்து கொண்டு அழகு செய்கின்றன. அவை அவள் கேசத்துக்குமணமூட்டவில்லை; அவளுடைய கேசத்தின் மணத்தை அவை தங்களுக்குப் பெற்றுக்கொள்ளவே அதில்குடியேறியிருக்கின்றன! இப்படிப் பட்ட கேசம் நம் மன இருட்டைப் போக்கட்டும் என்கிறார். தான் கறுப்பாக இருந்துகொண்டே நம் மனக் கருமையைப் போக்க வல்லது அது. ஸுமனஸ்கள் அதில் வந்து வசித்து மேலும் உத்கர்ஷத்தைஅடைகின்றன என்பதால் நல்ல மனமுள்ள எல்லோருடைய தியானத்துக்கும் அது ஆச்ரயம் என்று ஏற்படுகிறது. ‘கிருஷ்ண கர்ணாம்ருத’த்தில் “நீலோபி நீரந்த்ர தம: ப்ரதீப:” – க்ருஷ்ணன் தானே கறுப்பாக இருந்தாலும் அஞ்ஞானஇருட்டைப் போக்கும் தீபமாக இருக்கிறான்3 என்று வருகிறது. அந்த மாதிரிதான் இதுவும்.

கறுப்பு கேசம் எப்படி மன இருளைப் போக்கும் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்காமல், ஆசார்யாள்வர்ணிக்கிறபடி நெருக்கமாக பூத்த கருநெய்தல் காடாக, குளிர்ந்தும், அடர்ந்தும், மிருதுவாகவும் பளபளப்பாகவும், வழவழப்பாகவும், தேவலோக புஷ்பங்களும் வந்து அழகு செய்வதாகவும் அல்லது அழகு பெறுவதாகவும், அவற்றின்வாஸனையையும் தூக்கி அடிக்கிற ஸுகந்தம் கொண்டதாகவும் ஸாக்ஷாத் ஸுகந்த குந்தளாம்பிகையின் கேசபாரத்தைத் தியானம் செய்து பார்த்தால் பதில் கிடைத்து விடும்.

கேசாதிபாதம் என்பதில் கேசம்தான் முதல். கிரீடத்தை முதலில் வர்ணித்தாலும் அது கேசத்தின் மேல் சூட்டியதே. கிரீடம் அவயவங்களில் சேர்ந்ததில்லை, அது ஆபரணம் தான். தேவீ விக்ரஹங்களில் பின்பக்கத்தைப் பார்த்தால்தெரியும் – கிரீடம் வைத்திருந்தாலும் பின் பக்கம் கழுத்துக்கு மேலே கேசபாரத்தைப் பிச்சோடா போட்டமாதிரிக்காட்டி அதில் அலங்காரங்கள் பண்ணியிருக்கும். அதைத்தான் இங்கே வர்ணித்திருக்கிறார்.

குந்தள நாயகி (திருக்குழல் நாயகி), ப்ரமர குந்தளாம்பாள் (வண்டார் குழலியம்மை), நீல குந்தளாம்பிகை (கருந்தாள்குழலி), புஷ்ப குந்தளாம்பாள் (பூங்குழலம்மை), அஞ்ஜன குந்தளாம்பாள் (மைவார் குழலி), ஸுகந்த குந்தளாம்பிகை(மட்டுவார் குழலியம்மை) என்றிப்படி கேச விசேஷத்தை வைத்தே அநேக க்ஷேத்ரங்களில் அம்பாளுக்குப் பேர்ஏற்பட்டிருக்கிறது. ஸஹஸ்ரநாமத்தில் கேச விசேஷத்தை குறிப்பதாக முதலில் “சம்பகாசோகபுந்நாக ஸெளகந்திகலஸத் கசா” என்றும், அப்புறம் “நீல சிகுரா” என்றும் வருகிறது. முதல் பேருக்கு சம்பகம், அசோகம், புந்நாகம், ஸெளகந்திகம் ஆகிய புஷ்பங்கள் விளங்கும் கேசத்தையுடையவள் என்று அர்த்தம். “நீல சிகுரா” என்றால் கருங்குழலி. “த்ரிசதி”யில் “ஏலாஸுகந்தி சிகுரா” (ஏலவார் குழலி) என்று நாமா சொல்லியிருக்கிறது. இப்படிப்பட்ட அம்பாளுடையகேச பாரத்தைத் தியானம் பண்ணி நம் க்லேச பாரத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Attn: Mahesh Garu, text flows beyond border and behind right pics which results us to miss a lot of info from the article. Can you please kindly look in it?

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: