
இன்று இந்த அழகான ஸ்வரூப வர்ணணையைப்பார்க்கலாம்
क्वणत्काञ्चीदामा करिकलभकुंभस्तननता
परिक्षीणामध्ये परिणतशरच्चन्द्रवदना ।
धनुर्बाणान् पाशं सृणिमपि दधाना करतलैः
पुरस्तादास्तां नः पुरमथितुराहोपुरुषिका ॥ 7॥
க்வணத்-காஞ்சீ-தாமா கரி-களப-கும்ப-ஸ்தந-நதா
பரிக்ஷீணா மத்யே பரிணத-சரச்சந்த்ர-வதநா |
தநுர்-பாணாந் பாசம் ஸ்ருணிமபி ததாநா கரதலை:
புரஸ்தாத் ஆஸ்தாம் ந: புரமதிது-ராஹோபுருஷிகா | |
[ (க்வணத்) கிலுகிலுக்கும் (காஞ்சீதாமா) மணிச்சிலம்புகள் அமைந்த ஒட்டியாணச் சரட்டை அணிந்தவளும், (கரி-களப-கும்ப-ஸ்தந-நதா) யௌவனமான யானையின் கும்பத்தை [தலையிள்ள குடம் போன்ற புடைப்பை] நிகர்த்த நகிலால் வணங்கிய [உடலுள்ள]வளும், (மத்யே) இடைப்பிரதேசத்தில் (பரிக்ஷீணா) மிகவும் நுண்ணியவளும், (பரிணத-சரத்-சந்த்ர-வதநா) சரத் காலத்துப் பூர்ண சந்திரன் போன்ற முகத்தினளும், (தநுர் பாணான் பாசம் ஸ்ருணிம் அபி) வில், அம்பு இவற்றோடு பாச அங்குசங்களையும் (கரதலை:) கைத்தலங்களில் (ததாநா) பிடித்துக் கொண்டிருப்பவளும், (புரமதிது:) திரிபுரங்களை அழித்தவனின் [சிவபெருமானின்] (ஆஹோபுருஷிகா) அஹங்கார வடிவானவளுமானவள் [அதாவது அம்பிகை] (ந:) நமக்கு (புரஸ்தாத்) எதிரே (ஆஸ்தாம்) எழுந்தருளட்டும்.] க்வணத் காஞ்சீ தாமா – ‘க்வணத்’ என்றால் சலங்கை கிணுகிணு என்று ஓசை பண்ணுவது. சப்தத்தை வைத்தே வஸ்துவுக்குப் பெயர் சொல்லும் ‘சப்தாநுகரண’ வார்த்தை, சலங்கை கட்டிய ஒட்டியாணத்திற்குக் ‘காஞ்சீ’ என்று பெயர். வெறும் ஒட்டியாணம் ‘மேகலை’. அதிலே சலங்கை கட்டியிருந்தால் ‘காஞ்சீ’. ஸஹஸ்ரநாமத்தில் “ரணத் கிங்கிணி மேகலா” என்று ”க்வணத் காஞ்சீ தாம”த்தையே தான் சொல்லியிருக்கிறது. சலங்கையை மணி என்றும் சொல்வதுண்டு. அதனால் காஞ்சியை மணிமேகலை என்றும் சொல்வது. க்வணத் காஞ்சீ தாமா. ‘காஞ்சீ’ என்று சொன்னதிலேயே ஸ்தோத்ரத்தின் தேவதை லலிதாம்பாள் என்பதற்கு ‘ஹின்ட்’ இருக்கிறது. இந்தப் பெரிய தேசத்திலே தென் கோடிக் கன்யாகுமாரியிலிருந்து காஷ்மீரில் க்ஷீரபவானி வரையில் பகவதி, சாமுண்டேச்வரி, சாரதாம்பா, மீனாக்ஷி, அகிலாண்டேச்வரி, தர்மஸம்வர்த்தினி, கமலாம்பாள், பாலாம்பாள், சிவகாமஸுந்தரி, ஞானாம்பா, ப்ரமராம்பா, கனகதுர்கா, துளஜா பவாநி, அம்பாஜி, விந்த்யவாஸினி, அன்னபூர்ணேச்வரி, காளி, காமாக்யா வைஷ்ணவி 1 என்றிப்படி அம்பாள் மூர்த்தங்களிலிருந்தாலும் ஸ்ரீவித்யா தந்த்ரத்தில் சொல்லியிருக்கிறபடி லலிதா த்ரிபுரஸுந்தரிக்குரிய அங்க லக்ஷணங்களோடும் ஆயுதங்களோடும் உள்ள ஒரே மூர்த்தி காஞ்சீபுரத்தில் இருக்கும் காமாக்ஷிதான். அதனால்தான் ‘ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது’ என்று, இந்த ஸ்தோத்திரத்தில் எங்கேயுமே அவள் பேரைச் சொல்லாவிட்டாலும் ஊரையாவது சொன்ன மாதிரி இருக்கட்டுமென்று ”காஞ்சீதாமா” என்று போட்டார் போலிருக்கிறது! லோகத்தையே ஒரு ஸ்திரீ தேவதையாக – பூமா தேவி என்றுதானே சொல்கிறோம்? அப்படி – ஒரு ரூபத்தில் பார்த்தால் அப்போது அதன் மத்தியாக, அவளுடைய நாபி ஸ்தானமாக உள்ள இடமே காஞ்சீபுரம். ஒட்டியாணத்தின் முகப்பு நாபிக்கு மேலேயே வருமாதலால் ‘காஞ்சி’ என்று அந்த க்ஷேத்திரற்குப் பெயர் ஏற்பட்டது. காஞ்சீதாமா – ‘தாமம்’ என்றால் கயிறு மாதிரி இழைகளால் முறுக்கிய சரடு. யசோதை க்ருஷ்ணனின் உதரத்தைச் சுற்றிக் கயிற்றால் கட்டிப் போட்டதாலேயே ‘தாமோதரன்’ என்ற பெயர் வந்தது. சலங்கைகள் பூட்டிய மேகலாபரணமான காஞ்சியானது தங்க இழைகளை முறுக்கி அழகாகச் செய்யப்பட்டிருப்பதால் ‘காஞ்சீதாமா’ என்கிறார். அம்பாள் நடந்து வரும்போது பாதச் சிலம்பு மட்டுமில்லாமல் ஒட்டியாண மணிகளும் ஜல்ஜல் என்று சப்தம் பண்ணும். லோக மத்தியிலிருந்து ஆரம்பித்து ஒரு சுற்றுச் சுற்றி அதிலேயே முடிகிற ஒட்டியாணம் என்றால் அது ரொம்ப ரொம்பப் பெரிசாக இருக்க வேண்டும். அந்த நகைதான் அம்பாளுடைய இடுப்புப் பிரதேசத்தைச் சுற்றியிருப்பது என்றால் அந்த இடுப்பும் ரொம்ப விஸ்தாரமாயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் வாஸ்தவத்தில் பார்த்தால் எப்படி இருக்கிறது? பரிக்ஷீணா மத்யே அந்த இடுப்பு ரொம்ப மெலிந்ததாக இருக்கிறது! ‘க்ஷீணம்’ – மெலிந்த. ‘பரி’ என்று முன்னாடி சேர்த்ததால் ‘ரொம்பவும் மெலிந்த’ என்று அர்த்தம். அப்படி இருப்பதுதான் உத்தம ஸ்த்ரீ லக்ஷணம். துடியிடை, கொடியிடை என்றெல்லாம் சொல்வார்கள். விசித்ரமெல்லாம் அவளிடம் ஒன்று சேர்கின்றன! அணுவுக்குள் மஹத் என்றபடி துடியிடைக்குள்ளே எல்லா லோகங்களும் இடுப்பழகு இருக்கட்டும். அவளுடைய முகம் எப்படி இருக்கிறது? அதல்லவா ஸர்வாங்கங்களிலும் முக்யம்? ‘முக்யம்’ என்பதே ‘முகம்’ என்ற வார்த்தையிலிருந்துதான் வந்திருக்கிறது! ‘எண் சாணுடம்புக்கு சிரஸே பிரதானம்’ என்கிறோம். அந்தப் ‘பிரதான’ந்தான் ‘முக்யம்’ என்பதன் அர்த்தமாகவுமிருக்கிறது! அம்பாளுடைய முகம் எப்படியிருக்கிறது? பரிணத சரச் சந்த்ர வதநா ‘பரிக்ஷீணா’ என்பதில் ‘பரி’ என்று அந்த வரியின் முதல் பாதியை ஆரம்பித்தாற்போலவே இரண்டாம் பாதியையும் ‘பரி’ணத என்று ஆரம்பித்திருக்கிறார். இம்மாதிரி இயற்றுவது கவிதைக்கும் அழகு, ஞாபகம் வைத்துக் கொள்ளவும் வசதி. லலிதா ஸஹஸ்ரநாமத்தில் கூட இப்படி நிறைய வரும். ‘மோனை’ என்று இந்த அணிக்குப் பெயர். அம்பாள் முகத்தை வர்ணிக்கும்போது ‘பரிணத சரத் சந்த்ர வதநா‘ என்கிறார். சந்திரன் போன்ற வதனம். அதிலும் விசேஷமான தாவள்யத்தோடும் [வெண்மையோடும்] ஹித சீதளத்தோடும் இருக்கிற சரத்கால சந்திரன் போன்றது. ‘பரிணத’ என்றால் ‘முழு வளர்ச்சி அடைந்த’. அதாவது பூர்ணிமை சந்திரன். சரத்காலத்துப் பூர்ணிமை சந்திரனைப் போல அம்பாளின் முகம் சுப்ரமாக, ப்ரகாசமாக, அருள்நிலவை ஜில்லென்று பொழிவதை ‘ஹின்ட்’ பண்ணுகிறார். பிற்பாடு ”ஸ்மித ஜ்யோத்ஸ்நா ஜாலம் தவ வதந சந்த்ரஸ்ய பிபதாம்” என்ற ச்லோகத்திலும் இதே கருத்தை ரொம்பவும் ஸ்வாரஸ்யமாக விவரித்திருக்கிறார். 2 மேகலாபரணம், அதை அணிந்த இடுப்பு, முக்யமான முகம் ஆனவற்றைச் சொல்லியாயிற்று. ஹஸ்தங்களைச் சொல்ல வேண்டாமா? ஒவ்வொரு தேவதைக்கும் எத்தனை ஹஸ்தம், அதில் என்ன ஆயுதம் என்பதை வைத்துத்தான் அது குறிப்பாக இன்ன தேவதை என்று நிர்ணயம் பண்ணுவதே. அதைச் சொல்கிறார். தநுர்-பாணாந் பாசம் ஸ்ருணிமபி ததாநா கரதலை: தநுஸையும் பாணத்தையும் பாசத்தையும் அங்குசத்தையும் (‘ஸ்ருணி’ என்றால் ‘அங்குசம்’) கரதலங்களில் தரித்துக் கொண்டிருக்கிறாள் என்கிறார். ஸ்ரீவித்யா தந்த்ரத்தின் அதிதேவதைக்கு இதுதான் முக்ய அடையாளம். லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி, காமேச்வரி என்பது அவள் பெயர். ரொம்ப ‘டெக்னிக’லாகப் பார்க்காவிட்டால் ராஜராஜேச்வரி என்பதும் அவள்தான். அம்பிகை இப்படி உள்ளபோது அவளுக்கு நாலு ஹஸ்தங்கள் — மேல் இரண்டில் பாசம், அங்குசம்; கீழ் இரண்டில் தநுஸு, பாணம். மன்மதனுடைய அதே கரும்பு வில்லும், புஷ்ப பாணமும். ராகம்-த்வேஷம் என்று இரண்டு. விருப்பு-வெறுப்பு என்பவை. ராகம்-விருப்பு, த்வேஷம்-வெறுப்பு. வேண்டும்-வேண்டாம், கொள்ளுவது-தள்ளுவது என்று செய்யச் செய்கிற இரண்டு உணர்ச்சிகள். நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் ராக-த்வேஷம் என்ற இரண்டுக்குள்ளேயே லோக வாழ்க்கை பூராவும் அடங்கிவிடுகிறது என்று தெரியும். ராக-த்வேஷம் என்பதையே காம-க்ரோதம் என்றும் சொல்வது. இரண்டையும் அடக்கிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இவையும் அம்பாளின் மாயா லீலையில் உண்டானவையே; அவளுடைய அநுக்ரஹ லீலையில் மறைந்து போகிறவையே — அந்த அநுக்ரஹத்தால்தான் மறைகிறவை — என்று ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாலே அவற்றை அடக்கிக் கட்டிவிடலாம். ”ராக ஸ்வரூப பாசாட்யா” — ‘ஆசை வடிவான பாசத்தை உடையவள்’; ”க்ரோதாகாராங்கு சோஜ்ஜ்வலா” — ”க்ரோத ஆகார அங்குச உஜ்ஜ்வலா” – ‘கோபரூபமான அங்குசத்தால் பிரகாசிப்பவள்’ என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது. காம-க்ரோதங்களில் காமத்திற்கு ரூபகமாயிருப்பது அம்பாளுடைய பாசம். பாசம் என்றால் கயிறு. யமன் வீசுகிற கயிற்றை யம பாசம் என்கிறோமல்லவா? ‘ஆசை’ என்பதற்கும் ‘பாசம்’ என்கிறோம். தாய்ப்பாசம் என்கிறோம். ஆசைதான் காமம். கயிறு போட்டுக் காட்டுகிற மாதிரி ஆசை நம்மை பந்தப்படுத்துகிறது. க்ரோதத்திற்கு ரூபகம் அங்குசம். கோபம் என்பது அங்குசத்தால் போட்டுக் குத்துகிற மாதிரியானது. அம்பாள் பாசாங்குசையாக இருப்பதற்கு ஒரு விளக்கம் — இவையுங்கூட அவள் லீலை, அவளுடைய மாயையின் பிரதான அங்கங்கள் என்று பார்க்க வேண்டும் என்பது. இன்னொரு விளக்கம் — அம்பாள் நம்மிடம் பாசம் வைத்து, தன் கையிலுள்ள பாசத்தால் நம்மைக் கட்டி நம்முடைய மற்ற பாசங்களிலிருந்து இழுத்து அவளை ஆசையுடன் ”அம்மா!” என்று கட்டிக் கொள்ளும்படிப் பண்ணுகிறாள்; ‘பற்றற்றான் பற்‘றைத் தருகிறாள்; அதேபோல, நம்முடைய கோபத்தின் மேல் அவள் கோபித்துக் கொண்டு, அந்தக் கோபத்திற்கு உருவமான அங்குசத்தால் அதைக் குத்தி அடக்கி சாந்தமாக்குகிறாள் என்பது. இந்த இரண்டையும் சொல்லிவிட்டு அப்புறமே தநுர் பாணங்களைப் பற்றி ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. பொதுவாகச் சொல்வது ‘தநுர்-பாண-பாசாங்குசம்’ என்றாலும், மாற்றி பாசாங்குசத்தை முதலிலும் அப்புறம் தநுர் பாணத்தையும் சொல்லியிருக்கிறது. இதுதான் யுக்தமாகவும் தெரிகிறது. முதலில் ‘தநுர் பாணம்’ என்றால் அந்த இரண்டும் மன்மதனுக்கே முக்யமாக நினைக்கப்படுபவையல்லவா? அதையே அம்பாளுக்கும் சொன்னால் அவளுடைய முக்யத்வம் தெரியாது. அது மாத்திரமில்லை. மன்மதனால் ஏற்படும் ஸ்ருஷ்டிக்கு, பந்தத்துக்கு அம்பாள்தான் நிஜமான காரணம் என்பதால் அந்த இரண்டு [ஆயுதங்கள்] இவள் கையிலிருந்தாலும், பந்த மோசனியும் அவள்தான் என்பதை மறக்கவிடக் கூடாது. மன்மதனின் தநுர்-பாணங்களேகூட அவள் கைக்கு இடம் மாறியபோது பந்தமோசனத்தைக் குறிப்பவைதானென்றாலும் — இந்த விஷயத்திற்கு அப்புறம் வருகிறேன் — அந்த இரண்டை முதலில் சொன்னால் மன்மதனுக்கு இவள் ஒரு காப்பிதான் என்ற மாதிரியான எண்ணமே ஏற்படும். அப்படி ஆகாமலிருக்கத்தான் அம்பாளுக்கென்றே புவநேச்வரி முதலான ரூபங்களில் உள்ள பாசாங்குசங்களை முதலில் சொன்னது. அநேக காமங்களில் ஒன்றான ச்ருங்கார காமத்திற்கு மாத்திரம் (அதுதான் ரொம்ப வலிமையாக ஒருத்தனைச் சறுக்கிவிழப் பண்ணுகிறது என்பதால்) இக்ஷுதநுஸ், புஷ்ப பாணங்கள் என்று தனியாக வைத்திருக்கிறதென்றால், அத்தனை விதமான காமத்திற்குமாகப் பாசத்தையும், அது மாத்திரமில்லாமல் அதற்கு எதிர்ச் சக்தியான கோபத்தைக் காட்டுவதாக அங்குசத்தையும் வைத்திருக்கிறது. அவற்றை முதலில் சொல்லிவிட்டால் அவளை நன்றாகத் தெரியப் பண்ணுவதாக — இன்ட்ரொட்யூஸ் பண்ணுவதாக — ஆகிறது. காமத்தின் நிறைவேறாத ரூபந்தான் க்ரோதம். ஆசை நிறைவேறவில்லை, தோற்றுப் போச்சு என்றாலே கோபம் உண்டாகிறது. அவளிடமே ஆசை, கோபத்திடம் கோபம் என்று அர்த்தம் பண்ணும்போது அந்த பாசாங்குசமே பந்த மோசனமும் ஆவதால் அம்பாள் தத்வத்தை முற்றிலும் சொன்னதாக ஆகிவிடுகிறது. ராகத்திற்குப் பாசம், க்ரோதத்திற்கு அங்குசம் என்று சொன்னதற்கப்புறம் ஸஹஸ்ரநாமத்தில் ”மநோ-ரூபேக்க்ஷு கோதண்டா”, ”பஞ்ச தந்மாத்ர ஸாயகா” என்று இரண்டு பெயர்கள் தநுஸையும் பாணத்தையும் குறித்துச் சொல்லியிருக்கிறது. ”மனஸின் ரூபமான இக்ஷுகோதண்டம் (கரும்பு வில்)”, ”ஐந்து தன்மாத்ரைகளின் ரூபமான பாணங்கள்” — ”இவற்றை உடையவள்” என்று அர்த்தம். ‘தன்மாத்ரை’ என்றாலும் இங்கே தன்மாத்ரைகளை அநுபோகம் பண்ணும் பஞ்சேந்திரியம் என்றுதான் அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். மன்மதனின் கையில் உள்ள இரண்டேதான். அவனைத் தன்னுடைய அதிகாரியாகக் கொண்டு லோகத்தில் சிற்றின்பக் காமத்தை உண்டுபண்ணுபவள் அகிலாண்ட சக்ரவர்த்தினியான அம்பாள்தான் என்று தெரியப்படுத்துவதற்காக அந்த இரண்டும் இவளிடமும் இருக்கின்றன. ஆனால் அது மட்டுமில்லை. பாசாங்குசங்கள் எப்படி பந்தம், மோக்ஷம் இரண்டையும் காட்டுவதாகச் சொன்னேனோ, அப்படியே இந்த இரண்டுங்கூட! மன்மதன் கையிலுள்ள போது சிற்றின்பக் காமத்தில் மநுஷ்யனின் மனஸை அந்த தநுஸும், பஞ்சேந்திரியங்களை அந்த பஞ்ச பாணங்களும் தள்ளுகின்றனவென்றால், அம்பாளுடைய ஹஸ்தத்திலுள்ளபோதோ அதே தநுஸ் பேரின்பமான மோக்ஷகாமத்தில் மனஸை இழுத்துச் சேர்க்கிறது. அந்த பாணங்களும் மோக்ஷகாமத்தில் அம்பாளுடைய ஸ்தோத்ர கீர்த்தனங்களையே கேட்க வேண்டும், அம்பாளுடைய சரணாரவிந்தங்களை ஸ்பர்சிக்க வேண்டும். அவளுடைய ரூபத்தை தர்சிக்க வேண்டும், அவளுடைய சரணதீர்த்தாம்ருதத்தை ருசிக்க வேண்டும், அவளுடைய நிர்மால்ய புஷ்பங்களை வாரிப் போட்டுக்கொண்டு திவ்ய ஸுகந்தத்தை அநுபவிக்க வேண்டும் என்பதாகப் பஞ்சேந்திரியங்களையும் திருப்பி விட்டுப் பரிசுத்தப்படுத்திவிடுகின்றன. மன்மதனிடம் இருந்தபோது எந்த தநுர்பாணங்கள் நம் மனஸையும் புலன்களையும் வெளிமுகப்படுத்தி அல்பமான விஷய ஸுகங்களில் கொண்டு தள்ளிற்றோ, அந்த தநுர் பாணங்களே அம்பாளிடம் இருக்கும்போது அந்த விஷயங்களுக்குக் காரணமாகவும், நித்ய ஸுகமாகவும் இருக்கும் அவளிடம் நம் மனஸை, இந்திரியங்களைத் திருப்பிவிடுகின்றன. அதே ஆயுதங்கள்; இடம் மாறினதால் பிரயோஜனமே மாறி விடுகிறது! நம்மை தீர்த்துக் கட்டி விட வேண்டுமென்று திருடன் கத்தியைக் காட்டுகிறான்; அதே கத்தி நம் கைக்கு வந்துவிட்டால்? அவன் ஓட்டம் பிடிக்க வேண்டியதுதானே? மன்மதன் கையிலிருந்தபோது கருப்பஞ் சாறாகவும், புஷ்பங்களிலிருந்து தேனாகவும் காமரஸம் பொழிந்து லோகத்தை மயக்கிச் சிற்றின்பத்தில் சிக்க வைத்தது. அம்பாள் கையில் அதே இரண்டு ஆயுதங்கள் அவளுடைய கருணா ரஸத்தைப் பொழிகின்றன. ப்ரதியாக நமக்குத் தாயாரிடம் பக்திரஸம் பெருகுகிறது. அவளுடைய கருணையும் நம்முடைய பக்தியும் ஒன்று சேர்ந்து ஏற்படும் ஆனந்த ப்ரவாஹத்தில் தன்னை மறந்து பேரின்பத்தை அநுபவிக்கிறோம். தான் மயங்குவது மாயை — மஹா கெட்டது. தன்னை மறப்பது ஞானம் — நல்லதிலெல்லாம் நல்லது. இப்படி அம்பாளிடம் ஒன்றை இடம் மாற்றினால் நிக்ருஷ்டமானதே [நீசமானதே] உத்க்ருஷ்டமாகிறது [உயர்ந்ததாகிறது] என்பதைப் பார்க்கும்போது நாம் பண்ணிக் கொள்ளும் அலங்காரத்தையெல்லாம் இடம் மாற்றி அவளுக்குப் பண்ணிவிட்டால் உயர்ந்த ப்ரயோஜனத்தை அடையலாம் என்று புரியும். நாமே அலங்காரம் பண்ணிக் கொண்டால் அது அஹங்காரத்தை கொடுக்கிறது; அந்த அலங்காரத்தை அவளுக்குப் பண்ணிப் பார்த்தாலோ அது அஹங்காரத்தைக் கெடுக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இந்திரிய நிக்ரஹத்தை அம்பாள் கையிலுள்ள புஷ்ப பாணமும் மனோ நிக்ரஹத்தை இக்ஷுதநுஸும் அநுக்ரஹித்துவிடுகின்றன. இது ஏற்பட்டுவிட்டால் அப்புறம் ஞானந்தான், மோக்ஷந்தான். வேறே ஒன்றும் வேண்டாம்! அம்பாளுடைய சதுர்புஜங்களையும் ஒட்டியாணத்தையும் ஸூக்ஷ்மமான இடுப்பையும் சரச்சந்த்ர வதனத்தையும் வர்ணித்துவிட்டு — இது அவயவ ஸ்வரூபம், இதை வர்ணித்துவிட்டு — தத்வ ஸ்வரூபமாக அவள் என்ன என்று எஸென்ஸ் பிழிந்து கொடுக்கிறார், ”புரமதிது: ஆஹோ புருஷிகா” என்று. ”த்ரிபுர ஸம்ஹாரனுடைய தற்பெருமையின் ஆகாரம் [வடிவம்]” என்பது இதற்கு மேலெழுந்த வாரியான அர்த்தம். ஆழமாகப் பார்த்தால் அவனுக்கு ஏற்பட்ட ‘நான்’ என்ற உணர்ச்சியின் உருவமே அவள். காமனுடைய தநுர் பாணங்களை வைத்துக் கொண்டிருப்பவளானாலும் இவளே பரப்ரஹ்மத்தினுடைய ஸாக்ஷாத் சித்சக்தியாக இருக்கிற ஞானாம்பாள் என்று அர்த்தம். இந்த விஷயம் முந்தியே சொன்னேன். 3 புரஸ்தாத் ஆஸ்தாம். ”புரஸ்தாத்” — எதிரில்; ”ஆஸ்தாம்” — இருக்கட்டும், விளங்கட்டும். ”சப்திக்கிற காஞ்சீ தாமாவைப் பூட்டிக் கொண்டுள்ள ஒடிந்து போகிற மாதிரியுள்ள இடுப்பும், சரத்கால பூர்ண சந்திரன் மாதிரியான முகமும், தநுர்-பாண-பாசாங்குசங்களை தரித்த ஹஸ்தங்களும் கொண்ட அம்பாள் — பரமசிவனின் பராஹந்தா ஸ்வரூபிணி — நம் எதிரில் விளங்கட்டும்” என்கிறார். நமக்கெல்லாம் முன்னால் நின்று அவள் காட்சி கொடுக்கவேண்டுமென்று ப்ரார்த்திக்கிறார். தனக்கு மாத்திரமில்லாமல் நம் எல்லோருக்கும் சேர்த்து ப்ரார்த்திக்கிறார். ”புரஸ்தாத் ஆஸ்தாம் ந:” என்கிற இடத்தில் ”ந:” என்பதற்கு ”நமக்கு” என்று அர்த்தம். ”எனக்கு” இல்லை; ”நமக்கு”. அப்படி அவளை மனக்கண்ணின் முன்னால் நிறுத்திப் பார்ப்பதற்குத்தான் இந்த ச்லோகத்தை அழகான ஸ்வரூப வர்ணனையாகப் பண்ணிக் கொடுத்திருக்கிறார்.
Categories: Deivathin Kural
Leave a Reply