ஆவணி மூலம் – சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள்

எதிலும் மஹான்களுக்கு தனியான ஒரு அர்த்தம் தோணறது. ஹனுமான்பிரசாத் போத்தார்ன்னு ஒரு மஹான், பசுமாட்டோடு பெருமை பத்தி கீதா பிரஸ்-ல ஒரு book போட்டிருக்கார். அதுல முதல் அத்யாயத்திலயே “கோபிகைகள் என்ன பக்தி பண்ணினாளோ, அவாளுக்கு கிருஷ்ணனே கிடைச்சான். கோபிகைகள் அப்படி என்ன தான் புண்ணியம் பண்ணினாளோ, பகவானே கிடைச்சான் அப்படீன்னு சொல்றா. அவா தான் பசு மாட்டை பார்த்துண்டாளே. இதுக்கு மேல என்ன புண்ணியம் பண்ணனும்! அவாளுக்கு கிருஷ்ணன் கிடைச்சுதல என்ன ஆச்சர்யம்”ன்னு ஆரம்பிக்கறார். எவ்வளவு அழகு.

அது போல, கந்தர் அலங்காரத்துல நூறு பாடல்கள் சொல்லி பலஸ்ருதி போல ஒரு பாடலும் முடிந்த பின்னர், ‘திருவடியும் தண்டையும்’ ‘செங்கே ழடுத்த சினவடி வேலும்’ மாதிரி ஆறு அழகான பாடல்கள் இருக்கு. பலஸ்ருதியும் சொன்ன பின்ன என்ன ஒரு ஆறு பாடல்ன்னு யோசிச்சேன். வாரியார் ஸ்வாமிகள் அதுக்கு அழகான விளக்கம் கொடுத்து இருக்கார். ஒரு மாலை இருக்கு. அதை கட்டி முடிச்ச பின்னே கிழே ஒரு தொங்கல்-னு சின்னதா டாலர் மாதிரி ஒண்ணு தொங்கவிடுவா இல்லையா? அருணகிரி நாதர் இந்த நூறு பாடலை வச்சு ஒரு மாலை பண்ணின உடனே இன்னொரு ஆறு பாடல் வச்சு ஒரு தொங்கல் பண்ணியிருக்கார் ன்னு சொல்றார். அப்படியெல்லாம் அனுபவிக்கிறது என்பது பெரியவாளுக்குத் தான் தெரியறது.

இது போல வாரியார் சுவாமிகள் இன்னொரு அற்புதமான கருத்தை சொல்லியிருக்கிறார். திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் ஏன் மாணிக்கவாசகரை சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு, “சித்த மலம் தனை நீக்கி சிவமாக்கி எனை ஆண்ட அத்தன்” என்ற திருவாசக வரியை கொண்டு சுந்தரர் போன்ற சிவபக்தர்கள், மாணிக்கவாசகரை சிவமாகவே நினைத்தால், அவரை பக்தர்களோடு சேர்க்கவில்லை என்று ஒரு அழகான கருத்தைச் சொல்லியுள்ளார். அப்படி மாணிக்க வாசகர் சிவமே. சிவன் சாரும் மிக மிக உயர்ந்த ஞான நிலையில் விளங்கியவர்களாக சதாசிவ ப்ரம்மேந்த்ராளையும், மாணிக்க வாசகரையும் குறிப்பிடுகிறார்.

அந்த மாணிக்க வாசகருக்காகவும், வந்தி என்ற மூதாட்டிக்காகவும் சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் ஆவணி மூலம். அந்த வரலாற்றை இந்த கட்டுரையின் முடிவில் காணலாம். இந்த நன்னாளில் (USல் 27-8-2020, இந்தியாவில் 28-8-2020) மாணிக்க வாசகர் அருளிய சில திருவாசகப் பாடல்களை படித்து மகிழ்வோம்.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து,
நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி,
உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த
செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்;
எங்கு எழுந்தருளுவது, இனியே?

அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே!
அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும்,
புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கு எழுந்தருளுவது, இனியே?

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும்
மற்றைமூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாதாளும் பாகத் தெந்தையாவர்கோன்
என்னையும்வந் தாண்டு கொண்டான்
யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியார் அடியா ரோடும்
மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே.

முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,
பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,
சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த வரலாறு

வாதவூரர் கொணர்வித்த பரிகள் நரிகளாக மாற, பாண்டியனின் வீரர்கள் மணிவாசகரைக் கடற்கரையின் சுடு மணலில் இட்டுத் தண்டிக்கின்றனர். மணிவாசகரைத் தாம் ஆட்கொண்டருளிய நிகழ்வை உலகறியச் செய்யவும், வந்தி என்னும் மூதாட்டிக்குச் சிவபதம் அருளவும் ஆலவாய் வள்ளல் திருவுளம் பற்றுகிறார். வைகை நதி பெருவெள்ளமாய்க் கரையைக் கடக்கிறது.

அவர் ஒரு மூதாட்டி. வந்தியம்மை என்ற பெயரைக் கொண்டவர். ஆயிரம் பிறைகளுக்கும் மேல் கண்டவர். தளர்ந்த உடல். கூன் விழுந்திருந்தாலும் தனது காலிலேயே நிற்க வேண்டும் என்ற மனஉறுதி. அதனால் தானே உழைத்து இறைவனுக்கும் பங்கு கொடுத்து வாழ்ந்தார்.அவரது பக்தியையும் மாணிக்கவாசகரின் பெருமையையும் உலகத்துக்கு உணர்த்த விரும்பிய சிவப்பரம்பொருள் , வைகை நதியைப் பெருக்கெடுக்க வைத்தான். வைகையும் அணைகளை உடைத்துக் கொண்டு மதுரையை அழிக்கப்புகுந்தது.
நதியின் அணைகளை மீண்டும் புதுப்பித்து உயர்த்தாவிட்டால் பேரழிவு ஏற்பட்டு விடும் என்பதைக் கண்ட மன்னன் அரிமர்த்தனபாண்டியன் அமைச்சர்களுடன் ஆலோசித்து நதியின் கரைகளை செப்பனிட உத்தரவு பிறப்பித்தான்.

வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்க வேண்டும் என்ற ஆணையின் கீழ் வந்தியம்மைக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.

வந்தியம்மை பிட்டு விற்றுப் பிழைத்தவர். சிவப்பரம்பொருள் மீது மிகுந்த பக்தி உடையவர் என்பதால் அவிக்கும் முதல் பிட்டை மதுரை சுந்தரேஸ்வரனுக்கு அர்;ப்பணம் செய்வார். சிவனடியார் ஒருவரைத் தேடிக் கண்டு பிடித்து பிரசாதமாக அதனைக் கொடுத்து விடுவார். சிவனடியார்களிடத்தில் சிவனையே கண்டவர் அவர்.

பிட்டை விற்று காலம் ஓட்டிக் கொண்டிருந்த வந்தியம்மையையின் உடல் நிலையையும் கவனத்தில் எடுக்காது ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதால், நதியின் கரையை அடைக்க அவர் கூலிக்கு ஆள் தேடினார்.
எவருமே கிடைக்கவில்லை. மன்னின் தண்டனைக்கு ஆளாக வேண்டி வருமே என்று வந்தியம்மை கலங்கினார். சுந்தரேஸ்வரை மனம் உருக வேண்டினார். தினமும் பிட்டை நைவேத்தியம் செய்து தொழுது நின்ற பக்தைக்கு உதவிட சொக்கநாதப் பெருமான் திருவுளம் கொண்டார்.

கந்தல் துணியுடன் வந்தியம்மையை நாடி வந்தார். “கூலிக்கு ஆள் தேடுவதாக அறிந்தேன். அதனால் வந்தேன்” என்றார். வந்தியம்மைக்கு பெரும் மகிழ்ச்சி. எனினும் கூலி கொடுப்பதற்கு தன்னிடம் பணம் இல்லையே என்று வருந்திய அவர், கூலியாக பிட்டுத்தான் தரமுடியும் என்றார்.

கூலியாளாக வந்த சிவப்பரம்பொருளும் இணங்கினார். சுந்தரேஸ்வரருக்கு நிவேதனம் செய்த பிட்டை வந்தியம்மை அளிக்க அதனை ரசித்துச் சாப்பிட்ட இறைவர் தான் கொண்டு வந்திருந்த மண்வெட்டி கூடையுடன் வந்தியம்மைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்தார். சுறுசுறுப்பாக மண்வெட்டினார். ஆனால் பின்னர் களைப்படைந்தவர் போன்று அருகில் இருந்த மர நிழலில் ஓய்வு எடுத்தார். வந்தியின் வீட்டுக்கு மீண்டும் சென்று பிட்டு கேட்டு உண்டார்.

மண்ணை கூடையில் அள்ளுவார். கூடையைத் தலையில் வைக்கத் தூக்கும் போது பாரம் தாங்காமல் அதனை கீழே தவற விடுவது போலப் போட்டு நிற்பார். ஆடுவார். பாடுவார். ஆனால் கரையை அடைக்கும் பணியைச் செய்யவே இல்லை.

அதனை அவதானித்த கண்காணிப்பாளர் கூலியாளாகிய சிவப்பரம்பொருளைக் கண்டித்தார்.அந்தச் சமயம் பார்த்து அரிமர்த்தன பாண்டியன் அங்கு வந்து விட்டான். மன்னன் வருவதைக் கண்ட சுந்தரேஸ்வரர் எதுவும் அறியாதவர் போன்று பாசாங்கு செய்து மீண்டும் மரத்தடிக்குச் சென்று நித்திரை செய்வது போன்று நடித்தார். வந்தியம்மையின் வேளையாள் தூங்குவதைக் கண்ட மன்னன் ஆத்திரமடைந்தான்.
வீரர்கள் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் கூளியாளாக இருந்த சிவன் ஒரு சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் மேலும் சீற்றம் அடைந்த மன்னன் பிரம்பினால் அடித்தான். அந்த அடி சிவபெருமானைத் தவிர எல்லோரது முதுகிலும் விழுந்தது.
தான் அடித்த அடி தன்மீதே விழ மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.

நடந்தது எதுவும் தெரியாதது போன்று எழுந்த கூலியாளான சிவப்பரம்பொருள் கூடையில் ஒரு தடவை மண் எடுத்து வைகைக் கரையில் போட்டார். கரை அடைக்கப்பட்டது. வெள்ளமும் கட்டுக்கடங்கியது.
வேளையாளாக வந்த சிவனாரும் மறைந்தார். தமது சுயரூபத்துடன் காட்சி அளித்தார். “மன்னா, வந்தியம்மைக்கு உதவ வந்து பிட்டுக்கு மண் சுமந்தேன். அறவழியில் வந்த உனது செல்வத்தை மாணிக்கவாசகன் எனக்காகச் செலவிட்டான். அதனை நான் மனம் உவந்து ஏற்றுக் கொண்டேன். நரிகளை குதிரைகளாக ஆக்கி லீலை புரிந்ததும் நானே” என்று கூறி மறைந்தார்.
இந்த அற்புதங்கள் நிகழ்வதற்குக் காரணமான வந்தியம்மையைத் தேடி மன்னன் சென்ற போது சிவகணங்கள் அவரைத் தங்களுடன் அழைத்துச் செல்வதைக் கண்டான்.

குதிரை வாங்கக் கொடுத்த பெருநிதியை கோவில் கட்ட செலவழித்து விட்டார் என்ற கோபத்தில் சிறையில் அடைத்த மாணிக்கவாசகரைக் கண்டு மன்னிப்புக் கோர மன்னன் அவரைத் தேடிச் சென்றான்.
மாணிக்கவாசகர் அங்கில்லை என்பதைக் கண்டதும் கோவிலுக்குச் சென்றான். சுந்தரேஸ்வரப் பெருமான் முன் நிஷ்டையில் இருந்த மாணிக்கவாசகரிடம் மன்னிப்புக் கேட்டான். மீண்டும் அமைச்சர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வேண்டினான். மாணிக்கவாசகர் அதனை ஏற்காது, தனது யாத்திரையைத் தொடர்ந்தார். தில்லையம்பதியை அடைந்து திருவாசகம் பாடி முடித்து, சிவத்துடன் ஒன்றாக கலந்தார்.



Categories: Upanyasam

Tags: ,

2 replies

  1. Ganesh Sir – thank you for this. Amazing grace of Nam Peruman

  2. படிக்க, படிக்க கண்கள் கசிந்தன…… தன் பக்தர்களுக்காக பிரம்படி படவும் சித்தமான பெருமானின் திரு உள்ளத்தை நினைத்து, என் கண்களும் வைகை நதியாய் பெரு வெள்ளம் கொண்டன.

    ஹர ஹர மஹாதேவா…. ஸம்போ ஶங்கரா…..

Leave a Reply

%d bloggers like this: