அருட்பெருஞ்ஜோதி வள்ளலார்!

Thank you RVS for this wonderful share. What an amazing narration of Swamigal! We are blessed to be born in the Bharatha desam where these mahans have born also!

சுவாமிகள் வசித்த காலத்தில் அவரை நேரில் பார்த்தவர்கள் சொன்னதாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார் மதுரையம்பதியில் 1949ல் சன்மார்க்கர்களின் மாநாட்டில் பேசிய உரையிலிருந்து…….

“சுவாமியவர்கள் ஒரு வெள்ளையாடையை முக்காடிட்டுப் போர்த்தியிருப்பார்களாம். சில சமயம் தலை திறக்கப்படும்போது தலைமீதுள்ள உச்சிக் குழிக்கும் சூரியனுக்கும் ஓர் ஒளி ஓடிக்கொண்டிருக்குமாம். உதாரணமாக ஜன்னல் துவாரங்களின் மூலமாகச் சூரியக் கதிர்கள் பரவும்போது,கோடு போன்ற ஒரு வெளிச்சமும் அதில் தூசி போன்ற துணுக்குகள் பலவும் பறந்து கொண்டிருக்க காண்கிறோமோ அதே போன்று! அந்தச் சரீரம் ஞானதேகம். ஆகையால்தான் அவரைப் படமெடுக்கப் பலர் முயன்றும் உருவம் நிழல் விழாததால் படத்தில் விழவில்லை. ஆகையால் உருவப்படம் பிடிக்க முடியவில்லை. இன்று பார்க்கிற படம் அவரின் பக்தனான ஒரு குயவன் களிமண்ணில் செய்த உருவம். அதை அவரிடம் அக்குயவன் பாதகாணிக்கையாகச் சமர்ப்பிக்க அவர் அதை வாங்கி “பொன்னான உடல் மண்ணாயிற்றே” என்று சொல்லிக் கீழே போட, உடைந்து நொறுங்கிப் போயிற்று. பின்னர் அவ்வுருச் செய்வதற்கு காரணமாகயிருந்த சிலவற்றைக் கொண்டுதான் பிற்காலப் படம் வரையலாயிற்று”

— பசும்பொன் தேவரின் எழுச்சிப் பேருரைகள் – க. பூபதிராஜா.

~~~~~~~~~~~~~~~

மனிதநேயம் பேசுபவர்கள் வாடியபயிரைக் கண்டபோதெல்லாம் வாடி ஜீவகாருண்யத்தில் பயிர்நேயமும் பாராட்டிய வள்ளலாரைப் பின்பற்றுதல்தான் பொறுத்தமாக இருக்கும். ஒளியாகிய ஜோதியை கும்பிடச் சொன்னார். நமக்குள்ளே அதே ஜோதி இருப்பதாகத்தான் அத்வைத தத்துவமும் சொல்கிறது.

வள்ளலார் படிப்பில் கவனம் செலுத்தாததால் அவரது அண்ணன் வீட்டில் சாப்பாடு போடக்கூடாது என்கிறார். இராமலிங்கம் என்ற பெயர் கொண்ட வள்ளலாருக்கு அவருடைய அண்ணியார்தான் அண்ணனுக்கு தெரிந்தும்தெரியாமலும் திருவமுது படைக்கிறார். தனது தந்தையாரின் திதியின் போதும் எல்லோரும் உண்டு முடித்ததும் கொல்லைப்புறமாக வந்து யாருக்கும் தெரியாமல் அமுதுண்ணும் கொழுந்தனை நினைத்து வேதனைப்பட்டு அன்னமிடும்போது அண்ணியாரின் கண்ணீரும் சேர்ந்து இலையில் விழுகிறது.

“ஏன் அண்ணி அழறீங்க?”

“சொந்த வீட்டிலேயே அப்பாவின் திதிக்குக் கூட இப்படித் திருட்டுத்தனமா பின்பக்கமா வந்து சாப்பிடறியேப்பா… உங்க அண்ணன் உன்னைப் படின்னுதானே சொல்றாரு…. படியேன்…”

“சரி அண்ணி… நாளையிலேர்ந்து படிக்கிறேன். தனியறையில் ஒரு கண்ணாடியும் விளக்கும் வேணும்..”

அண்ணியார் இராமலிங்கம் கேட்டதை ஏற்பாடு செய்தார்கள். வீட்டின் மேல் மாடியில் இருந்த அறைக்குள் சென்று கண்ணாடியை சுவற்றில் சாய்த்து அதன் முன்னால் திருவிளக்கை ஏற்றி அதைப் பார்த்தவண்ணமே அமர்ந்திருப்பார். இப்படி சில தினங்கள் கடந்தது.

ஒருநாள் அந்தக் கண்ணாடியில் விளக்கின் உருவமோ அல்லது எதிரில் அமர்ந்திருக்கும் தன்னுடைய உருவமோ தெரியாமல் திருத்தணிகை முருகனின் உருவம் காண்கிறார். அவ்வளவுதான்! படிப்பு முடிந்துவிட்டது. சர்வமும் கற்றுக்கொண்டு சாகாக்கலை அறிந்துவிட்டார். முருகனே பாடம் நடத்திவிட்டதால் அதற்கு பின்னர் அவர் எழுதிய பாடல்கள் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கிறது.

கருங்குழியில் எழுதிக்கொண்டிருக்கும்போது அருகிலிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீர் ஊற்றி விளக்கெரித்த மகான் அவர்! அன்னசத்திரத்தினால் அனுதினமும் ஆயிரமாயிரம் பேர்களுக்கு திருவமுது படைத்திட்ட அன்னபூரணர்! மனிதனின் இன்றியமையாத தேவைகளில் முதல் அடிப்படைத் தேவையான “உண்ண உணவு” என்பதை வலியுறுத்தி அன்னதானமளித்த அன்னதாதா! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றும் உத்தமர்தம் உறவு வேண்டும் என்றும் பிரார்த்தனை வைத்தார்.

பள்ளிக்கூடத்தில் கல்லாதவரின் வாக்கின் இனிமையும் சத்தியமும் நம்மைக் கட்டிப்போடுகிறது. அன்பையே போதிக்கும் அவர் பரசிவ வணக்கத்தில் சொல்லும் ஒரு பாடலோடு முடித்துவிட்டு அவர் சொல்லும் அந்த அன்பையே கடைப்பிடிப்போம்.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரோளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே!

நீ அன்பெனும் கைப்பிடிக்குள் அகப்படும் மலை! அன்பு எனும் பெரும் குடிலுக்குள் புகுந்து அருளிச்செய்யும் அரசு நீ! அன்பென்ற வலைவிரித்தால் அதில் அகப்பட்டுக்கொள்ளும் பரம்பொருள் நீ! அன்பாகிய கையை நீட்டினால் அதில் வந்து அடங்கும் அமுதம் நீ! நீ கடல். இருந்தாலும் ஒரு அன்புக் குடத்தினுள் அடங்கிவிடுவாயே! அறிவென்ற உயிர் ஒளியே நின் அன்புதானே! அன்பு என்னும் அணுவுள் அமைந்த பேரொளியே! பரசிவமான உன்னை நான் வணங்குகிறேன். அருள் புரிவாய் , ஐயனே!.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!



Categories: Devotee Experiences

Tags:

7 replies

  1. cont’d. from previous…pathivu..
    anubhava, so it will help individuals in some way and all Sat karyams in many ways..if we can understand the anithyam of this materialistic world, to some extent..sunbject to which Ashrama one belongs to…Vedashrama, Brhamacharya Ashrama, Gruhasthashrama, Vanaprastha, and or Sanyasa..and again different types and methods of Sanyasa, Rishis, Munis Marg..then Vedanta, Siddhantha…..etc..so it a Sagar of divinity and love that takes across the ocean of Samsara and not only ones self efforts or collective efforts..Jai Ram Ji Ki..Radhe Krishna..Govinda..Govinda, Pandura ga, Pandarinatha,Jai Vittala, Vitalla,Ram Ram, Anbe Sivam, Arut Perum Jothi, Arut Perum Jothi Thank Perum Karunai Arutperum Jothi…yendrendrum at the golden feet of His Almighty…

  2. Migha arpudhamana Padhivu…My personal opinion is, Karma , Bhakthi, Gyana and then Raja yogam is one way, naturally defined path, for attaining spiritual enlightment, if we are in control of Sattva, Rajas and Tamo Gunas and then attain Nirguna then there may or can be a chance for certain higher level of spiritualities…as per Bhagavath Gita, only 2 Gunas is there is also some * specific paths belief..any how as per Great Gyanis ‘and Mahans of this Bharatha Desams

  3. அருமையான பதிவு . உள்ஒளி பெறுக வேண்டும் ஆன்மநேய ஒருமைப்பாடு ஏற்பட்டால் உலகில் சாந்தமும் சமாதானமும் நிலவும் .ஜானகிராமன் நாகை கைபட்டிணம்

  4. ஸ்ரீ ரமண மஹரிஷி யின் சித்தாந்தமும் இதுவே ! அவரும் உண்மையைத் தேடி வீட்டை விட்டு வந்தவர் .தியானத்தில் ஆழ்ந்து உதல் முழுதும்.புற்று மண்ணால் மூடிய போதும் தியானத்தில் இருந்தவர். தாயார் வந்து நீ படிக்க வேண்டாம் வந்து விடு என்று அழைத்தும் ஆத்ம விசாரத்தில் மூழ்கி , அன்னதானம் செய்து பேதமற்ற வாழ்க்கை வாழ்ந்தவர். இவர்கள் போன்ற மஹான்கள் வாழ்க்கையால் தான் அந்நியதேசத்தினரும் நம் கலாச்சாரத்தில் நம்பிக்கை வைத்து பாரதம் வரத் தொடங்கினர் .பாரத தேச கலாசாரம் நமக்கு கௌரவம் அளிக்கிறதேன்றால் வியப்பில்லை!

    • இங்கு சில விஷயங்கள் சொல்லவேண்டி இருக்கிறது. தவறாக நினைக்கவேண்டாம்.

      1.பகவான் ஸ்ரீ ரமணரின் “சித்தாந்தம்” என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் அனுபவத்தில் உணரும் “நான்” என்பதன் உண்மை என்ன என்பதை நம்முள் விசாரித்து அதுவாக இருக்கவேண்டும் அல்லது பகவானிடம் சரணாகதி செய்து அமையவேண்டும்
      [ Enquire ‘Who am I” or Surrender] – இது ஒன்றுதான் ஸ்ரீ ரமணரின் உபதேசம். இது ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் சமரச சன்மார்க்க சித்தாந்தம்- வழியிலிருந்து மாறுபட்டது.

      2. ஸ்ரீ ரமணர் 17 வயதில் வீட்டைவிட்டு வந்தார்- ஆனால் உண்மையைத் தேடி அல்ல. உண்மையை- ஸத்- உள்ளபொருளை வீட்டைவிட்டுக் கிளம்பும் முன்பே அனுபவித்து அதுவாகவே ஆகிவிட்டார். அவர் அதை எங்கும் தேடவில்லை. அவர் ஹ்ருதயத்தில் அனுபவித்தறிந்த ஸத் , அருணாசலமாக புறவுலகில் இருப்பதை அறிந்ததால் அதைத் தேடிக்கொண்டுதான் கிளம்பினார். இதை அவரே எழுதினார்:
      ” நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு அவருடைய உத்திரவின்படி இவ்விடத்தைவிட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில்தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இந்தக் காரியத்திற்கு ஒருவரும் விசனப்படவேண்டாம். இதைப் பார்ப்பதற்காக பணமும் செலவு செய்ய வேண்டாம்”
      ஸ்ரீ பகவான் மஹா நிர்வாணமான போது ஒரு ஜோதி அங்கிருந்து கிளம்பி அண்ணாமலை உச்சியில் சென்று மறைந்தது. “கிரியிது பரம்” என்று ஸ்ரீ பகவான் பாடியிருக்கிறார்.

      3.திருவண்ணாமலை வந்ததுமுதல் கிடைத்த இடத்தில் எப்போதும் சமாதியிலேயே ஆழ்ந்திருந்தார். உடல் நினைவு-உணர்வு சிறிதும் இல்லை. இந்த சமாதி நிலை “த்யானம்” இல்லை. [ ஸ்ரீ பகவான் சொன்ன ‘விசாரம்’ என்பதும் த்யானம் அல்ல. பொதுவாக நாம் த்யானம்-meditation என்று சொல்வதை அவர் ஆதரித்ததில்லை. த்யானம் செய்பவன் என்று ஒருவன் இருக்கவேண்டும் அவன் யார் என்று பார் என்றே அவர் சொல்வார்.]]
      அப்படி பாதாள லிங்கக் குகையில் [ அருணாசலேஶ்வரர் கோயிலுக்குள் இருக்கும் ஒரு சிறிய கோவில்]சமாதியில் ஆழ்ந்திருந்தபோது கால்-தொடையின் கீழ்ப்பகுதியில் புழு-பூச்சிகள் கடித்து,அரித்து ரத்தமும் சீழும் வந்து அதுவே சிமென்ட்போல் கெட்டிப்பட்டுவிட்டது. அதுவும் உணராமல் சமாதியில் ஆழ்ந்திருந்தார்.. பிறகு இவரை வெளியில் தூக்கிவர முயற்சித்தபோதுதான் இது தெரியவந்தது. இவர் உடல் புற்றுமண்ணால் என்றும் மூடப்படவில்லை.

      4. அவருடைய தாயார் தன் மூத்த மகன் நாகஸ்வாமியுடன் வந்து ஸ்ரீ ரமணரை அழைத்தார். ஆனால் நீ படிக்கவேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை.
      5. அன்னதானம் பற்றியும் சிறிது சொல்லவேண்டும். ஸ்ரீ ரமணபகவானின் வழி ஆத்ம விசாரமே தவிர மற்றெந்த விஷயமும் அல்ல. ஆனால் இருப்பதை எல்லோருடனும் பகிர்ந்துகொள்வார். ஆதி நாட்களில் பிக்ஷை எடுத்து அதைப் பகிர்ந்து உண்பார்கள். 1917ல் தாயார் வந்து சேர்ந்தபிறகுதான் அங்கு சமையல் என்று தொடங்கியது. இருப்பதைக்கொண்டு சமைத்து, வருபவர்க்கெல்லாம் உணவு தரப்படும். 1922ல் தாயார் சமாதிக்குபின் பகவான் மலைமீதிருந்து கீழே வந்துவிட்டார். அவரைச் சுற்றி அடியார்-பக்தர் கூட்டம் பெருகத்தொடங்கியது. சமையல் வேலையும் பெருகலாயிற்று. ஆனால் இங்கு ஆசிரமத்திற்கு என்றே வரும் பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் தான் உணவே தவிர இதை பொதுப்படையாக “அன்னதானம்” என்று சொல்வது பொருந்தாது.

      5. ஸ்ரீ ரமணர் எந்தவித பேதமும் பார்க்காதவர். பேதமற்ற வாழ்க்கை என்பது சரியே.
      இத்தகைய மஹான்களால்தான் பாரத நாட்டுக்குப் பெருமை என்பது முற்றிலும் உண்மை.
      [ ஸ்ரீ ரமணரின் சரியான வரலாற்றை அறிய, Self-Realisation by B.V.Narasimha Swamy,
      ஸ்ரீ ரமண விஜயம் by கவியோகி சுத்தானந்த பாரதியார், Sri Ramana Maharshi And The Path of Self -Knowledge by Arthur Osborne என்பவையே ஆதாரபூர்வமான புத்தகங்களாகும்.]

  5. இது சிறந்த பதிவு. அதுவும் தீவிர தெய்வபக்தராகவும் தேசபக்தராகவும் திகழ்ந்த பொன் முத்துரமலிங்கத் தேவர் வாய்மொழியாகக் கேட்பது மகிழ்ச்சி தருகிறது.
    நமது தேசத்தில் ஞானிகள் பரம்பரை அவிச்சின்னமகத் தொடர்ந்து வருகிறது. இப்படி 19ம் நூற்றாண்டில் வந்தவர் வள்ளலார் சுவாமிகள்.
    ஞானிகளின் இறுதி நிலை அனுபவம் ஒன்றாகவே இருந்தாலும் அதை விளக்கும் விதத்தில் மாறுபடுகிறார்கள். இந்த விதத்தில் வள்ளலார் சுவாமிகளின் நிலையும் முன்னிருந்த எல்லா மார்க்கங்களிலிருந்து மாறுபட்டு தனித்து நிற்பது.
    “வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்
    மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும்”
    [ உபதேச வினா, திருவருட்பா கீர்த்தனைப் பகுதி,]
    என்று எழுதினாலும் அவருடைய இறுதி ஆன்மீக அனுபவ நிலை எல்லாவிதமான சம்பிரதாய முறைகளைத் தாண்டி தனித் தன்மையுடன் திகழ்கிறது. இது அவரது சொந்த அனுபவத்தின் மீது எழுந்தது. இதை சுருக்கமாக “சன்மார்கம்” என்பார்கள். இதன் விளக்கத்தையும் சுவாமிகளே பல இடங்களில் அளித்திருக்கிறார். “அதாவது கடவுளின் இயற்கை உண்மை விளங்கி, சத் விசாரம் செய்து, பேதங்களை ஒழித்து, ஆன்ம நேய ஒருமைப்பாட்டினை அடைந்து, ஜீவகாருண்யம் ஸ்திரப்பட்டு, அதை இடைவிடாது நடத்தி, தயாவடிவடைந்து, கடவுள் தயவைப் பெற்று, ஆன்மலாபம் அடையப்பெறுவதென்பதே சன்மார்க்க நெறியாகும். இது வைதிக நெறியின்பாற்பட்ட ஆறு அந்தங்களையும் சமரசப் படுத்துவதால் ஷடாந்த சமரச சன்மார்க்க மென்றும், அவ்வாறு அந்தங்களையும் கடந்து நிற்பதால் ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றும், சத்தென்னும் முடிவான பொருளின் அல்லது கடவுளின் உண்மையைத் தெரிவிக்கின்றதாதலால் சன்மார்க்கமென்றும், இம்மார்க்கம் அழைக்கப்படுகின்றது.” [ திருவருட்பா, பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு, முதல் தொகுதி, வசனப் பகுதி, பாயிரம். ]
    இது “ஏகம் சத்” என்ற வேத வாக்கியத்தின், வேதாந்தத்தின் பிரதிபலிப்பாக இருந்தாலும், நடைமுறையில் வேதநெறியில் உள்ள பல அம்சங்களை அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. அவற்றை எதிர்க்க வில்லை, ஆனால் அவரளவில் அவற்றைத் தாண்டிச் சென்றார். [ஏறத்தாழ ஸ்ரீ ரமண பகவானின் நிலையும் இதுதான்.] சிந்தாந்தம் பற்றியும் அவர் நிலை இதுதான். வள்ளலாரின் வழியைப் பின்பற்றுபவர்கள் எல்லா சம்பிரதாயங்களையும் விட்டு, அவர் காட்டிய சன்மார்க்கப் பாதைக்கு வரவேண்டும்.
    இது அவரது இறுதி நிலை.
    தத்துவக் கண்ணோட்டம் [ philosophical perspective] எதுவாக இருந்தாலும் வள்ளலாரின் உபதேசங்களில் பல, நமக்கு ஆன்மீகப் பாதையில் உதவும். அவர் உருவ வழிபாட்டிலிருந்து தொடங்கி, சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஜோதி வழிபாடு, சன்மார்க்கம் என்று கண்டு, ஜோதிஸ்வரூபரானார். அவர் ஆயிரக்கணக்கில் ஸ்துதிப்பாடல்களை அருளியிருக்கிறார். இவை தமிழும் சம்ஸ்க்ருதமும் கலந்து வருபவை. அவர் எழுதிய தமிழ் நடையே இன்று பலருக்கும் புரியாது. ஆன்மீக விஷயமாதலால், கருத்தாழம் மிக்கவை. புரிந்து கொள்ள சொல்பமாவது சாஸ்திரப் பயிற்சி தேவை. இது இக்காலத்தில் அருகிவிட்டது.
    சுவாமிகளின் கருத்தை சரியாகத் தெரிந்துகொள்ள அவர் அருளியவற்றை நேரே படிக்கவேண்டும். சொற்பொழிவாளர்களும் எழுத்தாளர்களும் அவரவர்கள் விருப்பத்திற்கு அவர்களுக்கு வேண்டிய பகுதிகளை மட்டும் விசேஷித்துச் சொல்வார்கள். திரித்தும் சொல்வார்கள். அதனால் நேரடியாக ஸ்வாமிகளின் எழுத்தையே வாசித்தறிவது நல்லது. இவற்றை ஆ.பாலகிருஷ்ண பிள்ளை அவர்கள் 12 தொகுதிகளாக 1936-58ல் பதிப்பித்தார். இப்பதிப்பு, முக்காலும் சுவாமிகளின் நேரடிக் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து தொகுக்கப்பட்டது. அவர் அருளிய தெய்வப் பாடல்கள் பிரமிக்க வைக்கும். கருத்தைத் திருத்தி நல்வழி காட்டும்.
    சிவசிவ கஜமுக கண நாதா
    சிவ கண வந்தித குண நீ தா
    சிவசிவ தத்துவ போதா
    சிவகுரு பரசிவ சண்முக நாதா
    அம்பலத் தரசே அருமருந்தே
    ஆனந்தத் தேனே அருள் விருந்தே
    மலை தரு மகளே மடமயிலே
    மதிமுகவமுதே இளங்குயிலே
    சிதம்பிரகாசா பரம்பிரகாசா
    சிதம்பரேசா சுயம்பிரகாசா.

    அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை.

Leave a Reply to R ChidambaramCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading