I originally wanted to post this for karthikai deepam but forgot to do so….Thanks to Smt Srividhya Vakeesan Sivam for FB share
கார்த்திகை தீபத்தை மாட்டுத் தொழுவம், குப்பை மேடு போன்ற இடங்களில் ஏன் ஏற்றி வைக்கிறோம்?
…..காஞ்சி மஹா பெரியவா.
கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் வீட்டின் எல்லா இடத்திலேயும் குறிப்பாக மாட்டுத் தொழுவம், குப்பை மேடு போன்ற இடங்களில் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.
கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||
”புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ச்லோகத்துக்கு அர்த்தம்.
ஜலத்திலும் பூமியிலும் இருக்கிற ப்ராணிகள் மட்டும்தானா என்றால் அப்படி இல்லை. முதலிலேயே பக்ஷிகளையும் (பதங்கா:) கொசுக்களையும் (மசகா: – மசகம் என்றால் கொசு. ‘மஸ்கிடோ’ இதிலிருந்து வந்ததுதான்!) சொல்லிவிட்டதால் ஆகாசத்தில் பறக்கிற பிராணிகளையும் சொல்லிவிட்டதாக அர்த்தம். ஆகாசத்தில் பறந்தாலும் இந்தக் கொசு ஜலத்தில்தான் முட்டை இடுகிறது. பக்ஷி கிளைகளில்தான் வாழ்ந்து கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. மீன் ஜலத்தில் மட்டும்தான் இருக்கும். தவளை ஜலத்திலும் இருக்கும், பூமியிலும் இருக்கும். அநேக பிராணிகளால் பூமியில் மட்டும்தான் வசிக்க முடியும். இப்படியெல்லாம் பல தினுஸில் பிரித்துப் பிரித்துச் சொல்லி, அத்தனை உயிரினங்களும் பாபம் நிவ்ருத்தியாகி ஸம்ஸாரத்தைத் தாண்ட வேண்டும் என்று இந்த ச்லோகம் ப்ரார்த்திக்கிறது.
இந்த கார்த்திகை தீபத்தை எந்தப் பிராணி பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகட்டும் என்று சொல்லியிருக்கிறது.
‘த்ருஷ்ட்வா’ என்று ச்லோகத்தில் வருவதற்கு ‘பார்த்தால்’ என்று அர்த்தம். வ்ருக்ஷம் – மரம் எப்படிப் பார்க்க முடியும்? நம் மாதிரி அதற்குக் கண், பார்வையெல்லாம் உண்டா?
தாவரத்துக்கும் பலவிதமான உணர்ச்சிகள் இருப்பதாக இப்போது ஸயன்ஸ்படியே சொன்னாலும் அதற்குப் பார்வை உண்டா என்று தெரியவில்லை.
அதனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. ‘பார்த்தால்’என்று ச்லோகத்தில் சொல்லியிருந்தாலும், ”பார்க்காவிட்டாலும் பரவாயில்லை;மரம் மாதிரிப் பார்க்க சக்தியில்லாவிட்டாலும் பரவாயில்லை; அல்லது பார்க்கிற சக்திவாய்ந்த பிராணிகளாக இருந்தும்கூட இந்த தீபத்தைப் பார்க்காவிட்டாலும் பாதகமில்லை;
இந்த தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிறதோ இல்லையோ? அம்மாதிரி இதன் ப்ரகாசம் படுகிற எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகளுக்கும் பாப நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி, சாஸ்வதமான ச்ரேயஸ் கிடைக்க வேண்டும்”- என்றிப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல், பிராம்மணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம், மற்ற நீர்வாழ் ப்ராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி மேலே சொன்னது போல் ப்ரார்த்திக்க வேண்டும்.
முன்பெல்லாம் சொக்கப்பானை என்று ஆலயத்திலிருந்து தீபத்தைக் கொண்டுவந்து பெரிதாக ஏற்றினார்களே,
திருவண்ணாமலையில் இப்போதும் மலை உச்சியில் மஹா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுகிறார்களே, இதன் உள்ளர்த்தம் என்ன?
சின்ன அகலாக இருந்தால், அதன் ப்ரகாசம் கொஞ்ச தூரம்தான் பரவும். சொக்கப்பானை என்றால் அதன் ப்ரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும்.
அண்ணாமலை தீபம் மாதிரி மலையில் ஏற்றி வைத்துவிட்டாலோ, அது எத்தனையோ ஊர்கள் தாண்டிக்கூடத் தெரியும். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவஜந்துக்களின் மீதும் இந்தப் பிரகாசம் பட்டு அவற்றின் பாபங்கள் போகவேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்விகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.
ஸாதரணமாக இரண்டு கால் ப்ராணி, நாற்கால் ப்ராணிகள்தான் அதிகம். வண்டுக்கு ஆறு கால். சிலந்திக்கு எட்டுக் கால்கள். மரவட்டை, கம்பளிப் பூச்சி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எண்ணி முடியாத கால்கள். வேதத்தில் அடிக்கடி ‘த்விபாத்” சதுஷ்பாத்’ என்று இருகால், நாற்கால் ப்ராணிகள் க்ஷேமத்தைக் கோருகிற மாதிரியே எத்தனை காலுள்ள ப்ராணிகளானாலும் அவற்றுக்கும், இன்னும் பாம்பு மாதிரி, மீன் மாதிரி காலே இல்லாத ப்ராணிகளுக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் என்று மந்திரங்கள் இருக்கின்றன.
பரம ஞானிக்கு பிராம்மணன் பஞ்சமன் (ப்ராம்மணே … ச்வபாகே) என்ற வித்யாஸம் தெரியாது என்று கீதையில் (5.18) சொல்லியிருக்கிறது. நமக்கும்கூட, காரியத்தில் பேதத்தைப் பார்த்தாலும் மனஸில் சுரக்கும் அன்பில் வித்யாஸமே கூடாது என்கிற மாதிரிதான் ரந்திதேவன் முதலில் பிராம்மணனுக்கும் கடைசியில் பஞ்சமனுக்கும் தானம்பண்ணியிருக்கிறான்.
இந்தக் கார்த்திகை தீப ச்லோகத்திலும் ”ஸ்வபசா ஹி விப்ரா: என்று பஞ்சமன், ப்ராம்மணன் இருவரையும் சொல்லியிருக்கிறது. க்ஷேமத்தைக் கோரும்போது ஜாதி வித்யாஸமே இல்லை. நல்லவன் கெட்டவன் என்றும் வித்யாஸம் பார்க்கக் கூடாது. மஹாபாபத்தைச் செய்துவிட்டு நரகவாஸிகளாயிருப்பவர்களிடமும் அன்பு பாராட்டி, அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்வது நம் சாஸ்த்ரம்.
மேலே உள்ள ஸ்லோகத்தை எழுதி வைத்துக்கொண்டு தீபமேற்றும்போது கூறி பிரார்த்தித்து வீட்டின் சகல இடங்களிலும் அதாவது குளியல் அறை , குப்பைமேடு,
கழிவறை என சகல இடங்களிலும் வைக்க
அந்த இடங்களில் உள்ள ஜீவராசிகளின் மேல் தீப ஔி பட்டு அவை மோட்ச கதியடைகின்றன.
இதனை ஸ்லோகத்தை படிக்க இயலவில்லையெனில்,
இதன் தாத்பரியம் அறிந்து,
ஜோதி மயமான இறைவனே!
தாங்கள் இந்த இடத்தில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் மோட்சகதி அருளி அருளவேண்டும், என பிரார்த்திக்க மனதில்
அன்பு பெருகுவது மட்டுமல்லாமல் கோடானுகோடி உயிரினங்களின் மோட்சகதிக்கு நாம்காரணமாகி நம்பாவங்கள் தீர்ந்து நாமும் புண்ணியம் புரிந்தவர் ஆகின்றோம்.
அண்ணாமலையானுக்கு அரோகரா!
உண்ணாமுலையாலுக்கு அரோகரா!
“ஸகலம் கிருஷ்ணார்ப்பணம்.”
ஹர ஹர ஸங்கர!
ஜய ஜய ஸங்கர!
Categories: Devotee Experiences, Upanyasam
So much of noble thoughts our religion have, only source need to understand!